தீக்குளியள்
————-
ஒருவர் நினைவை
ஒருவர் கொளுத்திக்கொண்டு
இருவரும் எரிவோம்
மெதுவாக
நான் மெழுகுத்திரியாக
நீ ஊதுவத்தியா
வேதனையை நான்
வெளிச்சப்படுத்துகிறேன்
நீ மணம் ஊட்ட
அணைத்தும் என்னை
மறந்துவிடும் வேதனைக்கு
உன் ஞாபகம்
சுற்றிக்கொண்டிருக்கும
கதவு
பித்தன்
கதவை
மூடிக்கொண்டும்
திறந்துகொண்டும்
இருந்தான்
ஏன் இப்படிச்
செய்கிறாய்?
என்று கேட்டேன
கதவு
திறப்பதற்கா?
மூடுவதற்கா? என்று
அவன் கேட்டான்
அவன் மேலும் சொன்னான்
கதவுகள்
சில நேரம்
இமைகளாகத்
தெரிகின்றன
சில நேரம்
பூ விதழ்களாக
மலர்கின்றன
சில நேரம்
உதடுகளாகின்றன
பயணம் முடிந்து
வீடு திரும்புகிறவனுக்கும்
சிறையில் கிடப்பவனுக்கும்
கதவு திறப்பது என்பது
ஒரே அர்த்தம் உடையதல்ல
கதவுகளுக்கும்
சிறகுகளுக்கும்
ஏதோ இனம் புரியாத
சம்பந்தம் இருக்கிறது
கதவின்
திறப்பிலும்
மூடலிலும்
கேள்வியும் பதிலும்
இருக்கிறது
கதவுகளில்
சந்திப்பும் இருக்கிறது
பிரிவும் இருக்கிறது
நாம்
உள்ளே இருக்கிறோமா?
வெளியே இருக்கிறோமா?
என்பதைக்
கதவுகளே தீர்மானிக்கின்றன
நாம்
கதவு எண்களில்
வசிக்கிறோம்
மூடிய கதவு
உள்ளே இருப்பவற்றின்
மதிப்பை
கூட்டுகிறது
நம்
வீட்டுக்கு மட்டுமல்ல
நமக்கும்
கதவுகள் உண்டு
நாம்
நமக்குள்ளேயே செல்லவும்
நம்மைவிட்டு வெளியேறவும்
ஜனனத்தில்
ஒருகதவு
திறக்கிறது
மரணத்தில்
ஒரு கதவு
திறக்கிறது
இரண்டிலும் நாம்
பிரவேசிக்கிறோமா
வெளியேறுகிறோமா
கதவுதட்டும்
ஓசை கேட்டால்
‘யார்' என்று
கேட்காதே
ஒரு வேளை அது
நீயாக இருக்கலாம்..
கொடுக்கல்
—————
கொடுக்கிறேன் என்று நினைப்பவனே!
கொடுப்பதற்கு நீ யார்?
நீ கொடுப்பதாக நினைப்பதெல்லாம்
உனக்குக் கொடுக்கப்பட்டதல்லவா?
உனக்கு கொடுக்கப்பட்டதெல்லாம்
உனக்காக மட்டும்
கொடுக்கப்பட்டதல்ல
உண்மையில் நீ கொடுக்கவில்லை
உன் வழியாகக்
கொடுக்கப்படுகிறது
நீ ஒரு கருவியே
இசையைப்
புல்லாங்குழல்
கொடுப்பதில்லை
இசை வெளிப்படுவதற்கு
அது ஒரு கருவியே
இயற்கையைப் பார்
அது கொடுக்கிறோம் என்று நினைத்துக்
கொடுப்பதில்லை
தேவையுள்ளவன்
அதிலிருந்து
வேண்டியதை
எடுத்துக்கொள்கிறான்
நீயும் இயற்கையின்
ஓர் அங்கம் என்பதை
மறந்துவிடாதே
கொடுப்பதற்குரியது
பணம் மட்டும் என்று
நினைக்காதே
உன் வார்த்தையும்
ஒருவனுக்குத்
தாகம் தணிக்கலாம்
உன் புன்னகையும்
ஒருவன் உள்ளத்தில்
விளக்கேற்றலாம்
ஒரு பூவைப் போல்
சப்தமில்லாமல் கொடு
ஒரு விளக்கைப் போல
பேதமில்லாமல் கொடு
உன்னிடம் உள்ளது
நதியில் உள்ள நீர்போல்
இருக்கட்டும்
தாகமுடையவன் குடிக்கத்
தண்ணீரிடம்
சம்மதம் கேட்பதில்லை
கொடு
நீ சுத்தமாவாய்
கொடு
நீ சுகப்படுவாய்
கொடு
அது உன் இருத்தலை
நியாப்படுத்தும
9 comments:
முதலும் கடைசியும் மிகவும் பிடித்தது...
நன்றி...
tm1
அருமையான கவிதைகள் நண்பா
ரசித்தேன் கவிக்கோ பற்றி சொல்லவா வேண்டும்.....
சிறப்பான கவிதைகளை தந்தமைக்கு நன்றி.
arumaiyaana thervu ....
nantri!
அருமையான பகிர்வு.
நன்றி.
தொகுப்பு சூப்பர் நண்பா...
கதவுதட்டும்
ஓசை கேட்டால்
‘யார்' என்று
கேட்காதே
ஒரு வேளை அது
நீயாக இருக்கலாம்..//
எனக்கு ரெம்ப பிடிச்சது :))
"பித்தன்" எனக்கு மிகவும் பிடித்த புத்தகம். அதிலிருந்தும் படைப்பை எடுத்தாள்ந்தது அருமை!
"பித்தன்" எனக்கு மிகவும் பிடித்த புத்தகம். அதிலிருந்தும் படைப்பை எடுத்தாள்ந்தது அருமை!
கவிகோ கவிதைகள் என்னை இங்கே கூடி வந்தது ...
கதவு எனக்கு பிடித்தது ..'
நன்றி
Post a Comment