January 17, 2011

சப்தங்கள் கடந்து வா..!


அமைதியை குழைத்துக் குழைத்துச்
சமைத்த தபோவனம்
பார்க்கும் வெளிஎங்கும்
பச்சை ஆதிக்கம்

கற்புடைப் பெண்டிர்நெஞ்சில்
புகமுடியாத காமுகன் போல்
காடுபுகவியலாமல்
கதிரொளி தவிக்கும்

ஊர்சுற்றிக் களைத்துவரும் காற்று
கிளையேறி இலைமீது கண்ணுறங்கும்

மழைத்துளியோ பனித்துளியோ
மூங்கிலிலை மூக்குகள்
சொட்டிக்கொண்டேயிருக்கும்

நிஷ்டையிலிருந்தார் மாமுனிவர்
நெற்றிப்பொட்டில் உயிர்திரட்டி

"முனிபுங்கவ!
அடியேனைச் சீடனாய்
ஆட்கொள்வீரா?

உமது பாதுகைக்குப் பக்கத்தில்
யானமர இடமுண்டா?

ஜோடிச் சூரியக் கண்கள் திறந்து
முனிவர் வினவினார்.
"யார் நீ?"

துறவறம் பூணவந்த
அரசன் யான்
பொன்னென்ற திடத்திரையை
பெண்ணென்ற ஜடத்திரையை
மண்ணென்ற இடத்திரையை
ஞானவாள் கொண்டு துணித்து விலக்கி
பொய்பொருள் உலகு புறந்தள்ளி
மெய்பொருள் தேடி வந்தேன்
ஆட்கொள்வீர் அய்யன்மீர்

கண்கள் வழி ஆழ்மனம் துழாவிய முனிவர்
மெல்லியதோர் கேள்வி கேட்டார்.

"அப்பனே
என்னென்ன ஓசைகள் நீ
வரும்வழியில் செவியுற்றாய்?

"பறவைகளின் தாய்மொழி கேட்டேன்
சருகுகள் மீது விலங்குகள் ஆடும்
சடுகுடு கேட்டேன்
ஊமைக்கரையோடு நதி நடத்தும்
ஓயாத பேச்சுவார்த்தை கேட்டேன்
பூக்களின் தவம்கலைக்கும்
வண்டினத்தின் வல்லோசை கேட்டேன்
களிறுதேடும் பிடியின்
பிளிறல் கேட்டேன்"

முனிவரின்
ஜோடியச் சூரியங்கள் மூடிக்கொண்டன
"பக்குவம் இல்லை மகனே
தக்கை தரை தொடாது
இன்றுபோய்ச் சில்லாண்டு சென்றுவா!"

சிலஆயிரம் சூரியங்களைப்
பறித்து எறிந்தது வானம்
சிலகோடிப் பூக்களை
உடைத்து உதிர்த்தது வனம்
இரவுகளும் பகல்களும் உருகிஓடிக் கலந்தன
பிரபஞ்சப் பேராழியில்

ஒருநாள்
பனியின் வெண்மையும் கங்குலின் கருமையும்
வடியாததொரு விடிகாலையில்
மீண்டும்
அதேகுரல் அதேமொழி;

"முனிபுங்கவ!
அடியேனைச் சீடனாய ஆட்கொள்வீரா?"

ஜோடியச் சூரியங்கள் மீண்டும் திறந்தன
"இப்போது சொல்!
என்னென்ன ஓசைகள்
வரும் வழியில் செவியுற்றாய்?"

"பிறைவளரும் ஒலிகேட்டேன்
விண்மீங்கள் மொழிகேட்டேன்
மொட்டுகள் மலரும் நுண்ணொலி கேட்டேன்
விடியலை நோக்கி
இரவு நகரும் இசை கேட்டேன்
எனக்குள்
கண்ணீர் ஊறும் ஓசை கேட்டேன்"

முனிவர் உதட்டில் ஞானப்புன்னகை ஒன்று
இழையோடி விழுந்தது

"உட்கார்
பாதுகைக்குப் பக்கத்திலல்ல
என் புலித்தோலின் மிச்சத்தில்"

கிழக்கே
விண்மீங்களைத் துறந்த வானம்
சூரியனை ஈன்று கொண்டிருந்தது.

-வைரமுத்து....

11 comments:

ஹேமா said...

2-3 முறை வாசித்துவிட்டேன்.எத்தனை அழகான கவிதை.கடைசி வரிகளில் விடியலை எப்படி வர்ணித்திருக்கிறார்.அற்புதம்.நன்றி ரியாஸ்!

Chitra said...

அருமையான பகிர்வுக்கு நன்றி.

S Maharajan said...

//விடியலை நோக்கி
இரவு நகரும் இசை கேட்டேன்
எனக்குள்
கண்ணீர் ஊறும் ஓசை கேட்டேன்"//

ரசித்த வரிகள் தோழா
வாழ்த்துக்கள்.....

அரபுத்தமிழன் said...

ஆஹா, இது கவிதை. ரியலி சூப்பர்ப்,
நல்ல கவிதை எழுதணுன்னா நாட்டுக்குப் போய்விட்டு வரணுமோ :)

அரபுத்தமிழன் said...

அடப் பாவி மனுஷா,
கீழே 'வைரமுத்து'வை ஒளித்து வைத்துள்ளீர் :)

FARHAN said...

அருமையான கவி வரிகள்

வைரமுத்தின் கவிமுத்துக்களில் இன்னொரு முத்து

கோமாளி செல்வா said...

//கற்புடைப் பெண்டிர்நெஞ்சில்
புகமுடியாத காமுகன் போல்
காடுபுகவியலாமல்
கதிரொளி தவிக்கும்//

இந்த வரிகள் ரொம்ப அருமையா இருக்குங்க , சூரிய ஒளி கூட மண்ணில் படாத அளவுக்கு பசுமையா இருக்கும் அப்படின்னுதானே சொல்லுறீங்க ?!

கோமாளி செல்வா said...

வைர முத்து வரிகளா ? நான் நீங்க எழுதினதுன்னு நினைச்சிட்டேன் .. உண்மைலேயே அவர் அவர்தான் !!

NKS.ஹாஜா மைதீன் said...

நல்ல கவிதை....

Shafna said...

உண்மையிலே அத்தனை வரிகளுக்கும் நீங்கள்தான் தனியுரிமைக்காரரென்றால் பாராட்டுக்கள்...

ஆமினா said...

வைரமுத்து கவிதைகள் என்றும் சலிக்காதவையே

Related Posts Plugin for WordPress, Blogger...