மனம் கவர்ந்த மலயாள சினிமா..4

Katha Parayumpol (2007) கத பறயும்போல்



ஸ்ரீனிவாசனின் நேர்த்தியான கதை திரைக்கதையில் எம் மோகனன இயக்கி வெளிவந்த சூப்பர்ஹிட் திரைப்படமே இது.சிறுவயதில் நண்பர்களாக இருந்த இருவர் பின்னாட்களில் வளர்ந்து ஒருவர் புக்ழ்மிக்க சூப்பர் ஸ்டார் நடிகராகவும், மற்றையவர் சலூன் கடை வைத்திருக்கும் முடி திருத்தும் சாமானிய ஏழை மனிதராகவும் மாறியிருக்கும் நிலையில்! ஒரு சந்தர்ப்பத்தில், இருவரும் சந்தித்துக்கொள்வதற்கான வாய்ப்பு வரும் போது நிகழும் சம்பவங்களையும் உணர்வுகளையும் இந்த சமூகத்தோடும் நட்போடும் தொடர்புபடுத்தி அமைக்கப்பட்ட கதையே இது. சூப்பர் ஸ்டாராக மம்மூட்டியும் முடி திருத்துபவராக ஸ்ரீனிவாசனும் அவரின் மனைவியாக மீனாவும் நடித்திருப்பார்கள். மம்மூக்காவுக்கு ஏற்ற கதாபாத்திரம் மிக இயல்பாக நடித்திருப்பார்.ஸ்ரீனிவாசனின் நடிப்புக்கு நான் ரசிகன் இதிலும் அந்த பாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார். ஸ்ரீனிவாசன் மிகச்சிறந்த திரைக்கதையாசிரியர் என்பதற்கு இப்படம் சிறந்ததொரு உதாரணம் அப்படியான அருமையான திரைக்கதை. இதையே ரஜினிகாந்த நடிக்க குசேலேனாக தமிழுக்கு மீள் உருவாக்கியிருந்தார் இயக்குனர் பி.வாசு. ஆனாலும் மலயாளத்தில் மாபெரும் வெற்றிபெற்ற இப்படம் சொதப்பலான இயக்கத்தினாலும் தேவையற்ற காட்சிகளாலும் சொத்தையாகிப்போனது தமிழில்.

Bhramaram (2009) ப்ரம்மரம்


Blessy யின் திரைக்கதை இயக்கத்தில் உருவான திரைப்படமே இது. பொதுவாக இவரின் திரைப்படங்களில் கதைகள் உள் உணர்வுகளோடும் மனதின் வலியோடும் சம்பந்தப்பட்டதாகவே இருக்கும். இதுவும் அது போலொரு கதைதான். சின்ன வயதில் செய்யாத கொலைக்காக பொய்க்குற்றச்சாட்டின் பேரில் கைதாகி பல வருடங்கள் சிறையிலிருந்து விடுதலையாகி சமூகத்தின் புறக்கனிப்பால் வேறொரு ஊருக்கு இடம்பெயர்ந்து, புதிய பெயருடனும் புதிய அடையாளத்துடனும் ஒரு பெண்ணை(பூமிகா) திருமணம் செய்து கொண்டு ஒரு மலைக்கிராமத்தில் ஜீப் சாரதியாக வேலை பார்த்து வாழ்க்கை நடத்துகிறார் மோகன்லால். ஒரு பெண் குழந்தையும் உண்டு. இவ்வாறு நகரும் போது திருமண வீடொன்றில் வைத்து இவர் ஒரு கொலைக்குற்றவாளியெனவும் பொய்பெயரில்தான் இத்தனை நாள் தன்னோடு குடும்பம் நடத்தியிருக்கிறார் எனத்தெரியவர மனைவியும் பிள்ளையும் வெறுத்து ஒதுக்குகிறார்கள் இவரை! தான் ஒரு நிரபராதியென எவ்வளவு மன்றாடியும் கேட்காமல் அவரை விட்டும் பிரிந்து சென்ற நிலையில், உண்மையான குற்றவாளியைக்கொண்டே நிரூபிப்பதற்காகவேண்டி உண்மையான குற்றவாளியை கான நகருக்கு வந்து அவனை எவ்வாறு அழைத்துக்கொண்டு தன் கிராமத்துக்கு செல்கிறார் என்பதுதான் கதை. இதை கேட்கும் போது ஒரு சாதாரன கதையாக தோன்றினாலும் அதை சொல்லிய விதத்திலும் திரைக்கதையமைத்த விதத்திலும் வெற்றி பெற்றிருக்கிறார் இயக்குனர். இப்படியானதொரு கதாபாத்திரத்தை மோகன்லால் தவிர வேறொருவரால் செய்திருக்க முடியுமா என்பதும் சந்தேகமே அப்படியொரு அற்புதமான நடிப்பு. அப்பாவி நாட்டுப்புற மனிதராகவும், கோபம் வரும் வேளைகளில் வெறியோடு உணர்ச்சிகளை காட்டும் இடங்களில் முரடனாகயும் இருவேறுபட்ட நடிப்பை வழங்கியிருக்கிறார். லாலேட்டன்!

Boeing Boeing (1985) போயிங் போயிங்


பிரியதர்ஷனின் இயக்கத்தில் உருவான முழுநீள நகைச்சுவை திரைப்படமாகும் இது 1960 யில் வெளிவந்த ஒரு பிரென்ச் திரைப்படத்தின் தழுவலாம். ஷாம் என்ற மோகன்லாலும் அனில்குமார் என்ற முகேஷும் நண்பர்கள் ஒரு பத்திரிகை அலுவலகத்தில் புகைப்படக்காரர்கள். இதில் ஷாம் பணக்காரன் என பொய் சொல்லி, ஒரு பிளாட்டையும் வாடகைக்கு எடுத்து விமான பணிப்பெண்களான மூன்று அழகிய பெண்களை ஏமாற்றி கல்யாணம் பண்ணிக்கிறேன் என ஆசைக்காட்டி காதலிப்பதே கதை! அதுவும் ஒரே பிளாட்டில் மூன்று பெண்களையும் வெவ்வேறு நேரங்களில் வரவழைக்கிறார். அவர்களை நம்ப வைப்பதற்கும், சில வேளைகளில் இருவரோ அல்லது மூவரோ ஒரே நேரத்தில் வரும்போது எப்படி சமாளிக்கிறார்கள் அதில் ஏற்படும் சிக்கல்கள்,ரகளைகளை, குழப்பங்களை மிகச்சுவாரசியமாகவும் நகைச்சுவையாகவும் காட்டியிருக்கிறார்கள். இவர்களுக்கு உதவியாக பிளாட் வேலைக்காரியாக சுகுமாரி கலக்கியிருக்கிறார். என்னவொரு அற்புதமான நடிகை! மலயாளத்தின் மனோரமா ஆச்சி என்றே சுகுமாரியை சொல்லலாம். மோகன்லால் நகைச்சுவையிலும் சிறந்த நடிகராக நிறைய படங்களில் நிரூபித்திருக்கிறார் அதில் இதுவும் ஒன்று. முகேஷும் சிறந்த நடிப்பை வெளிக்காட்டியிருக்கிறார்.  கதை என்று பார்த்தால் மிக மிக சாதாரன கதைதான் ஆனால் நகைச்சுவைதான் பிரதானமே. 

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

நல்லதொரு விமர்சனங்களுக்கு நன்றி...

தனிமரம் said...

தேடிப்பார்க்க வேண்டும் என்ற ஆவலைத்தூண்டுவிட்டது விமர்சனம்.நன்றி பகிர்வு சகோ.

Sithira puthiri Song Lyrics

 Sithira puthiri vandhaalum Kannula kathiri thandhaalum Nithira kothida ninanaalum Nenjila un mogam vandhaadum Aththana muthamum thandhaalum...