தன்மாத்ரா மலயாளப்படமும் அல்சைமர் நோயும்!

சாதாரன மறதி என்பது எல்லோருக்கும் சகஜமானது அது படித்தவன்,பாமரன் என்ற எந்த வேறு பாடுகளுமின்றி யாவருக்கும் ஏற்படக்கூடியது.ஆனால் மறதியே வாழ்க்கையை அழிக்கும் நோயானால்!

ஆமாம், நல்லா படித்த, நல்ல வேலையில், உடல் ஆரோக்கியத்தோடு அன்றாடம் சுறுசுறுப்பாக பொறுப்பாக இருக்கும் ஒருவர் திடிரென அவரையறியாமலே மறதியாக ஒரு அலுவலக பைலை வைத்த இடம் தெரியாமல் வீடு முழுக்க தேடுகிறார். வீட்டாரையும் திட்டுகிறார், வீட்டாரோ மறதியாக எங்காவது வைத்திருப்பீர்கள். பொறுமையாக தேடுங்கள் என்கிறார்கள். இவரோ தன்னுடைய ஞாபக சக்தியில் மிகுந்த நம்பிக்கை கொண்டவர், நான் அவ்வளவு இலகுவாக ஒரு விடயத்தை மறக்க மாட்டேன் என்கிறார்.பின்பு அலுவலக பைல் பிரிஜ்ஜிக்குள் இருந்து எடுக்கப்படுகிறது.

பின்னொரு நாள் அலுவலகம் சென்று திரும்பி வரும்போது வாங்கவேண்டிய காய்கறிகளை காலையிலேயே வாங்கிவிட்டு, ஓட்டிவந்த மோட்டார் சைக்கிளையும் அங்கேயே விட்டுவிட்டு ஆட்டோவில் அலுவலகம் செல்கிறார். அங்கே சென்று மாலை வீட்டிற்கு வந்த செய்ய வேண்டிய காரியங்களான சட்டையை கழற்றி வைத்துவிட்டு வாஷ்ரும் சென்று குளிக்கிறார்.! அலுவலகத்தில் உள்ளவர்களுக்கோ மிகப்பெரிய ஆச்சர்யம் என்னாயிற்று இந்த மனுஷனுக்கு? என,பின் மறதிகள் தொடர்கிறது அலுவலகம் செல்லும் வழியையையும் மறந்துவிடுகிறார்.இறுதியாக பிள்ளைகள்,மனைவி உறவினர்கள் எல்லோரையும் மறந்துவிடுகிறார். அப்படியே பேச்சும் நின்றுவிடுகிறது ஒரு குழந்தை போலவே மாறிவிடுகிறார்..!

என்ன கொடுமை இது எங்கிறீர்களா? ஆமாம் கொடுமைதான் இந்த நோயின் பெயர்தான் அல்சைமர்.!நான் மேலே சொன்னது 2005 யில் வெளியான மலயாள திரைப்படமான தன்மாத்ராவின் கதை.

இந்தப்படத்தை பார்த்துதான் இந்த நோயைப்பற்றியும் நோயின் தீவிரம் பற்றியும் அறிந்துகொண்டேன். படம் பார்க்கும் போது இப்படியும் நிகழுமா என பல அதிர்ச்சிகள். சமகால தமிழ்சினிமாவுலகம் மசாலா குப்பைகளில் உழன்று கொண்டிருக்கும் அதேநேரம் மலயாளிகள் இதுபோன்ற அற்புதமான சினிமாக்களையும் படைக்கிறார்கள். இந்த நோயைப்பற்றிய ஒரு ஆவணப்படுத்தல் போலவே இந்த திரைப்படம் அமைந்திருந்தது. ஆனாலும் எந்தயிடத்திலும் தொய்வடையாத திரைக்கதை. இப்படத்தில் மிக ஆழமாக சொல்லப்பட்ட இன்னுமொரு விடயம் தந்தை-மகன் உறவு. படத்தின் முதல் பாதி முழுக்க அதைப்பற்றியதுதான்.

இயக்கம் பிளெஸ்ஸி இவரின் பிரணயம் படம்தான் முதலில் பார்த்தது. அதன் பாதிப்பிலேயே அவரின் ஏனைய படங்களையும் தேடிப்பார்க்க வேண்டுமென்ற ஆவலில் பார்த்ததே இது. அல்சைமர் நோயாளியாக மோகன்லால். என்ன ஒரு கலைஞன் இவர். "லாலேட்டன்" என மலயாளிகள் பெருமை பேசுவதில் ஒரு தவறும் இல்லை. நேற்று முளைத்த சுள்ளான்களையே மாஸ் ஹீரோ என நாம் புகழும் போது. இப்படியான கலைஞர்களை கொண்டாடலாம் தப்பில்லை. புகழின் உச்சியில் இருக்கும் சூப்பர் ஸ்டார்கள் எடுக்க தயங்கும் பாத்திரம். மோகன்லால் அல்சைமர் நோயாளியாகவே வாழ்ந்திருக்கிறார். அருமையான நடிப்பு! இவரின் மனைவியாக நடித்த மீரா வாசுதேவன்,தந்தையாக நடித்த நெடுமுடி வேணு, மகனாக,மகளாக நடித்த எல்லோரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். முடிந்தால் பாருங்கள்!

தன்மாத்ரா படம் -கீதப்பிரியனின் விளக்கமான விமர்சனம்

அல்சைமர் நோய் பற்றி இணையத்தில் படித்தது.

மறதி என்ற ஒன்று மட்டும் இல்லையெனில், மனித வாழ்க்கையே நரகமாகிவிடும். அவமானம், சோகம், இழப்பு, வருத்தம் போன்ற துயரங்களை, அவ்வப்போது மறந்து விடுவதால் தான், நம்மால் இயல்பாக வாழ முடிகிறது.அதே சமயம்,எல்லாவற்றையும் மறந்து விட்டாலும், வாழ்க்கை நரகமாகிவிடும். மனைவி, மக்களின் பெயரை மறக்கும் நிலை ஒருவருக்கு ஏற்பட்டால், அதைவிட கொடுமை என்ன இருக்க முடியும். அல்சைமர் எனும் ஞாபக மறதி நோய், அப்படிப்பட்ட கொடுமையான நோய் தான். சாப்பிட்ட 10 நிமிடம் கழித்து, என்ன சாப்பிட்டோம் என சொல்ல முடியாத பரிதாப நிலை ஏற்படும். மிக மோசமான ஞாபக மறதி நோயே, அல்சைமர் என அழைக்கப்படுகிறது. ஜெர்மன் விஞ்ஞானி அலோஸ் அல்சைமர் இந்த நோயை கண்டுபிடித்ததால், அவரது பெயரால் அல்சைமர் என அழைக்கப்படுகிறது.

அல்சைமர் நோய் பாதிப்பு எந்த வயதில் ஏற்படும்?

பொதுவாக, அல்சைமர் நோய் 60 வயதுக்கு மேற்பட்டவர்களையே பாதிக்கும். ஆனால், மிக அரிதாக 30 வயதிலும் வரலாம். பாரம்பரியத்தில் தாத்தா, தந்தை, சகோதரருக்கு அல்சைமர் இருந்தால், குடும்பத்திலுள்ள இளம் வயதினருக்கும் நோய் வர வாய்ப்புண்டு. ஆண்களை விட, பெண்களுக்கு இந்த நோய் வரும் வாய்ப்பு அதிகம்.இந்தியாவில் சராசரி ஆயுள் அதிகரித்து வருவதால், 60 வயதுக்கு மேற்பட்டோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு உள்ள பாதிப்புகள் குறித்து, போதிய விழிப்புணர்வு இல்லை.


அல்சைமர் பாதிப்பு ஏற்பட காரணம் என்ன?

மூளையின் பக்கவாட்டு பகுதி, பாதிக்கப்படுவதால் டிமென்ஷியா எனும் ஞாபக மறதி நோய் வருகிறது. டிமென்ஷியா நோயில் அல்சைமர் ஒரு வகை. அல்சைமர் மறதி நோய் வருவதற்கு, மரபணு குறைபாடு முக்கிய காரணம் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மரபணு குறைபாடு காரணமாக, மூளையின் பக்கவாட்டு பகுதியிலுள்ள, ரசாயன பொருள் சுரக்காததால், அல்சைமர் ஏற்படுகிறது. குறைந்த படிப்பு படித்தவர்கள், அதிக குண்டாக இருப்பவர்கள், உயர் ரத்த அழுத்தம், இதய நோய் உள்ளவர்கள் ஆகியோருக்கு, அல்சைமர் பாதிப்பு வரும் வாய்ப்புள்ளது. உடல் உழைப்பு அதிகம் உள்ளவர்கள் மற்றும் ஹார்மோன் மாத்திரை எடுத்து கொள்பவர்களுக்கு, இந்த நோய் வரும் வாய்ப்பு மிகவும் குறைவு.

ஞாபக மறதி அல்சைமர் நோயை, முழுமையாக குணப்படுத்தக் கூடியது, குணப்படுத்த முடியாதது என, இரண்டு வகையாக பிரிக்கலாம். வைட்டமின் பி சத்து குறைவு காரணமாக வரும் ஞாபக மறதி நோய், முழுமையாக குணப்படுத்தக் கூடியது. ஆனால், அல்சைமர் மறதி நோயை, முழுவதுமாக குணப்படுத்த முடியாது.

அல்சைமர் அறிகுறிகள் என்ன?

எல்லோருக்கும் மறதி இருப்பது சகஜம் தான். ஆனால், மறதி இருக்கும் எல்லோருக்கும் அல்சைமர் நோய் பாதிப்பு என்று அர்த்தம் கொள்ளக் கூடாது. பேச்சில் மாறுபாடு தெரியும், சிலர் திக்கி திக்கி பேசுவர். பெயர்களை மறப்பது, உறவினர், நண்பர்களை யார் என சொல்ல முடியாமல் போய், இறுதியில் தான் யார் என்றே சொல்ல முடியாத நிலை ஏற்படும். பல் துலக்குவது எப்படி என தெரியாமல் போய்விடும். உடை அணிய தெரியாது. வீட்டின் குளியலறை எங்கிருக்கிறது என்பது மறந்து விடும்.

மாய நிலை: சிலருக்கு நோய் முற்றிய நிலையில், இல்லாத ஒன்று, கண் எதிரே இருப்பது போன்று பேசுவர். காதில் ஏதோ சத்தம் ஒலித்து கொண்டிருப்பதை போன்று உணருவர். ஏதோ பிதற்றுவர். மனநோயாளி போல் நடந்து கொள்வர்.

பாதுகாப்பு தேவை: அல்சைமர்  பாதிக்கப்பட்ட பலர், வீட்டிலிருந்து காணாமல் போய்விடுவர். எனவே, இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களை பாதுகாப்பது அவசியமாகிறது. அவர்களை எங்கும் தனியாக அனுப்பக் கூடாது. அவர்கள் கையில் முகவரி, தொலைபேசி எண் போன்வற்றை எப்போதும் கொடுத்துவிடுவது நல்லது.

அல்சைமர் சிகிச்சை என்ன?:

பத்து ஆண்டுகளுக்கு முன் வரை, அல்சைமர் நோய்க்கு சிகிச்சை கிடையாது. ஆனால், இப்போது நல்ல மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. எனவே நோயை முழுமையாக குணப்படுத்த முடியாவிட்டாலும், நல்ல கட்டுப்பாட்டுக்குள் வைக்கலாம். இதற்கு அறுவை சிகிச்சை செய்ய தேவையில்லை.

அல்சைமர் தடுக்க வழி என்ன?: 

மூளைக்கு வேலை கொடுத்து, எப்போதும் சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ள வேண்டும். மன அழுத்தம், சோர்வுக்கு இடம் கொடுக்கக் கூடாது. கொழுப்பு நிறைந்த உணவை தவிர்க்க வேண்டும். அல்சைமர் ஒரு நோய் என்றே தெரியாமல், முற்றிய நிலையில் தான் சிகிச்சைக்கு வருவார்கள். ஞாபக மறதி அதிகமாக இருந்தால், ஆரம்ப நிலை யிலேயே டாக்டரிடம் சென்று பரிசோதித்து கொள்வது நல்லது.

டாக்டர் சி. முத்தரசு | நரம்பியல் பேராசிரியர் | ராஜிவ் காந்தி அரசினர் மருத்துவமனை, | சென்னை < நன்றி-தினமலர் | www.dinamalar.com/>

நன்றி http://tn2016.blogspot.com/

3 comments:

Unknown said...

அருமையான ஒரு திரைப்படத்தை அறிமுகப்படுதியதோடு மட்டுமில்லாமல் அல்சைமர் நோய் பற்றியும் தெளிவாக குறிப்பிட்டுள்ளீர்கள். நன்றி!

தனிமரம் said...

நன்றி ரியாஸ் நல்ல படம் சொன்னீர்கள் இனிப்பார்க்கின்றேன் இந்த நோய் பற்றி நானும் இங்கு கேள்விப்பட்டேன் அருமையான தகவல்கள்!

Unknown said...

தமிழ் இணையதளம், ஆன்மிகம், சித்தர்கள் கதை, மருத்துவ குறிப்புகள், குறுங்கதைகள், சமையல் குறிப்புகள் - பற்றிய மனிதனுக்கு தேவையான
அனைத்தும் ஒரே இணையத்தில்....
www.tamilkadal.com

Rayilin oligal Song lyrics in English and Tamil

Railin Oligal Lyrics in Blue Star  Male : Rayil-in oligal Unaiyae theduthae Adhirum paaraiyaai Idhayam aaduthae Unthan kai veesidum Poi jaad...