மலயாளத்தின் ஐந்து சுந்தரிகள்!


மலயாளத்தில் அண்மையில் வெளியான ஐந்து சுந்தரிகள் என்ற படத்தில் 5 இயக்குனர்கள் 5 வெவ்வேறு சிறுகதைகளை 5 குறும்படங்களாக உருவாக்கி ஒரு முழுநீள திரைப்படமாக தயாரித்திருக்கிறார்கள். இந்த 5 கதைகளும் வெவ்வேறு சூழலில் நிகழ்பவை இவற்றுக்குள்ள ஒரேயொரு தொடர்பு. 5 கதைகளும் 5 பெண்களை மையப்படுத்தி சொல்லப்படுவதால் 5 சுந்தரிகள் என்று தலைப்பிட்டிருக்கிறார்கள். இதற்கு முன்பும் இவ்வாறு 10 சிறுகதைகளை 10 இயக்குனர்களை வைத்து இயக்கி கேரளா கேபே என்றொரு திரைப்படம் தயாரித்திருந்தார்கள் மலயாளத்தில்!

இந்த ஐந்து கதைகளில் இரண்டு கதைகள் என்னை மிகவும் கவர்ந்தது. முதலாவது சேதுலக்ஷ்மி என்ற கதை. நம் சமூகத்தில் வாழும் வக்கிரம் பிடித்த காமக்கொடூரன்களால் நம் சின்னஞ்சிறிய குழந்தைகள் கூட எவ்வளவு தூரம் பாதிக்கப்படுகிறார்கள், வதைக்கப்படுகிறார்கள் என்பதை மிக தத்ரூபமாக சொல்லியிருக்கிறார்கள் இக்கதையின் மூலம். ஒரு 9-10 வயதுடைய ஒரே வகுப்பில் படிக்கும் ஏழ்மையான சிறுவனும், சிறுமியும் விளையாட்டுத்தனமாக ஒரு ஜோடி புகைப்படம் எடுக்க தீர்மானித்து ஒரு ஸ்டூடியோவுக்குச்சென்று புகைப்படம் எடுத்துக்கொள்கிறார்கள். எல்லாம் முடிந்து, மற்ற நாள் 20 ரூபாய் கொண்டு வந்து புகைப்படத்தை எடுத்துச்செல்லுமாறு கூறுகிறான் ஸ்டூடியோகாரன். அப்போதுதான் இருவரும் முழிக்கிறார்கள் இதற்கு இவ்வளவு தேவையா என்று, அவர்களிடம் அவ்வளவு காசில்லை!

அடுத்த நாள் இருவரிடமுள்ள சில்லரைகளை பொறுக்கி ஆறு ரூபா சொச்சமும் இரண்டு முட்டைகளையும் கொடுத்து இவ்வளவுதான் எங்களால் முடிந்தது புகைப்படத்தை தந்துவிடும்படி கேட்கின்றனர். அதற்கு அவன் ஒத்துக்கொள்ளவில்லை. அதற்குப்பகரமாக அந்தச்சிறுமியை தனியாக புகைப்படம் எடுத்துக்கொள்ள அழைக்கிறான். அதற்கு உடன்படாவிட்டால் வீட்டிலும் பாடசாலையிலும் வந்து சொல்லப்போவதாக அச்சுறுத்துகிறான்.அதன் பிறகு அதனையே சாக்காக வைத்து அந்தச்சின்னஞ்சிறு சிறுமியை பல வகைகளிலும் துன்புறுத்துகிறான் அந்த வக்கிரம் பிடித்த மிருகம்.படம் பார்க்காதவர்களுக்காக முழுக்கதையையும் இங்கே சொல்ல முடியவில்லை. காமம் ஒரு அழகான உணர்வு அதை தகுந்த முறையில் பயன்படுத்துபவர்களுக்கு! ஆனால் அவ்வுணர்வே வெறிபிடித்தவர்கள் மனங்களில் தோன்றும் போதுதான் பிரச்சினை ஆரம்பிக்கிறது. இதில் அந்த சிறுமியாக நடித்த அனிகா கண்ணுக்குள்ளயே இருக்கிறார். முகபாவனைகளும் நடிப்பும் கிளாஸ் ரகம். அதுவும் அந்த இறுதிக்காட்சியில் கண்கலங்கியபடியே பார்த்துக்கொண்டு செல்லும் காட்சி மனதை ஏதோ செய்துவிட்டது. இதை இயக்கியிருக்கிறார் சைஜுகாலித். எம் முகுந்தனின் சிறு கதையை தழுவி. ஸ்டூடியோ காரனாக ஆரண்யகாண்டம் சோமசுந்தரம் நல்ல நடிப்பு பார்வையாளர்களின் வெறுப்பை சம்பாதிக்கிறார் வில்லத்தனமான நடிப்பின் மூலம்.
இரண்டாவது "குள்ளண்ட பார்யா" என்ற கதை. ஒரு காலணிக்கு புதிதாக குடிவரும் குள்ளமான கனவனையும் உயரமான மனைவியையும் அங்கே வசிக்கும் அயலவர்கள் எப்படி நோக்குகிறார்கள் என்பது பற்றிய கதை! கதை முழுவதையும் அந்தக்காலணியிலேயே மாடியில் வசித்துக்கொண்டு அக்கம் பக்கத்தில் நடப்பதெல்லாம் கவனித்துக்கொண்டிருக்கும் காலுக்கு முடியாமல் வீல்சேயாரில் இருக்கும் துர்கர் சல்மானின் பார்வையிலும் குரலிலுமே நகர்த்தியிருப்பது அழகு. கதை ஆரம்பத்திலேயே அங்கே வசிப்பவர்களின் பாத்திர குணவியல்புகளை சொல்லிவிடுகிறார்கள்.

தமக்குள் ஆயிரம் குறைகளையும், அழுக்குகளையும் வைத்துக்கொண்டு மற்றவர்களின் குறைகளை தோண்டிக்கொண்டிருப்பதும் மேலோட்டமாக எதையாவது பார்த்துவிட்டு ஒருவரின் நடத்தையையும் உறவைவையும் கொச்சைப்படுத்துவது எவ்வளவு அபத்தமானது என்பதை முகத்தில் அறைந்தாற்போல் சொல்கிறது இக்கதை. உலகம் வெளித்தோற்றத்தில் நாகரீகம் அடைந்ததாக தோன்றினாலும் மனித மனங்களும் நடத்தைகளும் இன்னும் அநாகரீகமானதாகவும் வக்கிரமானதாகவுமெ இருப்பதை மிக அழகாக உணர்த்தியது இக்கதை. இவ்வாறான கதைகளை தேடி நாம் வெளியில் அலையவேண்டியதில்லை நாம் வாழும் சமூகத்திலும் நடந்துகொண்டுதானிருக்கிறது. படம் பார்ப்பவர்கள் சுவாரசியம் கருதி இதன் கதையை முழுதும் இங்கே சொல்லமுடியவில்லை. இதை இயக்கியிருப்பவர் அமல் நீராத். அருமையான இயக்கம் இது சீன சிறுகதையொன்றை தழுவி எடுக்கப்பட்டிருக்கிறது.படத்தின் சில காட்சிகளும், இசையும் உலகப்படங்களிலிருந்து சுட்டவை என்ற குற்றச்சாட்டும் உண்டு! துல்கர் சல்மான் மூலம் கதை சொல்லப்படும் உத்தி மிககவர்ந்தது.
Kullanta Bharya Scene

மற்றைய கதையான "இஷா"  சமிர் தாஹிர் இயக்க இஷா சர்வானி மற்றும் நிவின் போலே நடித்தது இதுவும் நல்ல சஸ்பென்ஸ் உள்ள சுவாரசியமான கதை.
Esha Scene

மற்றையது "கெளரி" என்ற கதை ஆசிக் அபு இயக்க காவ்யா மாதவன்.பிஜு மேனன் நடித்திருக்கும் கனவன் மனைவி காதல் பற்றிய கதை. இதை குளிரான மலைபிரதேசத்தில் படமாக்கியிருக்கிறார்கள் நல்ல இயற்கை விருந்து.
Gowri Scene

இறுதியாக "ஆமி" என்ற கதை அன்வர் ரஷீத் இயக்க பஹத் பாசில்,ஹனி ரோஸ், அஸ்மிதா சூட் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். பஹத் பாசிலின் மலப்புரத்திலிருந்து கொச்சிக்கான இரவுப்பயணத்தின் போது நிகழும் நிகழ்வுகள்தான் கதை இதுவும் ஒரு அருமையான கதையே இயக்கம் மற்றும் பஹத்தின் நடிப்பு அருமை!
Aami Scene

இப்படி பல கதைகளை கோர்த்து ஒரு திரைப்படமாக எடுப்பதை சினிமாவாக ஏற்றுக்கொள்ள முடியாது என ஒரு சிலர் கூறினாலும். சினிமா என்பது ஒரு சமூக ஊடகம் என்ற அடிப்படையில் அது வெறுமனே ஆபாசமான தெருக்கூத்தாகவோ வன்முறையாகவோ இருப்பதை விட இப்படியான நல்ல அனுபவங்களை தரும் கதைகளை கோர்த்து சினிமாவாக மாற்றுவதில் எந்தக்குறையும் இல்லை என்றே தோன்றுகிறது இப்படியான படைப்புகள் தமிழிழும் வரவேண்டும் என்பதே என் அவா!

7 comments:

aavee said...

கேட்கும் போதே பார்க்க தூண்டும் விமர்சனம்.. பார்த்துடறேன்..

திண்டுக்கல் தனபாலன் said...

நல்ல விமர்சனம்... உங்கள் எண்ணம் போல் தமிழிலும் வந்து விடும் என்று நினைக்கிறேன்...

கார்த்திக் சரவணன் said...

நல்லதொரு படைப்பை அறியத் தந்தமைக்கு நன்றி... தொடருங்கள்...

மலரின் நினைவுகள் said...

போன வாரம்தான் இப்படத்தைப் பார்த்தேன்...
இன்னும் கொஞ்சம் விரிவாக எழுதியிருக்கலாம்; நேரம் போதவில்லையோ..?!

Riyas said...

நன்றி கோவை ஆவி

நன்றி தனபாலன்

நன்றி ஸ்கூல் பையன்

Riyas said...

@மலரின் நினைவுகள் said...

//இன்னும் கொஞ்சம் விரிவாக எழுதியிருக்கலாம்; நேரம் போதவில்லையோ..?!//

அதுவும் ஒரு காரணம்தான் மற்றது கதை முழுவதையும் சொன்னால் படம் பார்ப்பவர்களுக்கு சுவாரசியம் இருக்காதே

நன்றி வருகைக்கு.

Asiya Omar said...

நல்ல பகிர்வு.

Vaa Kannamma Tamil Song Lyrics in English

  Maadhar mukampoal olivida vallaiyel Kaadhalai vaazhi madhi Malaranna kannaal mukamoththi yaayin Palarkaanath thoandral madhi  Vaa pada pad...