போராடுவோம்..!

வானமே
உடைந்து விழுந்தாலும்
பூமி தாங்கும்
காலம் வரை
உயிர் தேங்கும்
காலம் வரை
போராடுவோம்...
வீழ்ந்தாலும் பூமியிலே
வாழ்ந்தாலும் பூமியிலே
பயம் எதற்கு..
துயரங்கள்
கடந்து செல்லும்
காற்றில் வீசும் தூசுகளாய்...
இமயங்கள்
வந்து செல்லும்
வாசல் அருகே...
நம்பிக்கை
நம்பிக்கை
நம்பிக்கையோடு
நகர்ந்து சென்றால்..!

மச்சான் - சிங்கள திரைப்படம்..!

2008 யில் வெளியான இந்த மச்சான் என்ற சிங்கள திரைபடத்தின் விமர்சனம் இலங்கை பத்திரிகைகளில் வெளியான போது எப்படியாவது பார்த்துவிட வேண்டுமென்று  எண்ணினேன். வித்தியாசமான திரைப்படங்களை தேடிப்பார்ப்பதில் ஓர் அலாதிப்பிரியம். அதுவும் சிங்களத்தில் அத்திபூத்தாற் போல்தான் இவ்வாறான பார்க்க முடியுமான திரைப்படங்கள் வரும்.  ஆனாலும் இதை பார்க்க தவறவிட்டிருந்தேன்.

அண்மையில் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களின் பக்கத்தில் சில கட்டுரைகளை வாசித்துக்கொண்டிருந்த போது, இந்த படம்பற்றி அவர் எழுதிய கட்டுரை கண்ணில் சிக்கியது.  அதைப்படித்தவுடன் செய்தது அந்தப்படத்தை டவுன்லோட் செய்து பார்த்தது. அவ்வளவு அழகாக அப்படத்தைப்பற்றி சிலாகிருத்திப்பார்.

இரண்டு இளைஞர்கள் வேலைக்காகவேண்டி சட்டரீதியாக ஜேர்மன் செல்ல முயற்சிப்பதும். அது முடியாமல் போகவே திருட்டுத்தனமாக, தில்லுமுல்லு பண்ணி வெளிநாடு செல்ல முயற்சிப்பதும். பின் அங்கு செல்வதுவே திரைப்படத்தின் பிரதான கதை. அவர்கள் செய்யும் தில்லுமுல்லுகளை சுவாரசியமாக நகைச்சுவையாக கொண்டு சென்ற விதமும், படத்தின் ஆரம்பத்தில் கொழும்பு சேரிவாழ் மக்களின் வாழ்க்கையின் யதார்த்தங்களை,சோகங்களை, மகிழ்ச்சிகளை  போகிறபோக்கில் காட்டிய விதமும் இப்படத்தின் சிறப்புகள்..

கொழும்பில் வேலை செய்த காலப்பகுதியில் அந்த சேரிப்புறங்களை கடந்து செல்ல வேண்டியேற்பட்டால்.. அதை வியந்து பார்ப்பேன், அவர்களின் வாழ்க்கை முறை. சிறிய வீடுகளுக்குள் அப்பா,அம்மா,மகள்,மகன் மற்றும் ஏனைய உறவுகள் எப்படி காலத்தை கழிக்கிறார்கள்.. இது எப்படி சாத்தியமாகும் என நண்பர்களுடன் விவாதிப்பேன். இப்படத்திலும் ஒரு சேரிப்பகுதி காட்டப்படுகிறது அது கொழும்பின் மோதர மட்டக்குளி பகுதியாகும் அதாவது கொழும்பு 15

இப்படத்தைப்பற்றி எழுத்தாளா எஸ். ராமகிருஷ்ணன். இவ்வாறு சொல்கிறார். நேரமிருந்தால் படித்துப்பாருங்கள்...

மச்சான் திரைப்படத்தின் தயாரிப்பாளர் Death on a full Moon Day போன்ற சிறந்த சிங்களப் படங்களை இயக்கிய பிரசன்ன விதநாயகே, படத்தின் இயக்குனர் இத்தாலியை சேர்ந்த உபர்ட்டோ பசோலினி, படத்தயாரிப்பில் ஜெர்மன் மற்றும் பிரெஞ்சு சேனல்கள் பங்குபெற்றுள்ளன, பன்னாட்டு கூட்டுத்தயாரிப்பில் வெளியான இப்படம் வெனிஸ் திரைப்படவிழா உள்ளிட்ட 11 உலகதிரைப்பட விழாக்களில் கலந்து கொண்டு முக்கியப் பரிசுகளை வென்றிருக்கிறது,

லகான் படம் எப்படி இந்திய சினிமாவில் புதிய அடையாளத்தை உருவாக்கியதோ அதற்கு நிகரான ஒரு முயற்சியாகவே இத்திரைப்படத்தை நினைக்கிறேன், கூடுதலாக லகானை விடவும் இது கேலியும் கிண்டலும் நிறைந்த விளையாட்டைப் பிரதான கதைக்களமாக கொண்ட படம், நீண்ட நாட்களுக்குப் பிறகு அசலான நகைச்சுவை காட்சிகளுடன் வாய்விட்டு சிரித்து மகிழக்கூடிய படம், மனம்விட்டு சிரிக்கும் அதே நேரம் பிழைப்பிற்காக தேசம்விட்டு தேசம் ஒடுதல் எவ்வளவு துயரமானது என்பதையும் உணர்ச்சிபூர்வமாகச் சொல்லியிருக்கிறது இப்படம்

ஒரு உண்மை சம்பவத்தை மையமாக்க் கொண்டு படம் உருவாக்கபட்டிருக்கிறது, படத்தின் துவக்க காட்சியிலே படம் எப்படிபட்டது என்று புரிந்துவிடுகிறது, நடுஇரவில் இரண்டு பேர் போஸ்டர் ஒட்டப் போகிறார்கள், அதில் ஒருவன் காலில் நாய் மூத்திரம் பெய்துவிடுகிறது, உடனே மற்றவன் மச்சான், நாய் உன்மேல் மூத்திரம் பெய்தால் நல்ல சகுனம் , நீ கட்டாயம் வெளிநாடு போய்விடுவாய், அதனால் நாய் மூத்திரத்தை சுத்தபடுத்திவிடாதே என்று சொல்கிறான், அது நிஜமாக இருக்குமோ என்று மற்றவன் ஒரு நிமிசம் யோசித்து மூத்திரத்தை சுத்தபடுத்தவா வேண்டாமா என்று தயங்கி யோசிக்கிறான்,

வெளிநாட்டிற்குப் போய்விட வேண்டும், அதற்கு காலில் நாய்மூத்திரம் பெய்தால் கூட பரவாயில்லை என்று நினைக்கும் மனநிலையே படத்தின் ஆதார தொனி,

மனோஜ் . ஸ்டான்லி என்ற இரண்டு இளைஞர் இலங்கையில் இருந்து எப்படியாவது ஜெர்மன் போய் சம்பாதித்துவிட வேண்டும் என்று முயற்சிக்கிறார்கள், இருவருமே அடித்தட்டைச் சேர்ந்தவர், ஒருவன் மதுபரிசாரகனாகவும் மற்றவன் பழம்விற்பனை செய்பவனுமாக இருக்கிறான், அவர்களுக்கு முறையான எந்த தகுதியும் இல்லை என்று ஜெர்மன் விசா நிராகரிக்கபடுகிறது,

விசா வாங்குவதற்காக வீட்டில் இருந்து அவர்கள் தயாராகி ஜெர்மன் தூதகரம் செல்லும் காட்சியில் அவனது நடை மற்றும் ஜெர்மன் சொற்களை பயன்படுத்தும் விதம், குடும்பமே அவன் ஜெர்மனிக்கு செல்வதைப் பற்றி கனவு காண்பது யாவும் மிகுந்த வேடிக்கையாக இருக்கிறது,

விசா மறுக்கபட்ட மனோஜ் எப்படி ஜெர்மன் போவது என்று நண்பர்களுடன் குடித்தபடியே கவலைப்படுகிறான், பலவிதமாக முயற்சிசெய்து பார்க்கிறான், இதற்கிடையில் கடன்நெருக்கடி அவர்களைத் துரத்துகிறது, ஒருநாள் ஜெர்மனியில் உலக அளவிலான ஹேண்ட் பால் போட்டி ஒன்று நடக்க இருக்கிறது என்ற செய்தியை அவர்கள் அறிகிறார்கள், இதைப் பயன்படுத்தி தாங்களாகவே ஒரு கைப்பந்துக் குழுவை உருவாக்கி அதன் பெயரில் ஜெர்மனிக்குள் தப்பியோடிப் போய்விட்டால் என்னவென்று திட்டமிடுகிறார்கள்,

அது நல்ல யோசனையாகத் தெரிகிறது, ஆனால் கைப்பந்து என்றால் என்னவென்றே அவர்களுக்குத் தெரியாது, முதலில் அதைப்பற்றி தெரிந்து கொள்ள முயற்சிக்கிறார்கள், போட்டி விதிகள் மற்றும் விளையாடும் முறைகளை அறிந்து விளையாடிப் பார்க்கிறார்கள், அது எளிதாக கற்றுக் கொண்டு விளையாடும் ஒன்றில்லை என்று நன்றாகவே தெரிகிறது, ஆனாலும் கைப்பந்துக் குழுவை உருவாக்கினால் மட்டுமே ஜெர்மனிக்கு ஒடிப் போக முடியும் என்பதால் அவர்கள் ஒரு குழுவை உருவாக்குகிறார்கள்

அதுதான் படத்தின் நகைச்சுவை சூடுபிடிக்கும் இடம், விளையாட்டு என்றால் என்னவென்றே தெரியாத ஆட்களைப் பிடித்து, வண்ண உடைகளை மாட்டி கைப்பந்து விளையாட்டின் பெயரில் எப்படி ஜெர்மனி போகப்போகிறோம் என்ற நாடகத்தை உருவாக்குகிறார்கள், இதில் ஒரு போலீஸ்காரன் உள்ளிட்ட பலர் கலந்து கொள்கிறார்கள்,

இலங்கை தேசியக் கைப்பந்து குழு என்று அவர்களாக தங்கள் குழுவிற்கு பெயர் சூட்டிக் கொண்டு குரூப் போட்டோ எடுத்து அனுப்புகிறார்கள், அந்தக் குழு ஜெர்மனியில் நடைபெற உள்ள விளையாட்டுப் போட்டிக்கு தேர்வாகிறது, இப்போது அடுத்த சோதனை துவங்குகிறது

கைப்பந்து குழுவை அங்கீகரித்து இலங்கையின் ஒலிம்பிக் கமிட்டி கடிதம் தர வேண்டும், மத்திய விளையாட்டு அமைச்சகம் முறையான அனுமதி கடிதம் தர வேண்டும் என்ற புதிய சிக்கல்கள் உருவாகின்றன, இதைத் தீர்த்து வைக்க போலியான முத்திரைகளை உருவாக்கி தாங்களே ஒலிம்பிக் கமிட்டி கடிதம் போல ஒன்றை உருவாக்கிக் கொள்கிறார்கள், இந்த கடிதமும் ஜெர்மனிய அரசால் ஏற்றுக் கொள்ளப்பட்டு அவர்களுக்கு விசா கிடைக்கிறது

பயண ஏற்பாடுகள் தீவிரமாக நடக்கின்றன, எப்போது மாட்டிக் கொள்வோம் என்று தெரியாமல் தடுமாறுகிறார்கள், இந்தக் குழப்பம் விமானம் ஏறும்வரை நீடிக்கிறது, முடிவில் ஜெர்மனி போய் இறங்குகிறார்கள், அங்கே அவர்களை வரவேற்க ஆட்கள் தயராக இருக்கிறார்கள், ஜெர்மனிய விமான நிலையத்தில் இருந்தே ஒரு குழு தப்பியோட முயற்சிக்கிறது, ஆனால் அது தடுக்கபடுகிறது

அவர்கள் விளையாட்டுப் போட்டி நடக்கும் இடத்தருகே தங்கவைக்கபடுகிறார்கள், போட்டி துவங்குகிறது, கைபந்து போட்டியின் அரிச்சுவடி கூட அறியாத இலங்கை அணியும் ஜெர்மனிய அணியும் களமிறங்குகின்றன, அந்தப் போட்டி தான் உச்சபட்ச நகைச்சுவை, இலங்கை கைப்பந்து குழுவினர்கள் படும் அவஸ்தைகள் நம்மை சிரிப்பில் உருள வைக்கின்றன,

போட்டியை காணும் பார்வையாளர்கள் கேலி செய்து சிரிக்கிறார்கள், மூன்று நான்கு போட்டி விளையாடி முடிவில் ஒரேயொரு கோல் போடுகிறார்கள், இந்த ஒரு கோலிற்காக அவர்கள் ஆடும் கொண்டாட்டமிருக்கிறதே, போதும் போதுமென இருக்கிறது, முடிவாக கைப்பந்து போட்டியில் தோற்றுப்போய் ஆட்டத்தில் இருந்து வெளியேற்றபடுகிறார்கள்.

அப்போது தான் இது ஒரு திருட்டுதனம் என்பதைப் போலீஸ் கண்டுபிடிக்கிறது, அவர்கள் தங்கியிருந்த அறைகளுக்கு வந்து தேடுவதற்குள் ஆளுக்கு ஒரு பக்கம் தப்பியோடுகிறார்கள், ஜெர்மனியில் இருந்து அவரவர்களுக்கு விருப்பமான ஊர்களுக்கு தப்பியோடி உலகின் கண்களில் இருந்து காணாமல் போய்விடுகிறார்கள், போலீஸ் மற்றும் நீதிமன்ற உத்தரவு எதுவும் அவர்களை ஒன்றும் செய்யமுடியவில்லை, கடைசிகாட்சியில் ஜெர்மனியில் இருந்து நான்கு பேர் லண்டன் போவது என்று முடிவு செய்து புறவழி நெடுஞ்சாலை ஒன்றில் காத்துக்கிடக்கிறார்கள், அவர்களது கனவுப்பயணம் துவங்குகிறது, போலீஸ் பல ஆண்டுகாலமாக அவர்களை தேடிக் கொண்டேயிருக்கிறது, கண்டுபிடிக்க முடியவேயில்லை என்ற செய்தியோடு படம் நிறைவுறுகிறது

இது போன்ற உண்மை சம்பவம் ஒன்று 2004 இலங்கையில் நிஜமாக நடைபெற்றிருக்கிறது, அதைப் பற்றிய பத்திரிக்கை செய்தியை வாசித்த பசோலினி அதைப்படமாக்க முயன்றிருக்கிறார், அதன் விளைவே இந்த திரைப்படம்

இப்படம் இரண்டு முக்கிய விஷயங்களை முதன்மைபடுத்துகிறது, ஒன்று நாடுவிட்டு நாடு போய் சம்பாதிக்க நினைப்பவர்கள் படும்பாடுகளையும் அதற்காக அவர்கள் மேற்கொள்ளும் அத்தனை குறுக்குவழிகளையும் பற்றி பேசுகிறது, இது இலங்கைக்கு மட்டுமேயான சூழல் இல்லை, தமிழ்நாட்டில் இப்படி எவ்வளவோ பேர் முறையற்ற அனுமதி பெற்று வெளிநாடுகளில் வேலைக்கு போய் மாட்டிக் கொண்டு சிறைவாசம் புரிவது நடந்து கொண்டேயிருக்கிறது

இன்னொன்று விளையாட்டு வணிகமயமாகிப்போன சூழலைப் பற்றியது, விளையாட்டு இன்று முக்கியமான வணிகப்பொருள்களில் ஒன்று, அதனால் அறிமுகமேயில்லாத விளையாட்டுகள் திடீரென பிரபலம் ஆவதும் அதற்கான புதிய குழுக்கள் உருவாகி அது ஒரு நிறுவனம் போலாகிவிடுவதையும் படம் கேலி செய்கிறது

மச்சானின் எடிட்டிங் மற்றும் ஒளிப்பதிவு மற்றும் காட்சிகளில் வெளிப்படும் யதார்த்தமான நகைச்சுவை அதற்கு மிகுந்த சிறப்பு சேர்கின்றன, ஈரானிய திரைப்படங்களில் காணப்படுவது போன்ற யதார்த்தம்மும் கவித்துவமும் இணைந்த உருவாக்கம் இப்படத்திலும் காணப்படுகிறது, நடிகர்கள் அத்தனை பேரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள், லகான் பெரும்பொருட்செலவில் உருவாக்கபட்டது, இந்த படம் அப்படியான ஒன்றில்லை, மிக குறைவான பட்ஜெட்டில் இலங்கை மற்றும் ஜெர்மனியில் படமாக்கபட்டிருக்கிறது

கைபந்துக் குழுவை உருவாக்க மனோஜ் மற்றும் ஸ்டான்லி மேற்கொள்ளும் எத்தனங்கள், அதில் சேர்ந்து கொள்ளும் ஆட்களின் இயல்பு , இந்த பிரச்சனைகளுக்கு நடுவில் உள்ள வீட்டுப்பிரச்சனைகள், பொருளாதார சிக்கல்கள், ஏமாற்றங்கள், யுத்தநெருக்கடியான புறச்சூழல் யாவும் படத்தின் ஊடாக அழகாக விவரிக்கபடுகின்றன,

துல்லியமாக ஒரு டாகுமெண்டரி படம் போல கைப்பந்து குழுவின் உருவாக்கம் படமாக்கபட்டிருக்கிறது,

வாழ்க்கை நெருக்கடி மனிதர்களை எல்லா ஏமாற்றுதனத்திற்கும் துணிச்சலுக்கும் கொண்டு போய்விடுகிறது என்பதற்குச் சாட்சியே இப்படம், விளையாட்டைக் களமாக கொண்டு இப்படியும் ஒரு படத்தை உருவாக்க முடியும் என்பதே இதன் தனிச்சிறப்பு

டிஸ்கி:-சிங்கள மொழி தெரியாதவர்கள் இப்படத்தினை ஆங்கில சப் டைட்டிலுடன் பார்க்க நேர்ந்தால், சிங்களத்தில் சாதாரானமாக திட்டும், இளைஞர்களுக்குள் பேசும் வசனங்களுக்கு மொழி பெயர்ப்பாக ஆங்கிலத்தில் F..K என்ற கெட்ட வார்த்தையை சேர்த்திருப்பது தேவையற்றது,, இது மொழி மீதும் அப்படத்தின் மீதும் புரிந்துணர்வின்மையை ஏற்படுத்தலாம்.. இதை தவிர்த்திருக்கலாம்,

தேடலே வாழ்க்கையாக..!


கொஞ்சம் பசி
கொஞ்சம் ருசி
உணவைத்தேட...
கொஞ்சம் ஆசை
கொஞ்சம் கனவு
உழைப்பைத்தேட...
கொஞ்சம் வலி
கொஞ்சம் சோர்வு
ஓய்வைத்தேட...
கொஞ்சம் காதல்
கொஞ்சம் காமம்
துனையைத்தேட...
கொஞ்சம் கண்ணீர்
கொஞ்சம் கவலை
நிம்மதி தேட...
கொஞ்சம் முதுமை
கொஞ்சம் இயலாமை
மரணம் தேட...
தேடலில் தொடங்கி
தேடலிலே
முடிகிறது வாழ்க்கை..!

பயணங்கள் முடிவதில்லை, பாதைகள் முடிந்தாலும்!

                                   பயணங்கள் முடிவதில்லை, பாதைகள் முடிந்தாலும்..

 எடக்கு மடக்கா கேள்வி எல்லாம் கேட்கப்படாது ஒவ்வொருத்தரா அமைதியா கேட்கனும்..

 திருட்டுப்பயலுகள் அதிகமாயிட்டாங்க அதுதான் அலார்ட்டாயிட்டமில்ல..

 நீங்க எங்க போனாலும் அங்கெல்லாம் நான் வியாபாரம் பன்னுவேன்..

என்ன கொடும சரவணா..

                                               வறுமை கொடுமை கொடுமையே

அப்பாடா ரொம்ப நாளாயிற்று ஐஸ் ருசி பார்த்து

இலவசமா,, ஒரு குளியல்.

                                                நாங்களும் குடிப்போமில்ல..

நனையும் மனசு..!மழை வரும்
பொழுதுகளிலெல்லாம்
மனசும்
சேர்ந்தே நனைகிறது..

பூமியைத்தொடும் வரைக்கும்தான்
மழைத்துளிகள்
பூமியை தொட்டுவிட்டால்
நீர்த்துளிகள்..

பூமிக்காதலியை முத்தமிடும்
பூரிப்போடு
வானிலிருந்து விழுகிறான்
மழைக்காதலன்..

தாகம் தீர்த்து
மோகம் தீர்க்க வரும் காதலனுக்காய்
காத்திருக்கிறாள், வானம்
பார்த்தவளாய் பூமிக்காதலி..

உடல் நனையாமல்
குடைபிடித்துச்சென்றாலும்
மனசு மட்டும் நனைந்தே விடுகிறது
பரவசங்களால்..வாழ்தல் இனிது,சாதல் இனிது..!

வாழ்தல் இனிது, மனிதர்களும் இனிமையானவர்கள், உலகமும் இனிமையானது அதிலுள்ள ஜீவராசிகளும் இனியது, இயற்கையும் இனிது, இளமையும் இனிது.. முதுமையும் நல்லது இறுதியில் இறந்து போவதும் இனிதுதான். போராட்டம் நிறைந்த இந்த வாழ்க்கையை இவ்வாறு இனியதாகவே சிந்தித்தால் வாழ்ந்தால், வாழ்க்கை ஒன்றும் கசப்பானதாக தோன்றவில்லை. இவ்வாறு சொல்வது நானல்ல! இந்த முண்டாசு தாத்தா..


இவ்வுலகம் இனியது;
இதிலுள்ள வான் இனிமையுடைத்து;
காற்றும் இனிது;
தீ இனிது;
நீர் இனிது;
நிலம் இனிது;
ஞாயிறு நன்று;
திங்களும் நன்று;
வானத்துச் சுடர்களெல்லாம் மிக இனியன;
மழை இனிது;
மலை இனிது;
காடு இனிது;
ஆறுகள் இனியன;
உலோகமும், மரமும், செடியும், கொடியும்,
மலரும், காயும், கனியும் இனியன;
பறவைகள் இனியன;
ஊர்வனவும் நல்லன;
விலங்குகளெல்லாம் இனியவை;
நீர் வாழ்வனவும் நல்லன;
மனிதர் மிகவும் இனியர்;
ஆண் நன்று;
பெண் இனிது;
குழந்தை இன்பம்;
இளமை இனிது;
முதுமை நன்று;
உயிர் நன்று;
சாதல் இனிது.

இன்று இந்த தாத்தாவுக்கு பிறந்த நாளாம்...

நலம்தானா..? மீள் வருகை!

நலமாக இருக்கிறீர்களா..? நண்பர்களே! நீண்ட நாளைக்குப்பிறகு வலைப்பதிவு மூலமாக வருகிறேன். திடிரெண்டு ஒரு மாத விடுமுறையில் ஊருக்கு கிளம்பிவிட்டதால் இந்தப்பக்கம் வர முடியவில்லை. ஊரிலிருந்து வந்து ஒரு வாரம் ஆகின்ற போதிலும். இது வரை ஒரு பதிவு கூட போட முடியாமல் போனது கவலை.

எல்லாத்துக்கும் மனசு ஒழுங்காக இருக்க வேண்டும். என் மனசு இன்னும் பதிவெழுதவோ கவிதை எழுதவோ ஒருங்கினையவில்லை..  நண்பர்களின் அநேக பதிவுகளுக்கு வந்து படித்தாலும் பின்னூட்டங்கள் இட முடியவில்லை. மன்னிக்கனும்!

சீக்கிரம் பதிவெழுதுவேன் என்ற நம்பிக்கையில் இருக்கிறேன்.

அதுவரை சில ட்வீட்ஸ் உங்களுக்காக..

பகலில் தொலைந்த உறக்கத்தை தேட தொடங்கும் போதே இரவு முடிந்துவிடுகிறதே!


முன்பெல்லாம் எனக்கொரு மூடநம்பிக்கை. நான் அழகாக இல்லையாம் புகைப்படங்களில்!


இனி யாருக்கும் கடன் கொடுக்க கூடாது! பல முறை என்னை தோற்கடித்த வசனம்.


ஆதி வாசிகளாவே வாழ்ந்திருந்தால்! ஆசைகளினதும் பணத்தினதும் அவஸ்தைகள் இருந்திருக்காது.


மனிதர்களுக்கும் சிறகுகள் கிடைத்திருந்தால்.. பறவைகளின் நிம்மதி தொலைந்திருக்கும்.
 இது எனது நானாவின் (அண்ணா) மகள் பாலர் பாடசாலை வினோத உடை போட்டியில் வக்கீலாக..
 ஒரு பாடலுக்கு நடனமாட வேளான்னை வயலில் வேலை செய்யும் பெண்ணாக

 வீட்டு முற்றத்து மாமரம் காய்த்து தொங்குகிறது.Song lyrics

Tamil,Sinhala,Hindi Song Lyrics