ச்சே..

சில நேரங்களில் சிலரால் செய்யப்படும் சின்ன சின்ன உதவிகளில்தான் மனிதநேயமே தங்கியிருக்கிறது.போட்டியும் பொறாமையும் காசும் பணமுமே வாழ்க்கையாகிப்போன நவீன உலகில் மற்றவருக்கு தொந்தரவு கொடுக்காமல், தன் செயல்களால் இன்னொருவர் துன்பம் நேராம்லிருக்க வாழ்வதும் நல்ல மனிதனுக்குரிய பண்புகள்தான் என நினைப்பவன் நான். நடை பாதையில் கிடக்கும் முற்களை எடுத்து ஓரமாக போடுவதும் தர்மம் செய்வதைப்போன்ற நண்மையான செயல் என இஸ்லாம் சொல்கிறது.

ஆனாலும் சமூகமாக வாழும் போது அவனின் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்துகொள்ள.. தொழில்களை மேற்கொண்டு பொருளாதார தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள சமூகத்துடனான தொடர்பு மிக அத்தியவசியமாகிறது. இதற்காக பலரையும் பல வேளைகளில் சந்திந்து பல வேலைகளை அவர்கள் மூலமாக செய்ற்படுத்த வேண்டியிருக்கிறது. இது பல வேளைகளில் பணப்பரிமாற்ற சேவை அடிப்படையில் நடக்கிறது. 

ஆனாலும் சில உதவிகள் சில நேரங்களில் அவசரமாக செய்ய வேண்டியவை.. அவசரமாக தேவைப்படுபவை! இவ்வாரான உதவிகள் பணம் கொடுத்து வாங்க முடியாதவை. உதாரணமாக பேரூந்தில் பயணிக்கும் போது முதியவர்களுக்கோ, முடியாதவர்களுக்கோ தன் இருக்கையை கொடுத்து உதவுவது, ஒரு குறிப்பிட்ட இடம் தெரியாமல் கேட்பவர்களுக்கு சரியான இடத்தைக் காட்டி கொடுப்பது போன்ற சின்னச்சின்ன உதவிகள்தான் மனிதன் சமூகமாக வாழ்வதில் உள்ள பயன்கள்.ஆனாலும் பல நேரங்களில் இவ்வாரான சின்ன உதவிகளைக்கூட சிலர் செய்ய தயங்குவதை நாம் கண்டிருக்கிறோம். அண்மையில் இங்கே (அபுதாபியில்) பேரூந்தில் பயணித்துக்கொண்டிருக்கும் போது (நான் நின்று கொண்டிருந்தேன்) அப்போது குழந்தையொன்றை தூக்கிக்கொண்டு ஒருவர் ஏறினார். யாராவது எழுந்து சீட் கொடுப்பார்கள் என்று பார்த்தால் எவருமே சீட்கொடுக்க முன்வரவில்லை. சிறிது நேரம் நின்றுகொண்டே வந்தபின் ஒருவர் இறங்கியவுடந்தான் ஒரு சீட் கிடைத்தது அதிலும் உட்கார்ந்திருந்ததில் இளைஞர்கள் பலர்! அதுவும் அந்த வண்டி தூரப்பிரயாணம் போவதுமில்லை மிஞ்சிப்போனால் அதில் பயணிப்பவர்கள் 40 அல்லது 50 நிமிடங்கள்தான் பயணிப்பார்கள். அப்படியிருக்க கையில் குழந்தையை வைத்துக்கொண்டு நிற்பவருக்கு தனது சீட்டை விட்டுக்கொடுக்க முன்வராதது என்னவிதமான மனநிலை என புரியவேவில்லை.

சூப்பர் சிங்கர் ஜூனியரும் அசாத்திய திறமைகளும்!

விஜய் தொலைக்காட்சியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி என்னைக்கவர்ந்த நிகழ்ச்சிகளில் ஒன்று. பல அரசியல்கள், பக்கச்சார்புகள் இன்னும் சில ஏமாற்றுவேலைகள் இருந்தாலும் மொக்கை போடும் சினிமா நிகழ்ச்சிகளை பார்ப்பதைவிட இது நல்லதொரு பொழுது போக்கு நிகழ்ச்சி இசையை ரசிப்பவர்களுக்கு. இந்நிகழ்ச்சி மூலம் பல திரையிசைப்பாடகர்கள் உருவாகியிருக்கிறார்கள் என்பதும் நாம் அறிந்ததே!

இதில் வயது அடிப்படையில் 15 வயதுக்குட்பட்டவர்களுக்கு சூப்பர் சிங்கர் ஜூனியர் என்றும் மற்றயவர்களுக்கு சூப்பர் சிங்கர் என்றும் இருவேறு போட்டிகள் ஆண்டுகொருமுறை நடப்பதுண்டு. இப்போது சூப்பர் சிங்கர் ஜூனியர் நடந்துகொண்டிருக்கிறது. தேர்வுகள் எல்லாம் முடிந்து சிறந்த 25 போட்டியாளர்கள் தெரிவு செய்யப்பட்டிருக்கிறார்கள். இம்முறை  ஜூனியரில், கடந்த முறையைக்காட்டிலும் பல திறமையான இளம் போட்டியாளர்கள் பங்குகொள்கிறார்கள். சொல்லப்போனால் எல்லோருமே மிகத்திறமையானவர்கள். ஒவ்வொரு போட்டித்தொடரிலும் சில அசாத்தியமான திறமையுள்ள போட்டியாளர்கள் வருவார்கள் நம்மை மகிழ்விப்பாளர்கள். இம்முறையும் அது நடந்துகொண்டிருக்கிறது முன்னெப்போதும் இல்லாத வகையில் கொஞ்சம் கூடுதலாகவே!

அந்த வகையில் செந்தில்நாதன் எனும் மூளை வளர்ச்சி குறைந்த, கண்தெரியாத பையனின் பாடல்கள்தான் எல்லா இசை ரசிகர்கள் நெஞ்சத்தையும் நெகிழச்செய்து கொண்டிருக்கிறது அண்மைய நாட்களில்! பிறந்ததுமே தாய் தந்தையரினால் கைவிடப்பட்ட இச்சிறுவனை ஒரு கண்தெரியாதவர்தான் எடுத்து வளர்த்திருக்கிறார். எந்த வேலையை செய்ய வேண்டுமானாலும் இன்னொருவரின் உதவியை எதிர்பார்க்கும் இவன் பாடல்கள் என்று வரும்போது மட்டும் தூள்கிளப்பிவிடுகிறான். பலவருடம் சங்கீதம் பயின்ற குழந்தைகளே பல தவறுகளுடன் பாடும் போது வெறும் கேள்விஞானம் மட்டுமே கொண்டுள்ள இச்சிறுவனால் பிழையின்றி ஏற்ற இறக்கங்களுடன் அழகான உச்சரிப்புகளுடன் எப்படி சாத்தியமாகிறது என்பது ஆச்சர்யம்தான்! அதிலும் பெண்குரல் மாற்றிவேறு பாடுகிறான். என்ன ஒரு அற்புதமான குரல் வளம்! எப்போதும் அனுதாபங்களையும், கண்ணீரையும் முன்னிறுத்தி  பிரபலம் தேடிக்கொள்ளும் விஜய் டீவீ  இந்தச்சிறுவன் விடயத்திலும் அதுதான் நோக்கம் என்றாலும் மனவளர்ச்சியில்லாதவன் என்று நிராகரித்துவிடாமல் போட்டியில் சேர்த்துக்கொண்டு அந்தச்சிறுவனின் எதிர்காலத்திற்கு பொருளாதார ரீதியாக உதவியமைக்கு நன்றியை தெரிவித்துக்கொள்ளலாம். செந்தில்நாதன் தொடர்ந்து போட்டியில் பங்கெடுக்கும் மனநிலையில் இல்லையென்பதால் அவ்வப்போது வந்து ஒரு சில பாடல்களை பாடிச்செல்வதற்கு அனுமதி வழங்கப்படுவதாக குறிப்பிட்டுள்ளனர். இதுவும் ஒரு சிறந்த யோசனைதான்.

செந்தில்நாதன் பாடிய சில பாடல்கள்..  இந்நிகழ்ச்சியின் இன்னுமொரு திறமையான போட்டியாளர் பெங்களூரிலிருந்து வந்து பங்குபெற்றும் தமிழில் எதுவுமே பேசத்தெரியாத தமிழில் பாட மட்டும் தெரிந்த ஸ்பூர்த்தி. ஒவ்வொரு பாடலையும் அதற்கேயுரிய சிறப்புகளுடன் இசை நுனுக்கங்களுடனும் அழகான தமிழ் உச்சரிப்புடனும் பாடி அசத்துகிறது இந்த குட்டிப்பொண்ணு. பலவருடம் சங்கீதம் பயின்று பிரபல பாடகர்களுக்கு மட்டுமே வரும் சில ஏற்ற இறக்கங்கள் நெழிவு சுளிவுகள் இந்தப்பொண்ணுக்கு இப்போதே அனாயசமாக வருகிறது. அதற்கு சில உதாரணங்கள் இங்கே.


மோக முள்ளும் கண்ணம்மாக்களும்.!

காமமும் மோகமும் ஆச்சாரமோ அனுஷ்டானமோ பார்ப்பதில்லை.. உள்ளுக்குள் பூட்டி பூட்டி வைத்த உணர்ச்சிகள் தடைமீறி வெளிக்கிளம்பும் போது வெட்கங்களால் அவற்றை தடுக்க முடிவதில்லை!! அண்மையில் மோக முள் திரைப்படம் பார்த்தபோது மனதில் எழுந்தவை இவை..

மோகமுள் திரைப்படத்தில் முதன்மை பாத்திரங்கள் யமுனா-பாபு, இதுதான் நிறைய பேருக்கு பிடித்திருந்தது.. எனக்கும் பிடித்திருந்தது, ஆனால் அதைவிட கிளைக்கதையாக வயதானவருக்கு மனைவியாக வரும் "கண்ணம்மா"
பாத்திரம்தான் மனதை ஏதோ செய்துவிட்டது.. படம்பார்த்து முடிந்தும் இரண்டு மூன்று நாட்களாக அதைப்பற்றியே சிந்தித்துக்கொண்டிருந்தேன்.. 

குடும்ப வறுமை காரணமாக வயதான ஒருவருக்கு இளமையான, அழகான கண்ணம்மா துனைவியாக்க படுகின்றால்.. அங்கே அவளுக்கு பொண்ணும் பொருளும் குறைவின்றி வாங்கிக்கொடுக்கிறார்.. ஆனால் ஒரு பெண்ணுக்கு இது மட்டும் போதுமா? அவள் உடல் உளத்தேவைகளை பற்றி அந்த வயதானவருக்கு கவலையில்லை, உண்டவுடன் உறங்கிவிடுகிறார்.. வெளியில் போகும்போது உள்ளே வைத்து பூட்டி வைத்துவிட்டு போய்விடுகிறார்.. உலகெங்கிலும் எங்கோ ஓர் மூலையிலாவது இது போன்ற நிகழ்வுகள் நாளாந்தம் நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கின்றன.

இதன் போதே பக்கத்து வீட்டு மேல்மாடியில் வசிக்கும் பாபுவுடன் பழக்கம் ஏற்படுகிறது கண்ணம்மாவுக்கு..  தனக்குள் எறிந்து கொண்டிருக்கும் உணர்ச்சி தீயை அனைக்க பாபுவை விட்டால் வேறு வழி தெரியவில்லை கண்ணம்மாவுக்கு.. ஒருநாள் இரவு பாபு தனிமையில் உறங்கிக்கொண்டிருக்கும் போது திடீரென அவன் அறையில் நுழைந்தவள் அவனை தடாலடியாக கட்டிபிடித்து அவனுடன் உறவு கொள்கிறால் அவனுக்கு அதில் இஷ்டமில்லாமல் ஆரம்பத்தில் மறுத்தாலும், இறுதியில் அவனால் அவளை விலக்க முடியாமல் அவளுடன் ஒத்துப்போகிறான்!

இந்தப்படம் பார்க்காதவர்கள் இங்கு நான் குறிப்பிட்டவற்றை ஏதோ மலயாள பிட்டுபட ரேஞ்சிற்கு கற்பனை செய்தால், அது தவறு! காரனம் படம் பார்க்கும் போது எந்த விரசமும் அதில் தெரியவில்லை. கண்ணம்மாவின் செய்கைகளை நியாயபடுத்த முடியாவிட்டாலும் அவளின் மீது ஒரு பரிதாப உணர்வு ஏற்படுகிறது.. அதுவே அந்த பாத்திர படைப்பினதும் படத்தினமும் வெற்றி.. இந்தப்படத்தின் கதையுடைய நாவலை படித்தவர்கள் படத்தைவிடவும் நாவல் சிறப்பாக இருக்கிறது என சொல்லக்கேட்டுள்ளேன்.. நான் நாவல் படிக்கவில்லை படம் மட்டும்தான் பார்த்தேன்..

பிறகு இன்னுமொரு நாள் அதேபோல் கண்ணம்மா பாபுவின் படுக்கையறைக்கு வருகிறாள் அப்போது கதவை பூட்டிவிட்டு உள்ளே அவன் உறங்குவதை அவதானிக்கிறாள்.. அவளை உள்ளே அனுமதிக்கும்படி வேண்டுகிறால், இம்முறை அவன் அனுமதிக்கவில்லை.. அது தப்பு என்கிறான். தொடர்ந்தும் அவள் விடவில்லை கதவை திறக்கும்படி கெஞ்சிக்கேட்கிறாள்..(ஒரு பெண் எதற்கு வேண்டுமானாலும் கெஞ்சலாம், ஆனால் தன் உடல் பசியை தீர்த்துக்கொள்ள ஒரு ஆணிடம் கெஞ்ச வேண்டிய நிலை ஏற்படுவது மிகக்கொடுமையாகும்!!!) இருவரும் வேறு எங்காவது போய் வாழலாம் என்கிறாள், என்னிடம் எல்லா தைரியமும் இருக்கிறது நீ என்னுடன் கூட வந்தாலே போதும் என்கிறாள்.. அவன் இறுதிவரை முடியாது என வீராப்பாகவே இருந்துவிடுகிறான்.. அவளும் அழுகையுடன் சென்றுவிடுகிறாள்.

பிறகு என்ன நடந்திருக்கும்...? ஊகிக்க முடிகிறதா? வேறென்ன, அவள் தற்கொலை செய்து கொள்கிறாள்!! யார் காரணம் அவளின் முடிவிற்கு..? இன்னுமொர் திரைப்படம் பார்த்தேன் அது பூட்டான் படமான Travellers and Magicians ஒரு கிராம சேவக அதிகாரி அமெரிக்க செல்ல ஆசைப்பட்டு அவன் கிராமத்திலிருந்து நகரத்துக்குச்செல்ல பஸ்ஸுக்காக காத்திருத்தலும் அவ்வேளையில் அதனூடே சந்திக்கும் மனிதர்களை பற்றிய கதை இது..

அப்போது அங்கு வந்து சேரும் துறவி ஒருவனின் கதை கிளைக்கதையாக விரிகிறது.. அப்போது ஒரு மலைக்கிராமத்திலுள்ள ஒரு வீட்டில் ஒரு வயதானவரும் ஒரு அழகான இளம்பெண்ணும் வசிப்தாக காட்ட்ப்படுகிறது.. அந்த வயதானவருக்கு அந்த பெண் எல்லா பணிவிடைகளும் செய்கிறால் உடம்பு தேய்த்து குளிப்பாட்டி விடுவதில் தொடங்கி சமைத்து பரிமாறுதல் வரை அனைத்து வேலைகளையும் செய்கிறாள்..ஆரம்ப காட்சிகளை நோக்கும்போது தந்தை மகள் என்றே நினைத்துக்கொண்டிருந்தேன் பின்புதான் தெரியவந்தது அந்த வயதானவரின் மனைவிதான் அந்த பெண் என்று.. என்ன கொடும!!

நான் முன்பு கண்ணம்மா விடயத்தில் சொன்னது போன்று இவளுக்கும் எந்த உடல் சுகத்தையும் அந்த கிழவனால் கொடுக்க முடியவில்லை.. (என்ன மயி___டா உங்களுக்கு கல்யாணம், அதுவும் இது போன்ற இளம் பெண்களோட என அந்த வேளையில் நினைக்காமல் இருக்க முடியவில்லை)
அப்போது அங்கே அந்த வயதானவருடன் சேர்ந்து மலைக்கு சென்று வேலை செய்ய அங்கே ஒரு இழைஞனும் இருக்கிறான்... பின் என்னவாகிருக்கும் அந்த இழைஞனுக்கும் அவளுக்கும் காதல், அவர்களுக்குள் கள்ள உறவும் ஏற்படுகிறது..
                                  கிழவனும் இளம் வயது மனைவியும் நடுவில் துறவியும்.

பின் இருவரும் ஓடிப்போக தீர்மானிக்கிறார்கள்.. அப்போ கிழவனை என்ன பண்ணுவது,  அவனுக்கு விஷம் வைத்து கொல்ல முடிவு செய்கிறார்கள்..
அப்பிடியே ஒருநாள் கிழவனுக்கு வைத்த சாப்பாட்டில் விஷத்தை கலந்துவிட்டு ஓடிப்போக தயாராகிறார்கள்.. அப்போது அவன் மனசில் ஒரு குற்றவுணர்ச்சி ஏற்படுகிறது ஒரு உயிரை கொன்றுவிட்டோமே என.. பின் அவளை விட்டுவிட்டு அவன் வெளிக்கிறம்புகிறான்..அடப்பாவி!! என்னையும் அழைத்துச்செல் என அவன் பின்னாலயே அவளும் ஓடி வருகிறாள் வரும்வேளையில் அவள் ஆற்றில் விழுந்து இறந்து போகிறாள்.. இப்போது இரண்டு உயிர்களை கொன்ற குற்றவுணர்ச்சி.. பின் என்னவாகிறான் அவந்தான்  அந்த துறவி.. அந்த பெண்ணை கிழவனோடும் வாழ விடல்ல  அவனும் அழைத்துச்செல்ல வில்லை ஆசை காட்டி ஆற்றில் விட்டுவிட்டான்..

இந்த இரு திரைப்படங்களின் இரு பெண்களும் ஒரே மனநிலையோடு  உடல் உணர்ச்சிகளை மறந்து வாழ்ந்தவர்கள்.. அவர்களின் உணர்வுகள் தூண்டப்பட்டு இறுதியில் இறந்தும் போகிறார்கள்.. உலகில் இவ்வாறு  இன்றும் ஒவ்வோர் இடங்களிலும் நடந்துகொண்டுதானிருக்கிறது,,
 இதற்கு முன்பு வேறொரு தளத்தில் என்னால் எழுதப்பட்டிருந்த பதிவு இது..

மால்குடி டேஸ் நினைவுகள்.

1990 களின் நடுப்பகுதி பொழுதுபோக்கிற்கு இலங்கை அரச தொலைக்காட்சிகள் மட்டுமே கதி என்றிருந்த காலம்.
அப்பொழுது கண்டுகளித்த சில தரமான நிகழ்ச்சிகள் இப்பொழுதும் மனதில் ஊசலாடுகிறது. அவற்றில் இந்திய தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி மிக நல்ல வரவேற்பை பெற்ற மால்குடி டேஸ் என்ற தொடர் நாடகத்தை இலங்கை ரூபவாஹினியும் மொழிமாற்றம் செய்து/உபதலைப்புகளுடன் ஒளிபரப்பு செய்தது. அதன் ஒவ்வொரு கதைகளும் சிறார்களை மையப்படுத்தியதாகவே இருந்ததால் அப்போதைய சிறுவர்களுக்கு பிடித்துப்போன நிகழ்ச்சியாக மாறிப்போனது.

ஒரு கற்பனை கிராமத்தை அடிப்படையாக வைத்து ஆர்.கே.நாராயணனினால் எழுதப்பட சிறுகதை தொகுப்பே இக்கதைகள். இதை கண்ணட நடிகரும் இயக்குனருமான சங்கர் நாக் முப்பதிற்கு மேற்பட்ட  சிறுகதைகளை கொண்ட தொலைக்காட்சி தொடராக இயக்கியிருந்தார். மால்குடி என்னும் கற்பனை கிராமத்தை உருவாக்கி அதில் வாழ்ந்த எளிமையான மனிதர்களையும் அந்த சூழலையும் அவர்களின் வாழ்க்கை முறைகளையும் மிக அழகான சிறுகதைகளாக எழுதியிருந்தார் ஆர்.கே.நாராயணன். அவற்றை அப்படி தத்ரூபமாக காட்சிப்படுத்தி இந்தியாவில் அப்படியொரு கிராமம் எங்கேயிருக்கிறது என ரசிகர்களை தேட வைத்திருக்கிறார் இதை இயக்கிய சங்கர் நாக்.

இது இப்போதிருக்கும் மெகா தொடர்கள் போல் அல்லாமல் ஒவ்வொரு பாகமும் ஒவ்வொரு சிறுகதைகளாக ஒளிபரப்பாகும். ஒரு அருமையான சிறுகதையை வாசித்து முடிந்ததும் மனதில் ஏற்படும் திருப்தியை ஒத்தது ஒவ்வொரு சிறுகதைகளையும் காடசிகளாக கண்டு முடிக்கும் போது ஏற்படும் திருப்தி. இது கற்பனை கதையாக இருந்த போதிலும் இதில் வரும் கதை நாயகர்களோ ஏனைய கதாபாத்திரங்களோ மிக எளிமையானவை எந்த வித சாகசங்களும் செய்யாதவை. நாம் அன்றாடம் கான நேரிடும் மனிதர்கள்தான்! இதை குழந்தைகள், சிறார்களுக்கான தொடராக மட்டும் ஒதுக்கி விட முடியாது. இக்கதைகளில் பெரியவர்களுக்கும் நிறைய கருத்துக்கள் பொதிந்திருந்தது. தமிழில் மொழிமாற்றம் தொடர்கள் சில இணையத்தில் கானக்கிடைக்கிறது.. ஹிந்தி, ஆங்கில மொழி தொடர்கள் நிறையவே கானக்கிடைக்கிறது.


எல் வைத்தியநாதன் இசையமைத்திருந்தார் இந்த தொடருக்கு. அதில் இந்த தலைப்பு இசை மிக பிரபலம்.
North 24 Kaatham

நமக்கு பிடித்தமான நம்மை பாதிக்கும் சில விடயங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளுதலும் அல்லது எழுதி வைத்து சில காலங்களுக்கு பின் அதை மீட்டிப்பார்ப்பதும் அலாதி இன்பமானது. அவ்வாறு தொடங்கப்பட்டதுதான் இந்த வலைப்பக்கம்! அதனடிப்படையில் நான் பார்த்து ரசிக்கும் சில திரைப்படங்கள் பர்றி எழுதி வருகிறேன் அண்மைக்காலமாக. அவற்றில் அதிகமாக மலயாள திரைப்படங்கள் பற்றியே எழுதக்காரணம் அவைதான் என்னை அதிகமாக பாதிக்கிறது தமிழ் திரைப்படங்களை விடவும்! நல்ல தமிழ் திரைப்படங்கள் கண்டால் அவற்றையும் எழுதியிருக்கிறேன் இனியும் எழுதுவேன்.

இப்போதும் அண்மையில் பார்த்து வியந்த ஒரு அட்டகாசமான மலயாள திரைப்படத்தைப்பற்றியே சொல்லப்போகிறேன். அதுதான் North 24 Kaatham பஹாத் பாசில் நடித்தது. என்ன நடிகண்டா நீ... என்னும் சொல்லுமளவிற்கு ஒவ்வொரு படத்திலும் அந்தந்த பாத்திரமாகவே வாழ்ந்து வருகிறார் இதிலும் அப்படியே. நடிக்கிறார் என்று கொஞ்சம் கூட நம்ப முடியவில்லை. பல அற்புதமான நடிகர்களை உருவாக்கிய மலயாள திரையுலகம் இன்னுமொரு சூப்பர் ஹீரோவையும் உருவாக்கிவருகிறது. இந்தக்கதைக்கு இவரைவிட்டால் ஆளில்லை என்னுமளவிற்கு ஒவ்வொரு படத்திலும் பொருந்திப்போகிறார்.

இப்படத்தின் கதை என்று சொல்லுமளவிற்கு பெரிதாக ஒன்றுமில்லைதான்.. பஹாத் ஒரு corporate  கம்பெனியில் வேலை செய்யும் இழைஞன் எல்லோரிடமிருந்தும் வித்தியாசமான பல சுபாவங்களை தன்னகத்தே கொண்டவன். யாரிடமும் தேவைக்கு அதிகமாக பேசுவதில்லை, அளவுக்கதிகமான சுத்தத்தை பேனுபவன், பயந்த சுபாவம், பெண்கள் என்றாலே ஆகாது இப்படி பல சுவாரஷ்யமான கொள்கைகளையுடையவன். ஏன், மொபைல் போன் கூட பயன்படுத்துவதில்லை. இவனுடன் ஒன்றாக வேலை செய்பவர்களுக்கும் இவனின் நடத்தைகளால் இவனை பிடிப்பதில்லை. இப்படியிருக்க கம்பெனி விடயமாக வெளியூரிற்கு பயணம் செல்ல நிர்ப்பந்திக்கப்படுகிறான். அந்த பயணமும், பயணத்தின் போது அவன் சந்திக்கும் மனிதர்களாலும் எவ்வாறு இவனின் கொள்கைகளை மாற்றிக்கொள்கிறான் என்பதே கதை.

இந்தக்கதைக்கு திரைக்கதை அமைத்த விதத்திலேயே சுவாரஷ்யப்படுத்தியிருக்கிறார் இயக்குனர் அனில் ராதாகிருஷ்ணன் மேனன் இது இவருக்கு முதல் படமாம்! ஆரம்பத்திலேயே அசத்தியிருக்கிறார். படத்தின் அரைவாசிக்கு மேல் பயணம்தான். இம்மாதிரியான பயணங்களோடு (Road movies) சம்பந்தப்பட்ட படங்களை தேடிப்பார்க்கும் ஆர்வம்கொண்ட எனக்கு இப்படம் நல்லதொரு விருந்து. ஹர்த்தால் காரணமாக ரயில் பயணம் ரத்தாக பல்வேறு வாகணங்களிலும், தோனியிலும், கால் நடையாகவுமே பயணிக்கிறார்கள் பஹாத்துடன் நெடுமுடி வேணுவும் ஸ்வாதியும். நெடுமுடி வேனு ஒரு வேலை விடயமாக வெளியூர் செல்ல இடைநடுவே மனைவிக்கு கடுமையான வருத்தம் என்று அழைப்பு வர பயணத்தை இடைநடுவே முடித்துவிட்டு வீடு திரும்ப முயற்சிக்கிறார். பயணத்தின் போது அறிமுகமான ஸ்வாதியும் அவரின் கூட வர ஒரு காரணத்திற்காக பஹாத்தும் அவர்களுடன் சேர்ந்து கொள்கிறார். என்ன காரணத்திற்காக பஹாத் அவர்களுடன் செல்கிறார் என இலகுவாக அனுமானித்து விடலாம். நான் நினைத்தது போலவே இறுதிகாட்சியிலும் நடந்தது. எப்படியிருந்தாலும் படம் ஆரம்பம் முதல் இறுதிவரை தொய்வில்லாமல் ஒரே வேகத்துடன் நகர்கிறது. பார்வையாளனின் கவனத்தை வேறு எங்கும் செல்ல விடாமல் முழு கவனத்தையும் திரையின் பக்கம் கொண்டு வருவதே ஒரு திரைப்படத்தின் முழு வெற்றியாக இருக்க முடியும் அதை இப்படம் நிச்சயம் நிறைவு செய்திருக்கிறது என்பேன்.

நெடுமுடி வேனு எனக்கு பிடித்தமான நடிகர்களில் ஒருவர். மனிதருக்கு எந்தவிதமான பாத்திரங்கள் கொடுத்தாலும் அசத்துவார் இதிலும் அப்படியே அசாத்தியமான நடிப்பு! ஸ்வாதி துடு துடு பெண்ணாக நல்ல நடிப்பை வழங்கியிருக்கிறார்.  பல இடங்களில் சுவாரஷ்யப்படுத்துகிறார். பொதுவாக மலயாளிகள் அவர்களின் திரைப்படங்களில் பிற ஊர்காரர்களுக்கு அவ்வளவு இலகுவில் வாய்ப்பு வழங்கிவிட மாட்டார்கள். அப்படியிருந்தும், ஸ்வாதிக்கு இது இரண்டாவது படம் பஹத்துடன். பிரேம்ஜியும் ஒரு சில காட்சிகளில் வருகிறார் தமிழனாகவே.. படத்தின் ஆரம்பத்திலேயே பஹத்தின் குணாதிசயங்களை பார்வையாளருக்கு விளங்கவைத்து விடும் வகையில் அருமையாக காட்சியமைத்த இயக்குனரின் திறமையை என்னவென்று சொல்வது படம் முழுக்க பஹத் பேசியது ஒரு பக்க தாளில் எழுதிவிடுமளவு மிக கொஞ்ச வசனங்கள்தான் மற்றவையெல்லாம் அவரின் உடல்மொழி, முகபாவனைகள் மூலமே காட்சிபடுத்தியிருப்பது சிறப்பு.

இதில் பஹத்தின் குணாதிசயங்களாக காட்டப்படும் சில பண்புகள் சில வருடங்கள் முன் வரை என்னிடமும் இருந்ததால் இத்திரைப்படம் என் மனதுக்கு மிக நெருக்கமாகிவிட்டது. திரைப்படங்கள் என்பது வெறுமனே கண்களுக்கு விருந்து, வெற்றுப்பொழுது போக்கில்லாமல் நம் சிந்தனைகளை தூண்டக்கூடிய தன்னம்பிக்கைகள் தரக்கூடியதாக இருக்க வேண்டும் என்பதே எனது ஆசை. அந்த வகையில் இப்படமும் ஓரளவுக்கேனும் அதை பூர்த்தி செய்திருக்கிறது. மலயாள சினிமா விரும்பிகள் தவறவிடக்கூடாத ஒரு சினிமா இது.

Immanuel- மலயாளம்!

இப்போதுதான் இந்தப்படம் பார்க்க முடிந்தது. லால் ஜோசின் இயக்கத்தில் ஒரு அழகான மனதை இலேசாக்கும் திரைப்படம். வணிக சமாச்சாரங்கள் இல்லாமல் இயல்பாக பயணிக்கும் கதைகளைக்கொண்ட இது போன்ற சினிமாக்கள் மலயாளத்தில்தான் அதிகம் சாத்தியப்படுகிறது. மாஸ் மசாலா திரைப்படங்களில் கிடைக்காத மனத்திருப்தி.. இது போன்ற சாதாரன ட்ராமா வகை திரைப்படங்களினால் நிச்சயம் கிடைக்கிறது.
இன்சூரன்ஸ் Corporate நிறுவனம் ஒன்றைச்சுற்றியே கதையமைக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள்தான் பெரிய சொத்து அவர்களை நன்றாக கவனிக்க வேண்டும் எனச்சொல்லிக்கொண்டு, அவர்களுக்கு கிடைக்கவேண்டிய நலன்களையும் வசதிகளையும் கிடைக்காமல் செய்து அவர்களை எவ்வாறு கசக்கி பிழிகிறார்கள் இந்த Corporate நிறுவனங்களின் உயர் மட்டத்தினர் என்பதை அழகாக பதிவு செய்கிறது இப்படம்.

இன்சூரன்ஸ் நிறுவனத்தின் புதிய விற்பனை பிரதிநிதியாக மம்மூட்டி. இளைஞர்களுக்கு கிடைக்கவேண்டிய வேலையை மத்திய வயதை கடந்த நிலையிலும் போராடி பெறுவதும், மாத விறபனை இலக்கை அடைவதற்கு அலைவதும், நிறுவனத்தில் வாடிக்கையாளர்களுக்கு நடக்கும் அநீதிகளை கண்டு மனம் வெம்புவதும், மனைவி ஆசைப்படி எப்படியாவது சொந்த வீடொன்றை வாங்க வேண்டும் என்ற குடும்ப தலைவனாகவும், தன் மகனுக்கு சிறந்த தந்தையாகவும் மாத சம்பளத்தை மட்டுமே நம்பி குடும்பம் நடத்தும் நடுத்தர வர்க்க மனிதராக சிறப்பாகவே நடித்திருக்கிறார் மம்மூட்டி.

அதே நிறுவனத்தில் விற்பனை முகாமையாளராக பஹாத் பாசில்.. அவருக்கே உரித்தான இது போன்ற பாத்திரங்களை அசால்ட்டாக செய்கிறார் பஹாத். லாபம் மட்டுமே நோக்காக கொண்ட ஒரு நிறுவன முகாமையாளர் எவ்வாறெல்லாம் நடந்துகொள்வார் அவரின் உடல்மொழி, பேச்சு எப்பிடியிருக்கும் என உள்வாங்கி செய்திருக்கிறார்.. நாயக அந்தஸ்துடன் மட்டும்தான் நடிப்பேன் என அடம்பிடிக்காமல் தனக்கு கிடைக்கும் எதிர்மறை கதாபாத்திரங்களிலும் வெளுத்து வாங்குகிறார். புதியதாக வரும் அவரின் எல்லா படங்களையும் தேடிப்பார்க்கும் ஆவலை ஏற்படுத்துகிறது அவரின் நடிப்பு!

ஜோர்ஜ் க்ளூனி நடித்த up in the air திரைப்படத்தில் எப்படி ஊழியர்களை "downsizer" (Job Killers) என்று சொல்லப்படும் HR கன்சல்டன்ட் மூலம் வேலையை விட்டு தூக்குகிறார்களோ அதே போன்றதொரு காட்சி இதிலும் உண்டு.  தனியார் Corporate நிறுவனங்கள் ஊழியர்களுக்கு எவ்வாறு மன அழுத்தங்களை ஏற்படுத்துகிறார்கள் எந்த நேரத்திலும் வேலை பறிபோகும் என்ற நிச்சயமற்ற தன்னையை ஏற்படுத்தி வேலை வாங்குகிறார்கள் என்பதை அருமையாக காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். முடிவு சினிமாத்தனமாக இருந்தாலும் சிறந்த திரைப்படம் ஒன்றை பார்த்த திருப்தி மட்டும் மிஞ்சுகிறது.

மனம் கவர்ந்த மலயாள சினிமா..4

Katha Parayumpol (2007) கத பறயும்போல்ஸ்ரீனிவாசனின் நேர்த்தியான கதை திரைக்கதையில் எம் மோகனன இயக்கி வெளிவந்த சூப்பர்ஹிட் திரைப்படமே இது.சிறுவயதில் நண்பர்களாக இருந்த இருவர் பின்னாட்களில் வளர்ந்து ஒருவர் புக்ழ்மிக்க சூப்பர் ஸ்டார் நடிகராகவும், மற்றையவர் சலூன் கடை வைத்திருக்கும் முடி திருத்தும் சாமானிய ஏழை மனிதராகவும் மாறியிருக்கும் நிலையில்! ஒரு சந்தர்ப்பத்தில், இருவரும் சந்தித்துக்கொள்வதற்கான வாய்ப்பு வரும் போது நிகழும் சம்பவங்களையும் உணர்வுகளையும் இந்த சமூகத்தோடும் நட்போடும் தொடர்புபடுத்தி அமைக்கப்பட்ட கதையே இது. சூப்பர் ஸ்டாராக மம்மூட்டியும் முடி திருத்துபவராக ஸ்ரீனிவாசனும் அவரின் மனைவியாக மீனாவும் நடித்திருப்பார்கள். மம்மூக்காவுக்கு ஏற்ற கதாபாத்திரம் மிக இயல்பாக நடித்திருப்பார்.ஸ்ரீனிவாசனின் நடிப்புக்கு நான் ரசிகன் இதிலும் அந்த பாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார். ஸ்ரீனிவாசன் மிகச்சிறந்த திரைக்கதையாசிரியர் என்பதற்கு இப்படம் சிறந்ததொரு உதாரணம் அப்படியான அருமையான திரைக்கதை. இதையே ரஜினிகாந்த நடிக்க குசேலேனாக தமிழுக்கு மீள் உருவாக்கியிருந்தார் இயக்குனர் பி.வாசு. ஆனாலும் மலயாளத்தில் மாபெரும் வெற்றிபெற்ற இப்படம் சொதப்பலான இயக்கத்தினாலும் தேவையற்ற காட்சிகளாலும் சொத்தையாகிப்போனது தமிழில்.

Bhramaram (2009) ப்ரம்மரம்


Blessy யின் திரைக்கதை இயக்கத்தில் உருவான திரைப்படமே இது. பொதுவாக இவரின் திரைப்படங்களில் கதைகள் உள் உணர்வுகளோடும் மனதின் வலியோடும் சம்பந்தப்பட்டதாகவே இருக்கும். இதுவும் அது போலொரு கதைதான். சின்ன வயதில் செய்யாத கொலைக்காக பொய்க்குற்றச்சாட்டின் பேரில் கைதாகி பல வருடங்கள் சிறையிலிருந்து விடுதலையாகி சமூகத்தின் புறக்கனிப்பால் வேறொரு ஊருக்கு இடம்பெயர்ந்து, புதிய பெயருடனும் புதிய அடையாளத்துடனும் ஒரு பெண்ணை(பூமிகா) திருமணம் செய்து கொண்டு ஒரு மலைக்கிராமத்தில் ஜீப் சாரதியாக வேலை பார்த்து வாழ்க்கை நடத்துகிறார் மோகன்லால். ஒரு பெண் குழந்தையும் உண்டு. இவ்வாறு நகரும் போது திருமண வீடொன்றில் வைத்து இவர் ஒரு கொலைக்குற்றவாளியெனவும் பொய்பெயரில்தான் இத்தனை நாள் தன்னோடு குடும்பம் நடத்தியிருக்கிறார் எனத்தெரியவர மனைவியும் பிள்ளையும் வெறுத்து ஒதுக்குகிறார்கள் இவரை! தான் ஒரு நிரபராதியென எவ்வளவு மன்றாடியும் கேட்காமல் அவரை விட்டும் பிரிந்து சென்ற நிலையில், உண்மையான குற்றவாளியைக்கொண்டே நிரூபிப்பதற்காகவேண்டி உண்மையான குற்றவாளியை கான நகருக்கு வந்து அவனை எவ்வாறு அழைத்துக்கொண்டு தன் கிராமத்துக்கு செல்கிறார் என்பதுதான் கதை. இதை கேட்கும் போது ஒரு சாதாரன கதையாக தோன்றினாலும் அதை சொல்லிய விதத்திலும் திரைக்கதையமைத்த விதத்திலும் வெற்றி பெற்றிருக்கிறார் இயக்குனர். இப்படியானதொரு கதாபாத்திரத்தை மோகன்லால் தவிர வேறொருவரால் செய்திருக்க முடியுமா என்பதும் சந்தேகமே அப்படியொரு அற்புதமான நடிப்பு. அப்பாவி நாட்டுப்புற மனிதராகவும், கோபம் வரும் வேளைகளில் வெறியோடு உணர்ச்சிகளை காட்டும் இடங்களில் முரடனாகயும் இருவேறுபட்ட நடிப்பை வழங்கியிருக்கிறார். லாலேட்டன்!

Boeing Boeing (1985) போயிங் போயிங்


பிரியதர்ஷனின் இயக்கத்தில் உருவான முழுநீள நகைச்சுவை திரைப்படமாகும் இது 1960 யில் வெளிவந்த ஒரு பிரென்ச் திரைப்படத்தின் தழுவலாம். ஷாம் என்ற மோகன்லாலும் அனில்குமார் என்ற முகேஷும் நண்பர்கள் ஒரு பத்திரிகை அலுவலகத்தில் புகைப்படக்காரர்கள். இதில் ஷாம் பணக்காரன் என பொய் சொல்லி, ஒரு பிளாட்டையும் வாடகைக்கு எடுத்து விமான பணிப்பெண்களான மூன்று அழகிய பெண்களை ஏமாற்றி கல்யாணம் பண்ணிக்கிறேன் என ஆசைக்காட்டி காதலிப்பதே கதை! அதுவும் ஒரே பிளாட்டில் மூன்று பெண்களையும் வெவ்வேறு நேரங்களில் வரவழைக்கிறார். அவர்களை நம்ப வைப்பதற்கும், சில வேளைகளில் இருவரோ அல்லது மூவரோ ஒரே நேரத்தில் வரும்போது எப்படி சமாளிக்கிறார்கள் அதில் ஏற்படும் சிக்கல்கள்,ரகளைகளை, குழப்பங்களை மிகச்சுவாரசியமாகவும் நகைச்சுவையாகவும் காட்டியிருக்கிறார்கள். இவர்களுக்கு உதவியாக பிளாட் வேலைக்காரியாக சுகுமாரி கலக்கியிருக்கிறார். என்னவொரு அற்புதமான நடிகை! மலயாளத்தின் மனோரமா ஆச்சி என்றே சுகுமாரியை சொல்லலாம். மோகன்லால் நகைச்சுவையிலும் சிறந்த நடிகராக நிறைய படங்களில் நிரூபித்திருக்கிறார் அதில் இதுவும் ஒன்று. முகேஷும் சிறந்த நடிப்பை வெளிக்காட்டியிருக்கிறார்.  கதை என்று பார்த்தால் மிக மிக சாதாரன கதைதான் ஆனால் நகைச்சுவைதான் பிரதானமே. 

Song lyrics

Tamil,Sinhala,Hindi Song Lyrics