ருவண்டா யுத்தம் - ஹோட்டல் ருவண்டா- நிஜ ஹீரோ.Paul Rusesabagina.

சின்ன வயதில் படித்துக்கொண்டிருக்கும் காலப்பகுதியில் தினமும் மாலை வேளையில் தொலைக்காட்சியில் செய்திகள் பார்ப்பது வழமை.. நாட்டு நடப்புகள்,உலக நடப்புகள், விளையாட்டுச்செய்திகளை தெரிந்து கொள்ளும் ஆர்வமே இதற்கு காரணம்.. இலங்கை ரூபவாஹினி அலைவரிசையில் மாலை 6.30 மணிக்கு தமிழ் செய்திகள் ஒளிபரப்பாகும்.. அதை தவறவிடுவதேயில்லை, அப்போதைய செய்திகளில் அடிக்கடி கேட்கப்பட்டு பழகிப்போன பெயர்தான் "ருவண்டா" காரணம் தினமும் கிரிக்கெட் ஸ்கோர் சொல்வது போல் இறந்தவர்களின் எண்ணிக்கை குறிப்பிடுவார்கள்.. காட்சிகளில் காட்டுவார்கள்.. ருவண்டா என்ற பெயர் குறிப்பிடாத உல்க செய்திகளே கிடையாது எனலாம்.. அப்போதெல்லாம் அதன் காரண காரியங்களை ஆராயுமளவுக்கு அனுபவமோ அறிவோ இருந்ததில்லை..

கொஞ்ச காலத்திற்கு பின் அந்த செய்திகள் மறக்கடிக்கப்பட்டது.. மிக நீண்ட நாட்களாக பார்க்க வேண்டும் என எண்ணிக்கொண்டிருந்த "ஹோட்டல் ருவண்டா" திரைப்படத்தை அண்மையில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.. அதன் பிறகே ருவண்டா யுத்தத்தின் கொடூரங்கள் மீண்டும் நினைவுக்கு வந்தது..யுத்தம் உக்கிரமடைந்த காலப்பகுதியில் தன் குடும்பத்தையும், அயலவர்களையும், குழந்தைகளையும்,வெளிநாட்டுக்காரர்களையும், எந்த இன மக்கள் தேடி தேடி கொல்லப்பட்டார்களோ அந்த இன மக்களில் கொஞ்சம் பேரையும்..மொத்தமாக 1200 பேர் அளவில், ஹோட்டல் மேனேஜராக பல சிக்கல்களுக்கு மத்தியில் தன் ஹோட்டலில் வைத்து காப்பாற்றிய ஒருவரின் உண்மைச்சம்பவத்தை அடிப்படையாக வைத்து இயக்கப்பட்டதே இந்த திரைப்படம்..

    Hotel Rwanda' - The Mille Collines Hotel இங்கு வைத்துத்தான் ஆயிரத்துக்கதிகமானோர் காப்பாற்றப்பட்டனர்..
இதை திரைப்படம் என்று சொல்வதைவிட நிஜக்காட்சிகளின் தொகுப்பு என்றே சொல்லலாம்.. அவ்வளவு யதார்த்தம் யுத்தத்தின் கொடூரங்களை கண்முன்னே கொண்டு வருகிறது.. அதன் பதறறத்தை நொடிக்கு நொடி பதிவு செய்திருக்கிறது..
அந்த காட்சிகளை திரைப்படத்துக்கென்று படமாக்கினார்களா.. அல்லது யுத்தம் நடந்த காலப்பகுதியில் ஒழிந்து நின்று படமாக்கினார்களா என்ற சந்தேகம் படம் பார்க்கும் போது உங்களுக்கும் வரலாம்.  அவ்வளவு மக்களை ஒன்றினைத்து ஒரு நிஜமான யுத்தகளம் போன்ற பிண்னனியை உருவாக்கி இப்படியொரு படத்தை எப்படி இயக்க முடிந்தது என வியந்து கொண்டிருக்கிறேன் அந்த வகையில் இயக்குனர் Terry George  மற்றும் திரைக்கதையாசிரியர்கள் George and Keir Pearson பாராட்டுக்குரியவர்கள்..

ஐ.நா பாதுகாப்பு படைகள் வந்து தங்களை காப்பாற்றி அழைத்துச்செல்வார்கள் என எதிர்பார்த்திருக்கையில் ஐ.நா படைகள் வந்து வெளிநாட்டவர்களான வெள்ளைக்காரர்களை மற்றும் அழைத்துச்செல்கையில்.. செஞ்சிலுவைச்சங்க ஊழியர், மேனேஜரைப்பார்த்து நீங்களெல்லாம் ஆபிரிக்கர்கள் கறுப்பர்கள் அதனால்தான் உங்களை அவர்கள் காப்பாற்றவில்லை என சொல்லுமிடம்.. ஐ.நா வின் பாரபட்சகொள்கைகளின் யதார்த்தம்.. அதன் பின் காயப்பட்டு உயிரைக்காப்பாற்றிக்கொள்ள ஓடி வருபவர்களை தன் ஹோட்டலுக்குள் அனுப்பி வைக்கும் காட்சி மனிதாபிமானத்தின் உச்சம்..இத்தனைக்கும் அந்த மேனேஜர் ஹுட்டு இனத்தை சேர்ந்தவர்.. அதாவது ருட்சி இனத்துகெதிராக இனவெறியாட்டத்தை நடத்திய இனத்தைசேர்ந்தவர்..

1990 ம் ஆண்டு முதல் சிறு சிறு சம்பவங்களாக நடைபெற்று வந்த உள்நாட்டுப்பிரச்சினை 1994 ம் ஆண்டே உக்கிரமடைந்தது.. 94 ம் ஆண்டு ஏப்ரல் 6 யில் ருவண்டா ஜனாதிபதி Juvénal Habyarimana கொல்லப்படுகிறார்.. இவர் பெரும்பாண்மை ஹுட்டு இனத்தைச்சேர்ந்தவர் என்பதால் பெரும்பாண்மை ஹுட்டு இனத்தவர்களால் சிறுபாண்மை ருட்சி இனத்தவர்களுக்கெதிராக தொடக்கப்பட்டதே இந்த இனவெறியுடன் சேர்ந்த கொலவெறி..அதாவது 100 நாட்களுக்குள் மாத்திரம் 800,000 மக்கள் கொன்றொழிக்கப்படார்களாம். இது இன்நாட்டு மொத்த சனத்தொகையில் பத்தில் ஒரு பங்காகும்..
                                            ருவண்டா ஜனாதிபதி Juvénal Habyarimana

இரண்டாம் உலகப்போர் நடந்த காலப்பகுதியில் யூதர்களுக்கு எதிரான இனவழிப்பை நடத்திய நாஸிகளிடமிருந்து Oskar Schindler என்ற ஜேர்மன் தொழிலதிபர்.. ஆயிரக்கணக்கான யூதர்களை காப்பாற்றியதை பதிவு செய்த Schindler's List திரைப்படம் மூலம் யூதர்கள் மத்தியில் Oskar Schindler பெருமைக்குறியவராக மாற்றப்பட்டாரோ அந்த வகையில் இந்த ஹோட்டல் ருவண்டா திரைப்படம் மூலம் தன் உயிரை பெரிதாக மதிக்காமல் ஆயிரத்துக்கும் அதிகமானவர்களின் உயிரைக்காப்பாற்றிய அதன் நிஜ ஹீரோ Paul Rusesabagina உலகெங்கிலுமுள்ள மனிதாபிமானத்தை நேசிப்பவர்களினால் உயர்வாக பார்க்கப்படுவார் என்பதில் சந்தேகமில்லை..
நிஜ ஹீரோ Paul Rusesabagina

இந்த திரைப்படம் பார்க்கும்போது அந்த மேனேஜராக நடித்த ஹீரோ மீது ஒரு ஈர்ப்பும் அவரின் நடவடிக்கைகளை பாராட்டும் மனநிலையும் உருவாகமல் இருக்க வாய்ப்பில்லை.. இது ஒரு உண்மைச்சம்பவம் ஆனபடியால் அதன் நிஜ ஹீரோ யார் என தேடிப்பார்க்கும் ஆர்வமும் உங்களுக்கு உண்டாகலாம்.. அந்த ஆர்வம் எனக்கு ஏற்பட்டது அதன் விளைவே இந்தப்பதிவு. உண்மையில் அவர் ஒரு ஹீரோதான் யுத்தம் உக்கிரமடைந்த காலப்பகுதியில் ஹோட்டலை மூடச்சொல்லி கிளர்ச்சியாளர்களும் அரசாங்கப்படைகளும் மிரட்டிய போதிலும் அவர்களுக்கு காசு கொடுத்து சமாளித்து ஆயிரத்துக்கதிகமான மக்களை தன் ஹோட்டலுக்குள் மறைந்து வைத்து பலநாட்களுக்கு உணவு கொடுத்து காப்பாற்றியவர் இவர்..ஒரு முறையாவது இவரை நேரில் சந்தித்து இவரை பாராட்ட வேண்டும் என மனது விரும்புகிறது.. இப்போது பெல்ஜியத்தில் வசித்து வருகிறாராம்.. தன் மனைவி பிள்ளைகளுடன்.
நிஜ ஹீரோ திரைப்பட ஹீரோவுடன்
                             
மனிதனை மனிதன் வேட்டையாடும் இன்றைய கொடூர உலகில் இவ்வாறான மனித நேயமுள்ளவர்கள் நிச்சயம் பாராட்டப்படவேண்டியவர்களே..

4 comments:

அம்பலத்தார் said...

வெறுமனே ஒரு சினிமா விமர்சனமாக இல்லாமல். வரலாற்றுத் தகவல்களையும் சேர்த்து ரசிக்கும்படியான ஒரு ஆவணப்படுத்தலாக எழுதியிருக்கிறீர்கள் ரியாஸ். சிண்ட்லர் சம்பந்தமான சில வரலாற்று சான்றுபகரும் இடங்களை இன்றும் ஜேர்மனில் பார்க்கமுடியும்

Unknown said...

நல்ல பதிவு!.

//மனிதனை மனிதன் வேட்டையாடும் இன்றைய கொடூர உலகில் இவ்வாறான மனித நேயமுள்ளவர்கள் நிச்சயம் பாராட்டப்படவேண்டியவர்களே..//

மிகச்சரியாக சொன்னீர்கள்!.

Anonymous said...

இவ்வாறான மனித நேயமுள்ளவர்கள் நிச்சயம் பாராட்டப்படவேண்டியவர்களே...

விமர்சனம் + அலசல் நல்லாயிருக்கு ரியாஸ்...உலகம் விரைவில் மறந்து போன மக்கள் கூட்டத்தில் இவர்களும் ஒருவர்...

'பரிவை' சே.குமார் said...

அலசல் விமர்சனம் ரொம்ப நல்லாயிருக்கு

Pushpa 2 Tamil Song Lyrics

Peelingsu tamil lyrics puspa 2