February 13, 2014

மால்குடி டேஸ் நினைவுகள்.

1990 களின் நடுப்பகுதி பொழுதுபோக்கிற்கு இலங்கை அரச தொலைக்காட்சிகள் மட்டுமே கதி என்றிருந்த காலம்.
அப்பொழுது கண்டுகளித்த சில தரமான நிகழ்ச்சிகள் இப்பொழுதும் மனதில் ஊசலாடுகிறது. அவற்றில் இந்திய தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி மிக நல்ல வரவேற்பை பெற்ற மால்குடி டேஸ் என்ற தொடர் நாடகத்தை இலங்கை ரூபவாஹினியும் மொழிமாற்றம் செய்து/உபதலைப்புகளுடன் ஒளிபரப்பு செய்தது. அதன் ஒவ்வொரு கதைகளும் சிறார்களை மையப்படுத்தியதாகவே இருந்ததால் அப்போதைய சிறுவர்களுக்கு பிடித்துப்போன நிகழ்ச்சியாக மாறிப்போனது.

ஒரு கற்பனை கிராமத்தை அடிப்படையாக வைத்து ஆர்.கே.நாராயணனினால் எழுதப்பட சிறுகதை தொகுப்பே இக்கதைகள். இதை கண்ணட நடிகரும் இயக்குனருமான சங்கர் நாக் முப்பதிற்கு மேற்பட்ட  சிறுகதைகளை கொண்ட தொலைக்காட்சி தொடராக இயக்கியிருந்தார். மால்குடி என்னும் கற்பனை கிராமத்தை உருவாக்கி அதில் வாழ்ந்த எளிமையான மனிதர்களையும் அந்த சூழலையும் அவர்களின் வாழ்க்கை முறைகளையும் மிக அழகான சிறுகதைகளாக எழுதியிருந்தார் ஆர்.கே.நாராயணன். அவற்றை அப்படி தத்ரூபமாக காட்சிப்படுத்தி இந்தியாவில் அப்படியொரு கிராமம் எங்கேயிருக்கிறது என ரசிகர்களை தேட வைத்திருக்கிறார் இதை இயக்கிய சங்கர் நாக்.

இது இப்போதிருக்கும் மெகா தொடர்கள் போல் அல்லாமல் ஒவ்வொரு பாகமும் ஒவ்வொரு சிறுகதைகளாக ஒளிபரப்பாகும். ஒரு அருமையான சிறுகதையை வாசித்து முடிந்ததும் மனதில் ஏற்படும் திருப்தியை ஒத்தது ஒவ்வொரு சிறுகதைகளையும் காடசிகளாக கண்டு முடிக்கும் போது ஏற்படும் திருப்தி. இது கற்பனை கதையாக இருந்த போதிலும் இதில் வரும் கதை நாயகர்களோ ஏனைய கதாபாத்திரங்களோ மிக எளிமையானவை எந்த வித சாகசங்களும் செய்யாதவை. நாம் அன்றாடம் கான நேரிடும் மனிதர்கள்தான்! இதை குழந்தைகள், சிறார்களுக்கான தொடராக மட்டும் ஒதுக்கி விட முடியாது. இக்கதைகளில் பெரியவர்களுக்கும் நிறைய கருத்துக்கள் பொதிந்திருந்தது. தமிழில் மொழிமாற்றம் தொடர்கள் சில இணையத்தில் கானக்கிடைக்கிறது.. ஹிந்தி, ஆங்கில மொழி தொடர்கள் நிறையவே கானக்கிடைக்கிறது.


எல் வைத்தியநாதன் இசையமைத்திருந்தார் இந்த தொடருக்கு. அதில் இந்த தலைப்பு இசை மிக பிரபலம்.
5 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

தமிழில் மொழிமாற்ற காணொளி 8 வரை உள்ளது... மற்றவைகளையும் தேடுகிறேன்... நன்றி...

வை.கோபாலகிருஷ்ணன் said...

தகவல்களும், காணொளியும் மிக அருமை. ஆர். கே. நாராயணன் அவர்களின் ஆங்கிலச் சிறுகதைகள் யாவும் மிக அருமையாகவும், யதார்த்தமாகவும் இருக்கும்.

பகிர்வுக்கு நன்றிகள்.

Manickam sattanathan said...

கல்லூரி நாட்களில் Swamy and friends நூலகத்தில் எடுத்து படித்ததுண்டு,பின்னர் 1986-1987 களில் தூர்தர்ஷனில் அது மால்குடி டேஸ் ஆக வாரா வாரம் வரும் ஆங்கில சப் டைட்டில் வேறு கூடவே வரும். டைட்டிலை படிப்பதற்குள் காட்சிகள் ஓடி விடும்.படித்த கதைகள் தான் என்பதால் தொடர்வதில் சிரமம் இருக்காது. சுவாமி யாக நடித்த அந்த சிறுவனுக்கு தேசிய விருது கூட வழங்கினார்கள். தமிழ் பிராமண குடும்ப சூழலில் அந்த நாளைய தமிழக கிராம வாசிகள் நிறைய வருவார்கள். ஆர்.கே. நாராயணனின் கதைகளுக்கு ஆர்.கே. லஷ்மணனின் ஓவியங்கள் உயிர் தரும். அந்த வாசிப்பே ஒரு சுகம் தான். வித்யாசமான பதிவு. பகிர்வுக்கு நன்றி.

தனிமரம் said...

அறிமுக இசையிலேயே ஆழ்ந்து அந்த மால்குடி இன்னும் மனதில் பசுமையான நினைவுகள் மறக்கமுடியாது. ரூபவாஹினியின் நிகழ்ச்சியில் மால்குடி தனித்துவம் பகிர்வுக்கு நன்றி.

இராஜராஜேஸ்வரி said...

தலைப்பு இசையும் பகிர்வுகளும் அருமை..!

Related Posts Plugin for WordPress, Blogger...