BARAN - உணர்வுகளை வருடிய ஓர் ஈரான் சினிமா..!!

சோவியத் ரஷ்யாவுக்கும் ஆப்கானிஸ்தானுக்குமிடையில் 1970-80 காலப்பகுதியில் இடம்பெற்ற யுத்தத்தில் 15 இலட்சம் மக்கள் ஆப்கானிலிருந்து ஈரானுக்குள் அகதிகளாக இடம்பெயர்ந்ததாக ஓர் அறிவிப்போடு தொடங்குகிறது படம்..

பல மாடிக்கட்டடம் கட்டும் வேலைத்தளம் அது.. அங்கே மேர்மர் என்பவர் வேலையாட்களை நிர்வகிப்பவர்(Supervisor), லத்தீப் என்ற இழைஞன் இவனின் வேலை வேலையாட்களுக்கு தேநீர் தயாரிப்பது, கடைக்குப்போய் உணவுப்பொருட்கள் ரொட்டி என்பன வாங்கி வருவது போன்றன.. இவர்கள் ஈரான் நாட்டுக்காரர்கள்.. அங்கே ஆப்கான் அகதிகளும் வேலைக்கமர்த்தப்பட்டிருக்கிறார்கள். ஆனால், அது சட்டவிரோதம்! அரசாங்க அனுமதியில்லாமல் எந்த ஆப்கான் அகதிகளையும் வேலைக்கு வைத்துக்கொள்ளக்கூடாது என்பது சட்டம்..

ஆனால் ஆப்கான் அகதிகளை குறைந்த ஊதியத்தில் வேலைக்கமர்த்தி அதிக வேலையை பெற முடியும் என்ற நோக்கில் மேர்மர் அவர்களை வேலைக்கமர்த்தியிருக்கிறான்..(இப்போது மத்திய கிழக்கு நாடுகளில் நடப்பதும் இதுவேதான்).. ஒருநாள் வேலை செய்துகொண்டிருக்கும் போது நஜாப்பின் காலில் பயங்கரமாக அடிபட்டு காயத்துக்கு உள்ளாகிறார்.. பிறகு வைத்தியசாலையில் சேர்க்கப்படுகிறார்.. நஜாப், ஆப்கான் நாட்டுக்காரர்..

மறுநாள் நஜாப்புடன் வேலை செய்த சுல்தான் என்பவர் மேர்மரிடம் வந்து. நஜாபின் காலில் பயங்கரமாக அடிபட்டதினால் கால் முறிந்துவிட்டதாகவும் இனிமேல் அவரால் எழுந்து நடக்கமுடியாதென்றும் கூறி.. பின், அதனால் அவரின் மகனை அழைத்து வந்திருப்பதாகவும் நஜாப்பின் வேலையை அந்தப்பையனுக்கு கொடுக்கும்படியும் கேட்கிறார்.. அந்தப்பையனுக்கு ஒரு 14-16 வயதுக்குள் இருக்கலாம்.. முகத்தை திறந்து தலையை முழுவதும் மறைத்தபடி ஆடை அணிந்திருக்கிறான். மேர்மர் அந்தப்பையனை பார்த்து இதற்கு முன் எங்காவது வேலை செய்திருக்கிறாயா எனக்கேட்கிறார்.. அந்தப்பையன் எதுவும் பேசவில்லை கேட்கும் கேள்விக்கெல்லாம் சுல்தாந்தான் பதில் சொல்கிறார் பெயர் ரஹ்மத் என்கிறார்.. எங்கும் வேலை செய்யவில்லை வீட்டில் தம்பி தங்கைகளை பார்த்துக்கொண்டிருந்தார் என்கிறார்..

மேர்மர் இந்த வேலையெல்லாம் இந்தப்பையனால் செய்ய முடியாது என வேலை கொடுக்க மறுக்கிறார். நஜாப்புக்கு ஐந்து குழந்தைகள் இருக்கு அவரின் உழைப்பை நம்பித்தான் அந்த குடும்பமேயிருக்கு.. இப்போது அவரால் வேலைசெய்ய முடியாதநிலையில் இந்தப்பையனுக்கு வேலை கொடுக்குமாறும் சில நாட்களில் வேலைகளை பழகிக்கொள்வான் என்பதாகவும் வேண்டிக்கொள்கிறார் சுல்தான்.. மேர்மர், எவ்வளவுதான் கத்தினாலும் மனிதாபிமானமுள்ள நல்லவர். அந்தப்பையனை வேலைக்கு சேர்த்துக்கொள்கிறார்..

ரஹ்மத்துக்கு சீமேந்து மூட்டைகளை தூக்கும் வேலை கொடுக்கப்படுகிறது.. மிகவும் கஷ்டப்பட்டே அந்த வேலைகளை செய்கிறான்.. ஒருநாள் சீமேந்து மூட்டைகளை தூக்கிக்கொண்டு மாடிக்குச்செல்லும்போது சுமக்க முடியாமல் மூட்டையை அப்பிடியே மாடிப்படியில்கீழே விட்டுவிடுகிறான்.. அது கீழேயிருந்த ஒருவனின் மேல் விழுந்து அவன் உடம்பு முழுதும் சீமேந்து.. இதன்பின் மேர்மர் ஒரு முடிவுக்கு வருகிறார் ரஹ்மத்தினால் இந்த வேலைகளை செய்ய முடியாதென்றும்.. லத்திபீன் தேநீர் தயாரிக்கும் கடைக்குப்போகும் வேலைகளை ரஹ்மத்துக்கு சொல்லிக்கொடுக்கும்படியும் ரஹ்மத்தின் வேலையை லத்தீபை பார்க்கும்படியும் கூறுகிறார்..

இதனால் லத்தீப் ஆத்திரமடைகிறான்.. ரஹ்மத்தின் மீது கோபம் கொள்கிறான், எங்கிருந்தோ வந்த ஆப்கான் அகதிப்பையன் தன் வேலைக்கு ஆப்பு வைத்துவிட்டதாக எண்ணி அவனுடன் சண்டைபோடுகிறான்.. ஒருமுறை கண்ணத்தில் அறைந்தும் விடுகிறான்.. ரஹ்மத்தின் தேநீரையும் புறக்கனிக்கிறான்.. அடுக்களைக்குச்சென்று பொருட்கள் எல்லாம் தூக்கி எறிகிறான் உடைக்கிறான்..

ரஹ்மத் தான் பொறுப்பெடுத்த புதிய வேலையை மிக விருப்பமாக செய்கிறான்.. அலங்கோலமாக இருந்த சமயறையை மிக அழகாக நேர்த்தியாக வைக்கிறான்.. கதவுக்கு திரைச்சீலையிடுகிறான்.. சமயலையில் பூச்செடிகூட வைக்கிறான்.. கண்டமேனிக்கு சாப்பிட்டவர்களை தரைக்கு விரிப்பு விரித்து ஓரே நேருக்கு உட்கார வைத்து சாப்பாடு பரிமாறுகிறான்.. இதைப்பார்த்துக்கொண்டிருந்த லத்திபூக்கு அதிர்ச்சி..ரஹ்மத்தை அவதானிக்க தொடங்குகிறான்.. ஒரு நாள் ஓர் பெரும் அதிர்ச்சி அவனுக்கு.. இங்கே ஒரு ட்விஸ்டு... அதை கடைசியில் சொல்கிறேன்...

ரஹ்மத்தின் மீது அனுதாபம் பிறக்கிறது லத்தீபுக்கு.. ரஹ்மத் ஓரு நாள் கடைக்கு ப்போய் வரும்போது வேலைத்தளங்களை சோதனையிடும் ஆபிசர்களிடம் மாற்றிக்கொள்கிறான்.. நில்லு, இங்க என்ன பண்றாய் என்று கேட்கும்போதே பையை போட்டுவிட்டு ஓடத்தொடங்குகிறான்..ஆபிசர்களும் அவனை விரட்டிச்செல்கிறார்கள்.. இதை தூரத்திலிருந்து பார்த்துக்கொண்டிருந்த லத்திபூம் அவர்களின் பின்னால் ஓடுகிறான். ரஹ்மத் அவர்களிடம் மாட்டிக்கொண்டதும் பின்னால் சென்ற லத்தீப் ஆபிசர்களை பிடித்துக்கொண்டு ரஹ்மத்தை தப்ப வைக்கிறான்.. அவன் மாட்டிக்கொள்கிறான்..பின் மேர்மரின் உதவியால் தண்டப்பணம் கட்டி போலிசிலிருந்து வருகிறான்..

இச்சம்பவத்தால் சுல்தான் மற்றும் ரஹ்மத் அந்த இடத்திற்கு வேலைக்கு வருவதில்லை.. ரஹ்மத்தை கானாமல் லத்தீப் மனம் வருந்துகிறான்.. அவனுக்கு அங்கு வேலை செய்யவும் பிடிக்கவில்லை. இப்படியிருக்கும்போது சுலதான் மூலமாக ரஹ்மத் எங்கே வேலை செய்கிறான் என்பதை அறிகிறான்.. அங்கே போய் பார்க்கிறான்.. ஒரு ஆற்றில் கற்கள் தூக்கும் வேலையில் ஈடுபட்டிருந்தான்.. அங்கேயும் அவனால் முடியாத வேலையை மிகவும் கஷ்டப்பட்டே செய்கிறான்.. அதை தூரத்திலிருந்து அவதானித்த லத்தீப் மனம் வருந்துகிறான் கண்ணீர் வடிக்கிறான்.

லத்தீப் மேர்மரிடம் ஒரு வருடம் வேலை செய்திருக்கிறான்.. அதற்கான கூலியை உடனுக்குடன் கொடுத்தால் லத்தீப் செலவழித்து விடுவான் என்பதற்காக ஊருக்கு போகும் போது தருகிறேன் என சொல்லிவைத்திருந்தார் மேர்மர்.. லத்தீப் தான் ஊருக்குப்போக போவதாகவும் தங்கைக்கு சுகமில்லை என்பதாகவும் சொல்லி பணத்தை கேட்கிறான்.. அப்படியே மேர்மரிடம் வாங்கிய ஒரு வருட உழைப்புக்கான கூலியை சுல்தான் மூலமாக நஜாப்/ரஹ்மத் குடும்பத்துக்கு கொடுக்கும்படி கொடுக்கிறான்...லத்தீப் ஏன் இவ்வாறு செய்கிறான்.. எதனால் இந்த அனுதாபம்,பாசம்,வருத்தம்,கண்ணீர்... படத்தை பார்க்கவிரும்புவர்கள் இத்துடன் நிறுத்திக்கொள்ளலாம்.. அடுத்த பந்தியில் ட்விஸ்ட் உட்பட முழு கதையையும் சொல்லிவிடுகிறேன்..

லத்தீபின் அனுதாபத்துக்கான காரணம் ரஹ்மத் ஒரு பையனே அல்ல அது ஒரு சின்னப்பொண்ணு.. ஆமாம் அவள் பெயர் பரன்(படத்தின் பெயர்) லத்தீபின் மனமாற்றத்துக்கு இதுதான் காரணம்.. ஒரு முறை சமயறைக்குள் தற்செயலாக நுழைந்தவன் அவள் பெண் என்பதை அறிந்துகொள்கிறான்.. ஆனால் பரனுக்கோ இவனுக்கு தெரியும் என்ற விட்யம் தெரியாது.. தன் குடும்பத்துக்காகவேண்டி ஆணாக வேஷமிட்டு வேலைக்கு வந்தவள்.. லத்தீப் பரன் மீது வைத்திருந்தது காதலா,அன்பா,ஈர்ப்பா,அனுதாபமா என்றெல்லாம் தெரியாது.. இப்படத்தில் அதை எப்படி சித்தரிக்கிறார்கள் என்பதும் புரியவில்லை அதை பார்வையாளர்களின் தெரிவாகவே எடுத்துக்கொள்ளலாம்..

ஆனால் அது பெண் என அறிந்ததிலிருந்து லத்திபின் மனதில் ஏற்பட்ட மெல்லிய உணர்வுகள்தான் அந்த ஈர்ப்புக்கான காரணங்கள்.. அந்த உணர்வுகளை காட்சிபடுத்திய விதத்திலேயே இயக்குனர் வெற்றி பெறுகிறார்.. ரசிகர்கள் மனங்களிலும் இடம்பிடிக்கிறார்.. இவ்வாறு உணர்வுகளை தொடும் சினிமாவின் இயக்குனர் மஜித் மிஜிதியாகத்தான் இருக்க வேண்டும் என நினைத்து கடைசி டைட்டிலைப்பார்த்தால் இயக்குனர்.. மஜித் மஜிதியேதான்.

கடைசியில் நஜாப் மேர்மரிடம் ஒரு தொகை பணம் கடன் கேட்கிறான்.. திருப்பி தருவதாக.. ஆனால் மேர்மரிடம் கொடுப்பதற்கு இல்லை.. நஜாப் கோவித்துக்கொண்டு திரும்புகிறான்.. இதைப்பார்த்துக்கொண்டிருந்த லத்தீப் கொஞ்சம் பணத்தை தேடிக்கொண்டு நஜாப்பின் வீட்டுக்குச்செல்கிறான்.. கதவை தட்டியதும் உள்ளிருந்து பரன் கதவை திறக்கிறாள்.. இப்போதுதான் அவளை லத்தீப் ஒரு பெண்ணாய் பார்க்கிறான்.. முன்பு பார்த்ததைவிட இப்போதுதான் ஒரு பெண்ணுக்குரிய அழகுடன் அழகாய் இருக்கிறாள்.. லத்திபை பார்த்ததும் உள்ளே ஓடி மறைந்து கொண்டு நஜாப்பை அனுப்பி வைக்கிறாள்..

தான் கொண்டுவந்த பணத்தை மேர்மர் கொடுத்ததாக கொடுக்கிறான்.. பணத்தை வாங்கிக்கொண்டு தாங்கள் ஆப்கான் போகப்போவதாகவும் திரும்பிவந்து தருவதாகவும் சொல்கிறான் நஜாப்.. இதைக்கேட்டதும் லத்தீப் அதிர்ச்சியாகிறான்.. எப்போது எனக்கேட்கிறான்.. இன்றிரவே புறப்படப்போகிறோம் என்கிறான்..அவர்கள் செல்ல்த்தயாராகும் போது லத்திபூம் அந்த இடத்துக்கு வந்துவிடுகிறான்.. இப்போதுதான் லத்தீபை பரன் நிமிர்ந்து பார்க்கிறாள்.. ஒரு புன்னகையோடு வண்டியில் ஏறி உட்கார்ந்து கொள்கிறாள்.. இறுதிவரை ஒரு வார்த்தைகூட அவள் பேசவில்லை.. வண்டி புறப்படுகிறது.. மழையினால் புதைந்த அவள் காலடி சுவட்டை பார்த்து கொண்டிருக்கிறான் லத்தீப்..மழை பொழிகிறது படம் முடிவடைகிறது... பாரசீக மொழியில் "பரன்" என்றால் மழை என்றும் அர்த்தமாம்...

ஆஹா ஓஹோ என்று சொல்வதற்கு இந்தப்படத்தில் ஒன்றுமில்லைதான்.. ஆனாலும் படம் பார்த்து முடிந்ததும் மனதில் ஓர் இனம்புரியாத உணர்வு வந்து தாக்கிச்செல்கிறது..

யுத்தம் கொடுமையானது அகதிவாழ்க்கை அதைவிட கொடுமையானது!!!

ஆங்கில சப் டைட்டில்களுடன் யூடியுப்பிலும் இப்படத்தை கானலாம்!!!

5 comments:

நிரூபன் said...

வணக்கம் ரியாஸ்,
நான் நல்லா இருக்கேன், நீங்க எப்படி இருக்கிறீங்க?

மென்மையான மொழி நடையில் படம் பார்க்க தூண்டும் விமர்சனத்தை கொடுத்திருக்கிறீங்க. ரொம்ப நன்றி நண்பா.

Anonymous said...

நீங்கள் விமர்சித்த விதம் நல்லாயிருக்கு...படம் பார்க்க வேண்டும் என தோன்றுகிறது...

பாலா said...

படத்தை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி நண்பரே

ஹுஸைனம்மா said...

விமர்சனம் நல்லாருக்கு.

//சீமேந்து மூட்டைகளை தூக்கும் வேலை//

சீமேந்து என்றால் என்ன?

Riyas said...

சீமேந்து என்றால் என்ன?

Cement - In the most general sense of the word, a cement is a binder, a substance that sets and hardens independently, and can bind other materials together (wiki)

Pushpa 2 Tamil Song Lyrics

Peelingsu tamil lyrics puspa 2