உள்ளம் கொள்ளை போகுதே..!

படிக்கும் காலத்தில் பாடல்கள் கேட்பதும், அதை எழுதி மனனம் செய்து முனுமுனுப்பதிலும் அலாதிப்பிரியம். அவ்வாறு சில பாடல்கள் மனதோடு ஒட்டிவிடுவதுமுண்டு. நான் பாடல்களை அதிகம் ரசிப்பது அதன் வரிகளுக்காகவும் அதில் சொல்லப்படும் விடயங்களுக்காகவும். சில பாடல்களின் வரிகள் புரியாவிட்டாலும் இசைக்காக மட்டுமே கேட்பதுமுண்டு.

அந்த வகையில் பாடசாலை நாட்களில் என்னை வசீகரித்த பாடல்களில் ஒன்று. உள்ளம் கொள்ளை போகுதே திரைப்படத்தில் இடம்பெற்ற "கவிதைகள் சொல்லவா உன் பெயர் சொல்லவா"  என்ற பாடல்தான். இதில் இரண்டு பாடல்கள் இருக்கும். முதலாவது SPB,சுஜாதா பாடிய டூயட் பாடல் மற்றையது ஹரிஹரன் பாடிய சோகப்பாடல் இரண்டுமே பிடித்திருந்தாலும் அந்த சோகப்பாடல்தான் என்னை மிகவும் கவர்ந்தது. பாடலை எழுதியது பா.விஜய். இவரின் ஆரம்பகால பாடல்கள் ஒவ்வொன்றும் மிக அழகானவை. அவர் நடிகரானதிலிருந்து நல்லதொரு பாடலாசிரியரை இழந்துவிட்டது தமிழ்சினிமா.

அந்த பாடலின் எல்லா வரிகளுமே அருமையாக எழுதியிருப்பார்..

உண்மையில் நான் ஒரு கடிகாரம்
ஏன் சுற்றுகிறோம் என்று தெரியாமல்
சுற்றுதம்மா இங்கு என் வாழ்வும்..



உண்மையில் நான் ஒரு மெழுகாகும்
சிலர் இருட்டுக்குத்தான் அது ஒளி வீசும்
கடைசி வரை தனியாய் உருகும்..



பிறரின் முகம் காட்டும் கண்ணாடி
அதற்கு முகம் ஒன்றும இல்லை
அந்த கணணாடி நான் தானே 

முகமே இல்லை என்னிடம்தான்..


பூமிக்குள் இருக்கின்ற நெருப்புக்கும்
என் ஆசைக்கும் சம்பந்தம் இருக்கிறதோ
இரண்டுமே வெளிவர முடியாதோ...


செடியை பூ பூக்க வைத்தாலும்
வேர்கள் மண்னுக்குள் மறையும்
உதட்டில் புன்முறுவல் பூத்தாலும்
உள்ளே சறுகாய் கிடக்குதே....


காதிதத்தில் செய்த பூவுக்கும்
என் மனசுக்கும் ஒற்றுமை இருக்கிறதோ.

இந்த "காகிதத்தில் செய்த பூ" இந்த வரியை வைத்துக்கொண்டு நான் அப்போது கிறுக்கியது.

கண்ணீருமில்லை
கலங்கவுமில்லை.
வாடவுமில்லை
வாசம் வீசவுமில்லை.
நான்
காகிதத்தில் செய்த பூ..


இப்பாடலை ஹரிஹரன் அனுபவித்து பாடியிருப்பார் ஏற்ற இறக்கங்களுடன், கேட்டுப்பாருங்கள்..


ஏனோ அப்போது பிடித்த பிரபுதேவாவை இப்போது பிடிப்பதில்லை..

குறும்படம் - asl plz - இணைய உலகில் இளசுகளின் நிலை.

இன்றைய இணைய உலகில், நம் இளைஞர்களின் நிலையைப்பற்றி ஓர் அழகான குறும்படம் இயக்கியிருக்கிறார்கள். இதை நீங்களும் பார்த்திருக்கலாம். பார்க்காதவர்களுக்காக இங்கே. இதில் ஒரேயொரு வசணத்தை தவிர வேறெதுவும் வசணம் இல்லை, காட்சிகளால் மட்டுமே புரிந்து கொள்ளக்கூடிய ஓர் அழகான படைப்பு. இறுதி வரையும் பாருங்கள் அப்போதுதான் புரியும்.. இதை இயக்கிய இயக்குனருக்கும் தயாரிப்பு நிறுவனத்துக்கும் பாராட்டுக்கள்..


சிங்கள தொலைக்காட்சி நாடகங்களும் நானும்..!

இலங்கையில் தொலைக்காட்சி என்ற பொழுதுபோக்கு ஊடகமும்,தொலைக்காட்சி பெட்டிகளும் அதிகளவாக அறிமுகமான காலகட்டம் அது. அதாவது 90களின் நடுப்பகுதி. அப்பொழுதே எங்கள் வீட்டிற்கும் தொலைக்காட்சி பெட்டி அறிமுகமாகியது.. அப்பொழுது இரண்டு அலைவரிசைகள்தான். ரூபவாஹினி மற்றும் சுயாதீன தொலைக்காட்சி சேவை, இரண்டும் அரசுக்கு சொந்தமானவை. இன்றைய காலகட்டத்தில் கண்ட பக்கமெல்லாம் படங்களும் பாடல்களும் ஆனால் அன்று படங்களோ பாடல்களோ அவ்வளவு சுலபமாக பார்த்துவிடமுடியாது. இரண்டு சானல்களிலும் சிங்கள நிகழ்ச்சிகளே அதிகம் ஒலிபரப்பபடும். தமிழில் செய்திகள் மட்டும் தினம் ஒரு தடவை ஒளிபரப்பாகும்.

தமிழ்நிகழ்ச்சிகளை பொறுத்தவரை ரூபவாஹினியில் வாரத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் பகல் 2 மணி முதல் 3 மணி வரை இடம்பெறும் இதில் அரைநேரம் நாடகமும் மற்ற அரைநேரம் பாடல்களும் ஒளிபரப்பாகும். இந்த ஒரு மணிநேரத்தில் அனைவரும் தொலைக்காட்சி பெட்டி முன் தான். இதிலே பார்த்த நாடகங்களான. பாலச்சந்தரின் கையளவு மனசு,மனோரமா ஆச்சியின் அன்புள்ள அம்மா மறக்கமுடியாதவை. மற்ற அரை மணிநேரத்தில் 5 அல்லது 6 பாடல்கள் இடம்பெறும் இதைப்பார்க்க ஒரு வாரம் காத்திருக்க வேண்டும். இதிலும் ஒளிபரப்பிய பாடல்களையே மீண்டும் மீண்டும் ஒளிபரப்புவார்கள். தமிழ்த்திரைப்படங்களை பொறுத்தவரை ரூபவாஹினியில் மாதம் ஒரு முறையும் சுயாதீன தொலைக்காட்சியில் வாரம் ஒரு முறையும் ஒளிபரப்பாகும். இலங்கையில் படைக்கப்பட்ட தமிழ்நாடகங்கள்,பாடல்கள் வானொலியில் அதிக இடம் பிடித்திருந்தாலும். தொலைக்காட்சியில் அவ்வப்போது பொங்கள்,தீபாவளி தினங்களில் மாத்திரம் ஒளிபரப்புவார்கள்..

இவ்வாறான காலகட்டங்களிலேயே சிங்கள தொலைக்காட்சி நாடகங்கள் எனக்கு அறிமுகமாகியது. ஆரம்ப காலங்களில் சிங்கள மொழி அவ்வளவாக பரிச்சயமில்லையென்றாலும் அதன் நகரும் காட்சியமைப்பு, ஒளிப்பதிவு, இயக்கம் போன்றவை மிகவும் ஈர்ப்பை ஏற்படுத்தியதுடன். மொழியை தாண்டி அவை புரியும்படியாகவும் இருந்தது. பின்னாட்களில் பாடசாலையில் சிங்கள பாடமும் இருந்ததால் அவை இலகுவில் புரிய ஆரம்பித்ததுடன். சிங்கள மொழியை கற்க இவ்வாறான தொலைக்காட்சி நாடகங்கள் பெரிதும் உதவியது.

இப்போதெல்லாம் தொலைக்காட்சி நாடகங்கள் என்றாலே அது பெண்கள் சார்ந்த விடயமாகவே பார்க்கப்படுகிறது. ஆண்களுக்கு அங்கே அனுமதியில்லை என்ற மாயை உருவாக்கப்பட்டுள்ளது.. இதற்கு தற்காலத்து நாடகங்களும் சான்றுதான். காரணம் அங்கே முழுதும் பெண்கள் ராச்சியம்தான். பெண்களே அதிகம் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பார்ப்பதால் அவர்களை கவர்வதற்கான உத்தியாகலாம் இது. இதனால் தொலைந்து போனது நாடகங்களின் தனித்தண்மை மட்டுமே, இதற்கான முழுப்பொறுப்பும் இந்திய தொலைக்காட்சிகளின் பக்கமே. (ஒரு சில நாடகங்களை தவிர்த்து உ+ம் மர்ம தேசம்) ஆனால் இலங்கையின் அப்போதைய நாடகங்கள் அவ்வாறில்லை. அது மனிதர்களின் சமகால வாழ்க்கையின் யதார்த்தங்களை நன்றாக பேசியது. அவர்களின் கலை,கலாச்சாரம்,வாழ்வியல் அதன் உண்மைகள் பொய்கள் மற்றும் மனிதர்களின் உண்மை முகங்களை ஒப்பனைகள் இல்லாமல் அவ்வாறே காட்டியது.

இரவு நேரம் பொதுவாக பிள்ளைகள் படிக்கும் நேரமாகையால், அப்பொழுது டீவி பார்ப்பதற்கு அனுமதியில்லை. ஆனால் நாடகங்கள் ஒலிபரப்பபடும் நேரமான இரவு 8.30 - 9.00 மட்டும் எங்கள் வீட்டில் அனுமதி உண்டு. காரணம் அந்த நாடகங்களின் தரம், அவற்றில் சொல்லப்படும் விடயங்கள். ஒரு நாடகம் வாரத்துக்கு ஒரு அங்கம்(எபிசோட்)  மட்டுமே ஒளிபரப்பாகும் அடுத்த எபிசோட்டை பார்க்க அடுத்த வாரம் வரை காத்திருக்கனும் அந்த காத்திருப்பும் ஒருவித இன்பம்தான். இவ்வாறு ஏழு நாட்களும் ஏழு நாடகங்கள் ஒளிபரப்பாகும். ஒரு சுவாரசியமான நாவலை படிக்க படிக்க எவ்வளவு சுவையாக இருக்குமோ அவ்வாறான உணர்வு இந்த நாடகங்களை பார்க்கும் பொழுது. காரணம் அதிகமான நாடகங்கள் பிரபலமான நாவல்களை தழுவியே எடுக்கப்பட்டது.

ஒரு நகரத்தில் வாழும் மனிதனுக்கு, கிராமத்து மனிதர்களின் வாழ்க்கையைப்பற்றி தெரிந்து கொள்ளவேண்டுமென்றால் கிராமத்துக்கு சென்றுதான் பார்க்கவேண்டும் என்ற அவசியம் ஏற்படாதவாறு. கிராமத்தை அப்படியே கண்முன் கொண்டுவந்தது அவ்வாறான நாடகங்கள். அந்த கால கட்டத்தில் கிராமத்தை அடிப்படையாக வைத்தே அதிக நாடகங்கள் வெளிவந்தது குறிப்பிடத்தக்கது. அங்கே கிராமத்து மனிதர்களின் வாழ்க்கைமுறை,கல்வி முறை,நடை உடை பாவனை அத்தனையும் அழகாக காட்சிப்படுத்தப்பட்டது எந்தவித மிகைப்படுத்தலோ இல்லாமல்.
அப்போது பார்த்தவற்றில் இப்போது பல நாடகங்களின் பெயர்கள் நினைவிலில்லை. நினைவில் நிற்கின்ற சில தூதருவோ(பிள்ளைகள்), நேதேயோ(உறவினர்கள்), அம்மய் தாத்தய் (அம்மா அப்பா), எககெய குருள்ளோ(ஒரு வீட்டுப்பறவைகள்), இட்டிபஹன்(மெழுகுவர்த்தி),மடொல்துவ, அம்ப யாலுவோ(சிறுபராய நண்பர்கள்), பளிங்கு மெனிக்கே,தடுபஸ்னாமனய இதில் தமிழ்/சிங்கள கலவையில் உருவான யாழ்ப்பாணத்தை மையமாக வைத்து தயாரிக்கப்பட்ட "இவ்வழியால் வாருங்கள்" என்ற நாடகத்தையும் குறிப்பிடலாம். சுயாதீன தொலைக்காட்சி(ITN) யில் இரண்டு தசாப்தம் கடந்தும் "கோப்பி கடே" (டீக்கடை) என்றொரு நாடகம் இன்னும் ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கிறது. இதிலே வாராவாரம் ஒவ்வொரு தலைப்பில் சமகாலத்தில் நடைபெறும் ஏதாவதொரு விடயத்தை பற்றி பேசுவார்கள் கொஞ்சம் நகைச்சுவையாக கொஞ்ச்ம சிந்திக்க கூடிய வகையில். அதில் நடிக்கதுவங்கிய பலரில் சிலர் இறந்தும்விட்டார்கள். ஆனால் முன்புபோலில்லாமல் அதன் தரம் குறைந்து கொண்டு வருகிறது.

தற்போதைய சிங்கள தொலைக்காட்சி தொடர்களை நோக்கினால அவை முன்பு போல் இல்லை. இன்றைய மேல்தட்டு மக்களின் வாழ்க்கையையும்,காதலையும்,இன்றைய நவ நாகரீக வாழ்க்கை முறையையும்தான் அதிகம் பேசுகிறது. ஒரு சில நாடகங்களை தவிர.காலங்கள் செல்ல செல்ல இன்றைய நடைமுறைக்கேற்றவாரு ரசனைகளையும் மாற்றிக்கொள்ளவேண்டியிருக்கிறது. விரும்பியோ விரும்பாமலோ.. இன்றைய வணிக உலகில் எது அதிகம் விரும்பபடுகிறதோ அதுவே அங்கே உருவாக்கவும்படுகிறது அது அபத்தமாகயிருந்தாலும்..!

டிஸ்கி- பதிவெழுத தொடங்கிய காலத்தில் எழுத நினைத்தது ஒன்றரை வருடம் கழிந்து இன்று நிறைவேறியுள்ளது.

சின்ன சின்ன சந்தோஷங்கள்..!!


அன்றொரு இரவு நேரம்
அபுதாபியில்
மல்லிகை சாமான வாங்குவதற்காய்
நண்பனொருவனுடன் சென்றிருந்தேன்
சுப்பர் மார்க்கட் ஒன்றிக்கு..
பொருட்கள் கொஞ்சம்தான் வாங்கி
பில் போட்டுவிட்டு
தள்ளு வண்டியை தள்ள முற்பட்டோம்.
அதற்குள் அங்கு வேலை செய்யும்
பையநொருவன் அதை தள்ளிக்கொண்டு
எங்கள் முன்னால் சென்றான்..
அவனிடம்
டாக்ஸி பக்கித்தில்தான் நாங்களே
கொண்டு போய்க்கிறோம்
என்றோம்..
அவன் கேட்பதாய் இல்லை
பரவாயில்லை நான் கொண்டு வந்து
தருகிறேன் என்கிறான்..
அவன் நோக்கம்
வருபவர்களுகு உதவி செய்து
பொருட்களை ஏற்றிக்கொடுத்தால்
எவ்வளவாவது தருவார்கள் என்பது..
மிகக்குறைந்த சம்பளத்தில் வேலை செய்யும்
அவர்களின் நம்பிக்கையே
இந்த "டிப்ஸ்" எனப்படும்
சின்னத்தொகையில்தான்..
இவன் ஏன இதை தள்ளிட்டு வரனும்
நம்ம ரெண்டு பேரு இருக்கம் தானே
இப்ப இவனுக்கு ஏதாவது குடுக்கனும்
நண்பன் பக்கத்தில்
முணங்கிக்கொண்டு வருகிறான்..
பொருடகளை ஏற்றிவிட்டு
எங்கள் முகத்தை பார்த்தான்
நான் ஐந்து திர்ஹம் அவன் கைகளில்
பொத்திவிட்டு
வண்டியில் ஏறிக்கொண்டோம்..
அந்த ஐந்து திர்ஹம் கொடுத்த வேளை
அவன் முகத்தில் கண்ட புன்னகை
இவ்வாறான
சின்ன சின்ன விடயங்களால்கூட
மனிதர்களை சந்தோஷப்படுத்த முடியும்
என உணர்ந்து கொண்டேன்..

இரவுக்காதலன்..!!


இரவு அழகானது
நிலவோடு
உன் நினைவுகளையும்
சுமந்து வருவதால்..!

வார்த்தைகள் சேகரிக்கிறேன்
உன்னுடன் பேச
பரிட்சைக்காய் பயிலும்
பள்ளி சிறுவன் போல..!

விலைகொடுத்து வாங்கிவிட்டாயா
வெட்கங்களை
உன் நிழலும் நாணுகிறதே
உன்னைப்போலவே..!

ஒப்பந்தம் செய்துகொண்டேன்
கனவுகளோடு
ஒளிப்பதிவு செய்யக்கோரி
உன் முகத்தை மட்டும்..!

புன்னகைகள்
சுமந்து செல்கிறால்
புத்தகங்கள் சுமந்து செல்லும்
பள்ளிச்சிறுமி போல்..!

தக்காளித்திருவிழா 2011..!!


உலகில் பல்வேறு பிரதேசங்களிலும் விதவிதமான திருவிழாக்கள் நடைபெறுவது வழமை.. இது கொஞ்சம் வித்தியாசமான திருவிழா, ஒவ்வொரு வருடமும் ஸ்பெயின் நாட்டில் ஆகஸ்ட் மாதத்தின் கடைசி புதங்கிழமை இந்த தக்காளி திருவிழா நடைபெறுவது வழமை. அதாவது தக்காளியை ஒருவருக்கொருவர் எறிந்து சந்தோஷங்களை வெளிப்படுத்திக்கொள்வார்கள்.
இம்முறை ஸ்பெயினின் Bunol நகரில் இந்த கொண்டாட்டம் நடைபெற்றது,

இதில் 20000-40000 பேர் கலந்துகொண்டுள்ளார்கள். 100 metric ton க்கும் அதிகமான தக்காளியை இதற்காக பயன்படுத்தியிருக்கிறார்கள். தக்காளியை உணவுக்கே மட்டும் பயன்படுத்தும் நமக்கு ஆச்சர்யமான திருவிழாதான். இது 'World's Biggest Food Fight' எனவும் அழைக்கப்படுகிறது.. வாங்க நாமளும் இதில் கலந்துக்கலாம்.. 




































முடிந்தால் இண்ட்லியில் ஒரு ஓட்டுப்போடவும்..

இரவுச்சூரியன்..!



சிரிப்பு
ஏழைகளின்
மறந்து போன
சின்ன வயசு ஞாபகம்!

மழை
வானிலிருந்து விழும்
விவசாயிகளின்
உணவுப்பருக்கை!

ஊழல்
தினமும்
பழகிப்போன
பத்திரிகைச்செய்தி!

பொம்மை
குழந்தைக்கு கொடுக்காமல்
அலமாரியில் வைக்கப்படும்
காட்சிப்பொருள்!

வரலாறு
இடப்பற்றாக்குறையால்
தூக்கியெறியப்படும்
பழைய புத்தகங்கள்!

கனவு
வெறுப்பவனுக்கும்
தினிக்கப்படும்
இலவச சினிமா!

அண்டைவீட்டுக்காரர்கள்
உயர்ந்த மதில்களால்
மறைக்கப்பட்ட
முகம் தெரியாதோர்!

தாய்மடி
சொர்க்கத்தில்
வாழ்ந்து வந்த
பொற்காலம்!

பணம்
மனிதனை அழிக்க
கண்டுபிடிக்கப்பட்ட
முதல் ஆயுதம்!

ஆசை
மனித இனத்தின்
அழிவின்
ஆரம்பம்!

யாரது, சொல்லாமல் நெஞ்அள்ளி போவது!!காதல் கதை.

 சென்னையில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்த காலம் அது.அலுவலகத்தில் 40 % பெண்களே. அவ்வப்போது எதாவது கிறுக்கி (எழுதி ) காட்டுவேன். அதில் அனைவருக்கும் ஒரு சந்தோசம். உலகில் கவிஞர்களை உருவாக்குவதும் வாழவைப்பதும் பெண்கள்தான் இதை யாரும் மறுக்க முடியாது. படைக்க தெரிந்தவர்களை ரசிப்பதில் அவர்களுக்கு நிகர் அவர்களே.அந்த அலுவலகத்திலும் ஒருத்தி இருந்தாள் அவள் பெயர் நிலா.... மாநிறம், பூசினார் போல தேகம், அறிவும், திறமையும், பொறுமையும், பரிவும், நிதானமும் கலந்த கலவை அவள். லேசான சுருட்டை முடி. அதில் ஒன்றிடண்டு முன்னால் வந்து நிற்கும். அரிதாரம் பூசாத முகம் அவளின் சிறப்பு. சுற்றி இருக்கும் காட்டன் புடவை அவளை சுமக்கிறதா இல்லை அவள் புடவையை சுமக்கிராளா பாப்பையாவை வைத்து பட்டி மன்றமே நடத்தலாம் . அதிராத பேச்சு, நிதான நடை, பளிச் என்ற ஒரு தூய்மை. யாரையும் புண் படுத்தாத மனம்.நான் தேடிய மணியன் செல்வம் ஓவியம் அவள். அவளை நல்ல அழகு என்று சொன்னால் அது பிழை. அதையும் தாண்டி வார்த்தை தேடுகிறேன்.

ஒருமுறை கதிரவனில் புகைப்பட கவிதை போட்டி.எனக்கும் அவளுக்குமான சம்பவங்களை கோர்த்து எனது காதலை சொல்லி கவிதையை எழுதி அனுப்பிவைக்க அதற்க்கு பரிசும் கிடைத்தது . கவிதையை வாசித்தாள் பின் ஒன்றும் சொல்லவில்லை ஏற்று கொண்டாளா இல்லையா தத்தளித்தேன். பதட்டம் உடலிலும் மனதிலும். அலுவலக இளசுகள் ட்ரீட் கேட்க அனைவரும் அருண் ஐஸ் கிரீம் பார் சென்றோம். வட்ட மேசை சுற்றி அமர்ந்து இருந்தோம். என் அருகில் வந்து அமர்ந்தாள். பேசி கொண்டிருக்கும் போதே யாரும் அறியாவண்ணம் இரண்டு பேருடைய ஐஸ் கிரீமையும் மாற்றி கொண்டாள். அவள் தின்ற பாதி இப்பொழுது என் முன்னே. எழுந்து நின்று ஆர்பரிக்க வேண்டும் போல தோன்றியது. முதல் காதல் அது ஏற்று கொண்ட தருணம். வானத்தில் இருந்து என்மேல் மட்டும் மழை பொழிவது போல இருந்தது.காதலித்து பாருங்கள் பட்டென்று பத்து வயது குறைந்து விடும்.
காதல் சுகம் கிடைக்காத மனிதன் உலகில் பாவப்பட்ட ஜீவராசி. காதல் ஒரு அபூர்வ உணர்வு. வரலாற்று ஆசிரியர்கள் போர்களங்களை எவ்வளவு பதிந்தார்களோ அதற்க்கு சமமாய் காதலையும் பதிந்தார்கள். உண்மையான காதல் துணை நினைத்தாலே உடலும் மனதும் பூரிக்கிறது. அலுவலகம் சுகமானது.விடுமுறையை வெறுக்க தோன்றியது. ஆணையும் பெண்ணையும் சேர்த்து படைத்த இறைவனுக்கு என் மனமார்ந்த நன்றி.

மூன்று தங்கைகளுக்கு அக்காள் அவள். தனியார் வேலைக்கு சைக்கிள் ஓட்டிச்செல்லும் தந்தை. . சாலிகிராமத்தில் ஒரு சாதாரண குடும்பம் அவளுடையது. கனவு எல்லோருக்கும் சொந்தம்.காதலும் எல்லோருக்கும் சொந்தம். இதில் ஏழ்மை எங்கிருந்து வந்தது. நாங்களும் வாழ்ந்தோம் சந்தோஷ காதலர்களாய். பிரச்சனைகள் ஒவ்வொரு வீட்டு வாசலிலும் தொங்குகிறது.கடவுள் விரும்பாத வரை அது உங்களை அடைவதில்லை. அவர் விரும்பி விட்டால் தடுக்க எவருமில்லை.

காதல் பூத்து ஒரு வருடம் தாண்டி இருக்காது,ஒரு இரவு பொழுதில் தொலைபேசி ஒலித்தது. மறுமுனையில் அலுவலக நண்பர்" நிலா தந்தை இறந்துவிட்டார் மருத்துவமனை வா "என்று. பதறினேன்.மருத்துவமனை சென்றேன். என்ன சொல்வேன் அவளிடம். இது காலில் அடிபட்ட புண்ணா சரியாகிவிடும் என்று சொல்ல. தீராத வலி. வீட்டில் ஆண்கள் இல்லாததால் அலுவலக நண்பர்கள் எல்லா வேலையும் செய்தோம். வீடு வெறிச்சோடியது. அழுகை நிரந்தரமானது. சிறிது நாட்கள் வேலைக்கு வரவேண்டாம் என அலுவலகமும் அலுவலக நண்பர்களும் பண உதவி செய்தார்கள். தினமும் வீடு சென்று வந்தேன். என்னால் ஆனவற்றை செய்தேன்.இப்பொழுது புதிதாய் நிறைய உறவினர்கள் முளைதிருந்தார்கள்

வந்தான் எதிரி சித்தப்பா ரூபத்தில்.நல்ல வரன் என்றும், எதுவும் தரவேண்டாம் என்றும், குடும்பத்தை பார்த்து கொள்வான் என்றும் இன்னும் நிறைய என்றும் என்றும் சொல்லி எங்கள் காதலை தீயிட்டு கொளுத்தினான். இப்பொழுது என்ன அவசரம் என்றாள் " ஆம்பிள்ளை இல்லாத வீடு" என்றார். இப்பொழுது அழுகையுடன் வீட்டில் சண்டையும் சேர்ந்தது. அவள் அம்மா நோய்வாய் பட்டாள்.

ஒரு தீபாவளியின் முந்தய தினம். வீட்டிற்கு அழைத்திருந்தாள். சென்றேன். ஒரு அறையில் அமர வைத்து கதவை அடைத்து கொண்டாள்.தோளில் சாய்ந்து அழுது தீர்த்தாள். தன்னுடைய இயலாமையை சொன்னாள். மூன்று தங்கையை நினைவுட்டினாள். என்ன செய்ய என தெரியவில்லை என்றாள். பின் முதலும் கடைசியுமாய் என்னை முழுமையாக கட்டி பிடித்தாள் அழுதாள் திரும்பி நின்று நான் ஒரு ஜடமாக வாழ்ந்துவிட்டு போகிறேன்.என்னை மன்னித்துவிடு..போ என்றாள். ஒன்றுமே செய்ய இயலாதவனாக வெளியே வந்தேன். வெளியே வராந்தாவில் அவள் அம்மா. என் அருகில் வந்தவர்கள் சட்டென என் காலை பிடித்து விட்டார்கள்.இனி வீட்டிற்கு வரவேண்டாம் என்றார்கள். நான் நிலைகுலைந்து போனேன். என்னம்மா இது...நான் சின்ன பையன் என்னிடம் போய் " என்றேன். அவள் மனசில் ஆசையை வளர்த்து விடாதே என்றார்கள். இல்லை இல்லை என்று தலை அசைத்தவனாக வெளியே வந்தேன். என் அழுகையை மறைக்க வானமும் சேர்ந்து அழுதது.

காதல் தோற்பதில்லை காதலர்கள் ஏதோ ஒரு காரணத்தினால் தோற்று விடுகிறார்கள்..

நன்றி-புல்லட்பாண்டி..


டிஸ்கி- என்னுடைய  தாய்மை பெண்மை மதிக்கப்படவேண்டியதே என்ற பதிவு. என்ற பதிவு  விகடன் குட்பிளாக்ஸ். பகுதியில் வந்துள்ளதை கண்டு மிக்க மகிழ்ச்சி விகடன் நிர்வாகத்திற்கும் பதிவுலக நண்பர்களுக்கும் ரொம்ப நன்றி..

Rayilin oligal Song lyrics in English and Tamil

Railin Oligal Lyrics in Blue Star  Male : Rayil-in oligal Unaiyae theduthae Adhirum paaraiyaai Idhayam aaduthae Unthan kai veesidum Poi jaad...