தாழ்வு மனப்பாண்மை மிகக்கொடிய நோய்..!!

உலகிலுள்ள சிறந்த நூறு தாழ்வு மனப்பாண்மையாளர்களை பட்டியலிட்டால், அந்த பட்டியலில் நானும் இடம்பெறலாம்..அவ்வளவு தாழ்வு மனபபாண்மை என்னுள் இருந்தது. அது ஒரு கொடிய நோய் கொஞ்ச்ம் கொஞ்சமாய் ஆளைக்கொல்லக்கூடியது..இப்போது அதிலிருந்து மீண்டுகொண்டுருக்கிறேன்,சீக்கிரம் மீண்டு விடுவேன்!! எனக்குள் இருந்தது தாழ்வு மனப்பாண்மைதான் என்பதை நீண்ட நாட்களுக்குப்பிறகுதான் புரிந்துகொண்டேன்..அதற்கு காரணம் வாசிப்பும் நல்ல சில சினிமாக்களும்தான்.. வாசிப்பு என்பது ஒரு மனிதனை புதுப்பித்துக்கொண்டேயிருக்கும் ஒரு அற்புதமான ஆயுதம்..

பால்ய கால பள்ளிப்பருவம் எல்லோருக்கும் கொண்டாட்டம் நிறைந்தது.. ஆனால் எனக்கு அது நரகம்!! ஆமாம், அந்தக்காலங்களில் என்னுடன் படித்த சக மாணவிகளுடன் நான் மொத்தமாக பேசிய வார்த்தைகளை ஒரு A4 சைஸ் தாளில் எழுதிவிடலாம் காரணம் எனது தாழ்வு மனப்பாண்மை. எல்லோரைப்போலவும் சிரிக்கனும்,பேசனும்,பழகனும் என்ற ஆசையும்,கற்பனையும் தாராளமாகவே இருக்கும்.. ஆனாலும் பக்கத்தில் சென்று பேச தயக்கம்..காரணம் எனது உடலில் இருந்த ஒரு சிறிய குறைபாடுதான்..(என்னவென்று சொல்லவிரும்பவில்லை) ஆனால் அதெல்லாம் ஒரு விடயமே அல்ல எனபது இப்போதுதான் புரிகிறது எனக்கு. சில விடயங்களை காலம் தாண்டித்தான் புரிய வைக்கிறது இந்த உலகம்!!

அப்படி எனது ஆயிரக்கணக்கான ஆசைகளும், ஆதங்கங்களும், கற்பனைகளும் வெளிவந்ததேயில்லை. எல்லாம் உள்ளேயே இறந்து போய்விட்டன.. நான் நிஜத்தில் வாழ்ந்ததைவிட கற்பனைகளிலேயே அதிகம் வாழ்ந்திருக்கிறேன்..மனதுக்கு பிடித்தவர்களை மனதில் நினைத்துக்கொண்டு அவர்களுடன் பேசுவதாய் கற்பனையிலே பேசியிருக்கிறேன்,சிரித்திருக்கிறேன்.. ஒரு கட்டத்தில் நானே பயந்திருக்கிறேன் எனக்கு மனநோய் பைத்தியம் பிடித்து விடுமோ என..நல்லவேளை அப்பிடி நடக்கவில்லை. காரணம் நான் படித்த சூழலும் அவ்வாறு, வெளியூரில் சென்று படிக்கும் போது நிறைய பேர் விடுதியில் தங்கியே படிப்பார்கள்.. சிலர் மாத்திரம் வீடுகளில் தங்கி படிப்பார்கள். நானும் விடுதியில் தங்க தயங்க ஒரு வீட்டில் சேர்த்து சேர்த்துவிட்டார்கள்.. உயர்தரம்(A/L  =P1,P2) படித்த கடைசி இரண்டு வருடங்களும் தனியறையில் தனிமையாக பேசிக்கொள்வதற்கு கூட அந்தவீட்டில் ஆண்பிள்ளைகள் இல்லை.. எனது நிலையை எண்ணிப்பாருங்கள் புரியும்.தனிமை மிகக்கொடுமை!!

பைத்தியக்காரர்கள் தனிமையில் சிரிப்பார்கள் பேசுவார்கள் ஆனால் தனிமையில் பேசுபவர்கள்,சிரிப்பவர்கள் எல்லோரும் பைத்தியக்காரர்கள் இல்லை.. ஆனாலும் இந்த பாழாய்போன தாழ்வு மனப்பாண்மையினால்.. மிக மிக கோழையாகவும், முட்டாளாகவும் இருந்திருக்கிறேன்.. துள்ளித்திரிந்திருக்கவேண்டிய என் பள்ளிநாட்களை கோழைத்தனமாக கழித்திருக்கிறேன் என இப்போது நினைக்கும் போது கூட நான் கொண்டிருந்த தாழ்வு மணப்பாண்மை மீது பெரிய வெறுப்பு ஏற்படுகிறது.. இதனால் நான் இழந்ததும் தொலைத்ததும் மிக மிக அதிகம்!! அவை மீளப்பெற முடியாதவை.. பாடசாலைகளினால் நடாத்தப்படும் இல்ல விளையாட்டுப்போட்டிகளிலோ,கல்விச்சுற்றுலாக்களிலோ நான் கலந்து கொண்டதாய் சரித்திரமே இல்லை!

நான் கிறுக்கிய சில காதல் கவிதைகளைப்பார்த்து சிலர் என்னிடம் யாரையாவது காத்லித்தீர்களா? இல்லை காதலில் தோல்வியா? அப்பிடி கேட்டதுண்டு.. இல்லவே இல்லை!! பெண்களுடன் பேசவேயில்லை, என்கிறேன்! எப்படி காதலிப்பது.. இந்த கவிதை சமாச்சாரம் கிறுக்க தொடங்கியதும் இந்த தாழ்வு மனப்பாண்மையின் ஒரு அங்கம்தான்.. அதாவது வெளியில் சகஜமாக சொல்லத்தயங்கிய சொல்லாமல்விட்ட மனதில் பூட்டிக்கிடந்த மௌனங்களை மொழி பெயர்க்கும் முயற்சி..மற்றபடி இலக்கியத்திற்கும் நமக்கும் ரொம்ப தூரம்.. தமிழ் வார்த்தியாரைக்கண்டாலே பத்தடி தள்ளிப்போற கூட்டம் நாங்க..

நான் இந்த வலைத்தளத்தில் இதற்கு முன் எழுதிய சில வரிகளும் என் தாழ்வு மனப்பாண்மையின் தாக்கத்தை சொல்வதாகவே இருக்கும்.. இதெல்லாம் வெறும் கற்பனை என எண்ணி "அருமை" என பலர் பின்னூட்டமிட்டிருக்கிறார்கள்.. ஆனால் என் மனதின் வலி எனக்கு மட்டும்தான். அவ்வாறான சில வரிகள் கீழே..

தோற்றுப்போகிறேன் நான்
ஆசைகளுக்கும்
அவஸ்தைகளுக்குமிடையில்
சண்டையிட்டு..

எல்லாமிருந்தும்
ஏதோவொரு வெறுமை
என்னுலகத்தில்...
ஏதோவொன்றை தொலைத்ததாய்
ஏக்கங்களும்
என்னுணர்வுகளும்..
அதிகம்
சிரித்ததில்லை நான்
சில காரணங்களுக்காய்...
வருந்தியிருக்கிறேன்
மனதோடு
பல காரணங்களுக்காய்...

தொடும் தூரத்திலிருந்தும்
தொடமுடியாதவொன்றுக்காய்...
தொலைந்தபின்னும்
தொலையவில்லை
ஏக்கங்கள்.

கண்ணீருமில்லை
கலங்கவுமில்லை.
வாடவுமில்லை
வாசம் வீசவுமில்லை.
நான்
காகிதத்தில் செய்த பூ..

கொன்றுவிட முயல்கிறேன்
இறந்தகால
தோல்விகளையும்
கோழைத்தனங்களையும்...

இந்த தாழ்வு மனப்பாண்மை விடயத்தில் பெற்றோர்களின் பங்கும் இருக்கிறது.. எனக்கு ஏற்பட்ட அந்த சிறிய உடல் குறைபாட்டை சிறிய வயதிலே சிகிச்சை மூலம் நீக்கியிருக்கலாம்.. ஆனால் அவர்கள் அதை கவனிக்கவில்லை!! இங்கே எனது பெற்றோர்களை குறை சொல்வது நோக்கமில்லையென்றாலும்.. அவர்களின் சிறிய கவலையீனத்தால்.. அதன் மூலம் நான் அடைந்த கொடுமைகள் அதிகம்.. தானாக தெளிவு பெறுவதற்கு அவகாசம் குறைவு.. பள்ளிப்படிப்பை தவிர இப்போது போல் தேடல்களோ பரந்து பட்ட வாசிப்பனுபவங்களோ அப்போது இருந்ததில்லை.. "அவனுக்கு கூச்சசுபாவம் அதிகம்" எனச்சொல்லியே வளர்த்து விட்டார்கள், ஆனால் அந்த கூச்சசுபாவம் ஏற்பட என்ன காரணம் என ஆராய மறந்துவிட்டார்கள்!!

ஆதலால் பெற்றோர்களே... உங்கள் குழந்தைகளின் உடலில் சிறிய ஒரு குறைபாடு என்றாலும் அதை சிறிய வயதிலே அகற்ற முயற்சி செய்யுங்கள்.. இல்லையேல் அதனால் அவர்களின் எதிர்கால வாழ்க்கையே தொலைத்துவிடக்கூடிய சாத்தியம் இருக்கிறது..நானாவது இப்போது தெளிவு பெற்றேன் ஆனால் இந்த தாழ்வு மனப்பாண்மையால் தற்கொலை செய்து கொண்டவர்களும் இருக்கிறார்கள்.. நண்பர்களே, சகோதரர்களே தாழ்வு மனப்பாண்மை உங்கள் மனதிலும் இருக்கிறதா.. அதிலிருந்து வெளிவர முயற்சி செய்ய்யுங்கள்..உங்களையும் இந்த உலகம் ஏற்றுக்கொள்ள தயாராகவே இருக்கிறது.. கவலையை விடுங்கள்.. என் மனதில் உள்ளதை இங்கே கொட்டியது போன்று உங்கள் மனதில் உள்ளவற்றையும் நெருங்கியவர்களிடமோ பெற்றோர்களிடமோ சொல்லுங்கள்.. நிச்சயம் தீர்வு கிடைக்கும்!! இங்கே நான் சொன்னது இது வரை யாரிடமும் சொல்லாதது..


உங்கள் திறமைதான் உங்கள் அடையாளம் உங்கள் உடல் அல்ல!! ஏன்.. நான் கூட கடல்தாண்டி வந்து வேலை செய்வேன் என நினைத்து பார்த்ததேயில்லை.. இப்போது அபுதாபியில் நல்லதொரு வேலையில் இருக்கிறேன்..


எல்லாப்புகழும் இறைவனுக்கே!!!

இன்று உலக புவி தினம்..Earth Day..

இன்று உலக புவி தினம்
இயற்கையை
வாழ வைக்கும் தினம்

பூமியை மாற்றுவோம்
எங்கும் பச்சை
எதிலும் பச்சையாய்
பனித்துளிகளில் நீராடி
புல்வெளிகளில்
படுத்துக்கொள்வோம்

மரங்கள் நடுவோம்
மழையை
வரவேற்போம்
வறண்ட பூமியெங்கும்
சோலைகளால்
வாழ்த்து சொல்வோம்..

இயற்கையாய் வாழ்வோம்
இயற்கையோடு வாழ்வோம்
மழைத்துளிகளால்
பூக்கள் 
செய்வோம்
பூக்களால்
புன்னகை செய்வோம்
புன்னகைகள் 
கோர்த்து
மனிதம் செய்வோம்..
 என் பக்கம் வரும்
உங்களுக்கு 
என் அன்பான
இனிப்பு..

என்றென்றும் கிரிக்கெட் - 1

கிரிக்கெட் என்பது எனது 12 வயது முதல் இன்றுவரை என் உணர்வுகளோடு கலந்துவிட்ட தொடர்ந்து வருகிற, மறக்கமுடியாத, விடமுடியாத ஓர் உறவைப்போன்றது.. நான் ஒரு கிரிக்கெட் ரசிகன் என்பதைவிட கிரிக்கெட் பைத்தியம் என்றே சொல்லிக்கொள்ளலாம்.. ஆனாலும் இந்த வலைத்தளத்தில் கிரிக்கெட் சம்பந்தமாக அதிகம் எழுதியது கிடையாது.(ஒரு சில பதிவுகள் மட்டுமே எழுதியிருக்கிறேன்) ஒவ்வொரு போட்டித்தொடர் முடிவடையும் போதும் அவற்றைப்பற்றி எழுதவேண்டுமென்று தோன்றினாலும்.. அவற்றின் தரவுகளை சேகரித்து எழுதுவதில் உள்ள கடினத்தினாலும் சோம்பரத்தினாலும் அப்படியே விடுபடுவதுண்டு..

குறித்த ஒரு அணியின் வெறி பிடித்த ரசிகன் அல்ல நான். எல்லைகளை கடந்த உலக கிரிக்கெட்டின் ரசிகன் நான். உலகில் எங்கெல்லாம் கிரிக்கெட் போட்டிகள் நடைபெறுகிறதோ அவற்றைப்பற்றிய செய்திகளை தேடிக்கொண்டேயிருப்பேன். பார்ப்பதற்கு வசதியும் நேரமும் இருந்தால் பார்க்க தவறுவதுமில்லை.. இதில் T20, ஒரு நாள் போட்டிகள், டெஸ்ட் போட்டிகள் என வகைபிரிக்காமல் அனைத்து போட்டிகளும் எனக்கு விருப்பமானவை.. இன்றைய T20 மோகத்தினால் பலருக்கு டெஸ்ட மற்றும் ஒருநாள் போட்டிகளின் மீதுள்ள ஆர்வம் குறைந்துள்ளது.. எனக்கு அப்பிடியில்லை, இன்னும் சுவாரசியம் குறையாத விறுவிறுப்பு குறையாத டெஸ்ட் போட்டிகள் நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கின்றன. உதாரணத்துக்கு ஆஷஸ் போட்டித்தொடர்.

இலங்கையில் இருந்த காலப்பகுதியில்.. கேபிள் தொலைக்காட்சி வசதியோ இணைய வசதியோ இல்லாததால், இலங்கை தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பபடுகின்ற இலங்கை சம்பந்தப்பட்ட போட்டிகளை மாத்திரமே பார்க்ககூடிய வாய்ப்பு கிட்டியது.. ஏனைய போட்டிகளின் ஸ்கோர் விபரங்களை செய்தியறிக்கை மூலமாகவே தெரிந்துகொள்வேன்.. எல்லா போட்டிகளையும் கண்டு களிக்க முடியவில்லையென அப்போது பெரிய மனக்குறையாக இருந்தது..

இப்போது வெளிநாட்டில் இருப்பதால்.. வேகமான இணைய வசதியும் இருப்பதால் உலகில் எங்கு போட்டிகள் நடந்தாலும் அவற்றை நேரடியாக பார்க்ககூடிய வசதியும்.. அவற்றை தவறவிட்டால் highlights பார்க்ககூடிய வசதியும் இருப்பதால் எனது கிரிக்கெட் பசிக்கு நல்ல விருந்து. இணையத்துக்குள் நுழைந்ததும் நான் முதலில் செல்லும் தளம் cricinfo தளம்தான்.. முதலில் இங்கு சென்று ஸ்கோர் விபரங்களை பார்த்துவிட்டே மற்ற தளங்களுக்குள் நுழைவேன்..


இப்போது கிரிக்கெட் மீது அதிகமானோர் வைக்கும் குற்றச்சாட்டு.. போட்டிகள் முன்னமே முடிவுசெய்யப்படுகிறது (spot fixing) மற்றும் சூதாட்டம்.. இந்த குற்றச்சாட்டுகளை மறுக்கமுடியவில்லையென்றாலும், இந்த spot fixing என்பது எல்லா போட்டிகளும் ஆதிக்கம் செலுத்துவதில்லை செலுத்தவும் முடியாது.. எப்பவாவது எங்காவது மிகச்சில போட்டிகளில் மாத்திரம்.! சூதாட்டமும் அப்பிடித்தான்.. அண்மையில் இப்பிரச்சினையில் சிக்கிய பாகிஸ்தான் வீரர்களின் கதி என்னவானது என்பது எல்லோரும் அறிந்ததே.! அவ்வாறான குற்றங்களுக்கு அவ்வாறான தண்டனைகள் முக்கியம்தான்..

அடுத்து இன்றைய ஐபிஎல் போட்டிகள் உண்மையான கிரிக்கெட் மீதான ஆர்வத்தை குறைத்து.. வெறும் பணத்துக்காக மோதிக்கொள்ளும் பணக்காரர்களின் சூதாட்டமாக மாறியுள்ளது எனும் குற்றச்சாட்டும் உண்டு.. இதில் எனக்கும் உடன்பாடு உண்டு.. ஐபிஎல் போட்டிகளை ஆரம்பத்தில் ரசித்ததைப்போன்று இப்போது ரசிக்க முடியவில்லை. உலகில் உள்ள திறமையான வீரர்களையெல்லாம் விலைகொடுத்து வாங்கி போட்டிகளில் முதலீடு செய்து ஒரு வியாபாரம் போலவே நடைபெறுகிறது.. இந்தியாவின் அதிகமான வீரர்களுக்கு இதன்மூலம் நல்ல வருமானம் கிடைக்கிறது.இதில் குறிப்பிட்ட சில வீரர்களுக்கு வழங்கப்படும் தொகையை பார்த்தால் தலையே சுற்றிவரும்.. ஆனால் வெளிநாட்டு வீரர்களில் மிகத்திறமையான வீரர்களுக்கு மாத்திரமே வாய்ப்பு வழங்கப்படுகிறது. மொத்தத்தில் இது பணத்தால் விளையாடப்படும் பணக்காரர்களின் விளையாட்டு.. சுருக்கமாக சொன்னால் கிளப்பில் சீட்டுக்கட்டுகளை வைத்து விளையாடும்ம் சூதாட்டம் போல் இங்கே மைதானத்தில் வீரர்களை வைத்து விளையாடும் சூதாட்டம் இது.. இவ்வாறு எனக்குப்பிடித்த கிரிக்கெட்டை பற்றி தொடராக எழுதலாம் என நினைக்கிறேன்.. இதில் இவ்வளவு காலமும் மனதோடிருந்த பல விடயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசை. அணிகளைப்பற்றி, போட்டித்தொடர்களைப்பற்றி,பிடித்த-பிடிக்காத வீரர்களைப்பற்றி இன்னும் பல விடயங்கள் பற்றி பேசலாம்..என்னைப்போலவே கிரிக்கெட்டை விரும்புகிற நேசிக்கிறவர்களோடு உரையாடுவதில் அலாதிப்பிரியம் எனக்கு... அவ்வாறானவர்களை சந்திக்க கிடைத்தால் கிரிக்கெட்டை ஒரு அலசு அலசி விடுவதுண்டு.. ஆனாலும் எல்லோரும் அந்த ரசனை இருப்பதில்லை, நிறைய பேர் பொழுதை கழிப்பதற்காகவே கிர்க்கெட் போட்டிகள் பார்க்கின்றனர்.

இன்று அறிமுகம் மட்டும்தான்..அடுத்த வரும் பதிவுகளில் கிரிக்கெட் பற்றி இன்னும் பேசலாம் அடுத்த பதிவு இலங்கை அணி தொடர்பானது..


எப்பவும் அப்பாதான் ஜெயிக்கிறார்..ஜோக்ஸ்

நீதிபதி: ஏன் உங்க மனைவியை விவாகரத்து செய்யணும்னு நினைக்கிறீங்க?
கணவன்: 6 மாசமா அவ என்கிட்டே பேசுறதே இல்லை
நீதிபதி: நல்லா யோசிச்சுப் பாருங்க! இப்படியெல்லாம் ஒரு வாய்ப்பு மறுபடியும் கிடைக்கிறது கஷ்டம்ங்க..
அறனி - ஏன்டி நிர்மலா " டாக்டர் எனக்கு எழுதிய லவ் லெட்டர் என் கணவரின் கையில் அகப்பட்டுவிட்டது
நிர்மலா - "அப்படியா அப்புறம் என்னாச்சு"?
அறனி - அதில என்ன எழுதி இருக்குன்னு தெறியாம அதக் கொண்டுபோய் மெடிக்கல் ஷாப்பில மருந்து வாங்கிட்டு வந்துட்டார்....

வயிறு எரியுது டாக்டர்
எப்போதிலிருந்து?
உங்க நர்ஸ் பக்கத்து பெட்டுக்காரனோட சிரிச்சுச் சிரிச்சுப் பேசினதை பார்ததிலிருந்து டாக்டர்

பயணி -1 :என்ன  சார் திடீர்னு ரயிலு நின்னுடுச்சு
பயணி -2 : டிராக்கில் மரம் விழுந்து கிடக்கு.
பயணி-1 : எனக்கு அப்பவே தெரியும். மரங்கள்லாம் பின்னாடி
ஓடும்போது  தடுமாறி கீழே விழும்னு நினைச்சேன்.

அவர் :நேத்து உங்க காருக்கு எப்படி Accident   ஆச்சு..?
இவர் : அதோ, அங்கே ஒரு மரம் தெரியுதா..?
அவர் : தெரியுது...
இவர் : அது நேத்து எனக்கு தெரியலை..!

"ஒருவழியா பேசித் தீர்த்துட்டேன்...."
"ஏதாவது பிரச்சினையா...?"
"ம்ஹும்... என் செல்போன்ல இருந்த பேலன்ஸை பேசித் தீர்த்துட்டேன்...!"

தோழி : 1:உன்னைப் பார்த்ததும் உன் புருசன் பேய் அறைந்தவர்
மாதிரி ஏன் திருதிரு வென முழிக்கிறார்.. 
தோழி :2 :ஓ அதுவா நான் மேக்கப்பை கலைச்சிட்டேன் அதுதான்  
அம்மா : இன்னிக்கு யார் என் பேச்சைக்கேட்டு ஒழுங்காக இருக்காங்களோ
அவங்களுக்கு நானொரு பரிசு தரப்போறேன்
பிள்ளைகள் : போம்மா இந்த விளையாட்டுக்கு நாங்கள் வரவில்லை
எப்பவும் அப்பாதான் ஜெயிக்கிறார்

டா‌க்ட‌ர் : உ‌ங்களு‌க்கு இரு‌க்‌கிற ‌வியா‌தி குணமாகணு‌ம்னா ‌மீ‌ன், கோ‌ழி     சா‌ப்‌பிடறதை ‌
நிறு‌த்‌தி‌த்தா‌ன் ஆகணு‌ம்.
நோயா‌ளி : எ‌ப்படி டா‌க்ட‌ர் அது‌ங்க சா‌ப்‌பிடறதை நா‌ன் ‌நிறு‌த்த முடியு‌ம்?.

போலீஸ் : இப்படியே ஊர் சொத்தை எல்லாம் கொள்ளை அடிக்கிறியே, உனக்கு கொஞ்சம் கூட வெட்கம் இல்லே?
திருடன் : அதுக்குத் தான் ஐயா முகமூடி போட்டுக்கிறேன்.

"அவர் கொஞ்சம் உடம்பு நல்லா இல்லைன்னாகூட "செக்கப்" பண்ணக் கிளம்பிடுவாரு..."
"உடம்பு நல்லா இருந்தா...?"
"பிக்கப் பண்ணக் கிளம்பிடுவாரு...!"

விற்பனையாளர் : இந்த டிவி 8500 ரூபாய். உள்ளூர் வரிகள் தனி
வாங்குபவர் : நான் வெளியூருங்க... வரி போடாம குடுங்க''

கல்யாணம் வரைக்கும் அவள் காதலி..சிறுகதை

நானும், அவனும் ஒரு மூனு நாலு வருஷமா நண்பர்கள்...உயிரக்குடுக்குற அளவுக்கெல்லாம் இல்லிங்க, ஒரே ஊரு அப்புறம் ஒரே இடத்துல ரெண்டு பேரும் ஒரு வருடமளவு வேலை செஞ்சிருக்கோம்.. அந்த நட்புதான்..

அவனும், நானும் ஒன்னா கம்பனியொன்றில் வேல செய்யும் போது ஒரு பொண்ன லவ் பண்ணினான் லவ்வுன்னா லவ்வு அப்பிடியொரு லவ்வு.. ராவெல்லாம் கண்முழித்து போன்ல பேசிட்டேயிருப்பான்.. எல்லாரும் தூங்கினாலும் இவன் மட்டும் பெட்சீட்டால் போத்திட்டு பேசுவான்..

கட்டினா இவள மட்டும்தான் கட்டுவேண்பான்.. யாரு குறுக்க வந்தாலும் எங்க காதல விட்டுக்கொடுக்க மாட்டேன்பான்.. நிறைய தமிழ்சினிமா பார்த்து வளர்ந்திருப்பான் போல பயபுள்ள!!! அவனுகிட்ட ஒரு ஸ்பெஷல் தெறம இருக்கு அதாவது எந்த பொண்ணயும் தன் பேச்சாலயே மடக்கிடுவான்.. பேசும் போது எங்கிருந்துதான் வருதோ தெரியல்ல பேசிக்கொண்டேயிருப்பான், ஆனா எது சம்பந்தமா பேசுறான்னு அவனுக்கும் தெரியாது.. கேட்கிறவங்களுக்கும் புரியாது.. ஆனா, பேசிக்கொண்டேயிருப்பாங்க அவங்களுக்கு தேவை இடைவிடாம ஏதாவது பேசனும்.. அப்பிடி பேசுவதும் ஒரு கலைதான்.. நமக்கெல்லாம் அது கைவராத கலை..

நிறைய பொண்ணுங்களும் தன்னோட காதலன் தன்னோட அதிகமாக பேசனும்னுதான் விரும்புறாங்க... அது எதப்பத்தி பேசனும்னு வரையறையெல்லாம் கிடையாது.. எதையாவது பேசனும் அவ்வளவுதான்! நாகரீகமாக எதைப்பேசினாலும் ரசிக்க அவர்கள் தயார்.. சில விடயங்கள் அவர்களுக்கு பிடிக்காததைப்போல் வெளியில் நடித்தாலும்.. அதையும் அழகாக அளவாகச் சொன்னால் அதுவும்..அவர்களுக்கும் பிடிக்கும்!!

எதையும் அவர்களாகவே கேட்க மாட்டார்கள், நாமாகவே புரிந்துகொண்டால்தான் அவர்களுக்கு மகிழ்ச்சி.. பெண்கள் மனதை புரிந்துகொள்ள முடியவில்லை என புலம்பும் ஆண்கள் கோடி.. ஆனால் அவர்கள் மனதின் ஆசைகளை,விருப்பங்களை புரிந்துகொள்ளும் ஆண்களைத்தான் அவர்களுக்கு அதிகம் பிடிக்கிறது.. 'நான் சொல்லாமலே புரிந்துகொண்டானே' என்ற திருப்தி, அவர்களுக்கு கிடைக்கிறது..

நிறைய ஆண்களால் இந்த திருப்தியை அவர்களுக்கு கொடுக்க முடிவதில்லை... அது ஒன்றும் அழ்கடலில் முத்தெடுப்பதைப்போன்ற கடினமான காரியமும் அல்ல!!

இதுலயிருந்து விளங்குற நீதி எண்ணான்னா பொண்ணுங்களுக்கு அவங்க பின்னால சுத்துற.சைட் அடிக்கிற, பார்த்து வழியிற பசங்களவிட தைரியமா,அழகா,ஸ்மாட்டா, தெளிவா பேசுற பசங்களத்தான் அதிகம் பிடிக்குதாம்.. வாழ்க்கையின் சில கேள்விகளுக்கு அனுபவங்கள்தான் பதில் சொல்கிறது! ஆனால் அனுபவங்கள் வந்து சேரும் போது அந்த இடத்திலிருந்து நீண்ட தூரம் நாம் கடந்து வந்திருப்போம்... பொருளியல் அறிஞர்கள் சும்மாவா சொன்னாங்க ஒன்றை இழந்துதான் இன்னொன்றை பெற முடியும் என்று.. அது முழுக்க முழுக்க உண்மையும் கூட..

ஒரு நாள் இரவு ஒரு தமாஷா போச்சு.. இரவு ஒரு மணியிருக்கும் நான் ஒன்னுக்கிருக்கலாம்னு எழுந்திரிச்சா பக்கத்து ரூம்லயிருந்து ஒரு மெல்லிய சவுண்டு வருது பார்த்தா பெட்சீட்டால ஒடம்பு முழுக்க தலையையும் சேர்த்து போர்த்திட்டு இவன் தூங்குறான், உண்ணிப்பா கவனிச்சதுல! அதுக்குள்ளயிருந்துதான் கதைக்கிற சத்தம் வருது.. பயபுள்ள கனவுலதான் பேசுறான்னு பார்த்தா.. தெளிவாத்தான் பேசுறான்.

அந்தபொண்ணு "வேறயாரும் முழுச்சிட்டிருக்காங்களா?"  அப்பிடி... கேட்டிருக்கும் போல, அதுக்கு இவன் சொல்றான் "இப்ப எல்லாரும் தூங்கிட்டாங்க இப்ப நான் மட்டும்தான் முழிச்சிட்டிருக்கேன், எவண்ட தொல்லயும் இல்ல ப்ரீயா பேசலாம்" அப்பிடின்னு..  'ஏய்.. இங்க ஒருத்தன் நானும்தான் முழிச்சிட்டிருக்கேன்' அப்பிடின்னு சொல்லுவோமான்னு பார்த்துட்டு வேணாம்ன்னு விட்டுட்டேன்..
இந்தக்கூத்த விடிஞ்சதும் என் அறையிலுள்ள மற்ற நண்பனிடம் சொன்னேன். அவன் வேலைக்குப்போய் கம்பனி முழுக்க இந்த மேட்டர பத்த வெச்சிட்டான்... இதனால அவனுக்கு போற இடமெல்லாம் "நாங்களும் நைட்டு ஒரு மணிக்கு முழிச்சிட்டிரும்லல" என நக்கல பண்ண தொடங்கிவிட்டார்கள்..

நைட்டு ஒரு மணிக்கு பொண்ணு கூட கடல போட்டத எவன் கேட்டிருப்பான்னு ஓரே குழப்பம் அவனுக்கு.. இதுக்கெல்லாம் காரணம் நாந்தான்னு அவனுக்கு இது வரையிலும் தெரியாது.. அவன் ரூம்ல பக்கத்துல தூங்கினவன் மேலதான் சந்தேகம்..

இப்பிடி ஜாலியா போய்க்கொண்டிருக்கும் போது சில சிக்கல்களால் எங்க கம்பனிய விட்டு விலகி எங்க ஊருக்கு பக்கத்து ஊரிலுள்ள  ஒரு பெரிய மல்லிகை கடையில் வேலைக்கு சேர்ந்துட்டான்.. அந்தக்கடையில் வேலைக்கு சேர்ற பசங்க நீண்டநாள் அங்கயிருந்து வேல பார்த்ததா சரித்திரமில்ல..
அதுக்காக அந்த கடை முதலாளி ஒரு திட்டம் வெச்சிருந்தார்.. அவர்ற கடைக்கு வேலைக்கு வர்ற கல்யாணமாகாத பசங்களுக்கு.. அந்த ஊர்லயே ஒரு பொண்ணப்பார்த்து கல்யாணம் பண்ணி வைக்கிறது.. அதுக்கப்புறம் அந்த ஊர்லயேதான் இருப்பான்.. தன் கடைய விட்டு வேற எங்கும் போக மாட்டான் என்ற எண்ணம் அவர் மனதில்.. அப்பிடி ஒரு சிலருக்கு கல்யாணம் பண்ணியும் வெச்சாரு. ஆனா பாருங்க! கல்யாணமாகி ஒரு சில மாசத்துல் பொண்டாட்டிய கூட்டிகிட்டு சொந்த ஊருக்கு வந்துட்டானுங்க.. அவரு ஐடியாவெல்லாம் தவிடு பொடியாயிட்டு

நம்ம நண்பனும் அங்க வேலைக்கு சேர்ந்துட்டான்.. வேலைக்கு சேர்ந்து மூனு மாசத்துலதான், அந்த துயரச்செய்தி என் காதுகளுக்கு எட்டியது.. என்னடான்னா அவனுக்கு கல்யாணமாம்!

லவ் பண்ணின பொண்ணுகூடன்னு நீங்க நெனச்சா அது தப்பு! அப்புறம் யாரு? இதெல்லாம் அந்த கடை முதலாளியோட ஏற்பாடு.. ஆமாம், இவன நல்லா அவருக்கு புடிச்சிட்டு அதுதான் தன் கடையில நீண்டகாலம் வெச்சிருக்கனும்னு ஆசப்பட்டாரு கல்யாணத்தயும் ஏற்பாடு பண்ணிட்டாரு...
இவனுக்கு எங்க போச்சி புத்தி? இவங்கிட்ட என்னென்னமோ பேசி பொண்ணு பார்க்க சம்மதம் வாங்கிட்டாக.. இவனும் வேண்டா வெறுப்பா பொண்ணு பார்க்க கிளம்பியிருக்கான்..

பொண்ணும் சுமார்தான்... என்ன மந்திரம் பண்ணாகளோ? என்ன மாயம் செய்தாகளோ? தெரியல்ல...! பயபுள்ள பொண்ண பார்த்ததும் பிடிச்சிருக்குன்னு சொல்லிட்டான்.. அப்புறம் என்ன கண்ணாலம்தான்...
அப்புறம் அந்தக்காதல் என்னாச்சு.. அது கல்யாணம் வரைக்கும்தான்.. கல்யாணம் வரைக்கும் அவள் காதலி.. கல்யாணத்துக்கு பின் இவள் மனைவி..

கல்யாணம் முடித்து கொஞ்ச காலம்தான்.. அவனும் அந்த கடைய விட்டு நின்னுட்டான் முதலாளிக்கு திரும்பவும் ஆப்பு.. இப்ப சொந்தமா தொழில் பண்றானாம்.. ஒரு குழந்தையும் இருக்காம்.. ஏதோ வாழ்க்கை வண்டிய ஓட்டிக்கிட்டிருக்கான்..

முதலாளியின் சுயநலத்தில் ஒரு பொதுநலமும் இருக்கத்தான் செய்கிறது!!
குறிப்பு.. இது சிறுகதையே இல்லன்னு யாரும் அடிக்க வராதீக.. இது சும்மா முயற்சிதான், எப்பிடியிருக்குன்னு சொல்லுங்க.. பிழைகள சுட்டிக்காட்டுங்க..

வழக்கம் போலத் திருடப் போகலாமில்லே..ஜோக்ஸ்!

"தினமும் காலையும், மாலையும் வந்து ஸ்டேசன்ல கையெழுத்து போட்டுட்டு போகணும் தெரியுதா?" "சரிங்கய்யா, அப்புறம் வழக்கம் போலத் திருடப் போகலாமில்லே ஐயா?"

"எந்த ஐட்டம் கேட்டாலும் இல்லைன்னு சொல்றே, அப்புறம் என்ன எழவுக்கு மெனுகார்டை கொடுத்தே?" "ஒவ்வொரு ஐட்டத்தோட பேரையும் சொல்லி, இல்லைன்னு சொன்னா எனக்கு வாய் வலிக்குமே சார்."

நீதிபதி: ஏம்பா. இவ்வளவு பெரிய திருட்ட நீ மட்டும் தனியாவா செஞ்ச? குற்றவாளி: ஆமா ஐயா. இப்ப காலம் கெட்டுக் கிடக்குது. யாரையும் நம்ப முடியல...

மனைவி: என்னங்க பட்டாசு வாங்கப் போறேன்னு சொல்லிட்டு.. வெடிச்ச பட்டாசை எல்லாம் பொறுக்கிட்டு வர்றீங்க? கணவன்: அந்தக் கடைக்காரன் பழைய பட்டாசைக் கொடுத்து ஏமாற்றிவிடுவான்னு சொன்னாங்க. அதனால்தான் ஒவ்வொரு பட்டாசையும் வெடிக்குதான்னு வெடிச்சுப் பார்த்து வாங்கிட்டு வந்திருக்கேன், எப்படி என் சாமர்த்தியம்!

ஸ்கூல் வாத்தியார நம்ம கிரிக்கெட் டீம் கோச்சா போட்டது தப்பாப்போச்சு!" "ஏன்?" "பிளேயர் சரியா விளையாடலைன்னா 'போய் உங்க அப்பா அம்மாவை கூட்டிட்டு வா'ன்னு சொல்றாரு!"

"இவர்தான் நம்ம புதிய சி.இ.ஓ. முதன்முதலா நம்ம ஆஃபீசுக்கு வந்துருக்காரு! ஸ்ரீநிவாசன் இவரை அழைச்சுட்டு போய் உட்கார வையுங்க!" "என்ன சார் இது? இவ்வளவு வயசு ஆனவருக்கு இன்னும் உட்கார கூடவா தெரியாது?"

"என்னடா ரொம்ப கவலையா இருக்கே?" "பின்ன என்னடா? அந்த பேங்க்ல லட்சக்கணக்கில் பணம் இருக்கு.. ஆனா அவசரத்திற்கு எடுக்க முடியலையே?" "ஏன் ஏடிஎம் கார்ட் தொலைஞ்சு போச்சா.. இல்ல செக் புக் இல்லையா?" "நீ வேற எனக்கு அந்த பேங்க்ல அக்கவுண்ட்டே இல்லடா"

மனைவி: புது டெலிபோன் டைரக்டரி எடுத்துக் கொண்டு ஒருவன் வந்துள்ளான்! கணவன்: அவனிடம் வேண்டாம்னு சொல்லு, நான் இன்னும் பழசையே படித்து முடிக்கவில்லை!

"ஏன் இத்தனை அவசரம் அவசரமாகப் பெயிண்ட் அடிக்கிறாய்?" "பெயிண்ட் தீர்ந்து விடுவதற்குள் அடித்துவிட வேண்டும் என்பதற்காகத்தான்."

கணவன்: குழந்தை ஏன் அழறான் டாக்டர் ஊசி போட்டாரா...? மனைவி: இல்லே... அவர்தான் சரியான குழந்தை டாக்டர் ஆச்சே இவன் தின்னுக்கிட்டு இருந்த பிஸ்கட்டை அவர் பிடுங்கித் தின்னுட்டார்....

"சென்சார் போர்டுல வேலை செய்யறவரைக் கல்யாணம் செய்துக்கிட்டது தப்பாப் போச்சு.. "ஏன்? "படுக்கையறையே இல்லாம வீடு கட்டியிருக்காரு..

"ஏன் சார் ஜோக் எழுதறேன்று சொல்றீங்க. ஆனா ஒரு ஜோக்குக்கு கூட சிரிப்பே வரலயே?" "பிறர் சிரிக்கும்படியான காரியத்தை செய்யாதன்னு எங்க பாட்டி அடிக்கடி சொல்வாங்க."

"போஸ்ட்மேன் மனைவிக்கு டெலிவரி ஆகியிருக்கு...." "அதுக்கென்ன....?" "குழந்தையோட வெயிட்டுக்கு ஏத்தா மாதிரிதான் ஆஸ்பத்திரிக்குப் பணம் கட்டுவேன்னு ஒரே தகராறு பண்றாரு..."

ஒருவர்: நேத்து ஆபீஸிலிருந்து வீட்டுக்குப் போகும்போது பக்கத்து வீட்டுக்குப் போயிட்டேன் மற்றவர்: அப்புறம்? ஒருவர்: களைப்பா வந்திருப்பீங்க... காபியோட வரேன்-னு குரல் கேட்டது. சரி, நம்ம வீடு இல்லைன்னு புரிஞ்சுக்கிட்டேன்..

 

ருவண்டா யுத்தம் - ஹோட்டல் ருவண்டா- நிஜ ஹீரோ.Paul Rusesabagina.

சின்ன வயதில் படித்துக்கொண்டிருக்கும் காலப்பகுதியில் தினமும் மாலை வேளையில் தொலைக்காட்சியில் செய்திகள் பார்ப்பது வழமை.. நாட்டு நடப்புகள்,உலக நடப்புகள், விளையாட்டுச்செய்திகளை தெரிந்து கொள்ளும் ஆர்வமே இதற்கு காரணம்.. இலங்கை ரூபவாஹினி அலைவரிசையில் மாலை 6.30 மணிக்கு தமிழ் செய்திகள் ஒளிபரப்பாகும்.. அதை தவறவிடுவதேயில்லை, அப்போதைய செய்திகளில் அடிக்கடி கேட்கப்பட்டு பழகிப்போன பெயர்தான் "ருவண்டா" காரணம் தினமும் கிரிக்கெட் ஸ்கோர் சொல்வது போல் இறந்தவர்களின் எண்ணிக்கை குறிப்பிடுவார்கள்.. காட்சிகளில் காட்டுவார்கள்.. ருவண்டா என்ற பெயர் குறிப்பிடாத உல்க செய்திகளே கிடையாது எனலாம்.. அப்போதெல்லாம் அதன் காரண காரியங்களை ஆராயுமளவுக்கு அனுபவமோ அறிவோ இருந்ததில்லை..

கொஞ்ச காலத்திற்கு பின் அந்த செய்திகள் மறக்கடிக்கப்பட்டது.. மிக நீண்ட நாட்களாக பார்க்க வேண்டும் என எண்ணிக்கொண்டிருந்த "ஹோட்டல் ருவண்டா" திரைப்படத்தை அண்மையில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.. அதன் பிறகே ருவண்டா யுத்தத்தின் கொடூரங்கள் மீண்டும் நினைவுக்கு வந்தது..யுத்தம் உக்கிரமடைந்த காலப்பகுதியில் தன் குடும்பத்தையும், அயலவர்களையும், குழந்தைகளையும்,வெளிநாட்டுக்காரர்களையும், எந்த இன மக்கள் தேடி தேடி கொல்லப்பட்டார்களோ அந்த இன மக்களில் கொஞ்சம் பேரையும்..மொத்தமாக 1200 பேர் அளவில், ஹோட்டல் மேனேஜராக பல சிக்கல்களுக்கு மத்தியில் தன் ஹோட்டலில் வைத்து காப்பாற்றிய ஒருவரின் உண்மைச்சம்பவத்தை அடிப்படையாக வைத்து இயக்கப்பட்டதே இந்த திரைப்படம்..

    Hotel Rwanda' - The Mille Collines Hotel இங்கு வைத்துத்தான் ஆயிரத்துக்கதிகமானோர் காப்பாற்றப்பட்டனர்..
இதை திரைப்படம் என்று சொல்வதைவிட நிஜக்காட்சிகளின் தொகுப்பு என்றே சொல்லலாம்.. அவ்வளவு யதார்த்தம் யுத்தத்தின் கொடூரங்களை கண்முன்னே கொண்டு வருகிறது.. அதன் பதறறத்தை நொடிக்கு நொடி பதிவு செய்திருக்கிறது..
அந்த காட்சிகளை திரைப்படத்துக்கென்று படமாக்கினார்களா.. அல்லது யுத்தம் நடந்த காலப்பகுதியில் ஒழிந்து நின்று படமாக்கினார்களா என்ற சந்தேகம் படம் பார்க்கும் போது உங்களுக்கும் வரலாம்.  அவ்வளவு மக்களை ஒன்றினைத்து ஒரு நிஜமான யுத்தகளம் போன்ற பிண்னனியை உருவாக்கி இப்படியொரு படத்தை எப்படி இயக்க முடிந்தது என வியந்து கொண்டிருக்கிறேன் அந்த வகையில் இயக்குனர் Terry George  மற்றும் திரைக்கதையாசிரியர்கள் George and Keir Pearson பாராட்டுக்குரியவர்கள்..

ஐ.நா பாதுகாப்பு படைகள் வந்து தங்களை காப்பாற்றி அழைத்துச்செல்வார்கள் என எதிர்பார்த்திருக்கையில் ஐ.நா படைகள் வந்து வெளிநாட்டவர்களான வெள்ளைக்காரர்களை மற்றும் அழைத்துச்செல்கையில்.. செஞ்சிலுவைச்சங்க ஊழியர், மேனேஜரைப்பார்த்து நீங்களெல்லாம் ஆபிரிக்கர்கள் கறுப்பர்கள் அதனால்தான் உங்களை அவர்கள் காப்பாற்றவில்லை என சொல்லுமிடம்.. ஐ.நா வின் பாரபட்சகொள்கைகளின் யதார்த்தம்.. அதன் பின் காயப்பட்டு உயிரைக்காப்பாற்றிக்கொள்ள ஓடி வருபவர்களை தன் ஹோட்டலுக்குள் அனுப்பி வைக்கும் காட்சி மனிதாபிமானத்தின் உச்சம்..இத்தனைக்கும் அந்த மேனேஜர் ஹுட்டு இனத்தை சேர்ந்தவர்.. அதாவது ருட்சி இனத்துகெதிராக இனவெறியாட்டத்தை நடத்திய இனத்தைசேர்ந்தவர்..

1990 ம் ஆண்டு முதல் சிறு சிறு சம்பவங்களாக நடைபெற்று வந்த உள்நாட்டுப்பிரச்சினை 1994 ம் ஆண்டே உக்கிரமடைந்தது.. 94 ம் ஆண்டு ஏப்ரல் 6 யில் ருவண்டா ஜனாதிபதி Juvénal Habyarimana கொல்லப்படுகிறார்.. இவர் பெரும்பாண்மை ஹுட்டு இனத்தைச்சேர்ந்தவர் என்பதால் பெரும்பாண்மை ஹுட்டு இனத்தவர்களால் சிறுபாண்மை ருட்சி இனத்தவர்களுக்கெதிராக தொடக்கப்பட்டதே இந்த இனவெறியுடன் சேர்ந்த கொலவெறி..அதாவது 100 நாட்களுக்குள் மாத்திரம் 800,000 மக்கள் கொன்றொழிக்கப்படார்களாம். இது இன்நாட்டு மொத்த சனத்தொகையில் பத்தில் ஒரு பங்காகும்..
                                            ருவண்டா ஜனாதிபதி Juvénal Habyarimana

இரண்டாம் உலகப்போர் நடந்த காலப்பகுதியில் யூதர்களுக்கு எதிரான இனவழிப்பை நடத்திய நாஸிகளிடமிருந்து Oskar Schindler என்ற ஜேர்மன் தொழிலதிபர்.. ஆயிரக்கணக்கான யூதர்களை காப்பாற்றியதை பதிவு செய்த Schindler's List திரைப்படம் மூலம் யூதர்கள் மத்தியில் Oskar Schindler பெருமைக்குறியவராக மாற்றப்பட்டாரோ அந்த வகையில் இந்த ஹோட்டல் ருவண்டா திரைப்படம் மூலம் தன் உயிரை பெரிதாக மதிக்காமல் ஆயிரத்துக்கும் அதிகமானவர்களின் உயிரைக்காப்பாற்றிய அதன் நிஜ ஹீரோ Paul Rusesabagina உலகெங்கிலுமுள்ள மனிதாபிமானத்தை நேசிப்பவர்களினால் உயர்வாக பார்க்கப்படுவார் என்பதில் சந்தேகமில்லை..
நிஜ ஹீரோ Paul Rusesabagina

இந்த திரைப்படம் பார்க்கும்போது அந்த மேனேஜராக நடித்த ஹீரோ மீது ஒரு ஈர்ப்பும் அவரின் நடவடிக்கைகளை பாராட்டும் மனநிலையும் உருவாகமல் இருக்க வாய்ப்பில்லை.. இது ஒரு உண்மைச்சம்பவம் ஆனபடியால் அதன் நிஜ ஹீரோ யார் என தேடிப்பார்க்கும் ஆர்வமும் உங்களுக்கு உண்டாகலாம்.. அந்த ஆர்வம் எனக்கு ஏற்பட்டது அதன் விளைவே இந்தப்பதிவு. உண்மையில் அவர் ஒரு ஹீரோதான் யுத்தம் உக்கிரமடைந்த காலப்பகுதியில் ஹோட்டலை மூடச்சொல்லி கிளர்ச்சியாளர்களும் அரசாங்கப்படைகளும் மிரட்டிய போதிலும் அவர்களுக்கு காசு கொடுத்து சமாளித்து ஆயிரத்துக்கதிகமான மக்களை தன் ஹோட்டலுக்குள் மறைந்து வைத்து பலநாட்களுக்கு உணவு கொடுத்து காப்பாற்றியவர் இவர்..ஒரு முறையாவது இவரை நேரில் சந்தித்து இவரை பாராட்ட வேண்டும் என மனது விரும்புகிறது.. இப்போது பெல்ஜியத்தில் வசித்து வருகிறாராம்.. தன் மனைவி பிள்ளைகளுடன்.
நிஜ ஹீரோ திரைப்பட ஹீரோவுடன்
                             
மனிதனை மனிதன் வேட்டையாடும் இன்றைய கொடூர உலகில் இவ்வாறான மனித நேயமுள்ளவர்கள் நிச்சயம் பாராட்டப்படவேண்டியவர்களே..

Song lyrics

Tamil,Sinhala,Hindi Song Lyrics