BARAN - உணர்வுகளை வருடிய ஓர் ஈரான் சினிமா..!!

சோவியத் ரஷ்யாவுக்கும் ஆப்கானிஸ்தானுக்குமிடையில் 1970-80 காலப்பகுதியில் இடம்பெற்ற யுத்தத்தில் 15 இலட்சம் மக்கள் ஆப்கானிலிருந்து ஈரானுக்குள் அகதிகளாக இடம்பெயர்ந்ததாக ஓர் அறிவிப்போடு தொடங்குகிறது படம்..

பல மாடிக்கட்டடம் கட்டும் வேலைத்தளம் அது.. அங்கே மேர்மர் என்பவர் வேலையாட்களை நிர்வகிப்பவர்(Supervisor), லத்தீப் என்ற இழைஞன் இவனின் வேலை வேலையாட்களுக்கு தேநீர் தயாரிப்பது, கடைக்குப்போய் உணவுப்பொருட்கள் ரொட்டி என்பன வாங்கி வருவது போன்றன.. இவர்கள் ஈரான் நாட்டுக்காரர்கள்.. அங்கே ஆப்கான் அகதிகளும் வேலைக்கமர்த்தப்பட்டிருக்கிறார்கள். ஆனால், அது சட்டவிரோதம்! அரசாங்க அனுமதியில்லாமல் எந்த ஆப்கான் அகதிகளையும் வேலைக்கு வைத்துக்கொள்ளக்கூடாது என்பது சட்டம்..

ஆனால் ஆப்கான் அகதிகளை குறைந்த ஊதியத்தில் வேலைக்கமர்த்தி அதிக வேலையை பெற முடியும் என்ற நோக்கில் மேர்மர் அவர்களை வேலைக்கமர்த்தியிருக்கிறான்..(இப்போது மத்திய கிழக்கு நாடுகளில் நடப்பதும் இதுவேதான்).. ஒருநாள் வேலை செய்துகொண்டிருக்கும் போது நஜாப்பின் காலில் பயங்கரமாக அடிபட்டு காயத்துக்கு உள்ளாகிறார்.. பிறகு வைத்தியசாலையில் சேர்க்கப்படுகிறார்.. நஜாப், ஆப்கான் நாட்டுக்காரர்..

மறுநாள் நஜாப்புடன் வேலை செய்த சுல்தான் என்பவர் மேர்மரிடம் வந்து. நஜாபின் காலில் பயங்கரமாக அடிபட்டதினால் கால் முறிந்துவிட்டதாகவும் இனிமேல் அவரால் எழுந்து நடக்கமுடியாதென்றும் கூறி.. பின், அதனால் அவரின் மகனை அழைத்து வந்திருப்பதாகவும் நஜாப்பின் வேலையை அந்தப்பையனுக்கு கொடுக்கும்படியும் கேட்கிறார்.. அந்தப்பையனுக்கு ஒரு 14-16 வயதுக்குள் இருக்கலாம்.. முகத்தை திறந்து தலையை முழுவதும் மறைத்தபடி ஆடை அணிந்திருக்கிறான். மேர்மர் அந்தப்பையனை பார்த்து இதற்கு முன் எங்காவது வேலை செய்திருக்கிறாயா எனக்கேட்கிறார்.. அந்தப்பையன் எதுவும் பேசவில்லை கேட்கும் கேள்விக்கெல்லாம் சுல்தாந்தான் பதில் சொல்கிறார் பெயர் ரஹ்மத் என்கிறார்.. எங்கும் வேலை செய்யவில்லை வீட்டில் தம்பி தங்கைகளை பார்த்துக்கொண்டிருந்தார் என்கிறார்..

மேர்மர் இந்த வேலையெல்லாம் இந்தப்பையனால் செய்ய முடியாது என வேலை கொடுக்க மறுக்கிறார். நஜாப்புக்கு ஐந்து குழந்தைகள் இருக்கு அவரின் உழைப்பை நம்பித்தான் அந்த குடும்பமேயிருக்கு.. இப்போது அவரால் வேலைசெய்ய முடியாதநிலையில் இந்தப்பையனுக்கு வேலை கொடுக்குமாறும் சில நாட்களில் வேலைகளை பழகிக்கொள்வான் என்பதாகவும் வேண்டிக்கொள்கிறார் சுல்தான்.. மேர்மர், எவ்வளவுதான் கத்தினாலும் மனிதாபிமானமுள்ள நல்லவர். அந்தப்பையனை வேலைக்கு சேர்த்துக்கொள்கிறார்..

ரஹ்மத்துக்கு சீமேந்து மூட்டைகளை தூக்கும் வேலை கொடுக்கப்படுகிறது.. மிகவும் கஷ்டப்பட்டே அந்த வேலைகளை செய்கிறான்.. ஒருநாள் சீமேந்து மூட்டைகளை தூக்கிக்கொண்டு மாடிக்குச்செல்லும்போது சுமக்க முடியாமல் மூட்டையை அப்பிடியே மாடிப்படியில்கீழே விட்டுவிடுகிறான்.. அது கீழேயிருந்த ஒருவனின் மேல் விழுந்து அவன் உடம்பு முழுதும் சீமேந்து.. இதன்பின் மேர்மர் ஒரு முடிவுக்கு வருகிறார் ரஹ்மத்தினால் இந்த வேலைகளை செய்ய முடியாதென்றும்.. லத்திபீன் தேநீர் தயாரிக்கும் கடைக்குப்போகும் வேலைகளை ரஹ்மத்துக்கு சொல்லிக்கொடுக்கும்படியும் ரஹ்மத்தின் வேலையை லத்தீபை பார்க்கும்படியும் கூறுகிறார்..

இதனால் லத்தீப் ஆத்திரமடைகிறான்.. ரஹ்மத்தின் மீது கோபம் கொள்கிறான், எங்கிருந்தோ வந்த ஆப்கான் அகதிப்பையன் தன் வேலைக்கு ஆப்பு வைத்துவிட்டதாக எண்ணி அவனுடன் சண்டைபோடுகிறான்.. ஒருமுறை கண்ணத்தில் அறைந்தும் விடுகிறான்.. ரஹ்மத்தின் தேநீரையும் புறக்கனிக்கிறான்.. அடுக்களைக்குச்சென்று பொருட்கள் எல்லாம் தூக்கி எறிகிறான் உடைக்கிறான்..

ரஹ்மத் தான் பொறுப்பெடுத்த புதிய வேலையை மிக விருப்பமாக செய்கிறான்.. அலங்கோலமாக இருந்த சமயறையை மிக அழகாக நேர்த்தியாக வைக்கிறான்.. கதவுக்கு திரைச்சீலையிடுகிறான்.. சமயலையில் பூச்செடிகூட வைக்கிறான்.. கண்டமேனிக்கு சாப்பிட்டவர்களை தரைக்கு விரிப்பு விரித்து ஓரே நேருக்கு உட்கார வைத்து சாப்பாடு பரிமாறுகிறான்.. இதைப்பார்த்துக்கொண்டிருந்த லத்திபூக்கு அதிர்ச்சி..ரஹ்மத்தை அவதானிக்க தொடங்குகிறான்.. ஒரு நாள் ஓர் பெரும் அதிர்ச்சி அவனுக்கு.. இங்கே ஒரு ட்விஸ்டு... அதை கடைசியில் சொல்கிறேன்...

ரஹ்மத்தின் மீது அனுதாபம் பிறக்கிறது லத்தீபுக்கு.. ரஹ்மத் ஓரு நாள் கடைக்கு ப்போய் வரும்போது வேலைத்தளங்களை சோதனையிடும் ஆபிசர்களிடம் மாற்றிக்கொள்கிறான்.. நில்லு, இங்க என்ன பண்றாய் என்று கேட்கும்போதே பையை போட்டுவிட்டு ஓடத்தொடங்குகிறான்..ஆபிசர்களும் அவனை விரட்டிச்செல்கிறார்கள்.. இதை தூரத்திலிருந்து பார்த்துக்கொண்டிருந்த லத்திபூம் அவர்களின் பின்னால் ஓடுகிறான். ரஹ்மத் அவர்களிடம் மாட்டிக்கொண்டதும் பின்னால் சென்ற லத்தீப் ஆபிசர்களை பிடித்துக்கொண்டு ரஹ்மத்தை தப்ப வைக்கிறான்.. அவன் மாட்டிக்கொள்கிறான்..பின் மேர்மரின் உதவியால் தண்டப்பணம் கட்டி போலிசிலிருந்து வருகிறான்..

இச்சம்பவத்தால் சுல்தான் மற்றும் ரஹ்மத் அந்த இடத்திற்கு வேலைக்கு வருவதில்லை.. ரஹ்மத்தை கானாமல் லத்தீப் மனம் வருந்துகிறான்.. அவனுக்கு அங்கு வேலை செய்யவும் பிடிக்கவில்லை. இப்படியிருக்கும்போது சுலதான் மூலமாக ரஹ்மத் எங்கே வேலை செய்கிறான் என்பதை அறிகிறான்.. அங்கே போய் பார்க்கிறான்.. ஒரு ஆற்றில் கற்கள் தூக்கும் வேலையில் ஈடுபட்டிருந்தான்.. அங்கேயும் அவனால் முடியாத வேலையை மிகவும் கஷ்டப்பட்டே செய்கிறான்.. அதை தூரத்திலிருந்து அவதானித்த லத்தீப் மனம் வருந்துகிறான் கண்ணீர் வடிக்கிறான்.

லத்தீப் மேர்மரிடம் ஒரு வருடம் வேலை செய்திருக்கிறான்.. அதற்கான கூலியை உடனுக்குடன் கொடுத்தால் லத்தீப் செலவழித்து விடுவான் என்பதற்காக ஊருக்கு போகும் போது தருகிறேன் என சொல்லிவைத்திருந்தார் மேர்மர்.. லத்தீப் தான் ஊருக்குப்போக போவதாகவும் தங்கைக்கு சுகமில்லை என்பதாகவும் சொல்லி பணத்தை கேட்கிறான்.. அப்படியே மேர்மரிடம் வாங்கிய ஒரு வருட உழைப்புக்கான கூலியை சுல்தான் மூலமாக நஜாப்/ரஹ்மத் குடும்பத்துக்கு கொடுக்கும்படி கொடுக்கிறான்...லத்தீப் ஏன் இவ்வாறு செய்கிறான்.. எதனால் இந்த அனுதாபம்,பாசம்,வருத்தம்,கண்ணீர்... படத்தை பார்க்கவிரும்புவர்கள் இத்துடன் நிறுத்திக்கொள்ளலாம்.. அடுத்த பந்தியில் ட்விஸ்ட் உட்பட முழு கதையையும் சொல்லிவிடுகிறேன்..

லத்தீபின் அனுதாபத்துக்கான காரணம் ரஹ்மத் ஒரு பையனே அல்ல அது ஒரு சின்னப்பொண்ணு.. ஆமாம் அவள் பெயர் பரன்(படத்தின் பெயர்) லத்தீபின் மனமாற்றத்துக்கு இதுதான் காரணம்.. ஒரு முறை சமயறைக்குள் தற்செயலாக நுழைந்தவன் அவள் பெண் என்பதை அறிந்துகொள்கிறான்.. ஆனால் பரனுக்கோ இவனுக்கு தெரியும் என்ற விட்யம் தெரியாது.. தன் குடும்பத்துக்காகவேண்டி ஆணாக வேஷமிட்டு வேலைக்கு வந்தவள்.. லத்தீப் பரன் மீது வைத்திருந்தது காதலா,அன்பா,ஈர்ப்பா,அனுதாபமா என்றெல்லாம் தெரியாது.. இப்படத்தில் அதை எப்படி சித்தரிக்கிறார்கள் என்பதும் புரியவில்லை அதை பார்வையாளர்களின் தெரிவாகவே எடுத்துக்கொள்ளலாம்..

ஆனால் அது பெண் என அறிந்ததிலிருந்து லத்திபின் மனதில் ஏற்பட்ட மெல்லிய உணர்வுகள்தான் அந்த ஈர்ப்புக்கான காரணங்கள்.. அந்த உணர்வுகளை காட்சிபடுத்திய விதத்திலேயே இயக்குனர் வெற்றி பெறுகிறார்.. ரசிகர்கள் மனங்களிலும் இடம்பிடிக்கிறார்.. இவ்வாறு உணர்வுகளை தொடும் சினிமாவின் இயக்குனர் மஜித் மிஜிதியாகத்தான் இருக்க வேண்டும் என நினைத்து கடைசி டைட்டிலைப்பார்த்தால் இயக்குனர்.. மஜித் மஜிதியேதான்.

கடைசியில் நஜாப் மேர்மரிடம் ஒரு தொகை பணம் கடன் கேட்கிறான்.. திருப்பி தருவதாக.. ஆனால் மேர்மரிடம் கொடுப்பதற்கு இல்லை.. நஜாப் கோவித்துக்கொண்டு திரும்புகிறான்.. இதைப்பார்த்துக்கொண்டிருந்த லத்தீப் கொஞ்சம் பணத்தை தேடிக்கொண்டு நஜாப்பின் வீட்டுக்குச்செல்கிறான்.. கதவை தட்டியதும் உள்ளிருந்து பரன் கதவை திறக்கிறாள்.. இப்போதுதான் அவளை லத்தீப் ஒரு பெண்ணாய் பார்க்கிறான்.. முன்பு பார்த்ததைவிட இப்போதுதான் ஒரு பெண்ணுக்குரிய அழகுடன் அழகாய் இருக்கிறாள்.. லத்திபை பார்த்ததும் உள்ளே ஓடி மறைந்து கொண்டு நஜாப்பை அனுப்பி வைக்கிறாள்..

தான் கொண்டுவந்த பணத்தை மேர்மர் கொடுத்ததாக கொடுக்கிறான்.. பணத்தை வாங்கிக்கொண்டு தாங்கள் ஆப்கான் போகப்போவதாகவும் திரும்பிவந்து தருவதாகவும் சொல்கிறான் நஜாப்.. இதைக்கேட்டதும் லத்தீப் அதிர்ச்சியாகிறான்.. எப்போது எனக்கேட்கிறான்.. இன்றிரவே புறப்படப்போகிறோம் என்கிறான்..அவர்கள் செல்ல்த்தயாராகும் போது லத்திபூம் அந்த இடத்துக்கு வந்துவிடுகிறான்.. இப்போதுதான் லத்தீபை பரன் நிமிர்ந்து பார்க்கிறாள்.. ஒரு புன்னகையோடு வண்டியில் ஏறி உட்கார்ந்து கொள்கிறாள்.. இறுதிவரை ஒரு வார்த்தைகூட அவள் பேசவில்லை.. வண்டி புறப்படுகிறது.. மழையினால் புதைந்த அவள் காலடி சுவட்டை பார்த்து கொண்டிருக்கிறான் லத்தீப்..மழை பொழிகிறது படம் முடிவடைகிறது... பாரசீக மொழியில் "பரன்" என்றால் மழை என்றும் அர்த்தமாம்...

ஆஹா ஓஹோ என்று சொல்வதற்கு இந்தப்படத்தில் ஒன்றுமில்லைதான்.. ஆனாலும் படம் பார்த்து முடிந்ததும் மனதில் ஓர் இனம்புரியாத உணர்வு வந்து தாக்கிச்செல்கிறது..

யுத்தம் கொடுமையானது அகதிவாழ்க்கை அதைவிட கொடுமையானது!!!

ஆங்கில சப் டைட்டில்களுடன் யூடியுப்பிலும் இப்படத்தை கானலாம்!!!

உலகிலே அழகி நீதான்...


உலகம்
அழகிகளால்
அலங்கரித்துக்கொள்கிறது
அனுதினமும்...
அவர்களில்லாத
உலகம்
அவஸ்தைகளால்
ஆழப்பட்டிருக்கும்..
செயற்கையாக
செய்யப்படுபவர்களல்ல
அழகிகள்
இயற்கையாக
பிறப்பவர்களே
அழகிகள்...
வருடத்துக்கொரு அழகியென
வரையறுத்துக்கொள்ள
நான் கஞ்சனல்ல
நான் ரசிகன்
ஒவ்வொருவரும் அழகிகள்
ஒவ்வொருவருக்கும்
ஒவ்வொன்றழகு...
அழகிகள்
ஆங்கிலேய தேசத்திலோ
அன்னிய தேசத்திலோ
சினிமா தேசத்திலோ
மட்டுமல்ல!
உங்கள் தேசத்திலும்
இருக்கிறார்கள்
அழகிகள் பலர்...
உங்களை நேசிப்பவர்கள்
உங்களுக்கும்
என்னை நேசிப்பவர்கள்
எனக்கும்
என்றும் அழகிதான்..

தேவதை நிலவு..


உங்கள் தேசத்தில்
எப்படியோ தெரியவில்லை
எங்கள் தேசத்தில்
பகலிலும் நிலவு வரும்
ஜன்னலோரங்களில்
எட்டிப்பார்த்தவாறே...
வெட்கங்கள்
உடுத்திக்கொண்டவாறே
அவ்வப்போது
வந்து மறையும் நிலவது..
பட்டப்பகலில்
பலர் முன்னிலையில்
மனசு
கொள்ளையடிக்கும்
தேவதை நிலவு..
திருவிழா
முட்டாய்களுக்காய்
பெற்றோரை விட்டுச்சென்று
தொலைந்து போன
குழந்தை போல்
பார்வைகளில் விழுந்து
கண்களுக்குள்
தொலைந்து போனவர்களுமுண்டு..
எங்கள் வயல்கள்
மழையில்லாமல்
வறண்டு போனாலும்
எங்கள் மனசுகள்
பசுமையிழப்பதேயில்லை
அவ்வப்போது
பொழிந்து செல்லும்
புன்னகை மழைகளால்...


கண்களால் அல்லாத கனவுகளே நிஜக்கனவுகள்...

கனவுகள் கண்களின் மாயாஜால விளையாட்டு.. நிறைவேற்றத்துடிக்கும்,நிறைவேற்றமுடியாத மனதின் ஆசைகளின் வெளிப்பாடு.. சில கடந்தகால நிகழ்வுகளின்,உருவங்களின் மனதோடு எஞ்சியிருக்கும் சிறு குறிப்புகளின்,சில குறிப்புகள்! நிகழ்கால விருப்பங்களின்,எண்ணங்களின் சில உதாரணங்கள்... அதுதான் கனவுகளாக காட்சி தருகிறது.

கண்கள் கானும் கனவுகள் எனக்குப்பிடிப்பதேயில்லை.. என் சுதந்திரத்தின் மீது அத்துமீறத்துடிக்கும் உரிமை மீறல் அது.. கனவுகள் இல்லா உறக்கம் வேண்டும் என இறைவனிடம் வேண்டிக்கொள்கிறேன்! உறங்கச்செல்லும் வேளைகளில்.. என் இறைவன் கருனையாளன், தேவைகளை நிறைவேற்றுபவன், கேட்பவற்றை கொடுப்பவன்.. என் கோரிக்கையும் பரிசீலனைக்கு எடுக்கப்பட்டிருக்கலாம..உணர்கிறேன்! நான்.. அவ்வப்போது கனவுகள் வந்தாலும், வந்த தடயங்கள் இன்றி மறந்தே போய்விடுகிறது, விழித்தெழும்பும் போது.. எதைக்கண்டேன் என எனக்கே சொல்ல தெரியவில்லை..

முன்னொரு காலத்தில் தூங்காமல் கனவு கண்டவன் நான்.. அதனால் அவஸ்தைகள்தான் அதிகம். கனவுகள் பேராசையின் துன்பியலுக்கு அழைத்துச்செல்லும் பாதை.. இலட்சியம் வேறு,கனவு வேறு.. இலட்சியம் முயற்சியால் முடியும் என நம்புவது.. கனவு முயற்சிக்காமலே முடியும் என நம்புவது.. முயற்சித்தே தோற்றுப்போன பல செயல்கள் இருக்கும் போது, முயற்சிக்காமல் கனவின் பின் அலைவதை நான் விரும்பவில்லை.. முயற்சித்து தோற்றுப்போகிறவன் வீரன்,முயற்சிக்காமலே தோற்றுப்போகிறவன் கோழை.. கடந்த காலங்களில் பல தடவை கோழையாகவே தோற்றுப்போயிருக்கிறேன்.. இனியும் வீரனாகவே வாழவிரும்புகிறேன், தோற்றாலும் வீரனாகத்தோற்றுப்போகிறேன்.. அதில் எந்த அவமானமும் இல்லை.

"ஒரு கனவு கண்டால், அதை தினம் முயன்றால்.. ஒரு நாளில் நிஜமாகும்" இது பா.விஜயின் வரிகள். முயற்சித்தால் கனவுகளும் ஓர் நாள் நிஜமாகும் என்கிறார்.. ஆகலாம், அது கானும் கனவைப்பொருத்தது.. அது வரையறுக்கப்பட்டது. அது நம் முயற்சி எனற ஆழுமைக்கு முடியுமானதாக இருக்கவேண்டும். நம் சூழலுக்கும் சிந்தனைப்பரப்பிற்கும் உட்பட்டதாக இருக்கவேண்டும்.. எல்லா கனவுகளும் அந்த நிபந்தனைகளோடு வருவதில்லை. உலகசினிமா வாசனையெ அறியாதவனுக்கு, ஏஞ்சலினா ஜொலி கனவில் வரும் அபத்தங்களும் உண்டு.. நான் கூட செவ்வாய்க்கிரகம் போவதாய் கனவு கண்டேன், கண்ட கனவை நிஜமாக்க முயற்சித்தால் முடியுமா..? செவ்வாய்க்கிரகம் பற்றி படிக்கலாம்,தெரிந்துகொள்ளலாம்,ஆராயலாம் தப்பில்லை.. கனவை நிஜமாக்க முற்பட்டு செவ்வாய்க்கிரகம் போக தயாராவது அபத்தமில்லையா..?

சிலவேளை இலக்கியங்கள் கூட வெறும் கற்பனைக்கு மட்டுமே உகந்ததாக இருக்கிறது.. எழுவதற்கும் வாசிப்பதற்கும்தான் அதில் சுவாரஷ்யம் இருக்கும். நம் நடைமுறை வாழ்க்கைக்கும் அதற்கும் சம்பந்தமேயிருக்காது.. இன்றைய யதார்த்த உலகிற்கு யதார்த்தமான இலக்கியங்கள்தான் தேவை, அவை படித்தவர்களுக்கு மட்டுமல்லாது பாமரனுக்கும் புரியும் வகையில் இன்றைய நடைமுறை மொழி நடையோடு இருக்கவேண்டும்.. அதுவே ஒரு சமூகத்தை இலக்கியத்தின் பக்கம் நல்ல சிந்தனை, நல்ல ரசனையின் பக்கம் இழுத்துச்செல்லும்.. புரியாத பண்டையகால மொழியில் எழுதப்பட்ட இலக்கியங்கள் இலக்கியவாதிகளுக்கு மட்டுமே புரியக்கூடியது.. மற்றையவர்களுக்கு அது அந்நிய மொழியாகவே காட்சியளிக்கிறது.. அதனால் இந்த சமூகத்துக்கு எந்த பயனும் இல்லை.. சில பாடல்கள்,கவிதைகளும் இப்படித்தான்.

கனவில் தொடங்கி எங்கோ செல்கிறேன். மீண்டும் கனவுகளுக்குள் வருகிறேன்.. கனவைப்பற்றி பெரிய பெரிய ஆராய்ச்சியெல்லாம் நடத்தியிருக்கிறார்கள். நிறைய புத்தகங்கள் எல்லாம் எழுதியிருக்கிறார்கள்.. கனவுகள் என்பது அவ்வளவு முக்கியமானதா? எனக்கு அப்பிடி தோன்றவில்லை.. காலை முதல் இரவு வரை அயராது உழைக்கும் ஓர் கூலித்தொழிலாளிக்கு அடுத்தநாள் உழைப்பு, களைப்புக்கிடையில் கிடைக்கும் ஓர் ஓய்வு,இடைவேளையே இரவுத்தூக்கம்.. இந்த இடைவெளியில் இந்த கனவு கன்றாவியெல்லாம் எதற்கு..ஆழ்ந்த உறக்கத்தில் வந்து போகும் சில அழகிய கனவுகள் பற்றி ஆட்சேபனையில்லை.. ஆனால் நல்லது நடக்கப்போகுது கெட்டது நடக்கப்போகுது என்ற மூடநம்பிகையை உருவாக்கும் கனவுகள்தான் ஆபத்தானவை..

கனவுகள் கருப்பு வெள்ளையாகவே காட்சிதருவதாகவே சொல்கிறார்கள்... நான் கண்டவரைக்கும் எனக்கு ஞாபகமில்லை. தெரிந்தவர்கள் சொல்லுங்கள் இது உண்மையா? இன்றைய கலர்புல் தொழிநுட்பயுகத்தில் கருப்பு வெள்ளை திரைப்படங்களை கூட கான பொறுமையில்லாத நம் நவீன இளைஞ்சர்களை கனவு கானுங்கள் என்று ஐயா அப்துல் கலாம் சொன்னது! அவர்களின் கண்களாலா? அல்லது எண்ணத்திலாலா? கண்களால் காணும் அசாத்தியமான கனவுகளை விடுத்து எண்ணத்தினால் கானும் சாத்தியமான கணவுகளையே கான விரும்புகிறேன் நான்..

சிலருக்கு கனவில் தேவதைகள் எல்லாம் வருகிறார்களாம்! கனவு கருப்பு வெள்ளையாகத்தான வரும் என வைத்துக்கொண்டால். இன்றைய த்ரிஷா,காஜல் எல்லாம் அன்றைய பத்மினி,பானுமதி மாதிரி கருப்புவெள்ளையாகத்தான் வருவார்களா? சும்மா ஒரு சந்தேகம்தான் தேவதை ரசிகர்கள் சொல்லுங்களேன்..

கனவு கானுங்கள் கண்களை மறந்து எண்ணங்களை திறந்து...

மனதை நெகிழச்செய்த வைரமுத்துவின் கவிதையொன்று..

கருகிய ரோஜாவும் கடைசிக்கேள்விகளும்..

அமெரிக்க போர் விமானங்கள் ஈராக்கில் தாக்குதல் நிகழ்த்தியபோது இரண்டு வயதுக்குழந்தையொன்று பாதிமுகம் கருகி நின்றது. கண்ணீர்வடிய ஒரு கன்னமில்லாத அந்தக்குழந்தையின் குரலில் சில கேள்விகள்.

அரபியில் சொன்னாள் அம்மா

எங்கள் டைகிரிஸ் யூப்ரடீஸ் நதிகளிரண்டும்
வீசியடித்த அலைகளிலேதான்
முதல் நாகரீகம்
முளை கட்டிற்றாம்

உங்கள் நாட்டில்
நதிகளே இல்லையா புஷ் அங்கிள்?

உங்கள் ஆயுதம்
கூர்சோதிக்க
என் பிஞ்சு மண்டை ஓடுதான் கிடைத்ததா?

ரொட்டி சலித்த உங்கள்
குட்டி நாய்க்கு எங்கள் குருத்தெலுப்பென்றால்
கொள்ளை ஆசையா?

கனவுகள் நனைந்து
பூமிக்கு வந்தேன்
ரோஜாக்கள் வெடிக்கும்
நுண்ணொலி கேட்கவே
இராக்கில் பிறந்தேன்
பகலில் சூரியன்
இரவில் நிலவு
இரண்டையும் வெடித்தால்
எங்கனம் தாங்குவேன்?

மு..மு..முட்டுதே மூச்சு
சுவாசப்பையில் என்ன நெரிசல்
காற்றில் கலந்த சதைத்தூள் நிறைந்து
நெரிபடுதோ என் நுரையீரல்?

அலெக்சாண்டர் வாளில்
மங்கோலிய வில்லில்
பிரிட்டிஷ் பீரங்கியில்
கருகாத எங்கள் பேரீச்சங்காடுகள்
தீத்தாரைகளில் சிவ்வென்றெரியுதே!

இன்னொரு பருவம் பேரீச்சை பழுக்குமோ?
பேரீச்சை தின்ன
நாங்கள் இருப்பமோ?

நெருப்பு மழை
அக்கினி அலை
சூரியன் உடைந்து
பூமியில் ஒழுகினால்
எப்படித்தாங்கும்
என் மெல்லிய செந்தோல்?

மொத்தப் பிணக்குழியில்
என்னையும் இழுத்து எறியும்பொழுது
என் பிரிய பொம்மையைப்
பிரிக்க மாட்டீரே?

எங்கு நோக்கினும்
ரத்தப் படுகை

பாலைவனத்தை நாளை தோண்டினால்
தண்ணீரின் நிறம் சிவப்பாயிருக்குமோ?

ஏனிந்த விஷவெறி
ஏசுவா? அல்லாவா?
அதுவல்ல கேள்வி!
டாலரா? தினாரா?

அதுதானே கேள்வி!

இந்தியப் புறாக்கள் வாங்கி வளர்க்க
ஏழு தினார்கள் சேர்த்திருந்தேன்
அனுப்பட்டுமா புஷ் அங்கிள்
உங்கள் வீட்டு விலாசமிட்டு?

ஒரே ஒரு பிஞ்சு நிபந்தனை.
எண்ணெய்க்காடு எரியும் நெருப்பில்
நீங்கள் மூட்டிய பூதப் புகையில்
வாழ்வு தேசம் சுவாசம் எல்லாம்
கறுத்துக் கறுத்துக் கருகியழிந்தது

உங்கள் வீட்டுப் பெயரில் மட்டும்
இன்னும் என்ன 'வெள்ளைமாளிகை?'

வீடோ பெயரோ
மாற்றுவீர்களா?

நான் இறந்துபோயினும்
வந்து சேரும் என்
ஏழு தினார்!

கவிப்பேரரசு வைரமுத்துவின் "கொஞ்சம் தேநீர் நிறைய வானம்" நூலிலிருந்து

யூத்புல் விகடன் குட் பிளாக்கில் எனது, "தெருநாய்கள்" பதிவு வெளியாகியிருக்கிறது.. நன்றி விகடன்..


http://youthful.vikatan.com/index.php?nid=66

தெருநாய்கள்..!!

பொதுவாக மிருகங்களை இரண்டு வகையாக பிரிக்கலாம். காட்டில் வாழ்பவை, ஊருக்குள் வாழ்பவை என்று. இதைவிடுத்து நீர்வாழ் உயிரினங்கள், ஊரிலும் வாழும் காட்டிலும் வாழும் எல்லா இடங்களிலும் வாழும் ஓரு வகையும் உண்டு. உதாரணமாக பாம்பு,பூச்சி,எறும்பு இனங்கள்.
அதிலே ஊரில் வாழும் மிருகங்களில். இந்த நாய்கள் என்பது முக்கியமானது. இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் இவைதான் காலம் காலமாக நாம் வாழும் சூழலில் சேர்ந்து வாழ்ந்து வருபவை. இதிலே வீடுகளில் வளர்க்கப்படும் நாய்களை விட்டுவிடுவோம். நான் சொல்லப்போவது தெருக்களையே தன் வசிப்பிடமாக்கி எந்தவித கட்டுப்பாடுகளுமின்றி அலைந்து, திரிந்து, கண்டதெல்லாம் உண்டு, விரும்பியதுடன் உறவு கொண்டு, குட்டிகளை ஈன்று, சொறிபிடித்து கடைசியில் எங்காவது இறந்து போகும் தெருநாய்களைப்பற்றி.

தெருநாய்களின் பழக்க வழக்கம் வாழ்க்கை முறையானது ஏனைய வீட்டிலே வளர்க்கப்படும் நாய்களின் பழக்க வழக்கங்களிலும் மாறுபட்டது. இவைகளுக்கு இதைத்தான் உண்ணவேண்டும், இங்கேதான் இருக்க வேண்டும் என்கிற எந்த கட்டுப்பாடுகளுமின்றி சுதந்திரமாக அலைந்து திரியும்..

எனக்குத்தெரிந்த வரை இந்த தெருநாய்களின் ஆயுட்காலம் மிகக்குறுகியது.. நம் தெருக்களில் சுமார் மூன்று அல்லது நான்கு ஆண்டுகளுக்கு முன் பார்த்த நாய்களை இப்போது கான்பது அரிதாக இருக்கலாம்..காரணம் அவை இறந்து போயிருக்கலாம்! அதிகமான நாய்கள் நோய்களாலேயே இறந்து போகிறது அவைகளின் இடங்களில் இப்போது புதிய நாய்கள் இருக்கலாம்..

மனிதர்களை கேவலமாக திட்டும் போது நாயுடன் ஒப்பிட்டு திட்டுவதை என்னால் புரிந்துகொள்ளவே முடியவில்லை. நாய் அப்படி என்னதான் கேவலமான காரியத்தை செய்துவிட்டது! நாய் கடிக்கும் என்பதற்காகவா..? பொதுவாக நாய்,பாம்பு போன்றவை மனிதர்கள் சீண்டாதவரை அவர்களை ஒன்றும் செய்யாது.. மனிதர்களை கடிப்பதற்காகவே வெறியூட்டி வளர்க்கப்படும் நாய்களைத்தவிர! ஒருவித நோயினால் பாதிக்கப்பட்ட நாய்கள் அதாவது பைத்தியம் பிடித்ததாக கருதப்படுபவை, இலங்கையில் அவற்றை பிச்சி/விசர் பிடித்த நாய் என சொல்வார்கள்.. இவையும் மனிதர்களை தாக்கலாம்.. இவைகளிடமிருந்து முக்கியமாக குழந்தைகளை பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.

மற்றபடி நாய்களின் நன்றி மறவாத்தன்மை பற்றி குறிப்பிட்டுச்சொல்கிறார்கள்.. "நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லதை அன்றே மறப்பது நன்று"  என்ற திருக்குறள் நாய்களுக்கும் தெரிந்திருக்கிறது போல.. ஆனால் இந்த நன்றி மறவாத்தன்மை எல்லாத்தெரு நாய்களிடமும் இல்லை. குறிப்பாக வீட்டிலே வளர்க்கப்படும் நாய்களிடமே இந்த தண்மை கானப்படும்.. (இங்கே நான் குறிப்பிடுவது வீட்டிற்குள் செல்லப்பிராணியாக வளர்க்கப்படும் நாய்கள் பற்றியல்ல மாறாக தெருநாய்கள் குட்டி ஈன்றால் அந்தக்குட்டிகளை சிறிசிலிருந்தே எடுத்து வளர்ப்பார்கள் அவை பற்றியே இவை பெரும்பாலும் வீட்டிற்குள் வர அனுமதிக்கப்படுவதில்லை) நம்மைக்கண்டதும் வாளாட்டிக்கொண்டு நம்மைச்சுற்றியே வரும்.. நம் குரலை எவ்வளவு தொலைவிலிருந்து கேட்டாலும் நாம் கூப்பிடுகிறோம் என உணர்ந்தால் நம்மருகே ஓடி வந்துவிடும்.. சில தெருநாய்கள் வீட்டிக்குள் நுழைந்து திருடி தின்றுவிடும்.. ஆனால் இவ்வகையான வீட்டில் வளர்க்கப்படும் நாய்கள் யாருமில்லாவிட்டாலும் அப்பிடியெல்லாம் வீட்டிற்குள் நுழையாது..

நாய்களிடம் கானப்படும் குணங்களில் பிரதானமாக, அவைகளுக்குள் நிலவும் பிரதேசவாதத்தை குறிப்பிடலாம். அதாவது ஒரு பிரதேச நாய் இன்னொரு பிரதேச நாயை தன் எல்லைக்குள் வந்து வாழ அவ்வளவு சீக்கிரம் அனுமதிக்காது "இது எங்க ஏரியா உள்ள வராதேன்னு" சண்டைக்கு வந்துவிடும். தங்கெழுக்கென்று அவைகளாகவே ஒரு எல்லையை நிர்ணயித்துக்கொண்டு அந்த எல்லைக்குள்ளயே பெரும்பாலும் வசித்து வரும்.

சின்ன வயது பாடசாலை நாட்களில்.. எங்கள் ஆசிரியர் ஒருவர் ஒரு குட்டிக்கதை சொல்லுவார்.. என்னவென்றால், ஒரு கிராமத்தில் கடுமையான வறட்சி பஞ்சம் நிலவவே அக்கிராமவாசிகள் அதில் கடுமையாக பாதிக்கப்பட்டனர். உண்பதற்கே உணவில்லாமல் கஷ்டப்பட்டார்கள். இதனால அங்கு வாழ்ந்த நாய்களும் அதிகமாகவே பாதிக்கப்பட்டன! பல நாட்களாகவே பட்டினியாகவே அலைந்து திரிந்தன..

அப்போதே ஒரு சில நாய்களுக்கு சில ஐடியாக்கள் தோன்றின.. அதாவது அந்தவிடத்திலிருந்து குடிபெயர்ந்து வேறு இடத்திற்கு சென்றால பசியில்லாமல் வாழலாம என.. பட்டினியால் வாடியவைகளுக்கு இந்த ஐடியா நல்லதாகவேபட்டது.. எங்கே போகலாம என முடிவு செய்து.. ஒரு சில அனுபவ நாய்களின் ஆலோசனைப்படி கொழும்புக்கு சென்றால நன்றாக உண்டு வாழலாம், அங்கேதான் நிறைய ஹோட்டல்கள் இருக்கின்றன. நிறைய மனிதர்கள் இருக்கிறார்கள்.. நிறைய உணவு அங்கே கொட்டப்படலாம அதனால கொழும்புக்கு செல்ல முடிவாகி.. ஒரு சில வயதான நாய்களைத்தவிர மற்றையவை, ஊரைவிட்டுக்கிளம்பி கொழும்பு நோக்கி நகர்ந்தன..

ஊரைவிட்டுச்சென்று சில நாட்களிலேயே கொழும்புக்குச்சென்ற நாய்கள் மீண்டும் ஊருக்குத்திரும்பியது. வந்த நாய்களிடம் என்னாச்சு ஏன் இவ்வளவு அவசரமா திரும்பிட்டிங்க என ஊரிலுள்ளவைகள விசாரிக்கத்தொடங்கின.. அப்போதுதான் வந்ததுகள் சொல்லத்தொடங்கியது.. நமக்கு எதிரி மனிதர்களோ வேறு யாருமோ அல்ல! நமக்கு எதிரி நம்மவர்கள்தான் நம் இனம்தான் என்றது ஒரு நாய்.. போகும் வழியெங்கும் ஒவ்வொரு ஊரிலுமிள்ள நம்மைப்போன்ற நாய்க்கூட்டங்களை சமாளித்து செல்வது மிகப்பாடாய் போனது.. கொழும்பு சென்று சேர்ந்ததும், அங்கே நாம் நினைத்ததைப்போல் நிறைய உணவுகள் இருந்தது.. ஆனாலும் அப்பிரதேச நாய்கள் அவற்றைத்தொடுவதற்கு கூட எங்களை அனுமதிக்கவில்லை அவைகளின் தேவைக்கு மேலதிகமாக இருந்தபோதிலும் கூட.. திருட்டுத்தனமாகவே தேடித்திங்க வேண்டி ஏற்பட்டது.. அதனால் நமது சொந்த ஊரில் பட்டினிகிடந்து செத்தாலும் இப்பிடியான பிழைப்பு தேவைப்படாது என நம்ம ஊருக்கே திரும்பிவிட்டோம் என சொல்லிமுடித்ததாம்..

இந்த தெருநாய்களை பற்றி எழுத சுமார் ஒரு வருடமாக முயற்சித்து முடியவில்லை.. நிறைய தடவை எழுதி அழித்துவிட்டிருக்கேன்,காரணம்! இவைகளைப்பற்றியெல்லாம் எதுக்கு பதிவெழுதுவான என்ற எண்ணம்தான்.. பொதுவாக கிராமபுறங்களில் இந்த தெருநாய்களும் நம் சூழலோடு,நம் வாழ்வியலோடு தொடர்ந்து வாழ்ந்து வருகின்றன.. ஆனால் நாம்தான் அவற்றை கவனிப்பதேயில்லை! என்னையும் நான்கு வயதில் நாய் கடித்ததாம்.. முற்றத்திலே மலம் கழித்துக்கொண்டிருந்த போது அவ்வழியாக வந்த நாயொன்று எனது பின்புறத்தை லேசாக கடித்ததாகவோ/பிராண்டியதாகவோ வீட்டிலே சொல்லி கிண்டல் பண்ணுவார்கள்.. செவனேன்னு முற்றத்தில் மலம் கழித்த என்னை எதுக்கு அந்த நாய் தாக்கியிருக்கனும்.. இன்றைக்கும் யோசிக்கிறேன்.. ஒருவேளை மலம் திண்ண வந்த நாய்க்கு இடைஞ்சல் கொடுத்து விரட்டியிருப்பேனோ..? அந்த கோபத்தில் தாக்கியிருக்கலாம்..!!


இரவு-இருள்-உறக்கம்-அலாரம்..


இரவையும் இருளையும் ரசிப்பவன் நான். ஒளி விளக்குகளால் இருளை விரட்டி இரவை கொலை செய்பவர்களை தூக்கில் ஏற்ற வேண்டும் என நினைப்பவன்.. இரவுகள் என்பது பகல் முழுதும் அலையாய் அலைந்து இயந்திரமாய் சுழன்று களைத்துப்போகும் உடம்புக்கும், மனசுக்குமான ஓர் ஓய்வு அல்லது இடைவேளை.. இருளோடு கூடிய இயற்கையான இரவுகளையே பிடிக்கும்.. இருளை விரட்டிவிட்டு ஒளிவிளக்குகளால் அலங்கரிக்கப்படும் இரவுகளில் மனதை சிலிர்க்க செய்யாத மழை போல ஏதோவொரு செயற்கைத்தனம் இருப்பதாகவே உணரமுடிகிறது..

ஒளிவிளக்குகள் இல்லாத இரவுகள் என்பது இன்றைய நவீன உலகில் சாத்தியபடாத ஒன்று. காலம் நவீனத்தின் பக்கம் நகர நகர சில தேவைகளை,சில பொருள்களை, சில விடயங்களை நமக்கு அத்தியவசியமாக்கி விடுகிறது இந்த சூழல்.. உதாரணத்துக்கு கைத்தொலைபேசிகள், இவை இல்லாமல் பயணம் செய்தால் ஏதோவொன்றை விட்டுவந்த உணர்வு நம்முடனேயே தொடர்வதை உணர்ந்திருக்கலாம். இதே நாம் பத்து வருடங்களுக்கு முன்பு எந்தவித தொலைபேசிகளும் இல்லாமல் பல மைல், பல பயணம் சென்று வந்திருக்கிறோம். இது போலவேதான் இந்த ஒளி விளக்குகளும், நம் முன்னோர்கள் எந்தவிதமான மின்னொளி விளக்குகள இல்லாமல் வாழ்ந்தார்கள்.. இன்றைய காலத்துக்கு அது கடினமான நிலை.

உறக்கம் என்பது உடம்புக்கான மட்டுமல்ல மனசுக்கானதுதான ஓய்வாக இருக்கவேண்டும் என்பது எனது ஆசை. இதமான காற்று, சுவையான உணவு,சுகமான உறக்கம்.. இவை எல்லோருக்கும் வாய்ப்பதில்லை, அப்படி வாய்க்கப்பெற்றவர்கள் கொடுத்து வைத்தவர்கள் என்பேன். சுவையான உணவும், சுகமான உறக்கமும் செலவ செழிப்போடும் சுகபோக வாழ்க்கையோடும் சம்பந்தபட்டதல்ல.. கோழி பிரியானியில் கிடைக்காத சுவை கருவாட்டுக்குழம்பு சோற்றில் கிடைக்கலாம். பஞ்சு மெத்தையில் கிடைக்காத சுகம் கட்டாந்தரையில் விரிக்கப்பட்ட பாயில் கிடைக்கலாம்.

உடலும் உள்ளமும் களைத்து சோர்ந்தபின் விழிகள் தானாகவே மூடிக்கொள்ளும் உறக்கத்தில்தான உயர்ந்தபட்ச சுகம் கிடைக்கும்.. உறக்கம் என்பது கட்டாயப்படுத்தியோ மருந்து மாத்திரைகளாலோ வரவழைப்பதில்லை.. அவ்வாறான உறக்கத்தில் என்ன சுவாரஷ்யம் இருந்துவிடப்போகிறது. என்னைப்பொருத்தவரை இந்த வெளிநாட்டு வாழ்க்கையில் உடல் களைப்பின் பின் உறக்கம் மிக அபூர்வம்.. காரணம் செய்யும் வேலை உட்கார்ந்து கொண்டே செய்யவேண்டி இருப்பது, கொஞ்சமேனும் அலைந்து திரியாமல் எட்டு மணிநேரமும் கணினிமுன் உட்கார்ந்த வேலை, எனக்குப்பிடிப்பதில்லை!. பிடிக்கவில்லையென்றாலும் செய்தாகவேண்டிய கட்டாயம். அதனால் மனசு சோர்வடைவதைவிட உடல் சோர்வடைவது மிகக்குறைவு.  உறக்கம் வராமல் படுக்கையில் புரழும் தருணங்கள் மிகக்கொடுமையானவை..

 தூங்கச்செல்லுமுன் முகம் கை கால் கழுவிக்கொண்டு தூங்கச்செல்வது என் வழமை. "அப்பதான் கனவுல வர்றவங்களுக்கு அழகாத்தெரியும் அப்பிடின்னு இல்ல" அது சின்ன வயசிலிருந்து பழகிப்போச்சு! வேர்வையோடு உடுத்த உடையுடன் வந்து கட்டிலில் விழுந்து அப்பிடியே உறங்குபவர்களைக்கண்டால் கொஞ்சம் எரிச்சல்தான் வரும்.

முன்பெல்லாம் கிராமங்களில் சேவல் கூவுவதை கேட்டுத்தான் மக்கள் எழுந்திருப்பார்களாம்.. ஆனால் இப்ப காலம் மாறிப்போச்சு சேவலுக்கே அலாரம் வெச்சுத்தான் எழுப்பனும். இப்பவெல்லாம் அலாரம்தான்! இந்த அலாரம் சில நேரம் எரிச்சலைத்தந்தாலும், அலாரம் அடித்து எழுந்திருப்பதில் சுவாரஷ்யமும் இல்லாமல் இல்லை.. எனக்கு காலையில் வேலை இருக்கும் நேரங்களில் 5.30 வேலைக்கு 4.30 க்கு எழுந்திருக்கோனும்.. அந்த நேரங்களில் தட்டி எழுப்புவது இந்த அலாரம்தான். 4.30 க்கு எழுந்திருக்கவேனும் ஆனால் 3.30 க்கே கண்விழித்து நேரத்தைப்பார்த்தால், அட இன்னும் ஒரு மணிநேரம் இருக்கே! போர்வையை இன்னும் கொஞ்சம் இழுத்து போத்தி கண்களை மூடி.. அந்த ஒரு மணிநேர தூக்கத்தின் சுகத்தை உணர்ந்திருக்கிறீர்களா? ஆனாலும் அந்த ஒரு மணிநேரம் மிக அவசரமாக வந்திடும், பின் அலாரம் அடிக்கும் போது இவ்வளவு அவசரமாக சென்றுவிட்டதா! என வியந்ததும் உண்டு.. அலாரத்தை முறைத்துப்பார்த்ததும் உண்டு. அலாரம் அடித்ததும் இன்னும் ஐந்து,பத்து நிமிடம் உறங்கலாம் என ரிப்பீட் அலாரம் வைக்காமல் உறங்கி ஐந்து நிமிடம் ஒரு மணிநேரம் ஆனவர்களும் உண்டு.

நான் தூங்க போறேன் அப்புறம் பார்க்கலாம்..



Rayilin oligal Song lyrics in English and Tamil

Railin Oligal Lyrics in Blue Star  Male : Rayil-in oligal Unaiyae theduthae Adhirum paaraiyaai Idhayam aaduthae Unthan kai veesidum Poi jaad...