March 10, 2012

மனதை நெகிழச்செய்த வைரமுத்துவின் கவிதையொன்று..

கருகிய ரோஜாவும் கடைசிக்கேள்விகளும்..

அமெரிக்க போர் விமானங்கள் ஈராக்கில் தாக்குதல் நிகழ்த்தியபோது இரண்டு வயதுக்குழந்தையொன்று பாதிமுகம் கருகி நின்றது. கண்ணீர்வடிய ஒரு கன்னமில்லாத அந்தக்குழந்தையின் குரலில் சில கேள்விகள்.

அரபியில் சொன்னாள் அம்மா

எங்கள் டைகிரிஸ் யூப்ரடீஸ் நதிகளிரண்டும்
வீசியடித்த அலைகளிலேதான்
முதல் நாகரீகம்
முளை கட்டிற்றாம்

உங்கள் நாட்டில்
நதிகளே இல்லையா புஷ் அங்கிள்?

உங்கள் ஆயுதம்
கூர்சோதிக்க
என் பிஞ்சு மண்டை ஓடுதான் கிடைத்ததா?

ரொட்டி சலித்த உங்கள்
குட்டி நாய்க்கு எங்கள் குருத்தெலுப்பென்றால்
கொள்ளை ஆசையா?

கனவுகள் நனைந்து
பூமிக்கு வந்தேன்
ரோஜாக்கள் வெடிக்கும்
நுண்ணொலி கேட்கவே
இராக்கில் பிறந்தேன்
பகலில் சூரியன்
இரவில் நிலவு
இரண்டையும் வெடித்தால்
எங்கனம் தாங்குவேன்?

மு..மு..முட்டுதே மூச்சு
சுவாசப்பையில் என்ன நெரிசல்
காற்றில் கலந்த சதைத்தூள் நிறைந்து
நெரிபடுதோ என் நுரையீரல்?

அலெக்சாண்டர் வாளில்
மங்கோலிய வில்லில்
பிரிட்டிஷ் பீரங்கியில்
கருகாத எங்கள் பேரீச்சங்காடுகள்
தீத்தாரைகளில் சிவ்வென்றெரியுதே!

இன்னொரு பருவம் பேரீச்சை பழுக்குமோ?
பேரீச்சை தின்ன
நாங்கள் இருப்பமோ?

நெருப்பு மழை
அக்கினி அலை
சூரியன் உடைந்து
பூமியில் ஒழுகினால்
எப்படித்தாங்கும்
என் மெல்லிய செந்தோல்?

மொத்தப் பிணக்குழியில்
என்னையும் இழுத்து எறியும்பொழுது
என் பிரிய பொம்மையைப்
பிரிக்க மாட்டீரே?

எங்கு நோக்கினும்
ரத்தப் படுகை

பாலைவனத்தை நாளை தோண்டினால்
தண்ணீரின் நிறம் சிவப்பாயிருக்குமோ?

ஏனிந்த விஷவெறி
ஏசுவா? அல்லாவா?
அதுவல்ல கேள்வி!
டாலரா? தினாரா?

அதுதானே கேள்வி!

இந்தியப் புறாக்கள் வாங்கி வளர்க்க
ஏழு தினார்கள் சேர்த்திருந்தேன்
அனுப்பட்டுமா புஷ் அங்கிள்
உங்கள் வீட்டு விலாசமிட்டு?

ஒரே ஒரு பிஞ்சு நிபந்தனை.
எண்ணெய்க்காடு எரியும் நெருப்பில்
நீங்கள் மூட்டிய பூதப் புகையில்
வாழ்வு தேசம் சுவாசம் எல்லாம்
கறுத்துக் கறுத்துக் கருகியழிந்தது

உங்கள் வீட்டுப் பெயரில் மட்டும்
இன்னும் என்ன 'வெள்ளைமாளிகை?'

வீடோ பெயரோ
மாற்றுவீர்களா?

நான் இறந்துபோயினும்
வந்து சேரும் என்
ஏழு தினார்!

கவிப்பேரரசு வைரமுத்துவின் "கொஞ்சம் தேநீர் நிறைய வானம்" நூலிலிருந்து

யூத்புல் விகடன் குட் பிளாக்கில் எனது, "தெருநாய்கள்" பதிவு வெளியாகியிருக்கிறது.. நன்றி விகடன்..


http://youthful.vikatan.com/index.php?nid=66

14 comments:

Kumaran said...

ஒரு பிஞ்சு குரலின் பிரதிபலிப்பாய் நெஞ்சைத்தை உளுக்கியது கவிதை..வாழட்டும் வைரக்கவி..வளரட்டும் நீங்கள்.வாழ்த்துக்கள்.மிக்க நன்றி.

அம்பலத்தார் said...

வைரமுத்துவிற்கு நிகர் வைரமுத்துவேதான்

அம்பலத்தார் said...

நல்லதொரு கவிதையை தேடி பதிவிட்டதற்கு நன்றி ரியாஸ்

சிட்டுக்குருவி said...

மிக அருமையான கவிதை பகிர்ந்ததற்கு நன்றி றியாஸ்

காட்டான் said...

வணக்கம் ரியாஸ்!
வைரமுத்துவின் அருமையான கவிதை பகிர்வுக்கு நன்றி..

விகடனில் எனது தம்பி பிளாக் தேர்வு செய்யப்பட்டது எனக்கு பெருமையாக இருக்கு.. வாழ்த்துக்கள் ரியாஸ்..!!

ஹேமா said...

எம் ஈழத்தையும் நினைக்க வைக்கிறது கவிதை.எங்கள் இழப்புக்களும் எத்தனை.வாழ்த்துகள் ரியாஸ் !

பாலா said...

யுத்தத்தின் வலியை பிஞ்சு வாயால் சொன்னது இதயம் கனக்க செய்கிறது

துரைடேனியல் said...

அருமையான கவிதை ஒன்றை காட்சிக்கு வைத்தீர்களே. நன்றி சகோ.அத்தனையும் வைர வரிகள். நெஞ்சைப் பிழியும் வார்த்தைகள். கண்கள் கலங்கின. பகிர்வுக்கு நன்றி.

ஆனந்தவிகடன் அங்கீகாரத்துக்கும் ஒரு பூங்கொத்து.

துரைடேனியல் said...

தமஓ 7.

Rathnavel Natarajan said...

அருமை.
எனது பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
வாழ்த்துகள்.

suryajeeva said...

இதே போன்று ஹிரோஷிமா நாகாசாகி குறித்து ஒரு அருமையான வைரமுத்து கவிதையை படித்த நினைவு உண்டு... ஆனந்த விகடனில் வெளி வந்ததாகவும் நினைவு

Syed Ibramsha said...

//உங்கள் ஆயுதம்
கூர்சோதிக்க
என் பிஞ்சு மண்டை ஓடுதான் கிடைத்ததா?//

:(((

வார்த்தைகள் இல்லை.

இராஜராஜேஸ்வரி said...

இந்தியப் புறாக்கள் வாங்கி வளர்க்க
ஏழு தினார்கள் சேர்த்திருந்தேன்
அனுப்பட்டுமா புஷ் அங்கிள்
உங்கள் வீட்டு விலாசமிட்டு?


கனக்கவைக்கும் கூர்மையான வரிகள்..

சசிகலா said...

ஏனிந்த விஷவெறி
ஏசுவா? அல்லாவா?
அதுவல்ல கேள்வி!
டாலரா? தினாரா?

அதுதானே கேள்வி!
மிக அருமை

Related Posts Plugin for WordPress, Blogger...