மிகப்பிடித்த தமிழ் பாடல்கள் 2013

 2013 யில் வெளிவந்த பாடல்களில் என் தனிப்பட்ட ரசனையில் கவர்ந்த பாடல்களே இது. எந்த தரவரிசை அடிப்படையிலும் இடம்பெறவில்லை மேலும் குத்து,கானா பாடல்களும் இதில் சேர்த்துக்கொள்ளப்படவில்லை.

#ஆனந்த யாழை மீட்டுகிறாள்- தங்கமீன்கள்

படம் அவ்வளவுதூரம் பிடிக்காமல் போனாலும் யுவனின் இசையில் இந்தப்பாடலையும், பாடல் காட்சிகளையும் ரசிக்கலாம். மகளுக்கும் அப்பாவுக்குமான உறவைச்சொல்லும் பாடல் நா.முத்துக்குமாரின் அழகான வரிகளில். ஸ்ரீராம் பார்த்தசாரதி குரலை நீண்டநாட்களுக்குப்பின் பயன்படுத்தியிருக்கிறார் யுவன். (பாடல்கள் எந்த தரவரிசை அடிப்படையிலும் இடம்பெறவில்லை மேலும் குத்து,கானா பாடல்களும் இந்த பத்தினும் சேர்த்துக்கொள்ளப்படவில்லை.

#அழகோ அழகு - சமர்

 யுவனின் இசையில் நரேஷ் பாடிய ஓர் இனிமையான பாடல் பல இளசுகளின் பொதுவாக பெண்பிள்ளைகளின் மனம்கவர்ந்த பாடல். த்ரிஷா, சுனைனாவுக்காக விஷாலை மன்னித்து திரையிலும் பார்க்கலாம். படம் வெளிவர முன்பே முழு வீடியோ பாடலையும் பட பிரமோஷனுக்காக வெளியிட்டிருந்தார்கள். சமர் திரைப்பட பாடல்கள் 2012 யின் இறுதியில் வெளியாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.


#இன்னும் கொஞ்ச நேரம் இருந்தாத்தான் என்ன.. மரியான். 

 ரஹ்மானின் இசையில் வெளிவந்த மரியான் படத்தில் பாடல்கள் ஓரளவுக்கு கேட்கும் ரகம் என்றாலும். அவற்றில் இப்பாடல் கவர்ந்தது. சில பாடல்கள் கேட்கும் போது பிடிக்காது ஆனால் படத்தில் பார்க்கும் போது பிடித்துவிடுவதுண்டு. மரியான் பாடல்களும் அப்படியே, பார்வதிக்காகவேண்டியே பார்க்கலாம் அத்தனை அழகான முகபாவனையும் நடிப்பும் அந்த பெண்ணிடம். ரஹ்மான் குரலில் நெஞ்சே எழு மற்றும் சோனாபரியா பாடல்களும் படம்பார்த்தபின் பிடிக்க தொடங்கிவிட்டது.

#பார்க்காத பார்க்காத - வருத்தப்படாத வாலிபர் சங்கம் 

 டி.இமானின் இசையில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் எனும் மொக்கை காமெடி படத்தில் சில பாடல்கள் ஹிட்டாகியிருந்தன. அவற்றில் ஊதா கலரு ரிப்பன் இளைஞர்கள் மத்தியில் மிக பிரபலம். ஆனாலும், எனக்கு அதையும் தாண்டி இந்த மெலடி பாடல் மிகக்கவர்ந்தது. விஜய் ஜேசுதாசும் சூபபர் சிங்கர் பூஜாவும் பாடியிருக்கிறார்கள். பூஜாவின் குரல் வித்தியாசமாய் புதிதாய் அழகாய் ஒலிக்கிறது. புதுமுகம் ஸ்ரீதிவ்யாவுக்காக வேண்டியாவது திரையிலும் பார்க்கலாம்.

#யார் இந்த சாலையோரம் - தலைவா 

 ஜீ.வி.பிரகாஷின் இசையில் அவரே மனைவி சைந்தவியோடு சேர்ந்து பாடிய மிக இனிமையான மெலடிப்பாடல். சைந்தவியின் மெல்லிய குரல் எனக்கு மிக பிடிக்கும் அதுவும் ஜீவியின் இசையில் அவர் பாடிய அனைத்து பாடல்களும் அருமை. அதனோடு ஜிவியின் குரலும் இனிமையாகவே இருக்கிறது. முன்பு போல் அல்லாமல் ஜீவியின் பாடல்கள் அவ்வளவு சிறப்பாய் இல்லை


கடல் நான் தான் அலை ஓய்வதேயில்லை... 

வாரணம் ஆயிரம் படத்தில் இடம்பெற்ற அனல் மேலே பனித்துளியின் இன்னுமொரு வேர்சன். இது Suzanne D'Mello & சுதா ரகுநாதன் குரலில்தான்,அவர் குரலில்தான் என்னவொரு ஈர்ப்பு. ஹரிசை தவிர வேறு இசையமைப்பாளர்கள் ஏன் இவர் குரலை அதிகம் பயன்படுத்துவதில்லை! ஹரிசின் இசையில் இடம்பெறும் ஒருவித ஏக்கத்தோடு பாடும் பெண்குரல் பாடல்கள் ஹிட்டாகிக்கொண்டே வருவது வழமை. இவ்வாரான பாடல்களுக்கு பாம்பே ஜெயஸ்ரீ மற்றும் சுதா ரகுநாதன் குரல்கள் மிகப்பொருத்தம். பாடலை எழுதியர் மறைந்த வாலிப கவிஞர் வாலி என்னவொரு அருமையான வரிகள்.

#இரண்டாம் உலகம் பாடல்கள்

 வின்னைத்தாண்டி அன்பே வந்தாய்..

முன்பு கூறியது போல் இதுவும் ஹரிசின் வழமையான மெட்டுக்களில் ஒன்றுதான் ஆனாலும் ரசிக்கலாம் விஜய் பிரகாசின் குரலில். வரிகள் வைரமுத்து.

மன்னவனே என் மன்னவனே... 

சக்திஸ்ரீ கோபாலன், கோபால் ராவ் பாடிய பாடல் சக்திஸ்ரீயின் குரலில் என்னவொரு இனிமை வாவ். கேட்டுக்கொண்டேயிருக்கலாம். மேலும் இப்படத்தில் இடம்பிடித்த பனங்கல்லா விஷமுல்லா-தனுஷ் பாடல் மற்றும் கனிமொழியே-கார்த்திக் பாடிய பாடக் என் காதல் தீ -எஸ்.பி.பி பாடிய பாடல் எல்லாம் கேட்கும் ரகம்தான்.

#கூட மேல கூட வெச்சி கூடலூரு போறவளே..ரம்மி 

 இமானின் இசையில், வரவிருக்கும் ரம்மி என்ற படத்தில் இடம்பெற்ற ஓர் அழகான மெலடி.. பிரசன்னாவும் வந்தனா ஸ்ரீனிவாசனும் பாடியிருக்கிறார்கள். அண்மையகாலத்தில் அறிமுகமான பாடகிகளில் வந்தனாவின் குரல் மிகப்பிடித்தது. இப்பாடலை கேட்கும் போது இவரின் இன்னொரு பாடலான "ஒரு பாதி கதவு நீயடி" பாடல் ஞாபகத்திற்கு வருவதை தவிர்க்க முடியவில்லை. அழகான பாடல் வரிகளுக்கு சொந்தக்காரர் யுகபாரதி.

#என்னடி எனனடி ஓவியமே.. ஜன்னல் ஓரம்.

வித்யாசாகர் நீண்ட நாட்களுக்குப்பின் தமிழில் இசையமைத்த ஜன்னல் ஓரம் படப்பாட்ல்கள் ஓரளவு கேட்கும் ரகம். அதிலும் இந்தப்பாடல் நன்றாகயிருக்கிறது. திப்புவின் குரலை மிக நீண்டநாட்களுக்குப்பின் கேட்க முடிகிறது. மலைப்பிரதேச இயற்கை காட்சிகளை அழகாக படமாக்கியுள்ளார்கள் இப்பாடலுக்க்காக. மனிஷாவுக்காக இப்பாடலை பார்க்கலாம் விமலை பொறுத்துக்கொண்டால்

#அம்மாடி அம்மாடி- தேசிங்குராஜா

கொஞ்சும் குரலழகி ஷ்ரேயா பாடிய பாடல். மொக்கைப்படங்களில் சில முத்தான பாடல்கள் இடம்பெறுவது வழமை. அது போல இந்த தேசிங்குராஜாவிலும் ஒரு நல்ல பாடல் அதுவும் ஷ்ரேயா குரலில். சாதாரண பாடலும் இவரால் பாடப்படும் போது பிடிக்கவே செய்கிறது. விமலின் ரொமான்ஸ் கன்றாவியெல்லாம் ஷ்ரேயா,பிந்து மாதவிக்காக மன்னித்து பாடலை பார்க்கலாம் கேட்கலாம்.

Extra.. யாருக்கும் சொல்லாமல்-ஆல் இன் ஆல் அழகுராஜா

சோஷியல் அப்டேட்ஸ்.02122013

 இன்று ஐக்கிய அரபு இராச்சியத்தின் (UAE) 42 வது தேசிய தினமாகும்.



UAE யின் துபாய் நகரம் 2020 யில் EXPO நடாத்துவதற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது வாழ்த்துக்கள்.

தொழில் தர்மம் கொண்ட திருடன்.
சீனாவில் ஐபோன் (iPhone) கைத் தொலைபேசி ஒன்றை ஒருவரிடமிருந்து களவாடிய பிக் பாக்கெட் திருடன் ஒருவன், அந்தத் தொலைபேசியிலிருந்த தொடர்பு விபரங்கள் அனைத்தையும் அதன் உரிமையாளருக்கு அனுப்பிவைத்துள்ளான்.
அத்தோடு சேர்த்து தொலைபேசியின் சிம் கார்ட்-ஐயும் உரிமையாளருக்கு அந்தத் திருடன் தபாலில் அனுப்பிவைத்துள்ளான்.
தொலைபேசியில் பதிவுசெய்யப்பட்டுள்ள ஆட்களின் பெயர்கள் மற்றும் தொலைபேசி இலக்கங்கள் உள்ளிட்ட தொடர்பு விபரங்கள் அனைத்தையும் 11 பக்கங்களுக்கு கையால் எழுதி அவன் அனுப்பிவைத்துள்ளான்.
இப்படியான ஒருவன் என் வாழ்விலும் ஒரு முறை சம்பந்தப்பட்டுள்ளான். ஒரு முறை பெட்டாவிலுருந்து பம்பலப்பிட்டி செல்லும் வழியில் எனது பர்ஸ் கானாமல் போய்விட்டது.. அதில் ஆயிரம் ரூபாய் பணம் அடையாள அட்டை ,வங்கி ஏடிஎம் அட்டை, ட்ரைவிங லைசன் இன்னும் சில துண்டுகளும் இருந்தது. இனி அவவளவுதான்! என நினைத்திருந்த சமயம், இரண்டு நாளில் வீட்டு முகவரிக்கு ஒரு தபால் வந்தது. அதில் காசு தவிர மற்ற அனைத்தும் இருந்தது. இப்படியான மனசாட்சியுள்ள திருடன் சீனாவில் மட்டுமல்ல இலங்கையிலும் இருக்கிறார்கள். :-)

அபுதாபியின் அண்மைய மழை நாளில் என் மொபைலுக்குள் மாட்டிக்கொண்ட காட்சிகள்.




கண்களின் பார்வை அம்புகள் போலே!


எங்கெங்கு நீ சென்ற போதும்
என் நெஞ்சமே உன்னை தேடும்
ஆனந்த கீதம் ஆரம்பமாகும்
காலங்கள் யாவும் நம்மோடு பாடும்
பூங்காற்று தாலாட்டும் அன்பே அன்பே

நினைக்க தெரிந்த மனமே என்ற திரைப்படத்தில் இளையராஜா இசையில் கே.ஜே.யேசுதாஸ் & சித்ரா பாடிய ஓர் மனதை மயக்கும் பாடல் இது. வேலைப்பளு மற்றும் மனது சோர்வடையும் வேளைகளில் சில பாடல்கள் மனதை சாந்தப்படுத்தும். அவ்வகையான பாடல் வரிசையில் இதுவும் ஒன்று.

கண்களின் பார்வை அம்புகள் போலே
நெஞ்சினிலே பாய்வதும் ஏன்?
அம்புகள் மீண்டும் பாய்ந்திடும் போது
காயங்களும் ஆறியதேன்?
ஆறிடும் நெஞ்சம் தேறிடும் நேரம்
பிரிந்தது ஏனோ உன் உறவு
நெருங்கிடும் போதும் நீங்கிடும் போதும்
மயங்குவதேனோ என் மனது
இரு நெஞ்சின் துன்பம் இது காதல் தான்
அதுபோல இன்பம் எது கண்மணி
பூங்காற்று தாலாட்டும் அன்பே அன்பே

இளையராஜாவின் அருமையான மெட்டுக்கு அழகான வார்த்தைகளை சேர்த்திருக்கிறார் கவிஞர் வாலி (என நினைக்கிறேன்) பாடல் தொடங்கும் முன் வரும் ஆரம்ப இசை மிக மிக அழகு.

மாலை நன்நேரம் மாறிட வேண்டாம்
மாங்குயிலே மாங்குயிலே
காலங்கள் கூட மாறிட வேண்டாம்
கண்மணியே கண்மணியே
சூரியன் மேற்கினில் சென்றிடட்டும்
சந்திரன் அங்கே நின்றிடட்டும்
மேகங்கள் வானத்தில் நிலை பெறட்டும்
கடலினில் கூட அலை நிற்கட்டும்
உன்னோடு சேரும் ஒரு நேரமே
என்றென்றும் இங்கே நிலையாகட்டும்
பூங்காற்று தாலாட்டும் அன்பே அன்பே

கே.ஜே.யேசுதாஸ் மற்றும் சித்ரா ஜோடி சேரும் போது அப்பாடல் அநேக நேரங்களில் ஹிட்டாகிவிடுவதும் பாடல் மனதை கொள்ளை கொள்வதும் வழமை. இப்பாடலும் கேட்கும் நேரமெல்லாம் ஏதோ ஒரு பரவசம் தருகிறது.



வீண் செலவுகளும் ஆடம்பரமும்!


எனது தந்தை அடிக்கடி கூறும் விடயங்களில் ஒன்று, எந்த பொருளையும் வீணாக்ககூடாது வீணாக பயன்படுத்தக்கூடாது என்பதே.  எந்த பொருளையும் இலகுவில் தூக்கியெறிந்துவிட மாட்டார் ஒரு குண்டூசியானாலும் எடுத்து வைத்துக்கொள்வார் எப்போதாவது உபயோகப்படக்கூடும் என்ற எண்ணத்தில். அளவு கடந்த ஆடம்பரமும் அவருக்கு பிடிப்பதில்லை! இந்தப்பழக்கம் இன்றுவரை என்னிடமும் தொடர்கிறது! வாழ்க்கை கஷ்டங்களையும், வறுமையையும் புரிய வைத்து வழத்ததால், இன்று ஓரளவு வசதி வாய்ப்புகள் வந்த போதும் வீணான செலவுகளை எதிர்கொள்ள நேர்கையில் மனசு கொஞ்சம் வலிக்கத்தான் செய்கிறது.

அலுவலகங்களிலாட்டும் வெள்ளைத்தாள், டிஸு பேப்பர் போன்ற பொருட்களைகூட வீணாக பயன்படுத்துவோரைக்கண்டாலே ஒருவித கோபம் ஏற்படுகிறது. அவற்றை அறிவுறுத்த முடியாத நிலையில் மனதுக்குள்ளயே பொங்க வேண்டியிருக்கிறது. அப்படியே அறிவுறுத்தினாலும் அநேகரின் பதில் "இது கம்பனி சொத்துத்தானே உங்க வீட்டு சொத்து அல்லவே" என்பதுதான்! தனது வீட்டையும் தொழில் செய்யும் இடத்தையும் ஒன்றாக நினைத்து மதிக்காத வரை அவர்களின் தொழிலில் அபிவிருத்தி ஏற்படாதென்பது எனது நம்பிக்கை.

இன்றைய உலகமயமாக்கலின் சாபக்கேடுகளில் ஒன்று நாம் விரும்பியோ விரும்பாமலோ வீணான செலவுகளின் பக்கம் தள்ளப்பட்டுக்கொண்டிருக்கிறோம். சமூகமாக வாழவேண்டிய கட்டாயம் இருப்பதால் அவற்றை தவிர்த்து விடவும் முடிவதில்லை பெரும்பாலான நேரங்களில். ஆடம்பரமாக வாழ நினைத்து அழிந்து போனவர்கள் பலரை என் வாழ்க்கையில் நான் பார்த்திருக்கிறேன். வாழ்க்கையை ஆடம்பரமாக அமைத்துக்கொள்வதென்பது தவறல்ல. ஆனால், ஆடம்பரம் அளவுக்கு மீறி போகக்கூடாது தன்னுடைய நுகர்வு சக்திக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும்.

இன்று வெளிநாடுகளில் வேலைசெய்யும் பல இழைஞர்கள் உழைக்கும் பணத்தை ஆடம்பரத்துக்காகவும், கண்னை மயக்கும் பணக்கார மேல்தட்டு நுகர்வு பொருட்களுக்காகவும் செலவிட்டு மாதயிறுதியில் சிங்கில் டீக்கு கூட காசில்லாமல் சிங்கி அடிக்கிறார்கள். ஆசிய நாடுகளில், மேலைதேய நாட்டு முதலாளித்துவத்தினால் இநநாட்டு நடுத்தர மக்களின் பணத்தை கொள்ளை அடிப்பதற்காகவே உருவாக்கப்பட்டதே மெக்டொனல்ட், கே.எப்.சி போன்ற நவீன கண்னை மயக்கும் பாஸ் பூட் உணவகங்கள். இவைகளில் ஒரு கோழி துண்டு வாங்கும் காசிற்கு முழு குடும்பத்திற்கும் தேவையான கோழி வாங்கி சமைத்தோ பொறித்தோ இன்னும் சுவையாக சாப்பிடலாம்.

இப்பொழுதெல்லாம் இதுமாதிரியான உணவகங்களில் சாப்பிடுவதுதான் கௌரவம் என்றாகிவிட்டது.
நான் முன்பு எழுதிய குட்டி கவிதைகளில் ஒன்று நியாபகத்துக்கு வருகிறது.

கே எப் சி
கோழி சாப்பிட வேண்டும்
நீண்டநாள் ஆசை
நிறைவேறியது!
நீண்டநாளாய் வளர்த்த
வீட்டுச்சேவலை
விற்றதின் மூலம்!

இப்படித்தான் இருக்கிறது இன்றைய நிறைய பேரின் வாழ்க்கை முறை!

எங்கள் தந்தை எங்களை விட்டுப்பிரிந்து நான்கு ஆண்டுகள் கடந்துவிட்டது :-(

பாகிஸ்தானின் மிக மோசமான தொடர் தோல்வி!

ஐக்கிய அரபு இராச்சியத்தில் (UAE) நடைபெற்று முடிந்த பாகிஸ்தான் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான 5 ஒருநாள் போட்டிகளைக்கொண்ட தொடரில் பாகிஸ்தான் அணி 4-1 என்று படு தோல்வி அடைந்திருக்கிறது.தோல்விகள் என்பது சகஜமானதுதான். ஆனால், தோற்ககூடாத விதத்தில் தோற்பதுதான் மிக மோசமானது. அப்படியான ஒரு நிலையில்தான் பாகிஸ்தான் அணி உள்ளது.  

அனேகமான சந்தர்பங்களில் அவர்கள் தோற்கடிக்கப்படுவதில்லை அவர்களாகவே தோல்வியை உருவாக்கிக்கொள்கிறார்கள். முதல் போட்டியிலும் நான்காவது போட்டியிலும் நடந்தது இதுதான். வெற்றியின் விளிம்பிற்கு சென்று தோல்வியை சுவைத்தார்கள். எதிரணிக்கே ஆச்சர்யப்படவைக்கும் அவர்களுக்கு எப்படி  வெற்றி கிடைத்தது என்று! 
முன்னெப்போதும் இல்லாத வகையில் பாகிஸ்தானின் துடுப்பாட்டம் மிக மோசமாக இருக்கிறது. பந்துவீச்சு ஓரளவுக்கு பரவாயில்லை. UAE யில் விளையாடுவதென்பது அவர்களின் சொந்த நாட்டில் விளையாடுவது போன்றது அவ்வளவு பெரிய ரசிகர்கள் கூட்டம். அப்படியான ரசிகர்களை எரிச்சலடையாவைத்து ஏமாற்றியிருக்கிறது ஒட்டுமொத்த பாகிஸ்தான் அணி. எத்தனை ஆக்ரோஷ்மான சிறப்பான துடுப்பாட்ட வீரர்களை உருவாக்கிய அணியா இப்படி சொதப்பலான துடுப்பாட்டத்தை வெளிக்காட்டுகிறது.

ஒவ்வொரு அணியிலும் திறமையான வீரர்களின் ஓய்விற்குப்பின் புதிய வீரர்கள் வந்து அவ்விடங்களை நிரப்பி விடுகிறார்கள். இந்திய அணியை பொருத்தவரை சச்சின், கங்குலி,ட்ராவிட், சேவாக்கின் இடங்களை புதியவர்களான கோஹ்லி,ரோஹித்,தவான்,ரெய்னா,யுவராஜ் போன்றோர் நிரப்பி அணியை வெல்ல வைக்கிறார்கள். ஆனால் பாகிஸ்தான் அணியில் சயிட் அன்வர், இன்ஷமாம், மொஹம்மட் யூசுப், யூனிஸ் கான் போன்றவர்கள் விட்டுச்சென்ற இடங்களை நிரப்புவதற்கு சரியான வீரர்கள் இன்னும் அமையாமல் இருக்கிறார்கள். அவ்வப்போது ஒரு சில வீரர்கள் அபாரமாக சிறப்பாக ஆடி திறமையை வெளிப்படுத்தினாலும் தொடர்ச்சியாக பிரகாசிக்க தவறுகின்றனர். சிறப்பான ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களே அவர்களின் நீண்டகால தேவையாக இருக்கிறது.  

நசீர் ஜெம்சத், உமர் அக்மல், அசாத் சபீக் போன்றவர்கள் ஆரம்பத்தில் நம்பிக்கை தந்தாலும் தற்போது தொடர்ச்சியாக சறுக்குகிறார்கள். ஆனாலும் உமர் அக்மல் மேல் நம்பிக்கை இருக்கிறது அவரால் இதைவிட சிறப்பாக விளையாட முடியும் ஆனால் அவர் 3வது அல்லது 4வது வீரராக களமிறக்கப்பட வேண்டும். அதிகமான போட்டிகளில் அவர் வருவது அதிக விக்கட்டுக்களை இழந்து அணி இறுக்கமான நிலமைகளில் இருக்கும் போதுதான். அவ்வாறான நிலமைகளில் அவசர ஓட்டக்குவிப்பிற்கு சென்று ஆட்டமிழந்து செல்கிறார். ஜெம்சத் நல்ல டெக்னிக்கலான துடுப்பாட்ட வீரர்தான் என்றாலும் அவரின் துடுப்பாட்டத்தில் ஆக்ரோசமும் நம்பிக்கையும் இல்லை. 

உமர் அமீன்,அசாத் சபீக் போன்றவர்களுக்கு அணியில் இடம்கொடுக்க தேவையில்லை. ஹபீஸ், அப்ரிடி இருவரின் பந்துவீச்சு சிறப்பாக இருந்தாலும் துடுப்பாட்டம் மிக மோசமானது. இவர்களை ஒருநாள் அணியில் வைத்திருப்பதா துரத்துவதா என்பது 50/50 வாய்ப்புள்ளது அடுத்தது தலைவர்  மிஸ்பாவுல் ஹக். இவரின் நிலமைதான் பரிதாபம். அண்மைக்காலமாக தனியொருவராக போராடி வருகிறார்.. ஆனாலும் வெற்றிக்கு இது போதுமானதாக இல்லை. மிஸ்பாவின் தலைமைத்துவமும் துடுப்பாட்டமும் விமர்சனத்துக்குறியது. அவர் மேற்கொள்ளும் தடுத்தாடும் முறையானது இலகுவாக பெற்றுக்கொள்ளக்கூடிய வெற்றிகளை கடினமாக்குவதுடன் கடினமான வெற்றிகளை பெற முடியாமலே செய்து விடுகிறது. அவரின் தலைமைத்துவத்தின் கீழ் எப்போதும் ஆக்ரோசமாக விளையாடும் பாகிஸ்தான் அணி அந்த தன்மைகளை இழந்து எல்லோரும் அவர் போலவே ஒரு வித நிச்சயமற்ற தன்மையுடன் துடுப்பெடுத்தாடுவதை கான முடிகிறது. இவற்றுக்கெல்லாம் நடுவில் சொஹைப் மக்சூத் புதிய வீரர் இத்தொடர் மூலம் அறிமுகமாகியுள்ளார். அவரின் துடுப்பாட்டம் கொஞ்சம் நம்பிக்கையளிப்பதும் சிறப்பானதாகவும் இருக்கிறது. முதல் இரண்டு போட்டிகளில் இரண்டு அரைச்சதங்கள். 

தெண்ணாபிரிக்க அணிக்கும் தலைவர் வில்லியர்சுக்கும் வாழ்த்துச்சொல்லும் அதேவேளை அவரின் சிறப்பான தலைமைத்துவமும் அதற்கேற்ற பொறுப்பான துடுப்பாட்டம் மற்றும் களத்தடுப்பு பிறகு ஏனைய மூத்த இளைய வீரர்களின் ஒருங்கினைந்தே பங்களிப்பே இவ்வெற்றியை அவர்களுக்கு பெற்றுக்கொடுத்தது.


சவூதி நிதாகாத் சட்டமும், இந்திய முகாமைகளால் சுரண்டப்படும் தொழிலாளர்களும்.

சவூதி அரேபியா நிதாகாத் சட்டத்தை நடைமுறைப்படுத்த முயற்சிப்பதாக அறியமுடிகிறது நிதாகாத் சட்டம் என்பது, அனைத்துப் பணிகளிலும் பத்து சதவிகிதம் உள்நாட்டு மக்களே இருக்க வேண்டும் என்பதே அச்சட்டம். இந்தச்சட்டம் எல்லா துறைகளிலும் நடைமுறையில் எவ்வளவு தூரம் சாத்தியப்படும் என்ற சந்தேகம் இருந்தாலும் இச்சட்டம் வரவேற்க தகுந்ததாகும். காரணம், குறைந்தபட்சம் நிர்வாக முகாமை நடவடிக்கைகளிலாவது உள்நாட்டு பணியாளர்கள் அமர்த்தப்படும் போதுதான் வெளிநாட்டு (குறிப்பாக இந்தியா) நிர்வாக முகாமைகளால் அடிமட்ட தொழிலாளர் நலன் களில் மேற்கொள்ளப்படும் சுரண்டல்கள் குறைய வாய்ப்புள்ளது. அதிகமான வெளிநாட்டினரின் வேலை பறிபோகும் அபாயமும் இச்சட்டத்தினால் ஏற்படாமல் இல்லை.

சவூதி அரேபியாவில் எப்படியோ தெரியவில்லை குறிப்பாக இங்கே ஐக்கிய அரபு ராச்சியத்தில் (UAE) பெரும்பாலான தனியார் நிறுவனங்களின் நிர்வாக முகாமை பொறுப்புகள் வெளிநாட்டவரின் கையிலேயே உள்ளது. அதிலும் அதிகமாக இந்தியர்களிடம்! இப்படியான வெளிநாட்டு முகாமைகள் அவர்களின் சுயநலன் சார்ந்து மட்டுமே அதிகமான நேரங்களில் சிந்திப்பதினால் அடிமட்ட தொழிலாளர் நலன்களில் அக்கறை கொள்வதில்லை. சராசரியாக பார்க்கப்போனால் சிறுபாண்மையினராக இருக்கும் இந்த நிர்வாக முகாமையினரே நிறுவனத்தின் 90 வீதமான நலன்களை அனுபவிக்கின்றனர் பொருளாதார ரீதியாகவும் ஏனைய வசதி வாய்ப்புகள் மூலமாகவும். ஆனாலும் நிறுவனத்தில் பெரும்பாண்மையாக இருக்கும் கடினமான உடல் உழைப்பை வழங்கும் அடிமட்ட தொழிலாளர்கள்(அலுவலக ஊழியர்கள் உட்பட) 10 வீதமான நலன்களையே அனுபவிக்கின்றனர். இதே இடத்தில் உள்நாட்டு/வெளிநாட்டு நிர்வாகத்தினர் இருக்கும் பட்சத்தில் பக்கச்சார்பாக நடந்து கொள்ள முடியாமல் போகும் அதேவேளை எல்லோருக்கும் குறைந்தபட்ச நலன்களாவது கிடைக்க வாய்ப்புள்ளது. இவ்விடத்தில் இன்னுமொரு விடயத்தையும் குறிப்பிட வேண்டும் குறிப்பாக வெள்ளைக்கார ஐரோப்பிய தனியார் நிர்வாக முகாமைகள் தொழிலாளர்களின் நலன் சலுகைகள் விடயத்தில் ஓரளவுக்காவது நியாயமாக நடந்துகொள்வதை கவனிக்க முடியும்.

இந்திய நிர்வாக முகாமைகளில் குறிப்பாக கேரளாவைச்சேர்ந்த மலயாளிகளின் பொறுப்பிலிருக்கும் நிர்வாகத்தில் ஒவ்வொரு பிரிவினருக்கும் ஒவ்வொரு விதமாக பக்கச்சார்பாக நடந்து கொள்வது அப்பட்டமாக தெரியும். மலயாளிகள் என்றால் உயர்ந்த சலுகைகளும் பதவிகளும். தமிழ்நாட்டுக்காரங்களுக்கு, இலங்கையர்களுக்கு, பிலிப்பின் காரர்களுக்கு ஒரு விதமாகவும் பங்காளிகள்,பாகிஸ்தானியர்கள் என்றால் மிக மோசமாகவும் நடந்து கொள்ளும் புத்தியே அதிகமான மலயாளிகளிடம் உள்ளது.

எஜமானர்களுக்கு விசுவாசமும் இலாபமும் காட்ட வேண்டும் என்பதற்காக Cost Cutting என்ற பெயரில், கொதிக்கும் வெயிலில் கட்டிட வேலை, துப்பரவு வேலை இன்ன பிற வேலைகள் செய்யும் அடி மட்ட தொழிலாளர்களின் வயிற்றில் அடித்து அவர்களுக்கு நியாயமாக கொடுக்க்படவேண்டிய சம்பள உயர்வுகளை வழங்காமல் வஞ்சிக்கும் அநேக தனியார் நிறுவனங்கள் இங்குண்டு.. இவ்வாறான தொழிலாளர் பிரச்சினைகளுக்கு போகிற போக்கில் நிறுவன உரிமையாளர்களான் அரபுக்களை மட்டும் குற்றம்சாட்டிவிட முடியாது. காரணம் முதலீடு செய்வதும் உயர்மட்ட முடிவுகளை எடுப்பது மட்டுமே அவர்களின் கைகளில் இருக்கும்.. ஏனைய தொழிலாளர் விடயங்கள் அனைத்தும் நிர்வாக முகாமைகளின் கீழே வரும். ஆகவே முகாமைகள் தொழிலாளர் நலன் சம்பந்தமாக பரிந்துரைக்கும் பட்சத்தில் அரபுக்கள் அவற்றை நிராகரிக்க போவதில்லை என்பது நிச்சயம். மற்றப்படி நிறுவன உரிமையாளர்களான அரபுக்களால் ஒவ்வொரு தொழிலாளர்களினதும் பிரச்சனைகளை கண்டுகொளவதென்பது நடைமுறையில் சாத்தியமில்லாதது.

இச்சட்டம் முழுமையாக அமுல்படுத்தப்பட்டு பணியிடங்களுக்கு உளநாட்டவர்கள் அமர்த்தப்பட்டாலும், சொகுசாக வாழ்ந்து பழகிய அவர்களால் வெளிநாட்டவர்கள் போல் கடின உழைப்பை வழங்க முடியுமா என்பதும் சந்தேகமே. பிறகு அவர்களின் வேலையை செய்ய இன்னுமொரு வெளிநாட்டவர் அமர்த்தப்படலாம் அல்லது இருப்பவர்களின் பணிச்சுமை அதிகரிக்கலாம். இங்கே அரச அலுவலகங்களில் வேலை பார்க்கும் உளநாட்டவர்களை கவனித்தாலே இந்த உண்மை புரியும்.

நமக்கு பார்க்கான் முந்திரி தோப்புகள் (1986) மலயாளம்!


காதல் கதைகள் இல்லாமல் இந்திய சினிமா இல்லை என்னுமளவுக்கு இந்தியாவின் பல மொழிகளிலும் நூற்றுக்கணக்கான காதல் சினிமாக்கள் ஒவ்வொரு வருடம் வந்துகொண்டிருக்கின்றன. அவை எல்லாமே நம் மனதுகளில் தங்கிவிடுவதில்லை சிலவற்றைத்தவிர. அவ்வகையில் மிகச்சிறப்பாக நேர்த்தியாக சொல்லப்பட்ட காதல் கதையாக இன்றைக்கும் மலயாள சினிமாவில் கொண்டாடப்படும் படமே பத்மராஜனின் நமக்கு பார்க்கான் முந்திரி தோப்புகள். இது "நம்முக்கு கிராமங்களில் சென்னு ராப்பாக்காம்" ((Let us go and dwell in the villages)  என்ற K. K. சுதாகரனின் நாவலை தழுவிய கதையாகும்.

சோலமனாக மோகன்லால் வசதியாகயிருந்தாலும் ஒரு இயல்பான தனக்குப்பிடித்த சாதாரன வாழ்க்கை வாழ விரும்புபவர். வேறு ஒரு ஊரில் பெரியளவில் திராட்சை தோட்டம் வைத்திருக்கிறார் அதுவே அவரின் தொழில். (ஆனால் படத்தில் முந்திரி தோட்டம் என்று சொல்லப்படுவது ஏன் என்று புரியவில்லை) அவ்வப்போதுதான் வீட்டிற்கு வருவார். இரவு வந்து அதிகாலையே சென்றுவிடுவார். பாசத்தை பொழியும் அம்மாவும் இருக்கிறார். 

ஒரு முறை வீட்டிற்கு வரும்போது பக்கத்து வீட்டிற்கு புதிதாக வந்த குடும்பத்திலுள்ள சோபியா (ஷாரி) கண்ணில் படுகிறார். வழமையாக அதிகாலையே புறப்படுபவர் இம்முறை சில நாட்கள் தங்கிச்செல்ல தீர்மானிக்கிறார். மெதுவாக அவரிடம் பேச்சுக்கொடுக்கிறார். அப்படியே அவருக்குள் காதல் மலர்கிறது. காதலை தெரிவிக்கும் இடமும் தெரிவிக்கும் விதமும்தான் இப்படத்தின் ஹைலைட்! பைபிளில் உள்ள வாசகம் ஒன்றின் மூலம் தன் காதலை சோபியாயிடம் தெரிவிக்கிறார். (பைபிளில் உள்ளதாகவே படத்தில் சொல்லப்படுகிறது- விக்கியாபீடியாப்படி The title of the film and novel is based upon a passage from Biblical book of The Song of Solomon or Song of Songs, Chapter 7:12: "ஆனால் அவ்வாறானதொரு வசனமே அந்த புத்தகத்தில் இல்லையென்ற விமர்சனங்களும் உண்டு. ஒரு முறை தன்னுடைய முந்திரி தோப்பிற்கு அழைத்துச்சென்று சுத்திக்காட்டுகிறார்.
இதுதான் அந்த வசனம். 

Varu priyae , namukk graamangaLil chennu raappaarKaam
athikaalaththezhunnaet munthirithoettangaLil poey
munthirivaLLi thaLirththupooviTarukayum
maathaLanaaranga pookkukayum cheythoyennum noekkaam
avidevachchu njan ninakkente prEmam tharum

வா ப்ரியே நமக்கு கிராமங்களுக்கு சென்று காலைப்பொழுதை ரசிக்கலாம் அதிகாலையில் எழுந்து முந்திரி தோட்டங்களில் பூக்கள் பூத்து விரிவதையும் கனிகள் உண்டாவதையும் கானலாம் அங்கே வைத்து எனது காதலை உனக்கு தருவேன். என்ற அர்த்தம் தருவதாகவே அது அமையும் (மிகச்சரியான அர்த்தம் அல்ல)

ஆனால் சோபியாவின் குடும்ப நிலையோ வேறுவிதமானது அவருக்கு தந்தையில்லை அவரின் தாயின் கனவராக திலகன்.(step father) சோபியா வேலைக்கு போவதோ வெளியில் போவதோ அவருக்கு பிடிப்பதில்லை அவரின் அடக்குமுறைகளை அனுபவித்துக்கொண்டும் வீட்டு வேலைகளை தனியாளாக கவனித்துக்கொண்டும் வாழும் கொடுமையான வாழ்க்கை சோபியாவினுடையது. தன்னுடன் வேலை பார்க்கும் ஒருவருக்கு இரண்டாம் தாரமாக திருமணம் முடித்து வைக்கவும் திட்டமிடுகிறார் திலகன். இவற்றை தட்டிக்கேட்க ஷாரியின் தாயாரால் முடிவதில்லை.

இதற்கு நேர்மாறானது சோலமன் பாத்திரம் வாழ்க்கையை அனுபவிக்க வேண்டும் என்ற நினைப்பில் வாழும் ஓர் சுதந்திர இழைஞன். மோகன்லாலின் நடிப்பை பற்றி சொல்லவும் வேண்டுமா.. அசால்ட்டாக பொருந்திப்போகிறார் இயல்பான அவர் உடல்மொழி மூலம். திலகனின் நடிப்பைப்ப்ற்றியும் இங்கே சொல்லியாக வேண்டும் என்னவொரு வில்லத்தனமான நடிப்பு. ஒரு முறை குடித்துவிட்டு அநாகரீகமாக நடக்கும் திலகனுக்கு  சோலமன் அடித்தும் விடுகிறார். அப்பொழுதிலிருந்து இருவருக்கும் பகை உண்டாகிறது.

ஒரு முறை சோபியா வீட்டில் தனிமையில் இருக்கும் போது யாரும் எதிர்பாராத ஓர் சம்பவம் நடைபெறுகிறது அதாவது தான் பெறவில்லையென்றாலும் சிறுவயது முதல் மகளாக நினைத்து வளர்த்த பெண்னையே வன்புணர்வு செய்து விடுகிறார் அப்பா திலகன். மிகவும் அதிர்வலையை ஏற்படுத்தும் காட்சியிது. பின்பு சோலமன்-சோபியா காதல் என்னவானது என்பதே மீதிக்கதை! மிகச்சாதாரன ஒரு காதல் கதையை பத்மராஜனின் மிகத்திறமையான திரைக்கதை மூலம் ஈர்க்க வைக்கிறார். இப்படத்தின் ஒவ்வொரு காட்சிகள் வசனங்கள் பற்றி நிறைய சிலாகிக்கலாம். ஜோன்சன் மாஸ்டரின் இசையும் இப்படத்திற்கு இன்னுமொரு பலம்.. அருமையான பின்னணி இசை மற்றும் பாடல்கள் ஜேசுதாசின் குரலில் இரு பாடல்கள் அருமை. இங்கே கேட்கலாம்..


தங்க மீன்களும் ஹை கிளாஸ் நாயும்!

வணிக சினிமாவின் சமரசங்களுக்கு உட்படாமல் தனது விருப்பம் போல் திரைப்படங்கள் உருவாக்கும் ராம் என்ற படைப்பாளியை பாராட்ட துணிந்தாலும், அவரின் படைப்புகள் அந்த பாராட்டுக்களுக்கு உரித்தானவைதானா என்ற கேள்வி தங்கமீன்கள் பார்த்து முடிந்ததும் மனதில் தோன்றியது. இவரின் சினிமாக்களை யதார்த்த சமகால சினிமா என்ற வரையறைக்குள் சேர்க்க முடியுமா? லூசுத்தனமான கொள்கை வாதியாக இருப்பதுதான் யதார்த்தமா? கற்றது தமிழிலும் இதே பிரச்சினை! தங்கமீங்கள் பார்த்தபின்பும் உங்களுக்கு என்னதான் பாஸ் பிரச்சினை என்ற கேட்க தோன்றுகிறது. உலக மயமாக்கலை ஏற்றுக்கொள்ளவும் முடியாமல் அவற்றிலிருந்து ஒதுங்கியும் இருக்கவும் முடியாமல் தவிப்பதே இவரின் பிரச்சினை!

பெற்றவர்களுக்கு அவர்கள் பிள்ளைகள் பாசத்துக்குரியவர்கள்தான் அதில் தப்பில்லை. எவ்வளவு வேனும்னாலும் அன்பு காட்டலாம் அவர்களுக்காக உழைக்கலாம், ஆனால் அவற்றுக்கெல்லாம் ஒரு வரையறை கிடையாதா? பாடசாலை பீஸ் கட்டவே காசில்லாதவனுக்கு எதற்கு 25000 ரூபா பெறுமதியான ஹை கிளாஸ் நாய். குழந்தைகள் ஆசைப்பட்டு கேட்கும் அனைத்தையும் வாங்கி கொடுக்கத்தான் முடியுமா இல்லை கட்டாயமாக வாங்கி கொடுக்கத்தான் வேனுமா? புரிகிற விதத்தில் எடுத்துச்சொல்வது பெற்றோர்களின் வேலையல்லவா அவ்வாறு சொன்னால் குழந்தைகளுக்கு புரியாமலா போய்விடும்.. விமான நிலையத்தில் வைத்து தங்கையிடம் நாய் வாங்க காசு கேட்டு வாதிடுவது முட்டாள்தனமில்லையா? தங்கை சொல்வதிலும் நியாயம் இல்லாமல் இல்லையே.விளம்பரம் போடும் போது அதன் பெறுமதியை போட்றானா, இது பணக்காரர்களுக்கு மட்டுமான விளம்பரம் என போட்றானா என்ற வாதமெல்லாம் எடுபடவேயில்லை ராம்.

குழந்தைகளுக்குத்தான் அவை புரிவதில்லை பெற்றவர்களுக்குமா அவர்களுக்கு எது வாங்கிகொடுக்கனும் எதை தம்மால் நுகர முடியும் என புரிவதில்லை! தான் எவ்வளவு கஷ்டப்பட்டாலும் பரவாயில்ல பிள்ளைகளுக்கு அக்கஷ்டம் தெரியக்கூடாது என நினைப்பதெல்லாம் இன்றைய காலத்துக்கு சரிப்பட்டு வராது. குடும்ப கஷ்டமும் வறுமையும் அவர்களுக்கும் புரிய வேண்டும் அவர்களையும் அதற்கு பக்குவப்படுத்த வேண்டும்.. அப்போதுதான் அவர்களின் எதிர்காலம் சிறப்பாக இருக்கும். சிறுவயது முதலே கஷ்டம், துனபம், வறுமை என்பதெல்லாம் என்னவென்று தெரியாமல் வளர்த்துவிட்டு பிற்காலத்தில் அவர்கள் அதற்கு முகம் கொடுக்க நேரிடும் போது வாழ்க்கையே வெறுத்துப்போய்விடாதா? 

பிள்ளைகளை அவர்கள் இஷ்டத்துக்கு வளர்க்க வேண்டும் பெற்றோரின் ஆசைகளை அவர்கள் மேல் திணிக்க கூடாதென்பதெல்லாம் பேசுவதற்கு கேட்பதற்கும் நல்லாயிருந்தாலும் நடைமுறை வாழ்க்கைக்கு அவை ஒத்து வருவதில்லை. தானாக முடிவெடுக்கும், தான் எதுவாக ஆகவேண்டும் என்ற நிலைக்கு பிள்ளைகள் வந்தபிறகு அவர்களின் முடிவுகளுக்கு மதிப்பளிப்பதில் பிரச்சினையில்லை. ஆனால் குழந்தைகள் என்றும் பெற்றோர்களின் வழிகாட்டுதலிலேயே வளர்க்கப்படவேண்டியவர்கள். Bashu என்ற ஈரான் படத்தில் வறுமையான குடும்பமொன்றில் தாயுடன் ஒரு 10 வயது சிறுவனும் 5 வயது சிறுமியும் வயலில் வேலை செய்வது போலவும் சந்தைக்கு பொருட்கள் சுமந்து செல்வது போலவும் காட்டிருப்பார்கள் அதுதானே யதார்த்தம். 

கடைசியில் இங்க சுத்தி அங்க சுத்தி தனியார் பாடசாலையில் எதற்கெடுத்தாலும் பீசு புடுங்குகிறார்கள், அரசாங்க பாடசாலையில் சேர்த்துவிடலாம் என்ற முடிவுக்கு வரும்போது இதுக்குத்தானா இவ்வளவு அலட்டல் இதை நேரத்தோடயே செய்திருக்கலாம்ல என்றே கேட்க தூண்டுகிறது..ராம் நடிப்பில் ஏதோ ஒரு செய்ற்கைத்தனம். ராமின் மனைவியாக நடித்தவர் நன்றாக நடித்திருக்கிறார்,, செல்லம்மாவின் தோழியாக வரும் அந்தக்குட்டிபெண்ணின் நடிப்பும் வசன உச்சரிப்பும் க்யூட். செல்லம்மாவின் நடிப்பைப்பற்றி சொல்ல தெரியவில்லை. அது மிகை நடிப்பா, இல்லை அந்த பாத்திர தண்மை அதுதானா? ஆனாலும் சில இடங்களில் அப்பாவும் மகளும் எரிச்சல்படுத்துகிறார்கள். படிப்பு விஷயத்தில் மந்தம் என தெரியும் செல்லம்மா ஏனைய விடயங்களில் தெளிவாகத்தானே இருக்கா..  படிப்பில் மந்தபுத்தி உள்ள சிறுவனைப்பற்றிய பேசிய Tare Zameen Per வும் தன் குடும்பத்திற்காய் கஷ்டப்படும் குடும்ப தலைவன் பற்றி பேசிய  ஈரான் படமான The Song of sparrows ஏற்படுத்திய தாக்கத்தில் சிறிதளவேனும் தங்கமீன் கள் ஏற்படுத்தவில்லை.




மலயாளத்தின் ஐந்து சுந்தரிகள்!


மலயாளத்தில் அண்மையில் வெளியான ஐந்து சுந்தரிகள் என்ற படத்தில் 5 இயக்குனர்கள் 5 வெவ்வேறு சிறுகதைகளை 5 குறும்படங்களாக உருவாக்கி ஒரு முழுநீள திரைப்படமாக தயாரித்திருக்கிறார்கள். இந்த 5 கதைகளும் வெவ்வேறு சூழலில் நிகழ்பவை இவற்றுக்குள்ள ஒரேயொரு தொடர்பு. 5 கதைகளும் 5 பெண்களை மையப்படுத்தி சொல்லப்படுவதால் 5 சுந்தரிகள் என்று தலைப்பிட்டிருக்கிறார்கள். இதற்கு முன்பும் இவ்வாறு 10 சிறுகதைகளை 10 இயக்குனர்களை வைத்து இயக்கி கேரளா கேபே என்றொரு திரைப்படம் தயாரித்திருந்தார்கள் மலயாளத்தில்!

இந்த ஐந்து கதைகளில் இரண்டு கதைகள் என்னை மிகவும் கவர்ந்தது. முதலாவது சேதுலக்ஷ்மி என்ற கதை. நம் சமூகத்தில் வாழும் வக்கிரம் பிடித்த காமக்கொடூரன்களால் நம் சின்னஞ்சிறிய குழந்தைகள் கூட எவ்வளவு தூரம் பாதிக்கப்படுகிறார்கள், வதைக்கப்படுகிறார்கள் என்பதை மிக தத்ரூபமாக சொல்லியிருக்கிறார்கள் இக்கதையின் மூலம். ஒரு 9-10 வயதுடைய ஒரே வகுப்பில் படிக்கும் ஏழ்மையான சிறுவனும், சிறுமியும் விளையாட்டுத்தனமாக ஒரு ஜோடி புகைப்படம் எடுக்க தீர்மானித்து ஒரு ஸ்டூடியோவுக்குச்சென்று புகைப்படம் எடுத்துக்கொள்கிறார்கள். எல்லாம் முடிந்து, மற்ற நாள் 20 ரூபாய் கொண்டு வந்து புகைப்படத்தை எடுத்துச்செல்லுமாறு கூறுகிறான் ஸ்டூடியோகாரன். அப்போதுதான் இருவரும் முழிக்கிறார்கள் இதற்கு இவ்வளவு தேவையா என்று, அவர்களிடம் அவ்வளவு காசில்லை!

அடுத்த நாள் இருவரிடமுள்ள சில்லரைகளை பொறுக்கி ஆறு ரூபா சொச்சமும் இரண்டு முட்டைகளையும் கொடுத்து இவ்வளவுதான் எங்களால் முடிந்தது புகைப்படத்தை தந்துவிடும்படி கேட்கின்றனர். அதற்கு அவன் ஒத்துக்கொள்ளவில்லை. அதற்குப்பகரமாக அந்தச்சிறுமியை தனியாக புகைப்படம் எடுத்துக்கொள்ள அழைக்கிறான். அதற்கு உடன்படாவிட்டால் வீட்டிலும் பாடசாலையிலும் வந்து சொல்லப்போவதாக அச்சுறுத்துகிறான்.அதன் பிறகு அதனையே சாக்காக வைத்து அந்தச்சின்னஞ்சிறு சிறுமியை பல வகைகளிலும் துன்புறுத்துகிறான் அந்த வக்கிரம் பிடித்த மிருகம்.படம் பார்க்காதவர்களுக்காக முழுக்கதையையும் இங்கே சொல்ல முடியவில்லை. காமம் ஒரு அழகான உணர்வு அதை தகுந்த முறையில் பயன்படுத்துபவர்களுக்கு! ஆனால் அவ்வுணர்வே வெறிபிடித்தவர்கள் மனங்களில் தோன்றும் போதுதான் பிரச்சினை ஆரம்பிக்கிறது. இதில் அந்த சிறுமியாக நடித்த அனிகா கண்ணுக்குள்ளயே இருக்கிறார். முகபாவனைகளும் நடிப்பும் கிளாஸ் ரகம். அதுவும் அந்த இறுதிக்காட்சியில் கண்கலங்கியபடியே பார்த்துக்கொண்டு செல்லும் காட்சி மனதை ஏதோ செய்துவிட்டது. இதை இயக்கியிருக்கிறார் சைஜுகாலித். எம் முகுந்தனின் சிறு கதையை தழுவி. ஸ்டூடியோ காரனாக ஆரண்யகாண்டம் சோமசுந்தரம் நல்ல நடிப்பு பார்வையாளர்களின் வெறுப்பை சம்பாதிக்கிறார் வில்லத்தனமான நடிப்பின் மூலம்.
இரண்டாவது "குள்ளண்ட பார்யா" என்ற கதை. ஒரு காலணிக்கு புதிதாக குடிவரும் குள்ளமான கனவனையும் உயரமான மனைவியையும் அங்கே வசிக்கும் அயலவர்கள் எப்படி நோக்குகிறார்கள் என்பது பற்றிய கதை! கதை முழுவதையும் அந்தக்காலணியிலேயே மாடியில் வசித்துக்கொண்டு அக்கம் பக்கத்தில் நடப்பதெல்லாம் கவனித்துக்கொண்டிருக்கும் காலுக்கு முடியாமல் வீல்சேயாரில் இருக்கும் துர்கர் சல்மானின் பார்வையிலும் குரலிலுமே நகர்த்தியிருப்பது அழகு. கதை ஆரம்பத்திலேயே அங்கே வசிப்பவர்களின் பாத்திர குணவியல்புகளை சொல்லிவிடுகிறார்கள்.

தமக்குள் ஆயிரம் குறைகளையும், அழுக்குகளையும் வைத்துக்கொண்டு மற்றவர்களின் குறைகளை தோண்டிக்கொண்டிருப்பதும் மேலோட்டமாக எதையாவது பார்த்துவிட்டு ஒருவரின் நடத்தையையும் உறவைவையும் கொச்சைப்படுத்துவது எவ்வளவு அபத்தமானது என்பதை முகத்தில் அறைந்தாற்போல் சொல்கிறது இக்கதை. உலகம் வெளித்தோற்றத்தில் நாகரீகம் அடைந்ததாக தோன்றினாலும் மனித மனங்களும் நடத்தைகளும் இன்னும் அநாகரீகமானதாகவும் வக்கிரமானதாகவுமெ இருப்பதை மிக அழகாக உணர்த்தியது இக்கதை. இவ்வாறான கதைகளை தேடி நாம் வெளியில் அலையவேண்டியதில்லை நாம் வாழும் சமூகத்திலும் நடந்துகொண்டுதானிருக்கிறது. படம் பார்ப்பவர்கள் சுவாரசியம் கருதி இதன் கதையை முழுதும் இங்கே சொல்லமுடியவில்லை. இதை இயக்கியிருப்பவர் அமல் நீராத். அருமையான இயக்கம் இது சீன சிறுகதையொன்றை தழுவி எடுக்கப்பட்டிருக்கிறது.படத்தின் சில காட்சிகளும், இசையும் உலகப்படங்களிலிருந்து சுட்டவை என்ற குற்றச்சாட்டும் உண்டு! துல்கர் சல்மான் மூலம் கதை சொல்லப்படும் உத்தி மிககவர்ந்தது.
Kullanta Bharya Scene

மற்றைய கதையான "இஷா"  சமிர் தாஹிர் இயக்க இஷா சர்வானி மற்றும் நிவின் போலே நடித்தது இதுவும் நல்ல சஸ்பென்ஸ் உள்ள சுவாரசியமான கதை.
Esha Scene

மற்றையது "கெளரி" என்ற கதை ஆசிக் அபு இயக்க காவ்யா மாதவன்.பிஜு மேனன் நடித்திருக்கும் கனவன் மனைவி காதல் பற்றிய கதை. இதை குளிரான மலைபிரதேசத்தில் படமாக்கியிருக்கிறார்கள் நல்ல இயற்கை விருந்து.
Gowri Scene

இறுதியாக "ஆமி" என்ற கதை அன்வர் ரஷீத் இயக்க பஹத் பாசில்,ஹனி ரோஸ், அஸ்மிதா சூட் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். பஹத் பாசிலின் மலப்புரத்திலிருந்து கொச்சிக்கான இரவுப்பயணத்தின் போது நிகழும் நிகழ்வுகள்தான் கதை இதுவும் ஒரு அருமையான கதையே இயக்கம் மற்றும் பஹத்தின் நடிப்பு அருமை!
Aami Scene

இப்படி பல கதைகளை கோர்த்து ஒரு திரைப்படமாக எடுப்பதை சினிமாவாக ஏற்றுக்கொள்ள முடியாது என ஒரு சிலர் கூறினாலும். சினிமா என்பது ஒரு சமூக ஊடகம் என்ற அடிப்படையில் அது வெறுமனே ஆபாசமான தெருக்கூத்தாகவோ வன்முறையாகவோ இருப்பதை விட இப்படியான நல்ல அனுபவங்களை தரும் கதைகளை கோர்த்து சினிமாவாக மாற்றுவதில் எந்தக்குறையும் இல்லை என்றே தோன்றுகிறது இப்படியான படைப்புகள் தமிழிழும் வரவேண்டும் என்பதே என் அவா!

555 சொதப்பலான நல்ல சினிமா!

இப்போதெல்லாம் தமிழ்சினிமாவில் மிக அரிதாய்த்தான் சுவாரஷ்யமான வித்தியாசமான கதையம்சம் கொண்ட திரைப்படங்களை கான முடிகிறது! இப்பொழுதெல்லாம் அதீதமாய் காதலை போற்றும் படங்களையோ, பஞ்ச் வசனம் பேசிக்கொண்டு 100 ரவுடிகளை தனியாளாய் போட்டுத்தாக்கும் ஹீரோயிச சண்டை படங்களையோ கானும் போது ச்சும்மா காமெடி பண்ணாம போங்க பாஸ் என்றே சொல்லத்தோன்றுகிறது அவ்வளவுக்கு அவ்வகையான சினிமாக்களை திரும்ப திரும்ப பார்த்து அலுத்துபோய்விட்டது.

அண்மையில் வெளியான 555 என்ற படம் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. இதுவும் ஒரு சாதாரண காதல் + சண்டை படம்தான்! ஆனாலும் அதை சொன்ன விதத்தில்தான் இயக்குனர் சசி ஜெயித்திருக்க்கிறார். ஆனால் இப்படத்தைப்பற்றி நிறையபேர் அலட்டிக்கொள்ளவில்லை என்பதுதான் உண்மை. இதே கதையை ஒரு பிரபல இயக்குனர் இயக்கியிருந்தால் இதைவிட நன்றாக பேசப்பட்டிருக்குமோ என்னவோ.! என்னைப்பொருத்தவரையில் இந்தப்படம் எனக்குப்பிடித்திருந்தது ஆரம்பம் முதல் இறுதிவரை நல்ல சுவாரஷ்யமும் த்ரிலும் இருந்தது ஆங்காங்கே சில அபத்தங்களும் நம்ப முடியாத காட்சிகளும் இருந்தாலும்!. மற்றொரு விடயம் இப்படத்தின் பெயர்தான் மகா சொதப்பல். ஒரு நல்ல பதிவை எழுதிவிட்டு சம்பந்தமில்லாத தலைப்பை வைத்து அதிக ஹிட்ஸ் வாங்க முடியாமல் போன பதிவைப்போன்றதே இப்படத்தின் நிலைமையும். படத்தின் பெயரே சுண்டி இழுப்பதாய் இருக்க வேண்டும். இது என்னடா 555 என்று மூன்று இலக்கத்த போட்டிருக்கான் ஏதாவது மொக்கப்படமா இருக்கப்போவுது என்றே நினைப்பே நிறைய பேருக்கும் வந்திருக்கும். என்னைக்கேட்டால் நாயகியின் பெயரான "லியானா" வையை படத்தின் பெயராக வைத்திருக்கலாம்.


ஒரு கார் விபத்தில் பலத்த அடிகளுடன் உயிர் தப்புகிறார் பரத். பின் சுயநினைவு திரும்பியவுடன் விபத்தின் போது தான் காதலியும் இருந்ததாகவும் அவளுக்கு என்னவானது அவள் எங்கே என்று விசாரிக்கிறார். பின்பு டாக்டர் உட்பட அவரின் அண்ணன் சந்தானம் அங்கே எந்தப்பெண்ணும் இருக்கவில்லை நீ எந்தப்பெண்ணையும் காதலிக்கவுமில்லை என்று சொல்லிவிடுகின்றனர்! தன் காதலியை சந்தித்த இடங்கள்,காதலித்த இடங்கள் என எல்லாவற்றையும் காட்டிய பின்பும், தலையில் அடிபட்டதனால் மூளையில் ஏற்படும் ஓர் விளைவே இதுவென்றும் இல்லாததை இருப்பதாக கற்பனை செய்து கொள்வதாகும் என கூறிவிடுகின்றனர். நாயகனும் பார்த்துக்கொண்டிருக்கும் நாமும் குழம்பித்தான் போய்விடுகிறோம்!. ஆனாலும் அவன் காதலியின் நினைவுகள் அவனையை சுற்றி வர தொடர்ந்தும் தேடிக்கொண்டிருக்கிறான் இறுதியில் அவன் தேடல் என்னவானது அவனுக்கு காதலி இருந்தாளா இல்லையா என்பதே மீதிக்கதை. படத்தின் பெரிய சுவாரஷ்யமே இந்த சஸ்பென்ஸ்தான்!

பரத் நல்ல நடிகர்தான் ஆனாலும் அண்மைக்கால அவரின் சறுக்கலும் ஆக்ஷ்ன் ஹீரோ அவதாரமும் படம் பார்க்கும் முன் யோசிக்கவே வைத்தது. அதெல்லாவெற்றையும் விட இப்போது தமிழ்சினிமாவை தாக்கியுள்ள சிக்ஸ் பேக் நோய் பரத்தையும் ஆட்கொண்டுள்ளதால் ரொம்பவே பயமாயிருந்தது. ஒரு காதல் கதைக்கு எதற்கு சிக்ஸ் பேக்கு எய்ட் பேக்கெல்லாம். இருந்தாலும் சண்டைக்காட்சிகளைவிட காதல் காட்சிகளே அவருக்கு மிகப்பொருத்தமாகயிருந்தது. ஒவ்வொரு காதல் காட்சிகளையும் மிக அழகாக செதுக்கியிருக்கிறார் சசி.மொபைலை வீசி அடிக்கும் காட்சி, கேபிள் கனெக்ஷனைக்கொண்டு ஏதோ பவர் இருப்பதாய் நாயகியை நம்ப வைக்கும் காட்சி என நிறைய சுவாரசியமான காட்சிகள். இவையெல்லாவற்றையும் விட இன்னுமொரு விடயம் அதுதான் படத்தின் நாயகி பிருத்திக்கா மிக சாதாரணமாய் க்யூட்டாக இருக்கிறார் பல இடங்களில் அவரது ரியாக்ஸன்களும் நடிப்பும் அருமை. மொபையிலில் ஸ்பீக்கர் இல்லை என சொல்லுமிடத்திலும், காருக்குள் வைத்து பார்த்துவிட்டானே என தலையை குனியும் இடத்திலும் அவரின் வெட்கம் கலந்த நடிப்பு சூப்பர்.
படத்தில் இன்னொரு நாயகியாக எரிக்காவும் கொஞ்ச நேரம் வந்து போகிறார் இவர் சாயலில் நடிகை இலியானாவை ஞாபகப்படுத்துகிறார். படத்தில் சந்தானம் சில காட்சிகளில் வந்தாலும் பெரிதாக ஒன்றும் செய்யவில்லை. இந்தப்பாத்திரத்திற்கு அவரைப்போட்டு வீணடித்து சாகடிப்பதற்கு பதிலாய் வேறொரு சாதாரண நடிகரை நடிக்க வெச்சிருக்கலாம். சந்தானம் என்ற பெயர் மாக்கட்டிங்க வேல்வுக்கு உதவும் என சசி நினைத்திருப்பார் போல! சில சொதப்பல்களை தவிர்த்திருந்தால் மிகச்சிறப்பான படமாக வந்திருக்க வேண்டிய படம் ஆனாலும் இயக்குனர் சசிக்கு வாழ்த்துக்கள்!

இந்நாளும் எந்நாளும் உல்லாசமே!

வாழ்க்கை என்பது பழையவை கழிதலும் புதியவை புகுதலுமாக காலத்துக்கு காலம் மாறிக்கொண்டே வருபவை. ஆனால் சில பழையவை நம் வாழ்க்கைப்பயணத்தில் கூடவே வரும். அவை ஒவ்வொருவர் மனதுடனும் பயணித்துக்கொண்டேயிருக்கும் எத்தனைதான் புதியவைகள் வந்தாலும் அவற்றுடன் போராடி வென்று கொண்டேயிருக்கும். அது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான விருப்பங்களாக இருக்கலாம். ஏன், அது ஒரு சில பாடல்களாக கூட இருக்கலாம்! ஆம், அப்படி என்னுடன் தொடர்ந்து பயணிக்கும் பாடலொன்றை பற்றித்தான் இங்கே சொல்லப்போகிறேன்.



இந்தப்பாடல் என்னைப்போன்ற பல்லாயிரக்கணக்கானவர்களுக்கு பிடித்த பாடல். இளையராஜாவை கொண்டாடுகிறவர்கள் இந்தப்பாடலை எப்படியும் மறக்க மாட்டார்கள். அதுதான் சொல்லத்துடிக்குது மனசு என்ற படத்தில் இடம்பெற்ற "பூவே செம்பூவே" என்ற பலரின் இதயங்களில் ஒலித்துக்கொண்டிருக்கும் பாடல். இந்தப்பாடல் ஏன் எனக்கு பிடித்தது என்று எங்கே தொடங்கி எங்கே முடிப்பது என்றே விளங்கவில்லை அவ்வளவுக்கு என் மனதோடு ஒட்டிக்கொண்ட் பாடல் இது..

பூவே செம்பூவே உன் வாசம் வரும்
வாசல் என் வாசல் உன் பூங்காவனம்
வாய் பேசிடும் புல்லாங்குழல்
நீதானொரு பூவின் மடல்

நிழல் போல நானும்
நடை போட நீயும்
தொடர்கின்ற சொந்தம்
நெடுங்கால பந்தம்

கடல் வானம் கூட நிறம் மாறக் கூடும்
மனம் கொண்ட பாசம் தடம் மாறிடாது

நான் வாழும் வாழ்வே உனக்காகத்தானே
நாள் தோறும் நெஞ்சில் நான் ஏந்தும் தேனே
என்னாளும் சங்கீதம் சந்தோஷமே

இன்றைய தலைமுறையினர் 80 களில் வந்த பாடல்களையும் பழைய பாடல்கள் என்றே அடையாளப்படுத்துகின்றனர். அவர்களால் அவற்றை ரசிக்க தெரியவில்லை! அவற்றை ரசிக்கும் நம்மையும் ஒரு விதமாகவே பார்க்கிறார்கள். அவர்களுக்காய் எம் ரசனையை மாற்றிக்கொள்ளத்தேவையில்லை. இளையராஜாவை கொண்டாடுபவர்களை குறை சொல்ல முடியாது காரணம் இது போன்று பலநூறு இசைமுத்துக்களை கொட்டித்தந்திருக்கிறார். அப்படியிருக்க கொண்டாடாமல் என்ன செய்வார்கள்! இளையராஜா என்ற தனிமனிதனின் குறை நிறைகளை மறந்தோமானால் அவரின் இசை என்றைக்கும் கொண்டாடப்படவேண்டியதுதான்.

உனைப்போல நானும் ஒரு பிள்ளைதானே
பலர்வந்து கொஞ்சும் கிளிப்பிள்ளை நானே


உனைப்போல நானும் மலர் சூடும் பெண்மை
விதி என்னும் நூலில் விளையாடும் பொம்மை


நான் செய்த பாவம் என்னோடு போகும்
நீ வாழ்ந்து நாந்தான் பார்த்தாலே போதும்
இந்நாளும் எந்நாளும் உல்லாசமே


வாய் பேசிடும் புல்லாங்குழல்
நீதனொரு பூவின் மடல்


இப்பாடல் பற்றி பேசும் இதை எழுதிய வாலியையும் பாடிய ஜேசுதாசையும் மறக்க முடியாது, மறக்க கூடாது. அந்தளவுக்கு இவர்களின் பங்களிப்பு இந்தப்பாடலில் இருக்கிறது. வாலி அவர்கள் இளையராஜாவின் இசையில் பல அற்புதமான பாடல்களை எழுதியிருக்கிறார் அவற்றிலே இந்த பூவும் ஒன்று. ஜேசுதாசின் குரலின் இனிமையும், ராகம், தாளங்களின் அழகும் இந்தப்பாடலுக்கு இன்னும் வலிமை!

இந்தப்பாடல் இடம்பெற்ற திரைப்படத்தை இன்னும் நான் பார்க்கவில்லை. எவ்வாறான சூழலில் இடம்பெறுகிறது என்பதையும் ஊகிக்கமுடியவில்லை. இதன் காட்சியமைப்பை பார்த்ததிலிருந்து பெரிய ஏமாற்றம். இவ்வளவு அழகான பாட்டை இவ்வளவு சொதப்பலான காட்சியமைப்பின் மூலம் சிதைத்துள்ளார்கள். பல அருமையான தமிழ் பாடல்கள் இவ்வாறுதான் கேட்க மட்டும்தான் முடிய்ம்! காட்சியமைப்பு படு சொதப்பலாக இருக்கும். அதுவும் இந்தப்பாடல் ராதா ரவியினால் வாயசைக்கப்படுவதை ஜீரணிக்கவே முடியவில்லை என்ன கொடும டைரக்டரே.


பாடல் கேட்க

ரம்ஜான் - சாமி கை விடல!

அபு தாபியின் அரசு நிறுவனங்களில் ஒன்றான Abu Dhabi Gas and Oil Corporation (ADGOC) -ல் வேலைக்கு சேர்ந்து ஒரு மாதம் ஆன நிலையில் அன்று இரவு இஃப்தார் பார்ட்டிக்காக Emirates Palace Hotel சென்றிருந்தேன்.

எங்களுடைய Operation Head ஷெரிஃப் ஒக்பா, என்னை மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்தினார்.

"He is Mansoor Hameed... New project manger for our onshore building division. He has more than 12 years of experience. Andddd....He has done his Bachelor of Mechanical Engineering and he is a charted engineer" என்று சுருக்கமாக அறிமுகம் செய்த பிறகு என்னை ஏதாவது பேசச் சொன்னார்.

என்னைப் பற்றி அல்லாது, பொதுவான விஷயம் ஏதாவது ஒன்றைப் பற்றி பேசச் சொன்னார்.

நானும் ரம்ஜான் நோம்பினைப் பற்றி பேசினேன். அதனால் ஏற்படும் நன்மைகளையும், நோம்பு துறக்கும்பொழுது எப்படிப்பட்ட உணவுகளை உண்ணவேண்டும் என்பது பற்றியும் அறிவியல் ரீதியிலான விளக்கங்களுடன் பேசினேன்.

அதற்குப் பிறகு, அங்கிருந்தவர்களிடம் பேசிக்கொண்டிருந்தபொழுது. ஒருவர் NPOC (National Petrolium and Oil Company)- யில் General Manager ஆக இருப்பதாக சொன்னார்.

இருபது வருடங்களுக்கு முன்பு வாப்பா வேலை செய்த கம்பனி. அது ஒரு Semi Government Organization. வாப்பா அங்கு staff ஆக வேலைப் பார்த்திருந்தார். உயிரோடு இருந்திருந்தால் இன்று அவரும் ஒரு General Manager அல்லது அதைவிட பெரிய பதவியில் இருந்திருப்பார்.

வாப்பாவின் நெருங்கிய தோழர் அய்யனார் மாமாவைப் பற்றி அவரிடம் விசாரிக்க நினைத்தேன். ஆனால் விசாரிக்கவில்லை

அடுத்த நாள், டிரைவரை அழைத்துக் கொண்டு அந்த கம்பெனிக்கே சென்றுவிடலாம் என்று முடிவு செய்தேன்.

யார் இந்த அய்யனார் மாமா?

நான் எட்டாவது படிக்கும்பொழுது வாப்பா ஊருக்கு வந்திருந்தார். இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை ஊருக்கு வருவார். என் இரட்டை தங்கைகளுக்கு அப்பொழுது ஒன்றேகால் வயது. அவர்களை முதன்முதலில் அப்பொழுதுதான் பார்க்கிறார்.

இரண்டு மாதம் லீவ் முடிந்து திரும்ப போவதற்கு முதல் நாள் ராத்திரி திடீரென்று அவருக்கு ஏதோ ஞாபகம் வர என்னிடம், 'நாளைக்கு காலைல முதல் வேலையாப் போய் நாலு பாக்கெட் திருநீர் வாங்கிட்டு வா' என்றார்.

நானும் வாப்பா எழுவதற்கு முன்னே மாரியம்மன் கோயில் அருகேயுள்ள கடையில் போய் திருநீர் வாங்கி வந்தேன். அதைப் பார்த்த வாப்பா சிரித்தார்.

"ஏன் வாப்பா சிரிக்கிறீங்க" என்றேன்

"இந்தப் பேரப் பாத்தியா?"

"அய்யனார் திருநீர்"

"அய்யனார் மாமா திருநீர் வாங்கிட்டு வரச் சொன்னான். நான் மறந்துருவேன்னேன். அதுக்கு அவன் அய்யனார் சாமி உனக்கு ஞாபகப் படுத்திருவார் போ என்றான். பாத்தியா, அவன் சாமி அவனை கை விடல"

"சாமி நம்பிக்கை நமக்கு இல்லையே வாப்பா?"

"அல்லானா என்னன்னு தெரியுமா?"

"இறைவன்"

"சாமின்னா"

"ஹ்ம்ம்ம்.. இறைவன்" என்றேன் வாப்பா என்ன சொல்லவருகிறார் என்று புரிந்துகொண்டு.

அதற்கு மேல் வாப்பா ஒன்றும் சொல்லவில்லை.

***
டிரைவர் என்னிடம் "சார், முஸ்ஸஃபா பிரிட்ஜ் வழியா போலாமா இல்லன்னா மக்தாப் பிரிட்ஜ் வழியா போலாமா?" என்றார்.

"எனக்கு தெரியாதுப்பா, எது ஈஸியோ அந்த வழில போ"
***
நான் பத்தாவது படிக்கும்பொழுது, வாப்பாவின் வருகைக்காக காத்திருந்த வேளையில் வாப்பா இறந்துவிட்டார் என்று தந்தி வந்தது. அவரது உடல் இன்று வரும் நாளை வரும் என்று ஒரு மாதம் காத்திருந்தோம். கடைசியில் அவரை அங்கேயே அடக்கம் செய்துவிட்டார்கள் என்று அடுத்த தந்தி வந்தது.

உறவினர்கள் எல்லோரும் சென்று விட்டார்கள். உம்மா மட்டும் அழுகையை நிறுத்தவில்லை, எங்களுக்கு சாப்பாடு பக்கத்துவீட்டு ரஹீம் மாமா வீட்டிலிருந்து ஏதாவது செய்துகொண்டுவந்து கொடுப்பார்கள்.

அன்று உம்மா என்னருகில் வந்து, "மன்சூர், நம்ம அல்லாட்ட போயிரலாமா" என்றார்.

உம்மா சொல்வதைப் புரிந்து கொண்டு சரி என்பதுபோல் தலையை ஆட்டினேன்.

உம்மா அடுத்த வார்த்தை பேசுவதற்கு முன், போஸ்ட் மேன் வீட்டிற்கு வெளியிலிருந்து அழைப்பது கேட்டது.

ஒரு Airmail கவரில் ரெஜிஸ்டர் போஸ்ட் வந்திருந்தது. யாரோ கிருஷ்ணதாஸ் என்பவர் கேரளாவிலிருந்து அனுப்பியிருந்தார்.

பிரித்து சத்தமாக படித்தேன்..

அன்புள்ள தங்கைக்கு,

அண்ணன் அய்யனார் எழுதுவது. குழந்தைகள் எப்படி இருக்கிறார்கள். மன்சூர் ஸ்கூலுக்கு போகிறானா?.ஹமீது இறந்ததை எண்ணி எப்பொழுதும் அழுதுகொண்டிருக்காதீர்கள். ஹமீது இறந்த கேஸ் இதுவரை முடியவில்லை. ஆகையால் இன்சூரன்ஸ் பணம் கிடைக்க இரண்டாண்டுகள் வரை ஆகலாம்.

என்ன உதவி வேண்டுமானாலும் எனக்கு கடிதம் அனுப்புங்கள். இத்துடன் ஐயாயிரம் ரூபாய்க்கான டிடி அனுப்பியுள்ளேன்.

இப்படிக்கு,
அன்புடன்
சொ. அய்யனார்

இதைக் கேட்டவுடன் உம்மா, "அல்லா நாம சாகக் கூடாதுன்னு நெனைக்கறார். நீ நாளைக்கே ஸ்கூலுக்கு போ" என்றார்.

"வேண்டாம் உம்மா, நான் அண்ணாச்சி துணிக்கடைல வேலைக்குப் போறேன்"

"இல்ல, நீ படி. நான் வேலைக்குப் போறேன்"

"முடியாது உம்மா, அடுத்த வருஷம் தங்கச்சிகளையும் ஸ்கூலில் சேக்கணும். நீங்க வேலை செஞ்சாப் பத்தாது நான் போறேன்"

ஒருவழியாக அதற்கு உம்மா சம்மதித்தார்.

அடுத்தநாள் உம்மாவை அழைத்துக் கொண்டு நேரத்திலேயே அண்ணாச்சி வீட்டிற்கு சென்றோம்.

அண்ணாச்சி எல்லாம் கேட்டுவிட்டு, "ஏலே, ஸ்கூல்ல போய் டீசி வாங்கிட்டு வந்திடுலே. பின்னால சோலிக்காகும்" என்றார்.

அங்கிருந்து நேராக செயின்ட் ஜோசப் ஸ்கூலிற்கு சென்றோம். அதன் தாளாளர் ஃபாதர் செபாஸ்டியன் சரியான சிடுமூஞ்சி. ஃபீஸ் அடைக்க ஒருநாள் லேட் ஆனாக்கூட வீட்டிற்கு அனுப்பிவிடுவார். ஃபீஸ் கட்டாம டீசி தரமாட்டார் என்று நன்றாக தெரிந்திருந்தும் அவரிடம் சென்றோம்.

உம்மா, அவரிடம் எல்லா விவரங்களையும் சொன்னார். எல்லாவற்றையும் கேட்ட பிறகும் அவரது கண்களில் இறக்கம் என்பது துளிகூட வந்ததாக தெரியவில்லை.

"உன் கிளாஸ் டீச்சர் யார்" என்றார்

"ரெபேக்கா மிஸ்"

ப்யூனை, அவரை அழைத்து வரச்சொன்னார்.

மிஸ் வந்தவுடன் வெளியில் சென்று அவரிடம் என்னவோ பேசினார்.

பிறகு உம்மாவிடம் "உங்க பையன் பிளஸ் டூ வரை இங்கயே படிக்கட்டும். ஃபீஸ் ஒன்னும் கட்டவேண்டாம். உங்களுக்கு இங்க ஆயாவா வேலை தர்றோம். மாசம் ஐநூறு ரூபாய் சம்பளம்" என்றார்.

இதைக்கேட்டவுடன் உம்மாவுக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. அவர் காலில் விழுந்து அவர் காலைப் பிடித்து கண்ணீர்விட்டார்.

அண்ணாச்சியிடம் விஷயத்தை சொல்ல சென்றோம். 

"தெரியும்லே, அதான் அவரப் போய் பாக்கச் சொன்னேன்" என்றார் 
அண்ணாச்சி சிரித்துக்கொண்டே

**

ஒருவழியாக NPOC வந்து சேர்ந்தோம். 

டிரைவர், செக்யூரிட்டியிடம் எதோ அரபியில் சொல்ல அவர் எங்களை உள்ளே அனுமதித்தார். நாங்கள் சென்றபொழுது மணி இரண்டு இருக்கும். ரம்ஜான் என்பதால் பெரும்பாலானோர் வேலை முடிந்து அங்குமிங்குமாக நடந்து கொண்டிருந்ததை பார்க்கமுடிந்தது.

வண்டியை பார்கிங்கில் நிறுத்திவிட்டு நாங்களும் நடந்தோம்.தமிழில் பேசியபடி நடந்து வந்துகொண்டிருந்த இளைஞர்களை நிறுத்தி விசாரித்தோம்.

"அய்யனார் என்ற பெயருள்ள staff யாராவது இங்க இருக்காங்களா?"

"இல்ல சார், அப்படி யாரும் இருக்கற மாதிரி தெரியலியே"

"மேனேஜர்?"

"இல்ல சார்.. அப்படி யாரும் இல்லியே"

"ஒரு 65 வயசு இருக்கும் அவருக்கு"

"இல்ல சார்.. அப்படி யாரும் இல்ல. இங்க அறுபது வயசுக்கு மேல விசா ரினியூ பண்ணமாட்டங்க சார்"

அதற்குள் வேறு ஒருவர் அங்கு செல்வதைப் பார்த்த அதில் ஒருவர், "சார், தா போறாரே. மாரிமுத்து சார் அவருக்கு ஒருவேளை தெரியலாம்" என்றார்.

அவரே, "மாரிமுத்து சார், உங்களுக்கு அய்யனார்னு அறுபத்தஞ்சு வயசுள்ள யாரையாவது தெரியுமா சார்" என்றார் சத்தமாக
திரும்பிப் பார்த்த மாரிமுத்து, "ஆமா. நம்ம பெருசு" என்றார்.

"சார், இவங்கள கொஞ்சம் அவரு ரூம்ல விட்டுருங்க"

அவருடன் எங்களை வரச் சொல்வதுபோல் சைகை செய்தார். நான் டிரைவரிடம், "நான் போய் பாத்துக்கறேன். நீ போய் வண்டில இருந்துக்கோ" என்றேன்.

நான் மாரிமுத்துவுடன் சென்றேன்.

அவர் என்னிடம் எதுவுமே பேசவில்லை.

ஒரு பழைய பில்டிங்கிற்கு அழைத்து சென்றார். மாரிமுத்து first floor என்பதால் என்னிடம், "நேராப் போங்க.G18 அவர் ரூம்" என்றார்.

கதவை தட்டினேன்.
"ஆவ்.. தர்வாஸா குல்லா ஹே" என்று ஒரு சத்தம் மட்டும் கேட்டது.

கதைவை திறந்தேன். சிறிய அறை. அதில் நான்கு கட்டில்கள் இரண்டு அடுக்காக (bunk bed) இடப்பட்டிருந்தன. ஒரு கொடிக் கயிறு கட்டப் பட்டிருந்தது, அதில் அங்குமிங்குமாக அழுக்குத் துணிகள் கிடந்தன.

கீழே உள்ள கட்டிலில் சுவற்றைப் பார்த்து படுத்திருந்த அந்த முதியவரை 'அய்யா' என்று அழைத்தேன்.

அவரது லுங்கியை சரி செய்தவாறே என்னை திரும்பிப் பார்த்தார்.

"யார் சார் நீங்க?"

அவர் முகத்தில் இருந்த பெரிய மீசை, அது அய்யனார் மாமாவேதான் என்று உறுதிப்படுத்தியது.

"மாமா, நான் மன்சூர். ஹமீது வாப்பா ..." என்று சொல்லி முடிப்பதற்குள் கட்டிலிலிருந்து சட்டென்று எழுந்து என்னைக் கட்டிப் பிடித்துக் கொண்டார்.

கட்டிப்பிடித்தவாறே, "உங்க அப்பன மாதிரியே நல்ல ஒசரமா இருக்கியேயா" என்றார்.

நான் ஒன்றும் பேசவில்லை.

என்னை விட்டுவிட்டு என் முகத்தைப் பார்த்து "அம்மா எப்படி இருக்காக, தங்கச்சிகளுக்கு கல்யாணம் ஆயிருச்சா" என்றார்.

"நல்லா இருக்காங்க. ரெண்டு பேருக்கும் நிக்காஹ் ஆயி கொழந்தைகள் இருக்கு"

"ஹ்ம்... உங்க அப்பனும் நானும் இதே ரூம்ல தான் இருந்தோம். அப்ப மூணு அடுக்கு இருக்கும். நாங்க ரெண்டு பேரும் மேலதான் படுப்போம். எள வயசு. இப்ப மேல ஏற முடியாது"

"ஏன் மாமா வாப்பா staff-ஆ இருக்கேன்னு பொய் சொன்னார்"

"உனக்கும், உங்க அம்மாவுக்காவும் தான். நீங்க ரெண்டு பேரும் வருத்தப்படுவீக. நீங்க எல்லாரும் நல்லா இருக்கணும்னு தான்யா அப்படி சொன்னான்"

அவரே தொடர்ந்தார், "சரியா சாப்பிடக்கூட மாட்டன். அப்ப கம்பெனி மெஸ் இல்ல. வெளில காசு கொடுத்துதான் சாப்பிடணும். டெய்லி குபூஸ் தான் சாப்பிடுவான். மாசத்துல ஒரு நாள் மட்டும்தான் நல்ல சோறு சாப்பிடுவான்"

அதைக் கேட்டவுடன் அபப்டியே இடிந்து போனேன். வாப்பா ஊருக்கு வரும்போதெல்லாம் அது வாங்கிட்டு வாங்க இது வாங்கிட்டு வாங்கன்னு சொல்லிருக்கேனே.

நான் ஒன்றும் பேசமுடியாமல் கட்டிலில் அமர்ந்தேன்.

"ரம்ஜான் மாசம் வந்துச்சுனா மட்டும் டெய்லி காலைலயும் நைட்டும் நல்ல சாப்பாடு பக்கத்துல ஒரு மசூதில இலவசமா கெடைக்கும். அப்ப, உங்கப்பன் சொல்லுவான்; அய்யனாரே அல்லா இந்த ரம்ஜான் மாசம் நம்மள மாதிரி ஏழைகளுக்காக வெச்சிருக்கார்"

அவர் சொன்ன விஷயங்களைக் கேட்டு தொண்டை அடைத்துவிட்டது. அது சரியாக சிறுது நேரம் ஆனது.

"மாமா, நீங்க ஏன் இந்த வயசுலயும் கஷ்டப்படுறீங்க?"

"மூணும் பசங்க. கடைசிப் பையனுக்கு போன வருஷம்தான் கல்யாணம் பண்ணுனோம். மூணு பேரும் அவங்ககூட வந்து இருக்க சொல்றாங்க. உங்க அத்தைக்கு ஒரு மாசம் கூட அவங்க யார் வீட்லயும் இருக்க முடியறதில்ல. அவ மேல தப்பில்ல. அவங்க சிலநேரங்களில் அவங்களை அறியாமல் எங்களைப் பாரமா பாக்கறாங்க. அதுதான்... கொஞ்சம் கடன் இருக்கு. அதை அடச்சுட்டு. கெடைக்கற செட்டில்மண்ட் பணத்த வெச்சு சின்னதா ஒரு கட வெச்சு பொழைக்கலாம்னு இருக்கேன்" என்றார்.

"எவ்வளவு கடன்"

"நாலு லட்சம் இருக்கும்யா"

"மாமா இன்னும் ஒரு மாசத்துல நீங்க இங்க இருந்து இந்தியாவுக்கு போறீங்க. நான் உங்க கடனை அடைக்கறேன். உங்களுக்கு ஒரு கடையும் வெச்சு தர்றேன்"

"ஐயோ, அதெல்லாம் வேண்டாம்யா. நீ சொன்னதே பெருசுயா"

"இல்ல மாமா, நான் ஒத்துக்கமாட்டேன். உங்களாலதான் நாங்க இன்னைக்கு உயிரோடு இருக்கோம்"

'இல்லயா வேண்டாம். அது சரியில்ல.. நான் ஒருநாளும் அது வாங்க ,மாட்டேன். உன் அன்பு மட்டுமே போதும்'

'முடியாது மாமா, ஒவ்வொரு வருஷமும் நமக்கு தேவை போக மீதம் உள்ள பணத்துல 2.5% ஏழைகளுக்கு ஸகாத் (zakat) கொடுக்கணும்னு இஸ்லாம் சொல்லுது. நான் ஒவ்வொரு வருஷமும் கொடுக்கிறேன். இந்த வருஷம் அதை உங்களுக்கு குடுக்கப் போறேன்"

"உங்க அப்பனும், அதை கரெக்ட்டா கணக்குப் போட்டு ஏழைகளுக்கு குடுப்பான்யா. எனக்கு வேண்டாம்யா"

"இல்ல மாமா, நீங்க வாங்கித்தான் ஆகணும். பெரிய பணக்காரங்க திருப்பதி உண்டியல்ல பணம் போடறது இல்லியா. அது மாதிரி நான் அய்யனார் சாமி கோவில் உண்டியல்ல போடறேன்"

அந்த அறையிலிருந்த ஒரு சின்ன ஷெல்ஃபில் அய்யனார் சாமி படம் வைத்திருந்தார். அந்தப் படத்தைப் பார்த்தவாறே, "பாரு ஹமீது உன் பையனும் உன்னைய மாதிரியே இருக்கான். ஒரு உதவி செஞ்சா பத்து உதவி திரும்ப செய்யற உன் குணம் அப்படியே இருக்கு" என்றார்.

ஃபிரேம் செஞ்சிருந்த அய்யனார் படத்தை உத்துப் பார்த்தேன். வாப்பாவின் பாஸ்போர்ட் சைஸ் ஃபோட்டோ அந்த ஃபிரேமின் ஒரு மூலையில் சொருகிவைக்கபட்டிருந்தது.
---------
காலத்தினால் செய்த நன்றி சிறிது எனினும்,
ஞாலத்தின் மாணப் பெரிது

 நன்றி...https://www.facebook.com/chinna.dada02?hc_location=timeline  படித்ததில் பிடித்தது!

Rayilin oligal Song lyrics in English and Tamil

Railin Oligal Lyrics in Blue Star  Male : Rayil-in oligal Unaiyae theduthae Adhirum paaraiyaai Idhayam aaduthae Unthan kai veesidum Poi jaad...