February 03, 2014

North 24 Kaatham

நமக்கு பிடித்தமான நம்மை பாதிக்கும் சில விடயங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளுதலும் அல்லது எழுதி வைத்து சில காலங்களுக்கு பின் அதை மீட்டிப்பார்ப்பதும் அலாதி இன்பமானது. அவ்வாறு தொடங்கப்பட்டதுதான் இந்த வலைப்பக்கம்! அதனடிப்படையில் நான் பார்த்து ரசிக்கும் சில திரைப்படங்கள் பர்றி எழுதி வருகிறேன் அண்மைக்காலமாக. அவற்றில் அதிகமாக மலயாள திரைப்படங்கள் பற்றியே எழுதக்காரணம் அவைதான் என்னை அதிகமாக பாதிக்கிறது தமிழ் திரைப்படங்களை விடவும்! நல்ல தமிழ் திரைப்படங்கள் கண்டால் அவற்றையும் எழுதியிருக்கிறேன் இனியும் எழுதுவேன்.

இப்போதும் அண்மையில் பார்த்து வியந்த ஒரு அட்டகாசமான மலயாள திரைப்படத்தைப்பற்றியே சொல்லப்போகிறேன். அதுதான் North 24 Kaatham பஹாத் பாசில் நடித்தது. என்ன நடிகண்டா நீ... என்னும் சொல்லுமளவிற்கு ஒவ்வொரு படத்திலும் அந்தந்த பாத்திரமாகவே வாழ்ந்து வருகிறார் இதிலும் அப்படியே. நடிக்கிறார் என்று கொஞ்சம் கூட நம்ப முடியவில்லை. பல அற்புதமான நடிகர்களை உருவாக்கிய மலயாள திரையுலகம் இன்னுமொரு சூப்பர் ஹீரோவையும் உருவாக்கிவருகிறது. இந்தக்கதைக்கு இவரைவிட்டால் ஆளில்லை என்னுமளவிற்கு ஒவ்வொரு படத்திலும் பொருந்திப்போகிறார்.

இப்படத்தின் கதை என்று சொல்லுமளவிற்கு பெரிதாக ஒன்றுமில்லைதான்.. பஹாத் ஒரு corporate  கம்பெனியில் வேலை செய்யும் இழைஞன் எல்லோரிடமிருந்தும் வித்தியாசமான பல சுபாவங்களை தன்னகத்தே கொண்டவன். யாரிடமும் தேவைக்கு அதிகமாக பேசுவதில்லை, அளவுக்கதிகமான சுத்தத்தை பேனுபவன், பயந்த சுபாவம், பெண்கள் என்றாலே ஆகாது இப்படி பல சுவாரஷ்யமான கொள்கைகளையுடையவன். ஏன், மொபைல் போன் கூட பயன்படுத்துவதில்லை. இவனுடன் ஒன்றாக வேலை செய்பவர்களுக்கும் இவனின் நடத்தைகளால் இவனை பிடிப்பதில்லை. இப்படியிருக்க கம்பெனி விடயமாக வெளியூரிற்கு பயணம் செல்ல நிர்ப்பந்திக்கப்படுகிறான். அந்த பயணமும், பயணத்தின் போது அவன் சந்திக்கும் மனிதர்களாலும் எவ்வாறு இவனின் கொள்கைகளை மாற்றிக்கொள்கிறான் என்பதே கதை.

இந்தக்கதைக்கு திரைக்கதை அமைத்த விதத்திலேயே சுவாரஷ்யப்படுத்தியிருக்கிறார் இயக்குனர் அனில் ராதாகிருஷ்ணன் மேனன் இது இவருக்கு முதல் படமாம்! ஆரம்பத்திலேயே அசத்தியிருக்கிறார். படத்தின் அரைவாசிக்கு மேல் பயணம்தான். இம்மாதிரியான பயணங்களோடு (Road movies) சம்பந்தப்பட்ட படங்களை தேடிப்பார்க்கும் ஆர்வம்கொண்ட எனக்கு இப்படம் நல்லதொரு விருந்து. ஹர்த்தால் காரணமாக ரயில் பயணம் ரத்தாக பல்வேறு வாகணங்களிலும், தோனியிலும், கால் நடையாகவுமே பயணிக்கிறார்கள் பஹாத்துடன் நெடுமுடி வேணுவும் ஸ்வாதியும். நெடுமுடி வேனு ஒரு வேலை விடயமாக வெளியூர் செல்ல இடைநடுவே மனைவிக்கு கடுமையான வருத்தம் என்று அழைப்பு வர பயணத்தை இடைநடுவே முடித்துவிட்டு வீடு திரும்ப முயற்சிக்கிறார். பயணத்தின் போது அறிமுகமான ஸ்வாதியும் அவரின் கூட வர ஒரு காரணத்திற்காக பஹாத்தும் அவர்களுடன் சேர்ந்து கொள்கிறார். என்ன காரணத்திற்காக பஹாத் அவர்களுடன் செல்கிறார் என இலகுவாக அனுமானித்து விடலாம். நான் நினைத்தது போலவே இறுதிகாட்சியிலும் நடந்தது. எப்படியிருந்தாலும் படம் ஆரம்பம் முதல் இறுதிவரை தொய்வில்லாமல் ஒரே வேகத்துடன் நகர்கிறது. பார்வையாளனின் கவனத்தை வேறு எங்கும் செல்ல விடாமல் முழு கவனத்தையும் திரையின் பக்கம் கொண்டு வருவதே ஒரு திரைப்படத்தின் முழு வெற்றியாக இருக்க முடியும் அதை இப்படம் நிச்சயம் நிறைவு செய்திருக்கிறது என்பேன்.

நெடுமுடி வேனு எனக்கு பிடித்தமான நடிகர்களில் ஒருவர். மனிதருக்கு எந்தவிதமான பாத்திரங்கள் கொடுத்தாலும் அசத்துவார் இதிலும் அப்படியே அசாத்தியமான நடிப்பு! ஸ்வாதி துடு துடு பெண்ணாக நல்ல நடிப்பை வழங்கியிருக்கிறார்.  பல இடங்களில் சுவாரஷ்யப்படுத்துகிறார். பொதுவாக மலயாளிகள் அவர்களின் திரைப்படங்களில் பிற ஊர்காரர்களுக்கு அவ்வளவு இலகுவில் வாய்ப்பு வழங்கிவிட மாட்டார்கள். அப்படியிருந்தும், ஸ்வாதிக்கு இது இரண்டாவது படம் பஹத்துடன். பிரேம்ஜியும் ஒரு சில காட்சிகளில் வருகிறார் தமிழனாகவே.. படத்தின் ஆரம்பத்திலேயே பஹத்தின் குணாதிசயங்களை பார்வையாளருக்கு விளங்கவைத்து விடும் வகையில் அருமையாக காட்சியமைத்த இயக்குனரின் திறமையை என்னவென்று சொல்வது படம் முழுக்க பஹத் பேசியது ஒரு பக்க தாளில் எழுதிவிடுமளவு மிக கொஞ்ச வசனங்கள்தான் மற்றவையெல்லாம் அவரின் உடல்மொழி, முகபாவனைகள் மூலமே காட்சிபடுத்தியிருப்பது சிறப்பு.

இதில் பஹத்தின் குணாதிசயங்களாக காட்டப்படும் சில பண்புகள் சில வருடங்கள் முன் வரை என்னிடமும் இருந்ததால் இத்திரைப்படம் என் மனதுக்கு மிக நெருக்கமாகிவிட்டது. திரைப்படங்கள் என்பது வெறுமனே கண்களுக்கு விருந்து, வெற்றுப்பொழுது போக்கில்லாமல் நம் சிந்தனைகளை தூண்டக்கூடிய தன்னம்பிக்கைகள் தரக்கூடியதாக இருக்க வேண்டும் என்பதே எனது ஆசை. அந்த வகையில் இப்படமும் ஓரளவுக்கேனும் அதை பூர்த்தி செய்திருக்கிறது. மலயாள சினிமா விரும்பிகள் தவறவிடக்கூடாத ஒரு சினிமா இது.

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

விமர்சனம் நன்று... நன்றி...

தனிமரம் said...

இனித்தான் பார்க்க வேண்டும் சகோ!

Related Posts Plugin for WordPress, Blogger...