Airplane! (1980) உலகசினிமா!

முன்பெல்லாம் விமான பயணம் என்பது ஓர் ஆச்சர்யமான விடயம் நமக்கு. இப்போது வெளிநாட்டு வேலைவாய்ப்பு என்றானவுடன் விமான பயணமும் பஸ் பயணம் போன்றே ஆகிவிட்டது! ஆனாலும் நம்மில் இன்னும் நிறைய பேருக்கு வாழ்வில் ஒரு முறையாவது விமானத்தில் காலடி எடுத்து வைத்து வானில் பறந்திட ஆசை!! இருபதாம் நூற்றாண்டின் ஒரு மகத்தான கண்டுபிடிப்பு இந்த விமானம் என்று தயங்காமல் சொல்லலாம்.. பல ஆயிரம் கிலோ எடையைக்கொண்ட இரும்பையும்/பொருட்களையும் மனிதர்களையும் சுமந்துகொண்டு பறவை போல் உலகை சுற்றி வருகிறதென்றால் இந்த விமானம் ஆச்சர்யமானதுதான்!

நாம் பயணம் செய்து கொண்டிருக்கும் விமானத்தின் இரு விமானிகளுக்கும் நடு வானில் வைத்து விமானத்தை இயக்கமுடியாதளவுக்கு ஏதாவது உடல்நல குறைபாடு ஏற்பட்டால் தொடர்ந்து நாம் என்ன செய்யலாம்? அடப்பாவி நல்லாத்தானே பெயித்துக்கிட்டு இருக்கு எதுக்கு இப்பிடியொரு விபரீத கற்பனை உனக்கு அப்பிடின்னு கேட்கிறிங்களா.. இல்ல வெரி சிம்பிள் பரசூட்ட எடுத்து தொபுக்கீடீர்ன்னு குதிச்சிடுவோம்ன்னு சொல்றிங்களா? இப்படியொரு சீரியசான பிரச்சினையில் சிக்கிய விமானத்தைப்பற்றி நகைச்சுவையாக சொல்லியிருக்கும் படம்தான் இந்த AirPlane இது 1980 யில் வெளிவந்த படம்!

அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்சிலிருந்து சிகாகோவிற்கு ஒரு விமானம் புறப்பட தயாராயிருக்கிறது.! அவ்விமானத்தில் பணிப்பெண்ணாக Elaine Dickinson (Julie Hagerty) அவளை முன்பு காதலித்து பிரிந்து போன காதலனான டெக்சி டிரைவர் Ted Striker (Robert Hays) யும் அவ்விமானத்தில் புறப்படுகிறான அவளை மீண்டும் சந்திக்கும் நோக்கோடு. இரண்டு விமானிகள் உட்பட பயணம் இனிதே ஆரம்பமாகிறது! இதிலே ஒரு விமானியாக அமெரிக்காவின் பிரபல கூடைப்பந்து வீரர் கரீம் அப்துல் ஜப்பாரும் நடித்துள்ளார்.

பயணத்தின் போது எல்லோருக்கும் இரவுச்சாப்பாடு வழங்கப்படுகிறது. அதன்பிறகு ஒருவர் பின் ஒருவராக வாந்தியும் ஒரு வித மயக்கநிலை ஏற்பட்டு சுகயீனமடைகிறார்கள்! அந்த விமானத்தில் வைத்தியர் (Leslie Nielsen) ஒருவரும் இருப்பது தெரிய வரவே, அவர் சுகயீனமுற்றவர்களை பரிசோதித்து சாப்பாட்டில் வழங்கப்பட்ட ஒரு வகை மீன் நஞ்சானதே(food poisoning)   இதற்கு காரணம் என கண்டுபுடிக்கிறார்.! அந்த நேரம் அதற்குறிய மருந்துகள் கைவசம் இல்லாதலால் அவராலும் ஒன்றும் செய்ய முடியவில்லை! விமானிகள் இருவரும் அதே மீனையே உட்கொண்டதால் அவர்களுக்கும் ஏதாவது ஆகிவிடுமோ என திகைக்கிறார்கள்.

எதிர்பார்த்தது போலவே ஒருவர் பின் ஒருவராக இரு விமானிகளும் சுகயீனமடைகிறார்கள்.. அப்போது விமானமே நிலைகுலைய ஆரம்பிக்கிறது பயணிகள் எல்லோரிடமும் மரன பயம்! அப்போது Julie விமானநிலைய கட்டுப்பாட்டகத்தை தொடர்புகொண்டு நிலமையை விபரிக்கிறாள்.. உடனே அங்கிருந்து autopilot ஐ இயக்குமாறு கட்டளையிடப்படுகிறது.. இந்த autopilot எனப்படுவது ரோபோவைப்போன்ற ஒரு பொம்மை! விமானிகளால் முடியாத நேரத்தில் விமானத்தை தற்காலிகமாக இயக்குவதற்க்கு இவை பயன்படுகிறதாம். அதாவது குறித்த ஒரு திசையில் விமானத்தை செலுத்தவே இவை பயன்படும்.. இதனால் விமானத்தை தரையிறக்கவோ மேல் எழுப்பவோ முடியாதாம்! இது எனக்கு புது அனுபவம் இப்படத்தை பார்த்த போதே இந்த autopilot முறையை அறிந்துகொண்டேன்.. (இது உண்மையா பொய்யா தெரிந்தவர்கள் சொல்லுங்களேன்) இதன் பிறகு நீங்க பயணிக்கிற விமானத்தின் விமானிக்கு ஏதாவது குழப்பம்னா உடனே பரசூட் எடுத்து குதிச்சிடாம autopilot இருக்கான்னு துலாவிப்பாருங்க :-)

பிறகு Julie ஒவ்வொரு பயணியாக உங்களில் யாருக்காவது விமானத்தை இயக்க தெரியுமா என விசாரிக்கிறாள்.. அப்போது அங்கிருக்கும் அவளின் பழைய காதலன், முன்பு விமானப்படையில் வேலை செய்தது ஞாபகம் வரவே அவனின் உதவியை நாடுகிறாள். அவனும் முயற்சி செய்கிறேன் என ஒத்துக்கொள்கிறான் ஆனால் அவனுக்கு அதன் இய்க்கமுறைகள் சரியாக தெரியவில்லை காரணம் விமானப்படையில் அவன் சிறியரக விமானங்களை மட்டுமே இயக்கியுள்ளதாக கூறுகிறான்! பின்பு விமானநிலையத்தை தொடர்புகொண்டு, அவனுக்கு உதவ ஒரு கட்டளை அதிகாரி நியமிக்கப்படுகிறார்! அந்த கட்டளை அதிகாரி யாரென்றால் அவன் முன்பு பணிபுரிந்த விமானப்படையின் உயர் அதிகாரி ஏற்கனவே அவர்கள் இரண்டு பேருக்குமிடையில் ஆகாது!

இருவரும் முறுகல் நிலையிலேயே கட்டளைகளை பகிர்ந்து விமானத்தை இயக்குகிறார்கள்.. இப்படியாக பல இன்னல்களுக்கு மத்தியில் விமானியில்லாத அந்த விமானத்தை நாயகன்,நாயகி மற்றும் அந்த வைத்தியர் சேர்ந்து தரையிறக்குகிறார்கள் என்பதுதான் மீதிக்கதை! இப்படியொரு சீரியசான கதையில் ஒரு சீரியஸ் படமாக வந்திருக்கவேண்டியது இடையிடையே சில லூசுத்தனமான satirical  வகை நகைச்சுவை காட்சிகளால் இது நகைச்சுவை படமாகவே அடையாளப்படுத்தப்படுகிறது!  அதுவும் இதுவரை வெளிவந்த மிகச்சிறந்த நகைச்சுவைப்படங்களின் வரிசையில் முதல் பத்திற்குள்ளாம்!! இருந்தாலும் விமானம் தரையிறங்கும் நேரம் நெருங்கும்போது நம்மையும் தொற்றிக்கொள்கிறது அந்த பரபரப்பு! இதை எழுதி இயக்கியவர்கள் மூவர்  David Zucker, Jim Abrahams, and Jerry Zucker. வெறுமனே 3.5 மில்லியன் டாலரில் தயாரித்து 83 மில்லியன் டாலர் வசூல் செய்திருக்கிறார்கள்.  BAFTA விருது உட்பட ஏராளமான விருதுகளையும் பெற்றிருக்கிறது!

ட்ரெய்லர் பார்த்தாலே புரியும் இப்படத்தின் சில  காமெடிகளை!

7 comments:

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

Seen it a while ago. Nice screenplay and funny too

பொன் மாலை பொழுது said...

அந்த காதலர்கள் பிரிந்துபோவதன் காரணம், அவனுக்கு தன்னம்பிக்கை மிகவும் குறைவு அது அவளுக்கு பிடிக்காமல்தான் அவனை விட்டு பிரிந்து விடுகிறாள். ஆனாலும் அவள்மீது கொண்ட காதலால் ஏங்கி தவிக்கும் அவனுக்கு தன் திறமையின் மீது நம்பிக்கை உண்டாகும் படி செய்து மீண்டும் அவர்கள் ஒன்று சேர்வதே கதை. இதை நகைசுவையாக சொல்லியிருப்பார்கள். காமெடிப்படம் என்றால் சற்று லூசுத்தனம் இருக்கத்தான் செய்யும். எனினும் பார்த்து ரசிக்கலாமே! அப்படி ஒன்றும் மோசமான படம் இல்லையே. DVD கலக்ஷனில் இந்தப்படம் இருப்பதால் அவ்வப்போது பார்பதுண்டு.

NKS.ஹாஜா மைதீன் said...

உங்கள் விமர்சனத்தின் படி படம் நல்லாதானே இருக்கு!

ஹாலிவுட்ரசிகன் said...

நானும் இந்தப் படத்தைப் பற்றிக் நல்லவிதமாக் கேள்விப்பட்டேன்....இந்த மாதம் முடியட்டும்...டவுன்லோட் பண்ணிடலாம். :)

Riyas said...

@ அப்பாவி தங்கமணி

ஆமாம் நீங்க சொல்வது போல் நகைச்சுவை கலந்த சிறந்த திரைக்கதைதான்.

Riyas said...

@ Manickam sattanathan

இதை மோசமான படம் என்று சொல்லவில்லை ஆங்காங்கே வரும் சில லூசு காமெடிகளைத்தான் குறிப்பிட்டேன் மற்றபடி எனக்கும் இப்படம் மிகப்பிடித்திருந்தது. நீங்கள் சொன்ன கதைச்சுருக்கத்தை நான் எழுத தவறிவிட்டேன்..நன்றி வருகைக்கு!

Riyas said...

@NKS.ஹாஜா மைதீன் said...

ஆமாம் பார்க்ககூடிய படம்தான்! நன்றி.


@ஹாலிவுட்ரசிகன்

டவுன்லோட் செய்து பாருங்க உங்களுக்கும் பிடிக்கும்.

Pushpa 2 Tamil Song Lyrics

Peelingsu tamil lyrics puspa 2