September 22, 2012

யுக சந்தி- விதவை மறுமணம்- ஜெயகாந்தன்!

எழுத்தாளர் ஜெயகாந்தன் அவர்களின் எழுத்துக்களின் வாசகன் நான். கடந்த ஒரு 6 மாதமாகத்தான் அவரது எழுத்துக்கள் இணையம் மூலம் அறிமுகம் எனக்கு. அப்பொழுது முதல் அவரின் படைப்புக்களை தேடி தேடி படித்திருக்கிறேன்.. அவரின் கதையில் உருவான ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள், மனிதரில் இத்தனை நிறங்களா? போன்ற திரைப்படங்களையும் விட்டதில்லை! அட்டட என்ன ஒரு அற்புதமான எழுத்து!

இவரின் எழுத்துக்கள் ஒவ்வொன்றும் அவற்றை படிக்கும் வாசகன் பார்வையில் காட்சியாக மாறும் அதீத திறன் கொண்டவை! இவர் எழுதிய சிறுகதைகளில் ஒன்றுதான் "யுகசந்தி" விதவை மறுமணத்தின் தேவை குறித்தான சிறுகதை! கீதா என்ற ஆசாரமான ஹிந்து குடும்பத்தில் பிறந்த பெண் திருமணம் முடித்து சில மாதங்களிலேயே கனவனை இழக்கிறாள், அதன் பின் சிலகாலம் தனிமையில் வாழ்ந்துவிட்டு மறுமணம் செய்ய முடிவெடுக்கிறாள்.. இதை ஆசாரம்,சாஸ்திரம், சம்பிரதாயம்,கௌரவம் என வாழும் அவள் பெற்றோர் கடுமையாக எதிர்த்தது மட்டுமில்லாமல் அவளை தலை முழுகிடவும் தீர்மானிக்கிறார்கள்.. ஆனால் கீதாவுக்காக குரல் கொடுக்கும் ஒரே ஜீவன் அவள் தனிமைக்கு துனையிருக்கும் அவள் பாட்டி மட்டும்தான்! அந்த பழைய யுகத்தின் பிரதிநிதியான பாட்டி புதிய யுகத்தின் பிரதியான கீதாவின் மறுமணத்திற்காக  எவ்வாறெல்லாம் வாதாடுகிறாள் என்பதுதான் இந்த யுகசந்தி சிறுகதையின் உள்ளடக்கம்!

இந்த சிறுகதையிலிருந்து சில வரிகள் இங்கே தருகிறேன்!

அந்தக்கால மனிதர்கள் கால் நடைகளை தவிர வேறு வாகனங்கள் பயன்படுத்தவில்லை என்பதை சொல்லும் வரிகள்.

அவள் கணிப்பில் நேற்றுப் பிறந்த குழந்தைகளெல்லாம் அதோ ரிக்ஷாவிலும், ஜட்காவிலும், சைக்கிளிலும் பரந்து பரந்து ஓடுகிறார்கள்.மழையும் வெயிலும் மனிதனை விரட்டுகின்ற கோலத்தை எண்ணி பாட்டி சிரித்துக் கொண்டாள்.அவளுக்கு இதெல்லாம் ஒரு பொருட்டா? வெள்ளமாய்ப் பெருகி வந்திருந்த வாழ்வின் சுழிப்பிலும், பின் திடீரென வரண்ட பாலையாய் மாறிப் போன வாழ்க்கை நெருப்பிலும் பொறுமையாய் நடந்து பழகியவளை, இந்த வெயிலும் மழையும் என்ன செய்யும்? என்ன செய்தால்தான் என்ன?

கீதா, தான் மறுமணம் செய்து கொள்ளப்போவதாக பாட்டியிடம் எழுதியனுப்பிய கடிதத்தின் வரிகள்..


  "என் அன்பிற்குரிய அப்பா, அம்மா, பாட்டி ஆகியோருக்கு....

  இந்த கடிதத்தை எழுதுகையில் ஆறு மாதங்கள் தீர்க்கமாய் யோசித்து தீர்மானமான ஒரு முடிவுக்கு வந்தபின் தௌிந்த மனத்தோடுதான் எழுகிறேன். இந்தக் கடிதத்திற்குப் பிறகு உங்களுக்கும் எனக்கும் கடிதப் போக்கு வரத்தோ, முகாலோபனமோ கூட அற்றுப் போகலாம் என்பதும் தெரிந்தே எழுதுகிறேன்.

  என்னோடு பணி புரியும் ஹிந்தி பண்டிட் திருராமச்சந்திரன் என்பவரை வருகின்ற ஞாயிறன்று நான் பதிவுத் திருமணம் செய்துகொள்ள நிச்சயித்து விட்டேன். நான் விதவை என்பது அவருக்குத் தெரிந்ததுதான். ஆறுமாத காலமாய் நான் எனது உணர்ச்சிகளோடு-- இது பாபகரமான காரியம் என்ற ஓர் அர்த்தமற்ற உணர்ச்சியோடு-- போராடித்தான் இம் முடிவுக்கு வந்தேன். உணர்வு பூர்வமான வைதவ்ய விரதத்துக்கு ஆட்படமுடியாமல் வேஷங்கட்டித்திரிந்து, பிறகு அவப் பெயருக்கு ஆளாகிக் குடும்பத்தையும் அவமானப் படுத்தாமல் இருப்பதே சிறந்த ஒழுக்கம் என்று உணர்ந்திருக்கிறேன். இந்தமுப்பது வயதில்-- இவ்வளவு சோதனைகளைத் தாங்காமல்-- இன்னும் ஐந்தாண்டுகளுக்குப் பின் இதே முடிவுக்கு வர நேரிடுமோ என்ற அச்சமும் பிறந்தே-- இப்போதே செய்தல் சரி என்ற முடிவுக்கு வந்துவிட்டேன்...

  என் காரியம் என் வரைக்கும் சரியானதே'

  நான் தவறு செய்வதாகவோ, இதற்காக வருந்த வேண்டுமென்றே, உங்களிடம் மன்னிப்புக் கோரவேண்டுமென்றே கூட எனக்குத் தோன்றவில்லை. எனினும் உங்கள் உறவை, அன்பை இழந்து விடுகிறேனே என்ற வருத்தம் சில சமயங்களில் அதிகம் வாட்டுகின்றது... இருப்பினும் ஒரு புதிய வாழ்க்கையை, புதிய வௌிச்சத்தைப் பெற்று, ஒரு புது யுகப்பிரஜையாகச் சஞ்சரிக்கப் போகிறேன் என்ற லட்சிய நிறைவேற்றத்தில் நான் ஆறுதலும் மட்டற்ற ஆனந்தமும் கொள்கிறேன்.

  இந்தக் காலத்தில் யார் மனம் எப்படி மாறும் என்று சொல்லமுடியாது. ஒரு வேளை நீங்கள் என் முடிவை ஆதரித்தா... இன்னும் ஒரு வாரமிருக்கிறது... உங்களை, உங்கள் அன்பான வாழ்த்தை எதிர்பார்க்கிறேன். இல்லையெனில் உங்களைப் பொறுத்தவரை'கீதா செத்துவிட்டாள்' என்று தலை முழுகி விடுங்கள்.

  ஆமாம்; ரொம்பச் சுயநலத்தோடு செய்த முடிவுதான். எனக்காகப் பாட்டியைத் தவிர வேறு யார்தான் தங்கள் நலனைத் துறந்து 'தியாகம்' செய்துவிட்டார்கள்? ஏன் செய்யவேண்டும்?

  உங்கள் மீது என்றும்

  மாறாத அன்பு கொண்டுள்ள

  கீதா"
தன் பேத்திக்காக மகனிடும் வாதாடும் பாட்டியின் வார்த்தைகள்.. வரிகளாக!
  "நம்ம சாஸ்திரம்...ஆசாரம்' அப்படீன்னா நீ என்ன பண்ணியிருக்கணும் தெரியுமா? என்னை என்ன பண்ணித்து தெரியுமா அந்த சாஸ்திரம்?....அப்போ நீ பால் குடிக்கிற கொழந்தையடா...எனக்குப் பதினைஞ்சி வயசுடா' என் கொழந்தை, என் மொகத்தெப் பார்த்துப் பேயைப் பார்த்ததுபோல் அலறித்தேடா....' பெத்த தாய் கிட்டே பால்குடிக்க முடியாத குழந்தை கத்துவே; கிட்டே வந்தா மொட்டையடிச்ச என்னைப் பார்த்து பயத்துலே அலறுவே.... அப்படி என்னை, என் விதிக்கு மூலையிலே உட்காத்தி வெச்சாளேடா' அந்த கோரத்தை நீ ஏண்டா பண்ணலே கீதாவுக்கு?.....ஏன் பண்ணலே சொல்லு" என்று கண்களில் கண்ணீர் வழியக் கேட்கும்போது, கணேசய்யரும் கண்களை பிழிந்து விட்டுக் கொண்டார்' அவள் தொடர்ந்து பேசினாள்.

  "ஏண்டாப்பா உன் சாஸ்திரம் அவளைக் கலர் புடவைக் கட்டிக்கச் சொல்லித்தோ? தலையைப் பின்னிச் சுத்திண்டு பள்ளிக்கூடம் போய்வரச் சொல்லித்தோ? தன் வயித்துக்குத் தானே சம்பாத்திச்சுச் சாப்பிடச் சொல்லித்தோ? இதுக்கெல்லாம் நீ உத்தரவு கேட்டப்போ நான் சரின்னேன், ஏன்?.... காலம் மாறிண்டு வரது; மனுஷாளும் மாறணும்னுதான்' நான் பொறந்த குடும்பத்தலேன்னு சொல்றயே.... எனக்கு நீ இருந்தே' வீடும் நெலமும் இருந்தது. அந்தக் காலமும் அப்படி இருந்தது. சீதா பண்ண காரியத்தை மனசாலே கூட நெனக்க முடியாத யுகம் அது. அப்போ அது சாத்தியமாவும் இருந்தது. இப்போ முடியலியேடா.... எனக்கு உன் நிலைமையும் புரியறது---அவளும் புரிஞ்சுதானே எழுதி இருக்கா....உன் சாஸ்திரம் அவளை வாழ வைக்குமாடா? அவளுக்கு அது வேண்டாம்னுட்டா....ஆனா, டேய் கணேசா.... என்னெ மன்னிச்சுக்கோடா... எனக்கு அவ வேணும்' அவதாண்டா வேணும்.... எனக்கு இனிமே என்ன வேண்டி இருக்கு' என் சாஸ்திரம் என்னோடேயே இருந்து இந்தக் கட்டையோட எரியும்.... அதனாலே நீங்க நன்னா இருங்கள்.... நான் போறேன்.... கீதாவோடேயே போயிடறேன்.... அது தான் நல்லது. அதுக்காக நீ உள்ளூரத் திருப்திப் படலாம்---யோசிச்சுப் பாரு இல்லேன்னா அவளோட சேத்து எனக்கும் ஒரு முழுக்குப் போட்டுடு' நான் வர்ரேன்" என்று கூறியவாறே மாற்றுப் புடவையைச் சுருட்டிக் காக்கிப் பைக்குள் திணித்தவாறு எழுந்தாள் பாட்டியம்மாள். 
இறுதியாக இப்படி முடிகிறது!!

  வேகமாய் ஆவேசமுற்று வருகின்ற புதிய யுகத்தை, அமைதியாய் அசைந்து அசைந்து நகரும் ஒரு பழைய யுகத்தின் பிரதிநிதி எதிர் கொண்டழைத்துத் தழுவிக்கொள்ளப் பயணப்படுவதென்றால்?......

  ஓ' அதற்கு ஒரு பக்குவம் தேவை'


விதவை மறுமணம் குறித்து வேறு யாராலும் இதைவிட அழகாக சிறுகதை எழுதிட முடியாதென்பது என் எண்ணம்!! அவரின் ஒவ்வொரு சிறுகதையும் சமூகத்தோடும் அதன் நிகழ்வுகளோடும் பின்னிபினைந்தவை.. அவரின் சிறுகதைகளை படித்து முடிந்ததும் அட இதை இப்படியும் சொல்ல முடியுமா என்ற உணர்வும், மனதின் உணர்வுகளை எவ்வளவு அழகாக எழுத்துக்களாக மாற்றி அவற்றுக்கு காட்சி கொடுத்திருக்கிறார் என்ற எண்ணம் தோன்றும்! இந்த சிறுகதையை இன்னும் நீங்கள் படிக்கவில்லையாயின் படித்துப்பாருங்கள்! இங்கே!!


5 comments:

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

//விதவை மறுமணம் குறித்து வேறு யாராலும் இதைவிட அழகாக சிறுகதை எழுதிட முடியாதென்பது என் எண்ணம்!! //

மிகச் சரி!
என் அபிமான எழுத்தாளர்.70களில் தமிழ் வாசக உலகைக் கலக்கியவர்.

அம்பாளடியாள் said...

சிறப்பான பகிர்வு மிக்க நன்றி சகோ பகிர்வுக்கு .மேலும் தொடர
வாழ்த்துக்கள் .

சேட்டைக்காரன் said...

அண்மையில்தான் ‘யுகசந்தி’யைப் படித்து ஜே.கே-யின் ஆளுமை குறித்து வியந்து கொண்டிருந்தேன். அதை நினைவூட்டியது இந்த இடுகை! மிகுந்த ஈடுபாட்டுடன் வாசித்திருக்கிறீர்கள் என்பது புலப்படுகிறது. நல்ல பகிர்வு!

சே. குமார் said...

அருமையான பகிர்வு....
ரசித்து எழுதியிருக்கிறீர்கள்...

சிட்டுக்குருவி said...

சிறந்த ஒரு எழுத்தாளனை அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி நண்பா

Related Posts Plugin for WordPress, Blogger...