மலயாளத்தின் ஐந்து சுந்தரிகள்!


மலயாளத்தில் அண்மையில் வெளியான ஐந்து சுந்தரிகள் என்ற படத்தில் 5 இயக்குனர்கள் 5 வெவ்வேறு சிறுகதைகளை 5 குறும்படங்களாக உருவாக்கி ஒரு முழுநீள திரைப்படமாக தயாரித்திருக்கிறார்கள். இந்த 5 கதைகளும் வெவ்வேறு சூழலில் நிகழ்பவை இவற்றுக்குள்ள ஒரேயொரு தொடர்பு. 5 கதைகளும் 5 பெண்களை மையப்படுத்தி சொல்லப்படுவதால் 5 சுந்தரிகள் என்று தலைப்பிட்டிருக்கிறார்கள். இதற்கு முன்பும் இவ்வாறு 10 சிறுகதைகளை 10 இயக்குனர்களை வைத்து இயக்கி கேரளா கேபே என்றொரு திரைப்படம் தயாரித்திருந்தார்கள் மலயாளத்தில்!

இந்த ஐந்து கதைகளில் இரண்டு கதைகள் என்னை மிகவும் கவர்ந்தது. முதலாவது சேதுலக்ஷ்மி என்ற கதை. நம் சமூகத்தில் வாழும் வக்கிரம் பிடித்த காமக்கொடூரன்களால் நம் சின்னஞ்சிறிய குழந்தைகள் கூட எவ்வளவு தூரம் பாதிக்கப்படுகிறார்கள், வதைக்கப்படுகிறார்கள் என்பதை மிக தத்ரூபமாக சொல்லியிருக்கிறார்கள் இக்கதையின் மூலம். ஒரு 9-10 வயதுடைய ஒரே வகுப்பில் படிக்கும் ஏழ்மையான சிறுவனும், சிறுமியும் விளையாட்டுத்தனமாக ஒரு ஜோடி புகைப்படம் எடுக்க தீர்மானித்து ஒரு ஸ்டூடியோவுக்குச்சென்று புகைப்படம் எடுத்துக்கொள்கிறார்கள். எல்லாம் முடிந்து, மற்ற நாள் 20 ரூபாய் கொண்டு வந்து புகைப்படத்தை எடுத்துச்செல்லுமாறு கூறுகிறான் ஸ்டூடியோகாரன். அப்போதுதான் இருவரும் முழிக்கிறார்கள் இதற்கு இவ்வளவு தேவையா என்று, அவர்களிடம் அவ்வளவு காசில்லை!

அடுத்த நாள் இருவரிடமுள்ள சில்லரைகளை பொறுக்கி ஆறு ரூபா சொச்சமும் இரண்டு முட்டைகளையும் கொடுத்து இவ்வளவுதான் எங்களால் முடிந்தது புகைப்படத்தை தந்துவிடும்படி கேட்கின்றனர். அதற்கு அவன் ஒத்துக்கொள்ளவில்லை. அதற்குப்பகரமாக அந்தச்சிறுமியை தனியாக புகைப்படம் எடுத்துக்கொள்ள அழைக்கிறான். அதற்கு உடன்படாவிட்டால் வீட்டிலும் பாடசாலையிலும் வந்து சொல்லப்போவதாக அச்சுறுத்துகிறான்.அதன் பிறகு அதனையே சாக்காக வைத்து அந்தச்சின்னஞ்சிறு சிறுமியை பல வகைகளிலும் துன்புறுத்துகிறான் அந்த வக்கிரம் பிடித்த மிருகம்.படம் பார்க்காதவர்களுக்காக முழுக்கதையையும் இங்கே சொல்ல முடியவில்லை. காமம் ஒரு அழகான உணர்வு அதை தகுந்த முறையில் பயன்படுத்துபவர்களுக்கு! ஆனால் அவ்வுணர்வே வெறிபிடித்தவர்கள் மனங்களில் தோன்றும் போதுதான் பிரச்சினை ஆரம்பிக்கிறது. இதில் அந்த சிறுமியாக நடித்த அனிகா கண்ணுக்குள்ளயே இருக்கிறார். முகபாவனைகளும் நடிப்பும் கிளாஸ் ரகம். அதுவும் அந்த இறுதிக்காட்சியில் கண்கலங்கியபடியே பார்த்துக்கொண்டு செல்லும் காட்சி மனதை ஏதோ செய்துவிட்டது. இதை இயக்கியிருக்கிறார் சைஜுகாலித். எம் முகுந்தனின் சிறு கதையை தழுவி. ஸ்டூடியோ காரனாக ஆரண்யகாண்டம் சோமசுந்தரம் நல்ல நடிப்பு பார்வையாளர்களின் வெறுப்பை சம்பாதிக்கிறார் வில்லத்தனமான நடிப்பின் மூலம்.
இரண்டாவது "குள்ளண்ட பார்யா" என்ற கதை. ஒரு காலணிக்கு புதிதாக குடிவரும் குள்ளமான கனவனையும் உயரமான மனைவியையும் அங்கே வசிக்கும் அயலவர்கள் எப்படி நோக்குகிறார்கள் என்பது பற்றிய கதை! கதை முழுவதையும் அந்தக்காலணியிலேயே மாடியில் வசித்துக்கொண்டு அக்கம் பக்கத்தில் நடப்பதெல்லாம் கவனித்துக்கொண்டிருக்கும் காலுக்கு முடியாமல் வீல்சேயாரில் இருக்கும் துர்கர் சல்மானின் பார்வையிலும் குரலிலுமே நகர்த்தியிருப்பது அழகு. கதை ஆரம்பத்திலேயே அங்கே வசிப்பவர்களின் பாத்திர குணவியல்புகளை சொல்லிவிடுகிறார்கள்.

தமக்குள் ஆயிரம் குறைகளையும், அழுக்குகளையும் வைத்துக்கொண்டு மற்றவர்களின் குறைகளை தோண்டிக்கொண்டிருப்பதும் மேலோட்டமாக எதையாவது பார்த்துவிட்டு ஒருவரின் நடத்தையையும் உறவைவையும் கொச்சைப்படுத்துவது எவ்வளவு அபத்தமானது என்பதை முகத்தில் அறைந்தாற்போல் சொல்கிறது இக்கதை. உலகம் வெளித்தோற்றத்தில் நாகரீகம் அடைந்ததாக தோன்றினாலும் மனித மனங்களும் நடத்தைகளும் இன்னும் அநாகரீகமானதாகவும் வக்கிரமானதாகவுமெ இருப்பதை மிக அழகாக உணர்த்தியது இக்கதை. இவ்வாறான கதைகளை தேடி நாம் வெளியில் அலையவேண்டியதில்லை நாம் வாழும் சமூகத்திலும் நடந்துகொண்டுதானிருக்கிறது. படம் பார்ப்பவர்கள் சுவாரசியம் கருதி இதன் கதையை முழுதும் இங்கே சொல்லமுடியவில்லை. இதை இயக்கியிருப்பவர் அமல் நீராத். அருமையான இயக்கம் இது சீன சிறுகதையொன்றை தழுவி எடுக்கப்பட்டிருக்கிறது.படத்தின் சில காட்சிகளும், இசையும் உலகப்படங்களிலிருந்து சுட்டவை என்ற குற்றச்சாட்டும் உண்டு! துல்கர் சல்மான் மூலம் கதை சொல்லப்படும் உத்தி மிககவர்ந்தது.
Kullanta Bharya Scene

மற்றைய கதையான "இஷா"  சமிர் தாஹிர் இயக்க இஷா சர்வானி மற்றும் நிவின் போலே நடித்தது இதுவும் நல்ல சஸ்பென்ஸ் உள்ள சுவாரசியமான கதை.
Esha Scene

மற்றையது "கெளரி" என்ற கதை ஆசிக் அபு இயக்க காவ்யா மாதவன்.பிஜு மேனன் நடித்திருக்கும் கனவன் மனைவி காதல் பற்றிய கதை. இதை குளிரான மலைபிரதேசத்தில் படமாக்கியிருக்கிறார்கள் நல்ல இயற்கை விருந்து.
Gowri Scene

இறுதியாக "ஆமி" என்ற கதை அன்வர் ரஷீத் இயக்க பஹத் பாசில்,ஹனி ரோஸ், அஸ்மிதா சூட் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். பஹத் பாசிலின் மலப்புரத்திலிருந்து கொச்சிக்கான இரவுப்பயணத்தின் போது நிகழும் நிகழ்வுகள்தான் கதை இதுவும் ஒரு அருமையான கதையே இயக்கம் மற்றும் பஹத்தின் நடிப்பு அருமை!
Aami Scene

இப்படி பல கதைகளை கோர்த்து ஒரு திரைப்படமாக எடுப்பதை சினிமாவாக ஏற்றுக்கொள்ள முடியாது என ஒரு சிலர் கூறினாலும். சினிமா என்பது ஒரு சமூக ஊடகம் என்ற அடிப்படையில் அது வெறுமனே ஆபாசமான தெருக்கூத்தாகவோ வன்முறையாகவோ இருப்பதை விட இப்படியான நல்ல அனுபவங்களை தரும் கதைகளை கோர்த்து சினிமாவாக மாற்றுவதில் எந்தக்குறையும் இல்லை என்றே தோன்றுகிறது இப்படியான படைப்புகள் தமிழிழும் வரவேண்டும் என்பதே என் அவா!

555 சொதப்பலான நல்ல சினிமா!

இப்போதெல்லாம் தமிழ்சினிமாவில் மிக அரிதாய்த்தான் சுவாரஷ்யமான வித்தியாசமான கதையம்சம் கொண்ட திரைப்படங்களை கான முடிகிறது! இப்பொழுதெல்லாம் அதீதமாய் காதலை போற்றும் படங்களையோ, பஞ்ச் வசனம் பேசிக்கொண்டு 100 ரவுடிகளை தனியாளாய் போட்டுத்தாக்கும் ஹீரோயிச சண்டை படங்களையோ கானும் போது ச்சும்மா காமெடி பண்ணாம போங்க பாஸ் என்றே சொல்லத்தோன்றுகிறது அவ்வளவுக்கு அவ்வகையான சினிமாக்களை திரும்ப திரும்ப பார்த்து அலுத்துபோய்விட்டது.

அண்மையில் வெளியான 555 என்ற படம் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. இதுவும் ஒரு சாதாரண காதல் + சண்டை படம்தான்! ஆனாலும் அதை சொன்ன விதத்தில்தான் இயக்குனர் சசி ஜெயித்திருக்க்கிறார். ஆனால் இப்படத்தைப்பற்றி நிறையபேர் அலட்டிக்கொள்ளவில்லை என்பதுதான் உண்மை. இதே கதையை ஒரு பிரபல இயக்குனர் இயக்கியிருந்தால் இதைவிட நன்றாக பேசப்பட்டிருக்குமோ என்னவோ.! என்னைப்பொருத்தவரையில் இந்தப்படம் எனக்குப்பிடித்திருந்தது ஆரம்பம் முதல் இறுதிவரை நல்ல சுவாரஷ்யமும் த்ரிலும் இருந்தது ஆங்காங்கே சில அபத்தங்களும் நம்ப முடியாத காட்சிகளும் இருந்தாலும்!. மற்றொரு விடயம் இப்படத்தின் பெயர்தான் மகா சொதப்பல். ஒரு நல்ல பதிவை எழுதிவிட்டு சம்பந்தமில்லாத தலைப்பை வைத்து அதிக ஹிட்ஸ் வாங்க முடியாமல் போன பதிவைப்போன்றதே இப்படத்தின் நிலைமையும். படத்தின் பெயரே சுண்டி இழுப்பதாய் இருக்க வேண்டும். இது என்னடா 555 என்று மூன்று இலக்கத்த போட்டிருக்கான் ஏதாவது மொக்கப்படமா இருக்கப்போவுது என்றே நினைப்பே நிறைய பேருக்கும் வந்திருக்கும். என்னைக்கேட்டால் நாயகியின் பெயரான "லியானா" வையை படத்தின் பெயராக வைத்திருக்கலாம்.


ஒரு கார் விபத்தில் பலத்த அடிகளுடன் உயிர் தப்புகிறார் பரத். பின் சுயநினைவு திரும்பியவுடன் விபத்தின் போது தான் காதலியும் இருந்ததாகவும் அவளுக்கு என்னவானது அவள் எங்கே என்று விசாரிக்கிறார். பின்பு டாக்டர் உட்பட அவரின் அண்ணன் சந்தானம் அங்கே எந்தப்பெண்ணும் இருக்கவில்லை நீ எந்தப்பெண்ணையும் காதலிக்கவுமில்லை என்று சொல்லிவிடுகின்றனர்! தன் காதலியை சந்தித்த இடங்கள்,காதலித்த இடங்கள் என எல்லாவற்றையும் காட்டிய பின்பும், தலையில் அடிபட்டதனால் மூளையில் ஏற்படும் ஓர் விளைவே இதுவென்றும் இல்லாததை இருப்பதாக கற்பனை செய்து கொள்வதாகும் என கூறிவிடுகின்றனர். நாயகனும் பார்த்துக்கொண்டிருக்கும் நாமும் குழம்பித்தான் போய்விடுகிறோம்!. ஆனாலும் அவன் காதலியின் நினைவுகள் அவனையை சுற்றி வர தொடர்ந்தும் தேடிக்கொண்டிருக்கிறான் இறுதியில் அவன் தேடல் என்னவானது அவனுக்கு காதலி இருந்தாளா இல்லையா என்பதே மீதிக்கதை. படத்தின் பெரிய சுவாரஷ்யமே இந்த சஸ்பென்ஸ்தான்!

பரத் நல்ல நடிகர்தான் ஆனாலும் அண்மைக்கால அவரின் சறுக்கலும் ஆக்ஷ்ன் ஹீரோ அவதாரமும் படம் பார்க்கும் முன் யோசிக்கவே வைத்தது. அதெல்லாவெற்றையும் விட இப்போது தமிழ்சினிமாவை தாக்கியுள்ள சிக்ஸ் பேக் நோய் பரத்தையும் ஆட்கொண்டுள்ளதால் ரொம்பவே பயமாயிருந்தது. ஒரு காதல் கதைக்கு எதற்கு சிக்ஸ் பேக்கு எய்ட் பேக்கெல்லாம். இருந்தாலும் சண்டைக்காட்சிகளைவிட காதல் காட்சிகளே அவருக்கு மிகப்பொருத்தமாகயிருந்தது. ஒவ்வொரு காதல் காட்சிகளையும் மிக அழகாக செதுக்கியிருக்கிறார் சசி.மொபைலை வீசி அடிக்கும் காட்சி, கேபிள் கனெக்ஷனைக்கொண்டு ஏதோ பவர் இருப்பதாய் நாயகியை நம்ப வைக்கும் காட்சி என நிறைய சுவாரசியமான காட்சிகள். இவையெல்லாவற்றையும் விட இன்னுமொரு விடயம் அதுதான் படத்தின் நாயகி பிருத்திக்கா மிக சாதாரணமாய் க்யூட்டாக இருக்கிறார் பல இடங்களில் அவரது ரியாக்ஸன்களும் நடிப்பும் அருமை. மொபையிலில் ஸ்பீக்கர் இல்லை என சொல்லுமிடத்திலும், காருக்குள் வைத்து பார்த்துவிட்டானே என தலையை குனியும் இடத்திலும் அவரின் வெட்கம் கலந்த நடிப்பு சூப்பர்.
படத்தில் இன்னொரு நாயகியாக எரிக்காவும் கொஞ்ச நேரம் வந்து போகிறார் இவர் சாயலில் நடிகை இலியானாவை ஞாபகப்படுத்துகிறார். படத்தில் சந்தானம் சில காட்சிகளில் வந்தாலும் பெரிதாக ஒன்றும் செய்யவில்லை. இந்தப்பாத்திரத்திற்கு அவரைப்போட்டு வீணடித்து சாகடிப்பதற்கு பதிலாய் வேறொரு சாதாரண நடிகரை நடிக்க வெச்சிருக்கலாம். சந்தானம் என்ற பெயர் மாக்கட்டிங்க வேல்வுக்கு உதவும் என சசி நினைத்திருப்பார் போல! சில சொதப்பல்களை தவிர்த்திருந்தால் மிகச்சிறப்பான படமாக வந்திருக்க வேண்டிய படம் ஆனாலும் இயக்குனர் சசிக்கு வாழ்த்துக்கள்!

Song lyrics

Tamil,Sinhala,Hindi Song Lyrics