Le Grand Voyage ஒரு மகத்தான பயணம்!!!


இந்த படம் பார்த்த தருணத்திலிருந்து இதைப்பற்றி எழுதியே ஆகவேண்டும் என்ற ஆர்வத்தோடு பலமுறை முயன்றாலும் ஏனோ என்னால் முடியவில்லை.. காரணம் அப்படத்தின் உள்ளடக்கத்தையும், பாத்திரங்களின் முற்று முழுதான உணர்வுகளையும் எழுத்தில் கொண்டு வர முடியவில்லை..

இஸ்லாமிய ஐம்பெரும் கடமைகளிள் ஒன்றான ஹஜ் பயணத்தையும், தலைமுறை இடைவெளிகளால் தந்தை மகனுக்கிடையில் இடம்பெறும் புரிந்துணர்வின்மையையும் அவற்றினால் ஏற்படும் உணர்வுப்போராட்டங்களையும் மிக அற்புதமாக சொல்லி செல்கிறது இப்படம்.. இதை ஒரு படம் என்று சொல்வதை விட ஒரு மகத்தான பயணம் என சொல்வதே ஏற்புடையது படம் பார்க்கும் போது அந்த உணர்வு நமக்கு தொற்றிக்கொள்ளும்..  இந்தப்படத்தை பற்றிய எழுத்தாளர் எஸ் ராமகிருஷ்ணன் அவர்களின் கட்டுரையொன்றிருக்கிறது..அதில் இப்படத்தைப்பற்றி அற்புதமாக விபரித்திருக்கிறார்.. அதைவிட அழகாக வேறு யாராலும் சொல்லிவிட முடியாது என நினைக்கிறேன்..  ஆகையால் அதை இங்கே பகிர்கிறேன்!!

இனி எஸ் ராமகிருஷ்ணன் எழுத்துக்களில் தொடர்கிறது...முழுப்பயணம்/படம்

கடந்த சில வருசங்களில் நான் பார்த்த ஆகச்சிறந்த படம் இதுவே என்பேன்.
Le Grand Voyage என்ற இந்த பிரெஞ்சு படத்தை பார்த்துவிட்டு மூன்று நாட்களுக்கு வேறு எதையும் பாரக்கவோ படிக்கவோ மனது நிலை கொள்ளவில்லை.

காட்சிகள் மனதில் பச்சென ஒட்டிக் கொண்டுவிட்டன. எப்போதாவது அபூர்வமான தருணங்களில் தான் திரைப்படம் என்னை அழ வைத்திருக்கிறது. இந்தபடமோ நாலைந்து முறை திரையை உறைய செய்துவிட்டு ஆசுவாசப்படுத்திக் கொண்டு பார்க்கும் உணர்ச்சிபீறடலை உருவாக்கியது.

Ismael Ferroukhi,இயக்கி 2004ம் ஆண்டு வெளியான Le Grand Voyage வெனிஸ் திரைப்படவிழாவில் சிறந்தபடமாக தேர்வு பெற்றிருக்கிறது. உலக திரைப்பட விமர்சகர்கள் இதை கொண்டாடுகிறார்கள். எல்லா பாராட்டுகளுக்கும் விருதுகளுக்கும் தகுதியான சிறந்த படமிது.
படம் ஒரு நீண்ட பயணத்தை விவரிக்கிறது. தெற்கு பிரான்சில் உள்ள சிறிய ஊரில் வசிக்கும் ரேடா என்ற இளைஞனின் பார்வையில்  துவங்குகிறது. ரேடா பள்ளி இறுதி தேர்வை எழுத காத்திருக்கிறான். மொரக்கோவை சேர்ந்த இவர்களது குடும்பம் பல ஆண்டுகளுக்கு முன்பாகவே பிரான்சிற்கு குடிவந்துவிட்டது. மரபான இஸ்லாமிய குடும்பமது.

ரேடா எல்லா பதின்வயது பையன்களையும் போல பிரெஞ்சின் இன்றைய கலாச்சார சூழலில் வளர்க்கபட்டிருக்கிறான். அவனுக்கு அப்பா பேசும் அரபு மொழி தெரியவில்லை. அவன் பிரெஞ்சில் தான் பேசுகிறான். அவனுக்கு லிசா என்ற பிரெஞ்சு காதலி இருக்கிறாள். உல்லாச வாழ்க்கையை பற்றிய மினுக்கும் கனவுகளுடன் துள்ளி திரிகிறான் ரேடா.

ஒரு நாள் அவனது அப்பா ஹஜ் யாத்திரைக்கு போவதற்காக கிளம்புகிறார். பிரான்சில் இருந்து மெக்கா வரையில் காரிலே பயணம் செய்யலாம் என்று முடிவு செய்கிறார். அவருக்கு கார் ஒட்டத்தெரியாது என்பதால் ரேடாவை தன்னுடன் துணைக்கு வரும்படியாக அழைக்கிறார். அவனுக்கு புனித பயணத்தில் விருப்பமில்லை.  அப்பாவோடு துணைக்கு போக முடியாது என்று மறுக்கிறான்.

ஆனால் அப்பா அவன் தன்னோடு வந்தே ஆக வேண்டும் என்று கட்டாயப்படுத்துகிறார்.  அதற்கு கூடுதலாக இன்னொரு காரணமிருக்கிறது. ரேடாவின் அண்ணன் குடித்துவிட்டு தறுதலையாக சுற்றுகிறான் என்று அப்பா கவலைபடுகிறார் ஆகவே மிச்சமிருக்கும் இளைய மகன் ரேடாவையாவது தன் விருப்பபடி வளர்க்க வேண்டும் என்ற ஆசையால் அவனை தன்னோடு அழைக்கிறார். ரேடாவால் அப்பாவின் விருப்பத்தை மறுக்க முடியாத சூழல் உருவாகிறது.

அப்பாவும் மகனும் ஒரு பழைய காரில் புனிதப் பயணம் புறப்படுகிறார்கள். வழியில் காணும் அழகான காட்சிகளை புகைப்படம் எடுத்துவா என்று அண்ணன் ஒரு கேமிராவை தந்து அனுப்புகிறான். குடும்பமே அவர்களை வழி அனுப்பி வைக்கிறது. விருப்பமில்லாமல் அப்பாவிற்கு கார் ஒட்ட துவங்குகிறான் ரேடா
.
பிரான்சிற்கும் மெக்காவிற்கும் இடையில் இத்தாலி, ஸ்லோவேனியா, க்ரோசியா, பல்கேரியா. துருக்கி, சிரியா  சவுதி அரேபியா என பத்து நாடுகள் உள்ளன. வேறுபட்ட கலாச்சாரங்கள். மனிதர்கள், சீதோஷ்ண நிலைகள், இயற்கை காட்சிகள். ஆனால் சாலை முடிவில்லாமல் சென்று கொண்டேயிருக்கிறது. ஒவ்வொரு நாட்டின் எல்லையிலும் சோதனை சாவடிகள், விசாகெடுபிடிகள், பயணம் தரும் புதிய அனுபவம் மற்றும் நெருக்கடி என்று மூவாயிரம் மைல் நாமும் அவர்களுடன் சேர்ந்து பயணம் செய்ய துவங்குகிறோம்.

எதற்காக இவ்வளவு சிரமப்பட்டு புனிதப்பயணம் போக வேண்டும். அப்படி என்ன இருக்கிறது என்று எல்லா இளைஞர்களையும் போலவும் ரேடாவும் ஆத்திரப்படுகிறான்.  அப்பா அதற்கு பதில் சொல்லவில்லை. மௌனமாக காரின் உள்ளே குரான் வாசித்து கொண்டு. தொழுகை நேரத்தில் சாலையோரம் காரை நிறுத்தி மண்டியிட்டு தொழுகை செய்தபடியே வருகிறார்.

சாலையில் காரை மிக வேகமாக ஒட்டுகிறான் ரேடா. வேகமாக கார் ஒட்டுவது என்பது மரணத்தை நோக்கி அவசரமாக செல்வதை போன்றது அதனால் மிக மெதுவாக போ என்று அப்பா  கண்டிக்கிறார்.  ரேடாவிற்கு எரிச்சலாக வருகிறது. மெதுவாக போனால் நாம் எப்போது போய் சேருவது என்று கேட்கிறான். புனிதபயணம் என்பது அவசரமாக மேற்கொள்ள வேண்டிய செயல் இல்லை என்கிறார் அப்பா.

இரவில் உறங்காமல் கார் ஒட்டுகிறான். அதை அப்பா ஏற்றுக் கொள்ள மறுத்து சாலையோரம் காரை நிறுத்திவிட்டு உறங்கு என்று கட்டாயப்படுத்துகிறார். அப்பாவின் கெடுபிடிகள் ரேடாவை எரிச்சல்படுத்துகின்றன. ஏன் இந்த மனிதர் புனிதபயணம் போகிறேன் என்று என் உயிரை எடுக்கிறார் என்று புலம்புகிறான். அப்பா உறங்கியதும் அவருக்கு தெரியாமல் காரை விட்டு இறங்கி காதலியோடு ரகசியமாக செல்போனில் பேசுகிறான். விடிகாலையில் அப்பா எழுந்து அவனது செல்போனை வெளியே எடுத்து கொண்டு போய் குப்பை தொட்டியில் போட்டுவிட்டு வந்துவிடுகிறார்.

அந்த பயணம் அப்பா பையன்  இருவருக்கும் உள்ள விலகலையும், புரிந்து கொள்ளாமையும், அனுபவ வேறுபாட்டையும் துல்லியமாக காட்டுகிறது.

அப்பா வழியில் சந்திப்பவர்களிடம் அரபு மொழியில் மட்டுமே பேசுகிறார். மகனோ அப்பாவிடம் கூட பிரெஞ்சில் தான் பேசுகிறான். ஆங்கிலமும் பிரெஞ்சும் தெரிந்த அளவிற்கு அவனுக்கு அரபு தெரியவில்லை. அதைக் கற்று கொள்ள அவன் விரும்பவும் இல்லை. இஸ்லாமிய மத சம்பிரதாயங்கள், கட்மைகள், நம்பிக்கைகள் எதுவும் ரேடாவிடம் இல்லை. எதற்காக தான் அப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று எதிர்வாதம் பேசுகிறான்.

அவர்கள் வெனிஸ் நகரை கடந்து போகிறார்கள். அழகான ஊர் அங்கே சில மணி நேரம் தங்கி சுற்றிபார்த்து போகலாம் என்கிறான் மகன். அப்பாவோ நாம் சுற்றுலா பயணிகள் இல்லை. புனித பயணம் போகிறோம். ஆகவே மனதை அலைய விடக்கூடாது. வண்டியை புறநகர் சாலை வழியாக ஒட்டு என்கிறார்.  எதற்காக இப்படி அலைக்கழிகிறோம் என்று எரிச்சல்படுகிறான்

அவர்கள் ஒரு இடத்தில் சாலை மாறி போய்விடுகிறார்கள். அது வெட்டவெளி ஒன்றினை நோக்கி செல்கிறது. அப்பா படிப்பறிவு இல்லாதவர். அவரது யோசனையை கேட்டு தான் இப்படி வழி மாறிவந்துவிட்டேன் என்று ரேடா திட்டுகிறான் . அப்பா கோவித்து கொள்கிறார். அவர்கள் ஒரு கிளைபிரியும் சாலையில் எந்த பக்கம் போவது என்று தெரியாமல் காத்திருக்கிறார்கள். அப்போது ஒரு கிராமப்புறத்து பெண்ணிடம் வழிகேட்கிறார்கள். அவளுக்கு அவர்கள் பாஷை புரியவில்லை. ஆனால் கையை நீட்டி வழி சொல்கிறாள்.

பிறகு உரிமையோடு காரில் ஏறிக் கொள்கிறாள். அது ரேடாவிற்கு பிடிக்கவில்லை. அவளை கிழே இறங்கச் சொல்லி திட்டுகிறான். அந்த பெண்ணை வழியில் அவள் இறங்க வேண்டிய இடத்தில் விட்டுவிடலாம் என அப்பா சமாதானம் சொல்கிறார். ஒரு உணவகத்தில் தந்திரமாக அவளை விட்டுவிலகி ரேடா காரை எடுக்கும் போது அவனது அப்பா மெதுவாக காரை எடு. அந்த பெண் இனி நம்மோடு வரமாட்டாள். அவளுக்கு நாம் பேசும் பாஷை தான் புரியாது. ஆனால் நாம் அவளை மதிக்கிறோம் என்று புரியும் என்கிறார். அது உண்மை என்பது போலவே அவள் உணவகத்தினுள் நின்றபடியே அவர்களை வெறித்து பார்த்து கொண்டிருக்கிறாள்.

ஒவ்வொரு ஊராக கடந்து கார் போய்க் கொண்டேயிருக்கிறது. அப்பாவிடம் இவ்வளவு கஷ்டப்பட்டு புனிதபயணம் போக வேண்டுமா என்று மகன் திரும்பவும் கேட்கிறான். அதற்கு அப்பா புனிதப்பயணம் போவது என்பது ஒவ்வொரு மனிதனும் ஆற்றவேண்டிய கடமை. என்று சொல்லி ஒரு விளக்கம் தருகிறார்.

கடல் நீர் உப்பாக உள்ளது.  அது சூரியனின் வெப்பத்தால் ஆவியாகி வானத்திற்கு சென்று மீண்டும் மழையாகி தூய்மையாக பூமிக்கு திரும்பிவருகிறது இல்லையா. அது போல தான் நாம் வாழ்வில் எண்ணிக்கையற்ற தவறுகள், கசடுகள் பாவங்களுடன் இருக்கிறோம். புனித பயணம் போய் திரும்பிவரும் போது நாம் தூய்மையடைந்துவிடுகிறோம்.  அதற்காக தான் யாத்திரை போகிறோம் என்கிறார்

அப்படியானால் விமானத்தில் போய்விட வேண்டியது தானே என்று கேட்கிறான் ரேடா.

முடிந்தவரை இது போன்ற பயணங்களை நடந்து தான் போக வேண்டும். முடியாதநேரங்களில் வாகனங்களை பயன்படுத்தலாம் என்றபடியே  ரேடாவின் அப்பா தனது சிறுவயது அனுபவத்தை அங்கே விளக்குகிறார். தன்னுடைய அப்பா ஒரு கோவறு கழுதையில் ஏறிக் கொண்டு புனிதப்பயணம் செய்ய புறப்பட்டு போனார். பல மாதங்கள் அவர் வீடு திரும்பவேயில்லை. ஒவ்வொரு நாளும் அருகாமை மலையில் ஏறி நின்று அப்பா வருகிறாரா என்று பார்த்து கொண்டேயிருப்பேன். தொலைவில் யாராவது வருவது தெரிந்தால் ஒடிப்போய் பார்ப்பேன். அது அப்பாவாக இருக்காது. ஏமாற்றமாக இருக்கும். இப்படியாக நாள் தோறும் அடிவானத்தை பார்த்தபடி நிற்கும் போது தான்  காத்திருப்பது எவ்வளவு வலிமிக்கது என்று உணர்ந்து கொண்டேன். என்கிறார். முதன்முறையாக ரேடா அப்பாவின் புனிதபயணத்தை புரிந்து கொள்ள துவங்குகிறான்

துருக்கியினுள் நுழைவதற்கு முன்பு சுங்க அதிகாரிகளால் தடுத்து நிறுத்தபடுகிறார்கள். உள்ளுர் ஆள் ஒருவர் உதவி செய்கிறார். அவருக்கும் புனிதபயணம் போக ஆசையிருக்கிறது. உடன் அழைத்து கொள்கிறார்கள். அவர் ரேடாவின் அப்பா வயது தான் இருக்கிறார். ஆனால் குடி பெண்கள் உல்லாசம் என்று வாழ்வை வேறுவிதமாக வடிவமைத்து கொண்டிருக்கிறார். அவரை ரேடாவிற்கு மிகவும் பிடித்து போகிறது. இருவரும் ஒன்றாக குடிக்கிறார்கள். பெண்களை பற்றி பேசி சிரிக்கிறார்கள். அப்பாவிற்கு அது பிடிக்கவில்லை.

மூவரும் ஒன்றாக தங்கிய இடத்தில் அந்த துருக்கிகாரன் தங்கள் பணத்தை திருடிக் கொண்டு ஒடிவிட்டான் என்று புகார் தருகிறார். அவனை காவல்துறை கைது செய்து விசாரிக்கிறது. துருக்கிகாரன் சிறையில் அடைக்கபடுகிறான். அப்பாவும் மகனும் மறுபடி பயணத்தை துவங்குகிறார்கள். உண்மையில் அந்த ஆளை தன்னை விட்டு பிரிக்கவே அப்பா அப்படி நடந்திருக்கிறார் என்று மகன் உணரும்போது ஆத்திரமடைகிறான்.

ஒரு முறை வழியில் பனியில் மாட்டிக் கொள்கிறார்கள். கார் உறைபனியில் உறைந்து போகிறது. அப்பா நோய்மையடைகிறார். மருத்துவமனைக்கு கொண்டு போகிறான் ரேடா. அங்கிருந்து நலமாகி மறுபடி பயணம் போகிறார்கள். பாலைவனத்தில் அப்பாவும் மகனும் கையில் காசில்லாமல் சொற்ப உணவோடு பயணம் செய்கிறார்கள். மகனுக்காக அப்பா ஒரு ஆட்டை பிடித்து வந்து இறைச்சி சமைத்து தர முற்படுகிறார். அந்த ஆட்டை மகன் தப்ப விட்டுவிடுகிறான்.

ஒரு இடத்தில் கையில் காசில்லாத போதும் அப்பா ஒரு ஏழை பெண்ணுக்கு உதவி செய்ய முற்படுகிறார். அந்த பெண்ணிற்கு அப்பா கொடுத்த பணத்தை பிடுங்குகிறான் மகன். அப்பா முதன்முறையாக அவனை கன்னத்தில் ஒங்கி அறைகிறார். கோவித்து கொண்டு நீங்கள் தனியாக போய் அவதிபடுங்கள் என்று அவரை விட்டுவிட்டு மணற்பாலையின் உயரத்திற்கு போய் தனியே உட்கார்ந்து கொள்கிறான் மகன். அப்பா அவனை தேடி போய் நீ காரை விற்று பணத்தை எடுத்து கொண்டு விமானத்தில் ஊர் போய் சேரு என்று சொல்கிறார். பையன் கோபம் தீர்ந்து போகிறது. மறுபடி பயணம் துவங்குகிறது.ஏழைகளை ஒரு போதும் அவமதிக்ககூடாது என்று அப்பா விளக்கம் சொல்கிறார். எரிக்கும்வெயில், உலர்ந்த வானம், பசி , தாகம்  என்று நீள்கிறது பயணம். சாலைகள் போய்க் கொண்டேயிருக்கின்றன.

வழி எங்கும் புனிதபயணம் போகின்றவர்கள் தென்பட துவங்குகிறார்கள். அந்த கூட்டத்தோடு அவர்களும் கலந்துவிடுகிறார்கள். இந்த பயணத்தின் ஊடே அப்பாவை முழுமையாக புரிந்து கொள்கிறான் மகன். அப்பாவிற்கு பிரெஞ்சு  பேச நன்றாக தெரிந்திருக்கிறது. ஆனாலும் அவர் தனது தாய்மொழியில் பேசுவதற்கே விரும்புகிறார் என்ற உண்மை புரிகிறது.  அப்பாவோடு மெக்காவிற்குள் நுழைகிறான்

மெக்காவில் படமாக்க எவரையும் அனுமதிக்கபட்டதேயில்லை. ஒருசில ஆவணப்படங்கள் வெளியாகி உள்ளன. ஆனால் முதன்முறையாக இந்த படம் அனுமதிக்கபட்டிருக்கிறது. அப்பா நிஜமான புனிதபயணிகளோடு சேர்ந்து மெக்கா நகரினுள் போகிறார். அங்கே தொழுகைக்காக காத்திருக்கும் மக்கள் கூட்டம். அவர்களின் பரவச உணர்வு. எங்கும் கேட்கும் பாங்குஒலி. ஆங்காங்கே கூடாரம் அமைத்து தங்கியுள்ள மக்கள். லட்சக்கணக்கான புனித பயணிகள் நிசப்தமாக போய்க் கொண்டேயிருக்கிறார்கள். யாவர் முகத்திலும் புனிதகடமையின் சாந்தம் ஒளிர்கிறது.

அவர்களோடு தனது உடைகளை களைந்து எளிய உடையணிந்து ரேடாவின் அப்பா ஒன்று கலந்துவிடுகிறார். முதன்முறையாக தன்னால் அப்படி கலந்து கொள்ள முடியவில்லை என்ற குற்றவுணர்ச்சி ரேடாவிடம் ஏற்படுகிறது. அப்பா திரும்பி வருவார் என்று காத்திருக்கிறான். ஆனால் அப்பா வரவேயில்லை.

மெக்காவின் புனித பயணிகளில் அப்பா காணமல் போய்விடுகிறார். கூட்ட நெரிசலில் அப்பாவை தேடுகிறான். அப்பாவை நோக்கிய அந்த தேடுதலும் அதை தொடர்ந்த நிகழ்வுகளும் உருவாக்கும் பாதிப்பும் மிக அற்புதமானது. கடைசி பதினைந்து நிமிசங்கள் படத்தின் உச்சபட்ச உணர்ச்சிநிலையை உருவாக்குகிறது. கடைசி காட்சியில் ரேடா தனது கையில் இருந்த பணத்தை ஒரு ஏழைக்கு தானம் கொடுத்துவிட்டு புறப்படுகிறான். ஒரு புனிதபயணம் நிறைவுறுகிறது. இப்போது பயணத்தின் துவக்கத்தில் கிளம்பி ரேடா இல்லை. அவன் வேறு ஒரு ஆள். அவன் மனதும் செயல்களும் மாறியிருக்கின்றன.

இந்த படத்தை மூவாயிரம் மைல் பயணம் மேற்கொண்டு நிஜமாக சாலையில் படமாக்கியிருக்கிறார்கள். வழியில் படத்தில் வருவது போன்ற நிறைய சம்பவங்களை படப்பிடிப்பு குழுவினர் அனுபவித்திருக்கிறார்கள். இயக்குனர் ஒரு தேசத்தில் கைது செய்யப்பட்டிருக்கிறார். ஈராக் யுத்தம் படப்பிடிப்பை தடை செய்திருக்கிறது. மெக்காவில் படமாக்குவது சவாலான செயல். அதில் புதிய சிக்கல்கள் நெருக்கடிகள். இப்படி ஒரு நீண்ட புனிதபயணம் போன்ற படமும் உருவாக்கபட்டிருக்கிறது.   இந்த படம் திரையிடப்பட்ட ஒரு அரங்கில் ஆறுமாத காலம் பார்வையாளர்கள் நிரம்பி வழிந்தனர். பொது இடங்களில் இப்படம் திரையிடப்பட்ட போது படம் பார்த்த ஒவ்வொருவரும் அது தன்னுடைய கதை என்று சொல்லி அழுதிருக்கிறார்கள். அத்தனை நிஜமாக உண்மையாக படமாக்கபட்டிருக்கிறது

அப்பாவின் மௌனமும், மகனின் இயல்பு உலகமும். படத்தில் எனக்கு மிக முக்கியமான இருந்தது. எல்லா ஊரிலும் பதின்வயது பையன்கள் ஒன்று போலதான் இருக்கிறார்கள். அவர்களுக்கு அப்பாவை பிடிக்கவில்லை. அப்பாவோ மகன் எப்படியாவது நல்லவனாக வளர்ந்து வேலை செய்து வாழ்கையில் முன்னேற வேண்டும் என்று கனவு காண்கிறார்கள். இந்த எதிர்ப்பார்ப்பு பிள்ளைகளுக்கு எரிச்சல் ஊட்டுகிறது.

உண்மையில் அப்பாவை மகன் புரிந்து கொள்ளுவதே பயணத்தின் முக்கிய விசயமாக படுகிறது. அது ஒரு அறிவுரையாகவோ, பிரச்சாரமாகவோ மேற்கொள்ளபடவில்லை. மகன் தானே தன்னை உணர்ந்து கொள்கிறான். அப்பா எளிய படிக்காத மனிதராக இருந்த போதும் அவரால் உலகை நேரடியாக சந்திக்க முடிகிறது. மொழி தாண்டி தன் பிரச்சனைகளை தீர்த்து கொள்ள முடிகிறது. அப்பா ஒரு போதும் யாரையும் பார்த்து திட்டுவதில்லை. மகன் தன்னை அனுமதிக்காத சுங்க அதிகாரியை திட்டுகிறான். அறியாத மனிதர்கள் எவரையும் அவன் மதிப்பதேயில்லை. அப்பா அப்படியில்லை. எல்லோரையும் ஒன்று போல அன்பாக நடத்துகிறார். சேர்ந்து உண்கிறார். பையன் தனித்து இருப்பதை தானே உணர்கிறான்.

இன்னொரு தளத்தில் பைபிளில் ஆப்ரகாம் தன் மகன் ஐசக்கை கடவுளுக்கு பலி ஈடுவதற்காக பாலைவனத்தில் அழைத்து போன சம்பவம் விவரிக்கபடுகிறது. இது போன்ற சம்பவத்தை குரானும் விவரிக்கிறது. ஆபிரகாம் தன் மகன் இஸ்மாயிலை பலியிட அழைத்து போகிறான். இரண்டிலும்  முடிவில் கடவுளின் கருணையால் பலி தடுக்கபடுகிறது. மகன் அப்பாவின் இறைநம்பிக்கையை புரிந்து கொள்கிறான். இந்த படம் அந்த கதையின் நவீன வடிவம் போலவும் இருக்கிறது.

ரேடாவின் அப்பாவிற்கு மதம் வெறும் சம்பிரதாயமில்லை. மாறாக அது வாழ்வின் வழிகாட்டும் ஒளி. அவர் எல்லா மனிதர்களுக்கும் அது போன்ற ஒரு தேவை அவசியமாக உள்ளதை சுட்டிக்காட்டுகிறார். அது வெறும் மதஈடுபாடுமட்டுமில்லை. மாறாக மதம் அவரை செழுமைபடுத்துகிறது. நன்னெறிபுகட்டுகிறது. பிற மனிதர்கள் மீது அன்பு செலுத்த வைக்கிறது. தன்னை அறிந்து கொள்ள உதவி செய்கிறது. குடும்பம்,குழந்தைகள், பணம், அதிகாரம் என்று தன்னை வளர்த்து கொண்டுள்ள மனிதன் அதிலிருந்து விடுபட்டு புனிதபயணம் போவதன் வழியே தன்னை அறிந்து கொள்கிறான். அத்தோடு உலகின் மீதான தனது பற்றை புரிந்து கொள்கிறான். கடவுளின் கருணை என்பது வெறும் சொல் அல்ல என்பதை தானே அறிந்து உணர்கிறான்.

பயணம் துவங்கியது முதல் ரேடா பதற்றமும் சிடுசிடுப்பும், எதையாவது செய்து கொண்டேயிருக்க வேண்டிய துடிப்பும் கொண்டிருக்கிறான். அப்பா முற்றிய கனி போல அமைதியாக இருக்கிறார். அவர் சாப்பிடும் போதும் பேசும்போது நடக்கும் போது அவரிடம் பதற்றமேயில்லை என்பது புலப்படுகிறது. அவர் வழியெல்லாம் பிரார்த்தனை செய்தபடியே வருகிறார். மகன் ஒரு போதும் பிரார்த்தனை செய்வதேயில்லை.

அவனுடைய உலகில் கடவுள், மதம், நம்பிக்கைகள் எதுவும் முக்கியமாக இல்லை. புலன் இன்பங்களே அவனை கிளர்ச்சியடைய செய்கின்றன. அவன் குடிப்பதிலும், காதலியை பற்றி நினைப்பதிலும், நடனமாடுவதிலும் ஆர்வம் காட்டுகிறான். சாப்பாடு மிக முக்கியமானது என்று அடம்பிடிக்கிறான். அப்பா எதையாவது சாப்பிட்டு கொண்டு போய்விடலாம் என்கிறார். இந்த மனப்போக்கும் முரண்டும் அற்புதமாக சித்தரிக்கபட்டிருக்கிறது

பயணத்தில் எத்தனை விதமான மனிதர்கள். நிலக்காட்சிகள். சூரியன் அவர்களை பின்தொடர்ந்தபடியே இருக்கிறது. துருக்கியில் உள்ள ஒரு மசூதிக்குள் போகிறார்கள். அந்த நகரம் மசூதிகளின் நகரம் என்று அறிமுகப்படுத்துகின்றவன் நகரின்  நினைவுகளை பேச துவங்குகிறான். அந்தக்காட்சியில் ஒவ்வொரு மனிதனும் ஒரு கதையை சுமந்து கொண்டிருக்கிறான் என்பது தெளிவாக உணர்த்தபடுகிறது.

பகலும் இரவும் கடந்து போகின்றன. இரவில் காரிலே உறங்குகிறார்கள். சாலை நிறைய கற்று தருகிறது. ஒரு இடத்தில் அப்பாவிடம் பையன் இதை தானே சொல்கிறான். அப்பா அதை கேட்டு புன்னகை செய்கிறார்

ஒரு இடத்தில் மெக்காவிற்கு போவதற்கு முன்னால் புனித பயணிகள் ஒன்றாக கூடுகிறார்கள். அங்கே ஒருவர் உங்கள் மகனுக்கு அரபு தெரியாதா என்று கேட்கிறார். அப்பா முதன்முறையாக வருத்தமான குரலில் அவர்கள் சிறுவயது முதலே பிரெஞ்சில் பேசி பழகிவிட்டார்கள் என்கிறார். தாய்மொழியை மறந்த ஒரு தலைமுறை உலகம் முழுவதும் உருவாகி வருகிறது என்று முகத்தில் அடித்தால் போல சொல்கிறது இந்த காட்சி.

இந்த படம் இளைஞர்களை கேலி செய்யவோ, குற்றம் சொல்லவோ முயற்சிக்கவில்லை. மாறாக மிகுந்த நம்பிக்கையை உருவாக்குகிறது. அவர்களுக்குள்ளும் அப்பா அம்மா மீதான பாசமிருக்கிறது. அது சொற்களில் வெளிப்படுத்தபடுவதில்லை. மாறாக தேவையான தருணங்களில் முழுமையாக வெளிப்படுகிறது. இளைஞர்கள் தங்களை மாற்றிக் கொள்ள எப்போதும் தயாராகவே இருக்கிறார்கள். அவர்கள் தனக்காக உலகை தாங்களே உருவாக்கவே போராடுகிறார்கள்.. ரேடா நம் கால இளைஞர்களின் குறியீடு போலவே இருக்கிறான்.

படத்தின் வசனங்களும் ஒளிப்பதிவும் மறக்கமுடியாதது. அப்பாவின் வழியாக அவரது வாழ்வியல் அனுபவம் அழகாக பேசப்படுகிறது. படம் முழுவதும் பணத்தை அரிய பொருள் போல நினைக்கிறார் அப்பா. மகனோ அதை விளையாட்டு பொருள் போல நினைக்கிறான். எவ்வளவு முரண் பாருங்கள்.

பணத்தை சேமிக்கவும் ஒளித்துக் கொள்ளவும் அப்பா மேற்கொள்ளும் முயற்சிகள் சிறுவர் விளையாட்டு போல உள்ளது. மகனோ பணத்தை வெறும்காகிதம் போல தூக்கி போடுகிறான். ஆனால் பணம் இல்லாத போது அதிக நெருக்கடியும் மனஉளைச்சலும் அடைகிறான். அப்பாவோ பணம் இல்லாத போது அமைதியாக இருப்பதை கொண்டு வாழ்கிறார். இப்படி மௌனத்தின் வழியே நிறைய கற்றுதரப்படுகின்றன.

சூழலில் உள்ள ஒளியை மட்டுமே பயன்படுத்தி பெரும்பான்மை காட்சிகள் உருவாக்கபட்டிருக்கிறது.கேமிரா கூடவே பயணம் செய்கிறது.  ரேடா நடக்கும் போது நாமும் கூடவே செல்கிறோம். அப்பா மகன் இருவருக்குமான அந்த இடைவெளியை கேமிரா துல்லியமாக காட்டுகிறது. அதே நேரம் மெக்காவின் ஜனத்திரளில் அப்பாவை தேடும் போது கேமிரா அலைபாய்கிறது. Katell Djian னின் தேர்ந்த ஒளிப்பதிவு பிரமிக்க வைக்கிறது.
தலைமுறை இடைவெளியை பற்றிய மிகசிறந்த படம் இதுவே என்பேன். 

தத்துவங்களும்,ஞானபோதனைகளும் இன்றுள்ள இளைஞர்களை மாற்றிவிடப்போவதில்லை. ஆனால் இந்த படம் அப்படியான ஒரு மனமாற்றத்தை ஏற்படுத்திவிடக்கூடியது என்றே தோன்றுகிறது.

இன்னொரு பக்கம் வாழ்வை புரிந்து கொள்ள நாம் மேற்கொள்ள வேண்டிய பயணத்தையும், உலகம் எவ்வளவு பெரியது. எவ்வளவு அழகானது. ஆனால் நாம் வீட்டிற்குள்ளாகவே சுருங்கிபோய் இருக்கிறோம் என்பதையும் அழகாக சுட்டிக்காட்டுகிறது.
தனித்து ஒரு புத்தகம் எழுதும் அளவிற்கு இந்த படத்தில் சொல்லவேண்டிய விசயங்கள் நிறைய இருக்கின்றன. ஒருமுறை இப்படத்தை பார்த்தால் நீங்களே அதை உணர்வீர்கள்.

9 comments:

ஹுஸைனம்மா said...

எனக்கும் நண்பர் ஒருவர் பரிந்துரைத்தார் இந்தப் படத்தை. இதுவரை பார்க்கமுடியவில்லை.

விமர்சனம் உங்கள் வழக்கமான பாணியில் அல்லாமல் வித்தியாசமாக இருக்கிறதே என்று நினைத்துக் கொண்டிருக்கும்போதே, எழுதியவரின் பெயர் கீழே!!

இன்ஷா அல்லாஹ், படம் பார்க்க வேண்டும்.

test said...

எனக்கு மிகப்பிடித்த படங்களில் ஒன்று பாஸ்! நேற்றுக்கூட என் நண்பன் ஒருவனுக்கு கொடுத்தேன். சென்ற வருடம் படம் பற்றி எழுதியிருந்தேன். ஆனால் எதை எழுதுவது, அதை விடுவது என்ற குழப்பம்....படத்தில் ஒவ்வொரு சிறு காட்சியும் மிக அருமையாக இருக்கும். இறுதிக் கார்த்சிகளுக்கு மெக்காவில் பிரத்தியேக அனுமதி பெற்று படமாக்கியிருப்பார்கள்!

கோவை நேரம் said...

விமர்சனமே படம் பார்த்த திருப்தி வருது////

திண்டுக்கல் தனபாலன் said...

விரிவான விமர்சனம்... படம் பார்த்த திருப்தி.... நன்றி...


என் தளத்தில் : மனிதனின் உண்மையான ஊனம் எது ?

ஆத்மா said...

பதிவு கண்களுக்குள் காட்சியை வரவழைத்துவிட்டது...படம் பார்த்த உனர்வுதான் நல்லதொரு படத்தை அறிமுகப் படுத்தியமைக்கு மிக்க ந்ன்றி நண்பா......

படத்தினுடைய லிங்குகள் ஏதுமிருந்தால் தரவும் பிரயோசனமாக இருக்கும்

Riyas said...

//படத்தினுடைய லிங்குகள் ஏதுமிருந்தால் தரவும் பிரயோசனமாக இருக்கும்//

you can watch in youtube,

http://www.youtube.com/watch?v=3VVvXU8AmJs

Seeni said...

padaththai nichayam paarppen!
pakirvukku nantri!

இராஜராஜேஸ்வரி said...

மனப்போக்கும் முரண்டும் அற்புதமாக சித்தரிக்கபட்டிருக்கிற அருமையான பகிர்வு.. பாராட்டுக்கள்..!

UmayalGayathri said...

http://blogintamil.blogspot.com/2015/02/blog-post_6.html
தங்களை வசைச்சரத்தில் அறிமுகம் செய்து இருக்கிறேன் சகோ வந்து பாருங்கள்

Vaa Kannamma Tamil Song Lyrics in English

  Maadhar mukampoal olivida vallaiyel Kaadhalai vaazhi madhi Malaranna kannaal mukamoththi yaayin Palarkaanath thoandral madhi  Vaa pada pad...