கடந்தவார சினிமா...!

கடந்தவாரம் நான் பார்த்த மூன்று வித்தியாசமான் தமிழ்சினிமா பற்றிய என் குறுகிய கண்ணோட்டம் உங்களுக்கும் பிடிக்கும் என நினைக்கிறேன்.


மதராசப்பட்டினம்..

கடந்தவாரம் மதராசப்பட்டினம் பார்க்ககூடிய வாய்ப்பு கிடைத்தது..
கொஞ்சம் பழமை,கொஞ்சம் புதுமை, கொஞ்சம் அழகு,கொஞ்சம் வலிமை,கொஞ்சம் ஏழ்மை,கொஞ்சம் சிரிப்பு,கொஞ்சம் கண்ணீர்,கொஞ்சம் ஏக்கம் எல்லாம் சேர்ந்த ஓர் நிறைவு இப்படத்தில்.. நீண்ட காலத்திற்கு மனசின் ஆழம் வரை சென்று தொட்டுச்சென்ற தமிழ்சினிமா.. படத்தில் பெரிய ஸ்டார்கள் இல்லை, பெரிய பிரம்மாண்டங்கள் இல்லை இருந்தாலும் ரசிக்கலாம்..

ஆர்யா வெறுமனே மசாலாத்தனமான ஹீரோயிச கதைகளை தேர்ந்தெடுக்காமல் தொடர்ந்து வித்தியாசமான பாத்திரங்களில் நடித்து அசத்துகிறார்.. அடுத்ததாக அந்த ஆங்கிலேயே அழகி எமி பார்வைகளாலேயே மனதை கொள்ளையடித்து செல்கிறாள்.. இன்னும் கண்களுக்குள்ளேயே அலைகிறது அவள் உருவம்.. முகபாவங்கள், அதிகமான காட்சிகளில் கண்களாலேயே பேசுகிறாள்.. அடுத்ததாக இளம் இயக்குனர் விஜய்.. அத்தனை பாராட்டுக்களுக்கும் உரியவர் இவர்தான்.. இவரின் கிரீடம் படத்திலேயே தெரிந்தது இவரின் திறமை. தொடர்ந்து வித்தியாசமான நல்ல சினிமாக்களை எதிர்பார்க்கிறோம் இவரிடமிருந்து.. படம்பார்ப்பது ஒரு பொழுதுபோக்குத்தான் என்றாலும் அதுவும் மனசு திருப்திபடும் வகையிலிருந்தால் திருப்தியல்லவா.. இன்றைய நிறைய படங்கள் கண்களை மட்டும்தான் கவர்கிறது மனதை தொட்டுச்செல்வதில்லை.. மதராசப்பட்டினம் கண்ணையும் கவர்கிறது மனதையும் தொடுகிறது..


காஞ்சிவரம்..

நெசவாளர்களின் வாழ்க்கையை பிரதிபலித்த ஓர் திரைப்படம்.. கதை சுதந்திரத்துக்கு முன்னைய காலத்தில் நகர்வதால் 60,70 களில் வந்த ஓர் திரைப்படம் பார்க்கும் உணர்வு. ஊருக்கே துணி நெய்து கொடுத்தாலும் அவர்கள் வாழ்கை என்றும் ஏழ்மைதான் என்பதை இந்தப்படம் நன்றாகவே உணர்த்துகிறது.. பிரகாஷ்ராஜ் என்ன யதார்த்தமான நடிப்பு.. நடிப்பு என்று சொல்வதைவிட பாத்திரமாகவே வாழ்கிறார் மனிதர்.. இதில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கன தேசிய விருது கூட கிடைத்தது அவருக்கு.. தமிழ் சினிமா ஒரு நல்ல நடிகரை வில்லன் என்ற பெயரில் வீனாக்கிவிட்டதாகவே உணர்கிறேன்... 2009 க்கான சிறந்த படந்துக்கான தேசிய விருதும் இப்படத்துக்கே கிடைத்தது இவ்விருதுகளே என்னை இப்படத்தை பார்க்க தூண்டியது.. படத்தின் இயக்குனர் பிரியதர்ஷன் மிகச்சிறப்பாக இயக்கியிருக்கிறார்..எத்தனை தமிழ்சினிமா ரசிகர்களுக்கு இப்படம் பிடித்திருக்குமோ தெரியவில்லை...

இப்படத்தில் பிரகாஷ்ராஜ் மனைவிக்கு குழந்தை பிறந்தவுடன் நடக்கும் நிகழ்ச்சியில் ஒலிக்கும் பாடலில் சில வரிகள் மனதோடு ஒட்டிக்கொண்டது.. அவை கீழே..

பொன்னூஞ்சல் தொட்டிலிலே மயிலிறகு மெத்தையிலே
மானே நீ உறங்கு உறங்கு ஆராரோ...
சூரியனும் சந்திரனும் சாமரங்கள் வீசிடவே
சந்தனமே உறங்கு உறங்கு ஆராரோ..

பூமிப்பந்தை பிஞ்சுகாலால் எட்டி எட்டி நீ உதைத்து
நடைவண்டியில் நாளை நடை பழகு..
தலைவாரி பூக்கள்சூடி தத்தி தத்தி நீ நடந்து
பள்ளி சென்று தமிழ் நீ பழகு...



மனைவி ரெடி..

இங்கெல்லாம் இப்பொழுது பொழுதுபோக்கிற்காக வெளியில் சுற்ற முடிவதில்லை.. அவ்வளவு சூடும் வியர்வையும்.. என்னசெய்வது.. இனையத்தில் யூடியுப்பில் ஏதாவது தமிழ் படம் தேடிப்பார்ப்போம் என்று தேடியபோதே இந்தப்படம் சிக்கியது.. பாண்டியராஜன் படம் அப்படியென்றால் நிச்சயம் சிரிக்கமுடியும், அவரின் திருட்டு முழி,ஏதாவது தில்லுமுல்லு,அட்டகாசம் இருக்கும்.. என பார்க்க ஆரம்பித்தேன் எதிர்பார்த்ததைவிட அதிகமாகவே இருந்தது


இதில் விஷேசம் பழைய நடிகர் தங்கவேலு இதில் நடித்திருந்தார்.. அவர் நடித்த முழுமையான திரைப்படம் இதற்குமுன் நான் பார்த்ததில்லை.. வெகு சிறப்பாக வாத்தியாராக நடிக்கவும் செய்தார் சிரிக்கவும் வைத்தார்.. இதில் மனோரமா வரும் "தந்தி" காட்சி என்னை மிகவும் கவர்ந்தது.. முதலில் தந்தி வந்ததும் பிரித்துபார்க்காமலேயே மரனசெய்தி என நினைத்து அழுவதும்.. பின் பாண்டியராஜன அடிபட்டு வைத்தியசாலையில் இருப்பதை அறிவிக்க அனுப்பிய தந்தி வந்தவுடன் அலட்டிக்கொள்ளமல் இருப்பதும் சூப்பர் சீன்கள்.. அந்த காட்சியின் உரையாடல் இங்கே.. தபால்காரன்,மனோரமா,பெரியம்மா,மனோரமா தம்பி

த.காரன்- தந்தி வந்திருக்குமா...
மனோரமா- அ.....
த.காரன்- ஏம்மா நீங்க என்ன செவுடா தந்தி வந்திருக்குன்னு சொல்றன்    பேசாம நிக்கிறிங்க
மனோரமா- தந்திதானே வந்திருக்கு அதுக்கு ஏன் இந்த கத்து கத்துற எங்கயிருந்து வந்திருக்கு
த.காரன்- மெட்ராசிலிருந்துமா...
மனோரமா- என்னமோ மெட்ராஸே வந்தமாதிரி குதி குதின்னு குதிக்கிற
த.காரன்- ஏம்மா தந்தி வந்திருக்குன்னு சொல்றன் அதுக்கொரு பதற்றத்தையே கானோமே..
மனோரமா- என்னமோ எங்கவீட்டுக்கு இதுதான் மொத மொத வர்ற தந்தி மாதிரியில்ல பதர்ற. இதுமாதிரி தந்தி எத்தன பாத்திருக்கேன் தெரியுமா நான்.. சரி சரி குடுத்துட்டு போ
பெரியம்மா- யாரது ராத்திரியில தொந்தரவு பண்றது..
த.காரன்- பெரியம்மா நீங்களாவது சொல்லுங்க வந்திருக்கிறது தந்தின்னு...
பெரியம்மா- தந்தியா.... நான் என்னமோ லெட்டரோ கடதாசியோன்னு பயந்து போயிட்டன் நீ.. வந்து படும்மா..
ராத்திரியில வந்து தூக்கத்த கெடுக்கிறான் விடிஞ்சி வந்து கொடுக்ககூடாதா...
மனோரமா தம்பி- எக்கா அந்த தந்திய குடுக்கா மாப்ள என்னதான் நம்மளுக்கு வாழ்த்துச்செய்தி அனுப்பியிருக்காருன்னு பார்ப்போம்
மனோரமா- இரு நாளை காலையில நல்ல நேரமா பார்த்து நாலு பெரிய மனிசங்கிட்ட கொடுத்து படிப்போம்..
மனோரமா தம்பி- அக்கா நீ.. ஒருத்திதான் க்கா குடும்ப கௌரவத்தையே கட்டி காத்துட்டு வர்ற
மனோரமா- புரிஞ்சா சரி

பிடிச்சிருக்கா... இல்லையா.. சொல்லுங்க பின்னூட்டத்துல.. ஒரு ஓட்டும் குத்திருங்கப்பா..

No comments:

Rayilin oligal Song lyrics in English and Tamil

Railin Oligal Lyrics in Blue Star  Male : Rayil-in oligal Unaiyae theduthae Adhirum paaraiyaai Idhayam aaduthae Unthan kai veesidum Poi jaad...