இரவுக்கிறுக்கல்....!

சேலை...

தேடி அலைகிறேன்
தாயின் சேலைக்குள்
ஒளிந்து விளையாடிய
காலங்களை....!


தூக்கம்...

இறந்து போகிறேன்
மீண்டும் எழுகிறேன்
இன்னும்
உலகின் மடியில்....!

பூனை...

கண்னை மூடிக்கொள்கிறேன்
யாருமில்லை உலகில்
நான் மட்டும்
பூமியில்...!

உலகம்...

இறந்து போன நேற்று
பிறந்த இன்று
பிறக்காத நாளை...!

யுத்தம்...

உயிரிரைக்கொல்லும்
உயிரில்லா
மிருகம்...!

வறுமை...

ஏழை வீட்டு
செல்லக்குழந்தை...!

நீ ஒரு தாஜமஹால்...!


நீ ஒரு தாஜமஹால்
நித்தம் ரசிக்கிறது மனசு
தூரத்து நிலவை ரசிக்கும்
குழந்தையாய்..!
உன்னைப்பார்க்கும் பொழுதுகள்
என் விழிகளுக்கு
பண்டிகை...!
பாலைவனத்தில்
பருவபெயர்ச்சி மழையாய்
உன் புன்னகைகள்
துள்ளிக்குதிக்கிறது மனசு
நீண்ட கோடைக்குப்பின்
மழை கண்ட
விவசாயியாய்...!
பார்வைகளாலே பரிமாறுகிறாய்
புசிக்காமலே பசியாறுகிறேன்
கோடி வார்த்தைகள்
கோர்க்கிறேன் தினமும்
உன்னோடு பேச.
உன்னருகில் வந்ததும்
தவிக்கிறேன் வார்த்தைகளுக்காய்
வார்த்தை தேடும்
இந்த கவிதையாய்...!
இயக்குனர் சேரன்..!

தமிழ் திரையில் பல இயக்குனர்கள் வந்தபோதிலும் கொஞ்சபேரால் மட்டுமே நின்று நிலைக்க முடிந்துள்ளது. என்பதுகளிலிருந்து பார்த்தால் பாலச்சந்தர்,பாரதிராஜா,பாக்யராஜ்,பாலுமகேந்திரா,சுந்தர்ராஜன்,மகேந்திரன்,பாசில் நீண்டு செல்லும் அந்த வரிசையில்.. இயக்குனர் சேரன் அதிகளவு படங்களை இயக்காவிட்டாலும் தான் இயக்கிய ஒவ்வொரு படத்திலும் ஒவ்வொரு விஷயத்தை அழகாக சொல்லிக்காட்டியிருப்பார்.. அன்மைக்கால இயக்குனர்களில் பெண் உடம்பையும்,ஹீரோயிசைத்தையும் மட்டும் நம்பாமல் கதையை மட்டும் நம்பி படம் எடுப்பவர்களில் இந்த சேரன் என்னை மிகவும் கவர்ந்தவர்..
அவர் இயக்கிய திரைப்படங்களை வரிசையாக நோக்கினால்..


1. பாரதிகண்ணமா.
சேரன் இயக்கிய முதல் படம் இது. 1997 யில் வெளிவந்தது. ஜாதி ஏற்றத்தாழ்வுகளுக்கிடையில் சிக்கித்தவிக்கும் காதலை மிகச்சிறப்பாக சொல்லியிருப்பார். இதில் பார்த்திபன்,மீனா,விஜயகுமார்,வடிவேலு ஆகியோர் நடித்திருந்தினர். வர்த்தகரீதியாகவும் நல்ல வெற்றியைப்பெற்றது இந்தப்படம். இசை தேவா பாடல்களும் ஹிட்.


2. பொற்காலம்.
1998 யில் வெளியான படம். ஊனமுற்றவர்களும் சமூகத்தால் ஏற்றுக்கொள்ளப்படவேண்டியவர்கள் என்ற கருத்தை மிக அழகாக சொன்ன படம். சிறந்த சமூகநல கருத்துக்களும் இதிலிருந்தன, இப்படத்தில் முரளி,மீனா,சங்கவி,வடிவேலு ஆகியோர் நடித்திருந்தனர். இசை தேவா பாடல்கள் சூப்பர் ஹிட் ( ஊனம்


3. தேசிய கீதம்
இத்திரைப்படத்தை இன்னும் நான் பார்த்ததில்லை. இதுவும் 1998 யில் வெளிவந்தது. முரளி,ரம்பா,நாசர் ஆகியோர் நடித்திருந்தனர். இந்தப்படம் சேரனுக்கு மிகப்பெரும் தோல்விப்படமாக அமைந்தது.


4.வெற்றி கொடி கட்டு
வெளிநாட்டு வேலைவாய்ப்பை மட்டும் நம்பி காலத்தை வீனாக்குபவர்களுக்கு உள்நாட்டிலேயே உண்மையாக உழைத்தால் முன்னேறலாம் என்ற கருத்தைக்கொண்ட அருமையான படம். நல்ல சமூக நல கருத்துகளும் இப்படத்திலிருந்தன இதற்காக சமூக பிரச்சினைகளை அலசிய படத்துக்கான தேசிய விருதையும் பெற்றுக்கொண்டது. இப்படத்தில் பார்த்திபன்,முரளி,மீனா,மாளவிகா,வடிவேலு ஆகியோர் நடித்திருந்தனர். வடிவேலுவின் காமெடி கலக்கலாக இருக்கும். இசை தேவா "கருப்புத்தான் எனக்குப்பிடித்த கலரு" பாடல் கருப்பர்களின் தேசிய கீதமாகவே மாறியது.


5.பாண்டவர் பூமி.
சந்தர்ப்ப சூழ்நிலைகளால் ஒரு பாசமான குடும்பத்தில் ஏற்பட்ட கசப்பான நிகழ்வால் ஏற்பட்ட மாற்றங்களை சொன்ன படம். இப்படத்தின் கதை ஒரு வீட்டை மையமாக வைத்தே அமைக்கப்பட்டிருக்கும். இப்படத்தில் அருன்விஜய்,சமிதா,ராஜ்கிரன்,ரஞ்சித் ஆகியோர் நடித்திருந்தனர். இசை பரத்வாஜ் " அவரவர் வாழ்க்கையில் ஆயிரமாயிரம் மாற்றங்கள்" என்ற பாடல் பலரின் விருப்பப்பாடல் இன்றுவரை.


6.ஒட்டோ கிராப்
நாம் கடந்துவந்த வாழ்க்கைப்பாதையினை திரும்பிபார்க்கவைத்த படம்.சேரனுக்கு அதிகளவு புகழை ஈட்டிக்கொடுத்த படம். சேரன் அவரே நாயகனாக திரையில் தோன்றி நடித்த முதல் படம். சிறந்த இயக்குனருக்கான தமிழ்நாடு மானில விருது சேரனுக்கு கிடைத்தது. இசை பரத்வாஜ் பாடல்கள் சூப்பர்ஹிட்.. "ஒவ்வொரு பூக்களுமே" என்ற பாடல் நம்பிக்கையின் தேசிய கீதமாகவே மாறிப்போனது இப்பாடலை எழுதியதற்காக பா.விஜய்யிக்கும் பாடலை பாடியதற்காக சித்ராவுக்கும் தேசிய விருதுகள் கிடைத்தது 
நம்பிக்கை என்பது வேண்டும் நம் வாழ்வில்....
லட்சியம் நிச்சயம் வெல்லும் ஒரு நாளில்.....


7.தவமாய் தவமிருந்து
தன் குடும்பத்துக்காக கஷ்டப்பட்டு உழைத்த தந்தையின் நினைவுகளை சுமந்த படம். எனக்குத்தெரிந்தவரையில் தந்தையை பற்றி அழுத்தமாக அழகாக சொன்ன படம் இதுதான் என்பேன். சிறந்த குடும்ப நல கருத்துக்களுக்கான படமாக தேசிய விருதையும் பெற்றுக்கொண்டது இந்தப்படம். இதில் தந்தையாக ராஜ்கிரனின் நடிப்பு அபாரமாகயிருந்தது. மிக மெதுவான திரைக்கதையும் படத்தின் நீளமும் படத்தின் குறைபாடுகள் எனலாம..


8. மாயக்கண்ணாடி
அளவுக்கதிகம் பேராசை கொள்ளாமல் கிடைக்கும் வேலையை நேசித்து ஈடுபாடுடன் செய்தாலே வாழ்க்கையில் வெற்றிபெறலாம் என்ற கதையம்சத்தைக்கொண்ட படம் இது. இதில் சேரன் கொஞ்சம் வித்தியாசமான முறையில் நடித்திருப்பார். அவருக்கு ஜோடியாக நவ்யா நாயர். இசை இளையராஜா "உலகிலே அழகி நீதான் என்ற பாடல் என்னை மிகவும் கவர்ந்தது.


9. பொக்கிஷம்.
கடிதங்களால் இலக்கியம் கலந்த ஒரு காதல் பயணம். கதை 1970 களில் நடைபெறுவதாக காட்சிகள் அமைக்கப்பட்டவிதம் அருமை. இதற்காகவேண்டியே சேரனுக்கு ஒரு சபாஷ் போடலாம். ஒளிப்பதிவு பிரமாதம். சபேஷ் முரளியின் இசையில் யுகபாரதியின் பாடல் வரிகளில் பாடல்கள் எல்லாம் கவிதை கலந்த அழகு.. ஒவ்வொரு நிகழ்வுகளையும் சின்ன சின்ன பாடல்களாக அமைத்தது நல்ல ரசனை. மசாலா படவிரும்பிகளுக்கு இப்படம் பிடித்திருக்க வாய்ப்பில்லை.


இதைவிட சேரன் சொல்ல மறந்த கதை, பிரிவோம் சந்திப்போம்,ராமன் தேடிய சீதை போன்ற படங்களில் நாயகனாக நடித்திருக்கிறார்..
இந்தப்பதிவு எப்படியிருக்கென்று சும்மா சொல்லிட்டுப்போங்க..

காட்டு ராஜாவின் நிலை

பாகிஸ்தானின் ஒரு பின் தங்கிய நிலையிலுள்ள மிருககாட்சிசாலையில் ஒரு சிங்கம் வாழ்ந்து வந்தது.. அந்த சிங்கத்துக்கு ஒரு நாளைக்கு உணவாக 2 கிலோ இறைச்சி மாத்திரம் வழங்கப்பட்டுவந்தது. அந்த உணவு அந்த சிங்கத்தின் பசியை தீர்க்க போதுமானதாக இருக்கவில்லை.. இதிலிருந்து எப்படியாவது விடுதலை பெறவேண்டும் என்ற ஏக்கம் கலந்த எண்ணத்துடன் வாழ்ந்து வந்தது.

அவ்வாறிருக்கும் பொழுது ஒருநாள் துபாய் மிருக காட்சிசாலையின் உரிமையாளர் ஒருவர் பாகிஸ்தானுக்கு வருகைதந்த சமயம் இந்த மிருககாட்சிசாலையையும் பார்வையிட்டார். அப்போது இந்த சிங்கமும் கண்ணில்படவே அதை துபாய்க்கு கொண்டுவர ஆசைப்பட்டு அந்த நிர்வாகிகளிடம் அனுமதியும் பெற்றார்.

இதைக்கேள்விப்பட்ட சிங்கத்துக்கு சந்தோஷம் தாங்கமுடியவில்லை.. துபாய் சொகுசு வாழ்க்கையை நினைத்து கனவு கான ஆரம்பித்துவிட்டது. சொகுசு குளிரூட்டப்பட்ட அறை உணவாக ஒரு நாளைக்கு இரண்டு மூன்று ஆடுகள் கிடைக்கலாம் என பேராசை கொண்டது..

நினைத்த்து போலவே துபாய் வந்தாகிவிட்டது.. மிருககாட்சிசாலைக்கு கொண்டுவந்து ஒரு சிறிய அறையில் அடைத்துவைத்து முதல் நாள் காலை உணவாக ஒரு பை வந்தது அதை பிரித்துப்பார்த்ததும் சிங்கத்துக்கு ஒரே ஆச்சரியம் அந்த பைக்குள் ஒரு சில வாழைப்பழம் மட்டுமே இருந்தது.. சிங்கம் நினைத்துக்கொண்டது நாம் இப்போதுதானே வந்திருக்கிறோம் தவறுதலாகயிருக்கலாம் என நினைத்துக்கொண்டது.

தொடர்ந்து இரண்டாவது நாளாகவும் அவ்வாறாகவே நடந்தது அதையும் சிங்கம் பெரிதாக எடுக்கவில்லை மூன்றாவது நாளும் அதை உணவே சிங்கத்துக்கு வழங்கப்பட்டது.. சிங்கத்துக்கு பெரும் கோபம் ஏற்பட்டது உணவு கொண்டுவந்த பையனை இழுத்து அறைவிட்டு கேட்டது உங்களுக்கு பைத்தியமா பிடித்துவிட்டது ஏன் இவ்வாறு செய்கிறீர்கள். நான் யார் தெரியுமா காட்டுக்கே ராஜா. நான் இறைச்சிதான் உண்பேன் என்பது உங்களுக்கு தெரியாதா என்றது.

அதற்கு அந்தப்பையன் அமைதியாக சொன்னான். சார் நீங்கள் காட்டுக்கே ராஜாவாக இருக்கலாம். நீங்கள் இறைச்சி மாத்திரம்தான் உண்பீர்கள் என்பதும் எங்களுக்கு தெரியும். ஆனால் நீங்கள் பாகிஸ்தானிலிருந்து துபாய் வந்தது குரங்கு வீசாவில் அதனால வாழைப்பழம் மாத்திரமே உங்கள் உணவாக அனுமதிக்கப்படுகிறது என்றான்.. அதைக்கேட்ட சிங்கம் திகைத்துப்போய் வீசாவில் இப்படியெல்லாம் குளறுபடிகள் செய்கிறார்களா.. பாகிஸ்தானுக்கே திரும்பிச்செல்ல ஏதும் வழியுண்டா என விசாரித்தது அப்பாவியாக...

என்னைக்கவர்ந்த பத்து பதிவுகள்

நாம் ஒவ்வொரு நாளும் எத்தனையோ பதிவுகள் படிக்கிறோம் அவற்றில் சில மிக சுவாரஷ்யமானதாகயிருக்கும் அவ்வாறான பதிவுகள் எம்மனதோடு ஒட்டிவிடும்.. அவ்வாறு என் மனதைக்கவர்ந்த எத்தனையோ பதிவுகளில் பத்து பதிவுகளைப்பற்றி இங்கே சொல்லப்போகிறேன்.
# தேவாவின்  வாய்மை  என்ற பதிவு. ஏழை விவசாயி ஒருவர் அரசாங்க அலுவலகமொன்றில் பட்ட அவமானங்களை அழகாக விபரித்த பதிவு.. அங்கே நடந்த நிகழ்வுகள் அவரின் வசனங்கள் மூலம் காட்சிப்படுத்தப்பட்டவிதம் அருமை. வசனங்களுக்கு காட்சி வடிவம் கொடுப்பதென்பது ஒரு சிலரால் மட்டுமே முடிந்தது.அது தேவாவினால் இந்தப்பதிவில் சாத்தியமானது.
 
# கொஞ்சம் வெட்டிப்பேச்சு சித்ரா அக்காவின்  அவள் ஒரு "தொடர்பதிவு" என்ற பதிவு..சிரிக்கத்தெரியாதவர்களையும் சிரிக்க வைக்கும் அவரின் எழுத்துக்கள். வெட்டிப்பேச்சாத்தான் இருக்கும் என்ற மனநிலையில் படிக்க ஆரம்பித்தாலும் பதிவில் முடிவில் ஒரு Relaxation கலந்த புன்னகை தானாகவே வெளிப்படும். அதை இவரின் எல்லாப்பதிவுகளிலும் சாத்தியப்படவைப்பதே இவரின் வெற்றி.
 
# சேட்டைக்காரனின் எனக்குப்பிடித்த பத்து பெண்கள் என்ற பதிவு. பிடித்த பெண்களை வரிசைப்படுத்தும் தொடர்பதிவு ஆரம்பித்து எல்லோரும் அன்னை தெரேசாவையும் சமூகத்தில் உயர்நிலையிலுள்ள பெண்களையும் வரிசைப்படுத்திக்கொண்டிருந்த சமயம்.. சமூகத்தால் கொஞ்சம் வித்தியாசமான கோணத்தில் நோக்கப்படும் பெண்களை (ஷகீலா,ரேஷ்மா உட்பட) வரிசைப்படுத்திய விதமும் அதற்கு அவர் கொடுத்த விளக்கங்களும் என்னை மிகவும் கவர்ந்தவை.
 
# ஹேமா அக்காவின்    ஒரு முறை ஓரே ஒரு முறை  என்ற பதிவு.இவரின் கவிதைகள் மனசின் ஆழம்வரை ஊடுருவிச்செல்லும் ஆற்றல் படைத்தது.. அவ்வாறு அப்பா அம்மா நினைவுகளளை கவிதையாக்கியிருக்கிறார் இங்கே..அவரின் வலைத்தளத்தை மேய்ந்தபோது என் கண்ணில்பட்டது என மனதிலும் ஒட்டிவிட்டது சுமார் 2 வருடங்களுக்கு முன் எழுதியது என நினைக்கிறேன்.


# லோசனின் ஆயிரத்தில் ஒருவன்  திரைப்படப்பார்வை எத்தனையோ திரைப்படவிமர்சனம் படித்தாலும் லோசனின் திரைப்பட விமர்சனம் என்னை மிகவும் கவர்ந்தது. அதுவும் இந்த திரைப்பட விமர்சனத்தில் அவரின் விரிவான பார்வைக்கோணமும், சில இடங்களில் வசன நடையும், சொல்லப்பட்ட விதமும் அருமை.


# அஷீதாவின் படிச்சு பார்த்தேன் ஏறவில்லை. என்ற பதிவு இவருடைய நிறைய பதிவுகள் நகைச்சுவைகளால் அலங்கரிக்கப்பட்டிருக்கும். இந்தப்பதிவிலும் அவருடைய பாடசாலை வாழ்க்கையை மிக சுவாரஷ்யமாக சொல்லியிருக்கிறார் அது பொய்யோ மெய்யோ நானறியேன் ஆனாலும் இந்தப்பதிவை படிக்கும்போது சிரிக்காமல் மட்டும் இருக்கமுடியவில்லை. இப்போதெல்லாம் அதிகமாக எழுதக்கானோம்.


# கருந்தேள் கண்ணாயிரத்தின்  கிஷோர் குமார்- சல்தே சல்தேஎன்ற பதிவு. ஹிந்திப்பாடகர் கிஷோர் குமார் பற்றிய ஒரு அருமையான பதிவு.கிஷோர் குமார் பாடிய சில பாடல்கள் எனக்குப்பிடிக்கும் என்பதாலும் இந்தப்பதிவுக்காக வேண்டி அவரின் தேடல்கள் அபாரம் எல்லா தரவுகளுக்கும் லிங்க் கொடுத்து வாசிப்பாளனின் தேவையை பூர்த்தி செய்கிறது இந்தப்பதிவு.
# ஜெய்லானியின்  சுடு தண்ணி வைப்பது எப்படி என்ற பதிவு.. இவருடைய பதிவெங்கிலும் கொட்டிக்கிடக்கிறது நகைச்சுவை இனிப்புகள். படிக்க படிக்க இனித்துக்கொண்டேயிருக்கும். இந்தப்பதிவை படித்துவிட்டு நிறையவே சிரித்தேன்.. இவரையும் ரொம்ப நாளா கானோம்.


# ஹுஸைனம்மாவின்  ரீ-ஸைக்கிளிங்கும் பழைய இரும்புச்சாமானும் என்ற பதிவு. அபுதாபியில் வேலை செய்யும் தொழிலாளர்கள் பகுதி நேர வேலையாக காலி டின் கள் சேகரிப்பதில் ஈடுபடுவதை தனது கதையில் அழகாக கூறியிருப்பார் இவரின் எழுத்து நடையும் அழகு


வேலன் அவர்களின் ஈத் பெருநாள் பரிசு  என்ற பதிவு.. மதங்கள் தாண்டியும் மனிதநேயம் வளரவேண்டும் என உணர்த்தியது இந்தப்பதிவு..


இன்னும் எத்தனையோ பதிவுகள் பிடித்திருந்தாலும் எல்லாவற்றையும் இங்கே எழுதமுடியவில்லை.. இதை விரும்புபவர்கள் தொடர்பதிவாக எழுதுங்கள் அப்போது தவறவிடப்பட்ட நல்ல பதிவுகளை படிக்கும் சந்தர்ப்பம் கிடைக்குமல்லவா...

Song lyrics

Tamil,Sinhala,Hindi Song Lyrics