1980 காலப்பகுதி கேரளாவில் மிக பயங்கரமான வேலையில்லாத்திண்டாட்டம் இடம்பெற்ற காலப்பகுதியாகும். படித்த/படிக்காத இளைஞர்கள் பலர் இதில் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதற்காகவேண்டியே பல மாற்று வழிகளை தேந்தெடுக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உள்ளானார்கள் மலயாளிகள். இதில் ஒரு வழிதான் வேறு மாநிலங்களுக்கும் வேறு நாடுகளுக்கும் வேலைதேடி படையெடுத்தது. குறிப்பாக மத்திய கிழக்கு நாடுகளுக்கு! இப்போதும் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள தொழிலாளர்கள் அதிகளவானோர் மலயாளிகள்தான். அண்டைமாநிலமான தமிழ்நாட்டுக்கு கூட இலட்சக்கணக்கான மலயாளிகள் இடம்பெயர்ந்து பல்வேறு தொழில்களில் ஈடுபடுகின்றனர்!
இதை ஏன் சொல்கிறேன் என்றால் அப்படியான வேலையில்லாமல் கஷ்டப்படும் இருவரின் வாழ்க்கையில் ஏற்படும் ஒரு சம்பவத்தை மிக நகைச்சுவையாகயும் தத்ரூப்மாகவும் சொன்ன படமே இது.முகேஷ் மற்றும் சாய்குமார் இன்னசெண்ட் வீட்டில் வாடகை கொடுக்காமல் வாடகைக்கு தங்கியிருப்பவர்கள்.இன்னசென்ட் நஷ்டமடைந்த நாடக கம்பெனியின் சொந்தக்காரர், முகேஷ் எந்தவித வேலையுமில்லாமல் நோயாளியான தன் தாயிடம் தான் நல்ல வேலையிலிருப்பதாகவும் புது வீடு கட்டுவதாகவும் பொய் சொல்லி காலத்தை கடத்துபவர். சாய்குமார் வேலையிலிருக்கும் போது ஏற்பட்ட விபத்தின் காரணமாக இறந்து போன தன் தந்தையின் வேலையை பெற்றுக்கொள்வதற்காக வந்த நேரம், அதே நிறுவணத்தில் வேலையிலிருக்கும் போது இறந்து போன இன்னொருவரின் மகளான ரேகாவிற்கு அவ்வேலை கிடைக்கவே அந்த வேலையை கைப்பற்ற போராடுபவர்.
இந்த வேளையே ஒரே பெயரில் இருக்கும் இன்னொருவரின் வீட்டுக்கு வரவேண்டிய தொலைபேசி அழைப்பு இங்கே தொடர்ந்து வந்து தொல்லை கொடுக்கிறது. அப்போதே அந்த அதிர்ச்சியான அழைப்பு! "நான் ராம்ஜீ ராவ் பேசுகிறேன்..உங்கள் மகளை கடத்தி வைத்திருக்கிறேன் குறித்த தொகை பணம் குறித்த நாளில் தராவிட்டால் மகளை கொன்றுவிடுவேன்" என்ற மிரட்டலுடன் துண்டிக்கப்படுகிறது. மூவரும் அதிர்ந்து போகிறார்கள். பின் அதே ஆள்மாறாட்ட அழைப்பை பயன்படுத்தி தங்களின் பணத்தேவையை பூர்த்தி செய்ய திட்டம் போடுகிறார்கள். இவர்களுக்கு வந்த அழைப்பை போலவே உண்மையான தந்தையை அழைத்து ராம்ஜி ராவ் கேட்ட தொகையைவிட இரண்டு மடங்கு கேட்கிறார்கள்! அப்பணத்தை வாங்கி ராம்ஜி ராவ் கேட்ட தொகையை கொடுத்து குழந்தையை காப்பாற்றி, தந்தையிடம் ஒப்படைத்துவிட்டு மிகுதிப்பணத்தை மூவருக்குள்ளும் பகிர்ந்து கொள்வதே திட்டம்!
பின் இந்த ஆள்மாறாட்ட திட்டத்தில் ஏற்படும் குழப்பங்கள்,பிரச்சினைகள்,காமெடி கலாட்டக்கள் கடந்து குழந்தையை எப்படி காப்பாற்றினார்கள் அவர்கள் திட்டம் நிறைவேறியதா அவர்களின் பணத்தேவை பூர்த்தியானதா என்பதை நகைச்சுவையும் துக்கமும் கொஞ்சம் கண்ணீரும் கலந்து சொல்லியிருப்பார்கள். இதில் இன்னசெண்ட் பாத்திரம்தான் மறக்கமுடியாத பாத்திரம்! அவரின் மேனரிசங்களும் வசன உச்சரிப்புகளும் நகைச்சுவையும் என்னை மிகவும் கவர்ந்தது. மலயாள திரையுலகில் தனக்கென்றொரு இடத்தை பிடித்துக்கொண்ட கலைஞன்! முகேஷுக்கு கொடுத்த கடனை திருப்பி வாங்க வரும் ஹம்ச கோயா பாத்திரமும் அவர் கூட்டி வரும் ஆட்களும் இறுதிநேர பரபரப்பில் இன்னுமொரு கலகலப்பு. மலயாள சினிமாவில் வெளியான மிகச்சிறந்த பொழுபோக்கு படங்களில் ஒன்றாக மலயாள சினிமா ரசிகர்களால் கொண்டாடப்படும் படம். படத்தின் எழுத்து இயக்கம் சித்திக்-லால். அருமையான திரைக்கதை எந்தயிடத்திலும் கொஞ்சம் கூட தேவையில்லாத காட்சியென்றில்லை.
இதே கதையை கேட்கும் போது தமிழில் வந்த ஒரு படமும் உங்களுக்கு ஞாபகத்துக்கு வரலாம். ஆம் இயக்குனர் பாசில் இதையே தமிழுக்கு ரீமேக் செய்திருந்தார்.அரங்கேற்ற வேளை என்ற பெயருடன். அதே கதை சில வித்தியாசங்களுடன். பிரபு,ரேவதி மற்றும் வி.கே.ராமசாமி ஆகியோர் நடித்திருந்தனர். மலயாளத்தில் வந்த ரேகா-சாய்குமார் நடித்த இரு பாத்திரத்தையும் ரேவதிக்கு கொடுத்து ரேவதி-பிரபு-வி.கே மூவரும் ஓரெ வீட்டில் வசிப்பதை போல் காட்டியிருப்பார்கள். மலயாளத்தில் எந்தவித மசாலாத்தனமோ காதலோ இல்லை மற்றும் கடத்தப்படுவது குழந்தையாக காட்டியிருப்பார்கள். தமிழில் மசாலாத்தனம் வேண்டும் என்பதற்காக பிரபு-ரேவதி காதல் மற்றும் பருவ வயது பெண்னை கடத்துவது போல் காட்டி அப்பெண்னை வில்லனுக்கு முன்னால் குத்தாட்டம் போட வைத்திருப்பார்கள்.! இதுதான் தமிழ் மலயாள சினிமாக்களுக்கு இடையிலான மசாலா வித்தியாசம். இப்படம் ஹிந்தியிலும் ரீமேக்கானது பிரியதர்ஷன் இயக்கத்தில். ராம்ஜிராஹ் ஸ்பீக்கிங் இரண்டாவது பாகமும் வெளியானது மன்னார் மதி ஸ்பீக்கிங் என்ற பெயரில்.
இணையத்திலும் பார்க்கலாம்..
1 comment:
ATHU MANNAR MATHAYI SPEAKING..
Post a Comment