1232 கிமீ: ஒரு கொடும் பயணம். வினோத் காப்ரி

மார்ச் 24, 2020. கரோனா முதல் அலை இந்தியாவில் வேகமாக பரவத் தொடங்கிய சமயத்தில், மோடி அரசு நாடு தழுவிய ஊரடங்கைக் கொண்டுவந்தது. எந்த முன்னறிவிப்பும், முன்னேற்பாடுகளும் இல்லாமல் அந்த ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்த முன்னேற்பாடற்ற ஊரடங்கால், சொந்த ஊரிலிருந்து புலம்பெயர்ந்து வெளிமாவட்டங்களில், மாநிலங்களில் வேலை பார்த்து வந்தவர்கள் மிக மோசமான நெருக்கடிக்குத் தள்ளப்பட்டனர். மிகக் குறிப்பாக, அடிமட்ட வேலைகளில் ஈடுபடும் புலம்பெயர் தொழிலாளர்கள்.

கரோனா ஊரடங்கின் காரணமாக தொழில் செயல்பாடுகள் முடங்கியதால், பெரும்பாலான புலம்பெயர் தொழிலாளர்கள் வேலை இழந்தனர். வேலை இழந்ததால் அவர்களில் பலர் இருப்பிடமும் இழந்தனர். கட்டுமானத் துறையில்தான் அதிக அளவில் புலம்பெயர் தொழிலாளர்கள் பணியாற்றுகிறார்கள். கட்டுமானப் பணிகள் நடக்கும் வளாகத்தினுள் கூடாரம் அடித்து அவர்கள் தங்கிக்கொள்வர். பணி முடியும் வரையில் அதுதான் அவர்களுக்கான வசிப்பிடம். கட்டுமானப் பணிகள் நிறுத்தப்பட்டதால், அவர்கள் அங்கிருந்து வெளியேறும் நிர்பந்தத்துக்கு உள்ளானார்கள்.

ஆரம்பத்தில் 21 நாட்கள் என அறிவிக்கப்பட்ட ஊரடங்கு தொடர்ச்சியாக நீட்டித்துக்கொண்டே சென்றது. ஊதியம் இல்லை, இருப்பிடத்திலும் நெருக்கடி, சாப்பாட்டுக்கும் வழியில்லை. இனி இப்பெருநகரத்தில் என்ன செய்வது? டெல்லி, மும்பை, புனே, ஹைதராபாத், பெங்களூரு, சென்னை என இந்தியாவின் முக்கியப் பெருநகரங்களில் இருந்த புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் மனைவி, பிள்ளைகளுடன் மூட்டை முடிச்சுகளைக் கட்டிக்கொண்டு கால்நடையாக பலநூறு மைல்களுக்கு அப்பால் உள்ள தங்கள் சொந்த ஊரை நோக்கி நடக்கத்தொடங்கினர்.

அப்படியாக உத்தர பிரதேசத்தில் உள்ள காசியாபத்தில் வேலை பார்த்துவந்த ரிதேஷ், ஆஷீஷ், ராம் பாபு, சோனு, கிருஷ்ணா, சந்தீப், முகேஷ் ஆகிய ஏழு புலம்பெயர் தொழிலாளர்கள் 1232 கிமீ தொலைவில் பிகார் மாநிலத்திலுள்ள தங்கள் சொந்த கிராமத்தை நோக்கி சைக்கிளில் பயணப்படத்தொடங்கினர். 1232 கிமீ தூரத்தை, பகல், இரவு பாராது சைக்கிள் மிதித்து அந்த எழுவர் குழு ஏழு நாட்களில் கடந்தது.

பத்திரிகையாளரும் ஆவணப்பட இயக்குநருமான வினோத் காப்ரி அந்த எழுவருடன் சேர்ந்து பயணப்பட்டு, அவர்களின் பயணத்தைப் பதிவுசெய்தார். அவர்கள் சாப்பாட்டுக்கு என்ன செய்தனர், இயற்கைக் கடனை எப்படி நிறைவேற்றினர், எங்கு தூங்கினர், சைக்கிள் பஞ்சர் ஏற்பட்டபோது என்ன செய்தனர், காவல் துறையின் தடியடியிலிருந்து எப்படித் தப்பிச் சென்றனர் என அந்த ஏழு பேரின் ஏழு நாள் பயணத்தை ரத்தமும் சதையுமுமாக வினோத் காப்ரி ஆவணப்படுத்தினார். அந்த ஆவணப்படம் சென்ற ஆண்டு மார்ச் 24 அன்று டிஸ்னி ஹாட்ஸ்டாரில் வெளியானது. அந்தப் பயண அனுபவத்தை ஆவணப்படத்தில் முழுமையாகக் கடத்தவிட முடியவில்லை என்பதை உணர்ந்த வினோத் காப்ரி, அந்த அனுபவத்தை ‘1232 கி.மீ’ தலைப்பில் புத்தகமாக எழுதி வெளியிட்டார். அந்தப் புத்தகம் இதுவரையில் ஆங்கிலம், இந்தி, மராத்தி, கன்னடம், தமிழ் உள்ளிட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. தமிழில் நாகலட்சுமி சண்முகத்தின் இலகுவான மொழிபெயர்ப்பில் வெளிவந்துள்ள் இந்நூல் கவனிக்க வேண்டியவற்றில் ஒன்று. நம் வாசகர்களுக்காக ‘1232 கி.மீ’ நூலிருந்து ஒரு பகுதியை இங்கு தருகிறோம்.  

 


ஓர் ஆபத்தான சுற்றுவழி

இரண்டாம் நாள்: 28 ஏப்ரல் 2020

சகர்ஸாவுக்கு இன்னும் 1124 கிலோமீட்டர்

அப்போது நள்ளிரவு கடந்து வெகு நேரம் ஆகியிருந்தது. அவர்கள் சகர்ஸாவிலிருந்து இன்னும் வெகுதூரத்தில் இருந்தனர். முப்பது தொழிலாளர்கள் அடங்கிய குழு, மூன்று அணிகளாகப் பிரிந்து, வெவ்வேறு திசைகளிலிருந்து கர்முக்தேஷ்வர் கங்கையை நோக்கிப் பயணித்தன. நாள் முழுவதும் பத்து மணிநேரம் சைக்கிள் ஓட்டி வந்து, இறுதியில் காவலர்களிடம் உதை வாங்கிய பிறகு, அவர்கள் யாருடைய கவனத்தையும் கவராத விதத்தில் மிகுந்த எச்சரிக்கையோடு நடந்தனர்.

ஏறத்தாழ மூன்று மணிநேரம் நடந்து ஒரு காட்டையும் பிறகு வயல்களையும் கடந்த பிறகு, ரிதேஷின் குழுவினர் சிறிது ஓய்வெடுக்க விரும்பினர். உண்மையைச் சொன்னால், கிருஷ்ணா ஒரு மணிநேரம் தூங்குவதற்குத் தயாராக இருந்தார். ஆனால், ஓய்வெடுப்பதற்காக இடைவேளை எடுக்கின்ற எவரொருவரையும் விட்டுவிட்டு மற்றவர்கள் தொடர்ந்து பயணிப்பார்கள் என்று ரிதேஷ் அறிவித்தார். ஏனெனில், காவலர்கள் கடுமையாகக் கண்காணித்துக் கொண்டிருந்தனர். ரிதேஷின் மிரட்டல் அவர் விரும்பிய விளைவை ஏற்படுத்தியது. இரவில் அந்தக் கடுமையான இருட்டில் தாங்கள் தனித்து விடப்படுவதை யாரும் விரும்பாததால், எல்லோரும் தொடர்ந்து நடந்தனர்.

விரைவில், ஏழு பேர் அடங்கிய அந்த அணி, அக்காட்டுக்கும் பல்வாபூர் கிராமத்திற்கும் இடையே இருந்த ஒரு திடலை அடைந்தது. அங்கே ஓய்வெடுப்பது பாதுகாப்பாக இருக்கும் என்று ரிதேஷ் தீர்மானித்தார். அவர்கள் எல்லோரும் தங்களுடைய கொஞ்சநஞ்ச உடமைகளையும் சிறிது உணவையும் சிறிய மூட்டைகளில் கட்டி எடுத்துவந்திருந்தனர். அவற்றைத் தங்களோடு இறுக்கமாக அணைத்துக் கொண்டு எல்லோரும் அத்திடலில் படுத்து உறங்கினர். அவர்களுடைய சைக்கிள்கள் அவர்களைச் சுற்றி ஆங்காங்கே கிடந்தன. வெட்டுக்கிளிகளின் சத்தத்துடன் அக்காடு உயிர்த்துடிப்போடு இருந்தது. அருகே ஓடிக் கொண்டிருந்த ஆற்றின் சத்தம் அவர்களுக்குக் கேட்டது. அவ்வப்போது காற்று வீசி, அவர்களுடைய களைத்துப் போயிருந்த உடல்களை வருடியது. கொசுக்கள் இடைவிடாமல் தொந்தரவு செய்தன, ஆனால் அந்த ஏழு பேரும் அதைச் சிறிதும் பொருட்படுத்தவில்லை. தங்களுடைய கண்களைத் திறப்பது பல ஆயிரம் கிலோ எடையைத் தூக்குவதைப்போல இருந்ததாக அவர்கள் உணரும் அளவுக்கு அவர்கள் மிகவும் களைத்திருந்தனர்.

ரிதேஷின் அலைபேசி ஒலிக்கத் தொடங்கியது. அதிகாலை 4:00 மணிக்கு அவர் வைத்திருந்த அலாரம் அது. அவர் தூக்கக் கலக்கத்துடன் தன் சட்டைப் பையிலிருந்து தன் அலைபேசியை வெளியே இழுக்க முயன்றார், ஆனால் அதற்கான தெம்பு அவருக்கு இருக்கவில்லை. காட்டின் அமைதியைக் கிழித்துக்கொண்டு அந்த அலாரம் ஒலித்தது. ஆனால் ரிதேஷ் ஓர் ஆழ்ந்த உறக்கத்திற்குள் மூழ்கினார். சடலங்களைப்போல அத்தொழிலாளர்கள் அசையாமல் அமைதியாகக் கிடந்தனர்.

அரை மணிநேரத்திற்குள் அந்த அலாரம் மீண்டும் ஒலித்தது. ஒரு மண்மேட்டின்மீது தலை வைத்துப் படுத்திருந்த ராம் பாபு தன் கண்களைத் திறந்து ரிதேஷை லேசாகத் தட்டி எழுப்பினார்.

ரிதேஷ் திடுக்கிட்டுக் கண்விழித்துத் தன் அலைபேசியைப் பார்த்தார். இப்போது மணி 4:30 ஆகியிருந்தது. அவர் அலறியடித்துக்கொண்டு எழுந்தார். பிறகு, ஒவ்வொருவரிடமும் ஓடிச் சென்று, பொய்யாக ஒரு நேரத்தைச் சொல்லி அவர்களை எழுப்ப முயன்றார்.

“சோனு, மணி 5:00 ஆகிவிட்டது.”

“ராம் பாபு, எழுந்திருங்கள். மணி 6:00 ஆகிவிட்டது.”

அடுத்தப் பதினைந்து நிமிடங்களில், எல்லோரும் தங்கள் பயணத்தைத் தொடரத் தயாராயினர். பார்வைக்கு எட்டிய தூரம்வரை தண்ணீருக்கான அறிகுறி எதுவும் தென்படவில்லை. எனவே, ராம் பாபுவைத் தவிர யாரும் காலைக்கடனைக் கழிக்கச் செல்லவில்லை. முகம் கழுவுவது பற்றிய பேச்சே எழவில்லை. ராம் பாபு எதைக்கொண்டு தன்னைச் சுத்தம் செய்துகொண்டார் என்பதை யாரும் அறியவில்லை. நெடுங்காலத்திற்கு முன்பு கிராமங்களில் மக்கள் பயன்படுத்தியதைப்போல ஒரு கல்லைக் கொண்டு அவர் தன்னைச் சுத்தம் செய்து கொண்டிருக்கக்கூடும், யாரறிவார்?

இப்போது, ராம் பாபு முக்கியமான கேள்வியைக் கேட்டார்: “அடுத்து நாம் என்ன செய்வது?”

யாரிடமும் அதற்கு எந்த பதிலும் இருக்கவில்லை. இறுதியில் ரிதேஷ் பேசினார். “சாலை வழியாகச் செல்வதற்குக் காவலர்கள் நம்மை அனுமதிக்காவிட்டால்,  நாம் ஆற்றுக்குள் இறங்கி, நம்முடைய சைக்கிள்களைச் சுமந்து கொண்டு ஆற்றைக் கடந்து மறுகரைக்குச் செல்ல வேண்டும்.”

தாங்கள் எல்லோரும் ஒட்டுமொத்தமாக அந்த ஆற்றில் மூழ்கி இறப்பதற்கான வாய்ப்பு இருந்ததை நினைத்து நடுங்கிய இருபத்தெட்டு வயது இளைஞரான கிருஷ்ணாவின் கண்களுக்கு முன்னால் அவருடைய வயதான பெற்றோருடைய முகங்களும் அவருடைய நான்கு குழந்தைகளின் முகங்களும் நிழலாடின. எட்டுப் பேர் அடங்கிய தன்னுடைய குடும்பத்தைக் காப்பாற்றுவதற்கு அவர் உயிர்வாழ வேண்டியிருந்தது. அவருடைய ஏழு வயது மகன்தான் மூத்தவன். தனக்கு இன்னொரு மகன் வேண்டும் என்ற ஆசை, அவருக்கு மூன்று மகள்கள் பிறக்க வழி வகுத்தது. ஒரு தலைமுறைக்கு முன் அவருடைய பெற்றோருக்கும் இதேதான் நேர்ந்தது. கிருஷ்ணாதான் அவருடைய குடும்பத்தில் மூத்தவர். அவருடைய பெற்றோர்கள் இன்னொரு மகன் வேண்டும் என்று விரும்பினர். ஆனால் இறுதியில், நான்கு மகள்கள் அவர்களுக்குப் பிறந்தனர். எனவே, கிருஷ்ணாவுக்கு இப்போது ஏகப்பட்டப் பொறுப்புகள் இருந்தன. அது, தன்னுடைய சைக்கிளைச் சுமந்துகொண்டு கங்கையைக் கடப்பது உட்பட, ஆபத்தான எந்தவொரு காரியத்தைச் செய்வதிலிருந்தும் அவரைத் தடுத்தது.

இருபத்து மூன்று வயது சோனு குமார் குறுக்கிட்டு, “ஆற்றைக் கடப்பதில் என்ன பிரச்சனை? கிராமத்தில் வெள்ளம் வந்து நீரின் அளவு பத்தடியாக உயரும்போது, நாம் நம்முடைய உடமைகளைச் சுமந்தபடி நீந்திச் சென்று ஒரு பாதுகாப்பான இடத்தை அடைவதில்லையா?” என்று கேட்டார்.

“சோனு கூறுவது சரிதான். நாம் போகலாம்” என்று ரிதேஷ் கூறினார், ஆனால் கிருஷ்ணா அவர்களைத் தடுத்தார்.

“இது கங்கையாறு. இதன் நீரோட்டம் மிக வேகமானது. காவலர்களிடம் அடி வாங்கியதில் உங்கள் எல்லோருக்கும் மூளை குழம்பிவிட்டதா?”

“நாம் காசியாபாதுக்குத் திரும்பிச் செல்ல வேண்டுமா?” என்று ரிதேஷ் கேட்டார். “வீட்டின் உரிமையாளர் நம்மை உள்ளே அனுமதிக்க மாட்டார். நாம் இங்கேயே இருந்தால், காவலர்கள் நம்மை உயிரோடு விட்டுவைக்க மாட்டார்கள். கிருஷ்ணா, நமக்கு வேறு என்ன வழி இருக்கிறது? நாம் இறந்துதான் ஆக வேண்டும் என்றால், கங்கையில் மூழ்கி இறக்கலாம். நமக்கு மோட்சமாவது கிடைக்கும்.”

எல்லோரும் அதிர்ச்சியோடு ரிதேஷைப் பார்த்தபோது, அவர், “நான் ஆற்றைக் கடக்கப் போகிறேன். யாரெல்லாம் என்னோடு வர விரும்புகிறீர்களோ, உங்கள் கைகளை உயர்த்துங்கள்,” என்று கூறினார். ராம் பாபுவும் சோனுவும் மட்டுமே தங்கள் கைகளை உயர்த்தினர். ஆற்றைக் கடந்து தங்களுடைய பயணத்தைத் தொடர்வதற்கான தீர்மானத்தைத் தாமதப்படுத்துவதற்கான ஒரு கடைசி முயற்சியாக, “ரிதேஷ், நாம் பொழுது விடியும்வரை காத்திருக்கலாம்,” என்று முகேஷ் கூறினார்.

“காவலர்களின் அராஜகம் பொழுது விடிவதையோ அல்லது பொழுது அடங்குவதையோ கண்டுகொள்வதில்லை.”

“இது தற்கொலைக்குச் சமம். ராம் பாபு, நீங்களாவது எங்களைப் புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள்,” என்று ஆஷீஷ் மன்றாடினார்.

எல்லோரிலும் மூத்தவரான ராம் பாபு இந்த முயற்சியில் இருந்த ஆபத்தைப் புரிந்து கொண்டால், தங்கள் எல்லோரையும் ஒரு மரணத்தை நோக்கி இட்டுச் செல்வதிலிருந்து ரிதேஷை அவரால் தடுக்க முடியும் என்று ஆஷீஷ் நினைத்தார். ஆனால், ராம் பாபு அரிதாகவே ரிதேஷின் யோசனையை மறுத்தார். “ஆஷீஷ், நமக்கு இப்போது வேறு எந்த வழியும் இல்லை. நம்முடைய சைக்கிள்களுடன் நம்மால் எவ்வளவு தூரம் நடக்க முடியும் என்று பார்க்கலாம். அது சாத்தியமற்றது என்பதை நாம் கண்டால், சைக்கிள்களை விட்டுவிட்டு நாம் மட்டும் கங்கையைக் கடக்கலாம். நாம் ஏதேனும் செய்தாக வேண்டும்,” என்று ராம் பாபு கூறினார்.

ராம் பாபுவின் உறுதியால் துணிச்சல் பெற்ற ரிதேஷ், அங்கிருந்து நடக்கத் தொடங்கினார். ராம் பாபுவும் சோனுவும் அவரைப் பின்தொடர்ந்தனர். இன்னும் பத்துப் பதினைந்து நிமிடங்களில், ஏழு பேர் அடங்கிய தங்கள் அணி, நான்காகக் குறைந்துவிடும் என்று மற்ற நால்வரும் உறுதியாக நம்பினர்.

“ரிதேஷ், நில். நாம் வேறொரு வழியைக் கண்டுபிடிக்க முயற்சிக்கலாம்,” என்று கிருஷ்ணா கத்தினார். ஆனால் ரிதேஷ் தொடர்ந்து நடந்தார்.

“முகேஷ், ஆஷீஷ் . . . ஏதேனும் சொல்லுங்கள்!” என்று கிருஷ்ணா கெஞ்சினார்.

“ரிதேஷ்! ராம் பாபு! சோனு!” என்று அவர்கள் எல்லோரும் கத்தினர். அதே நேரத்தில் காட்டு நாய்களும் குரைக்கத் தொடங்கின. தாங்கள் தொடர்ந்து இப்படிக் கத்தினால், அந்நியர்களாகிய தங்களுடைய நடமாட்டம் அருகிலிருந்த கிராமங்களுக்குத் தெரிந்துவிடும் என்பதைக் கிருஷ்ணா உணர்ந்தார். எனவே, அமைதியாக இருக்கும்படி அவர் எல்லோருக்கும் சைகை காட்டினார். இதற்கிடையே, ரிதேஷும் மற்ற இருவரும் ஆற்றங்கரையை நெருங்கியிருந்தனர். அவர்களைத் தடுத்துவிட முடியும் என்ற நம்பிக்கையில், கிருஷ்ணா அவர்களுக்குப் பின்னால் வேகமாக ஓடினார். ஆஷீஷும் முகேஷும் சந்தீப்பும் அவரைப் பின்தொடர்ந்து ஓடினர்.

ரிதேஷும் ராம் பாபுவும் சோனுவும் ஏற்கெனவே ஆற்றை அடைந்து, கங்கையைப் பணிந்து வணங்கிக் கொண்டிருந்தனர். அவர்களுடைய நெற்றிகள் மணலைத் தொட்டன. அவர்கள் நிமிர்ந்தபோது, கிருஷ்ணாவும் தங்களுடைய மற்றத் தோழர்களும் தங்கள் முன்னால் நின்று கொண்டிருந்ததைக் கண்டு அவர்கள் திடுக்கிட்டனர்.

“ரிதேஷ், தயவு செய்து நாம் வேறு ஏதாவது வழியைப் பற்றி யோசிக்கலாம். ராம் பாபு, நீங்கள்தான் மூத்தவர். உங்களுக்கு என்ன நேர்ந்தது? தயவு செய்து ரிதேஷுக்குப் புரிய வையுங்கள்,” என்று கிருஷ்ணா மீண்டும் மன்றாடினார்.

“ரிதேஷை என்னால் ஒப்புக் கொள்ள வைக்க முடியக்கூடும், ஆனால் என்னையே நான் எப்படி ஒப்புக் கொள்ள வைப்பது? சொல்லுங்கள்!” என்று ராம் பாபு கேட்டார்.

“மீனவர்கள் கண்விழித்துவிட்டார்கள் என்று நான் நினைக்கிறேன்,” என்று கூறிய கிருஷ்ணா, ஆற்றை நோக்கி நடந்து வந்து கொண்டிருந்த இரண்டு நபர்களைச் சுட்டிக்காட்டினார். எல்லோரும் அவர்களை நோக்கித் திரும்பினர்.

“நாம் அவர்களிடம் சென்று பேசலாம். ஒருவேளை அதிர்ஷ்டம் நம் பக்கம் இருக்கக்கூடும்,” என்று அவர் கூறினார்.

ரிதேஷுக்கும் நம்பிக்கை பிறந்தது.

தங்களுடைய படகுகளை ஆற்றுக்குள் இறக்கத் தயாராகிக் கொண்டிருந்த அந்த மீனவர்கள், அந்நியர்கள் ஏழு பேர் தங்களுடைய சைக்கிள்களோடு திடீரென்று தங்கள் முன்னால் தோன்றியதைக் கண்டு திடுக்கிட்டனர்.

“சகோதரரே, என்ன பிரச்சனை?” என்று அவர்களில் ஒருவர் கேட்டார்.

“நாங்கள் காசியாபாதிலிருந்து வந்திருக்கிறோம். இப்போது நாங்கள் பீகாரிலுள்ள சகர்ஸா மாவட்டத்திற்குப் போய்க் கொண்டிருக்கிறோம்,” என்று ரிதேஷ் கூறினார்.

“நீங்கள் இங்கே எப்படி வந்து சேர்ந்தீர்கள்?” என்று மற்றொரு மீனவர் கேட்டார்.

“நெடுஞ்சாலையில் காவலர்கள் எங்களை ஈவு இரக்கமின்றி அடித்தனர். எனவே, நாங்கள் காட்டின் ஊடாக நடந்து வந்து கங்கையைக் கடப்பதென்று தீர்மானித்தோம். உங்களால் எங்களுக்குச் சிறிது உதவ முடியுமா?”

அந்த மீனவர்கள் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர். பிறகு, அந்த முதலாமவர், “நீங்கள் சொல்வது சரிதான். காவலர்கள் மிகவும் கறாராக இருக்கின்றனர். ஒரு சிறிய வாய்ப்பு கிடைத்தால்கூட அவர்கள் வன்முறையில் இறங்கிவிடுகின்றனர்,” என்று கூறினார்.

“தயவு செய்து எங்களுக்கு உதவுங்கள்,” என்று ரிதேஷ் கெஞ்சினார்.

“நான் இப்போதுதானே உங்களிடம் கூறினேன்? காவலர்கள் எங்களையும் அடிக்கின்றனர்,” என்று கூறிய அந்த முதல் மீனவர், தன்னுடைய சக மீனவரைச் சுட்டிக்காட்டி, “காவலர்கள் நேற்று இவனுடைய தம்பியை நாள் முழுவதும் காவல் நிலையச் சிறையில் அடைத்து வைத்தனர். அவன் செய்த தவறு என்ன தெரியுமா? சைக்கிள்களுடன் வந்த மூன்று பேர் கங்கையைக் கடப்பதற்கு அவன் உதவியிருந்தான்,” என்று கூறினார்.

“சகோதரரே, தயவு செய்து எங்களுக்கும் உதவுங்கள்,” என்று கிருஷ்ணா கெஞ்சினார்.

“நான் ஏற்கெனவே சொன்னேன், இல்லையா? காவலர்கள் தங்களுடைய லத்திகளைக் கொண்டு எங்களைச் சித்திரவதை செய்கின்றனர்,” என்று அந்த முதல் மீனவர் கூறினார்.

“நாங்கள் உங்களுக்குப் பணம் தருகிறோம். தலைக்கு ஐம்பது அல்லது நூறு ரூபாய் தருகிறோம்,” என்று கிருஷ்ணா கூறினார்.

“இது பணத்தைப் பற்றியது அல்ல. இது காவலர்களின் லத்திகளைப் பற்றியது. அவர்கள் எங்களை அடிக்கத் தொடங்கும்போது, அந்த அடிகளை வாங்கிக் கொள்ள யார் முன்வருவார்கள்?” என்று அந்த முதல் மீனவர் கேட்டார்.

“அதைப் பற்றிக் கவலைப்படாதீர்கள். நாங்கள் அந்த அடிகளை வாங்கிக் கொள்கிறோம்,” என்று ரிதேஷ் உண்மையுடன் கூறினார், ஆனால் அவர் தங்களைப் பரிகாசம் செய்து கொண்டிருந்ததாக அந்த மீனவர்கள் நினைத்தனர்.

“உங்களுக்கு இது வேடிக்கையாக இருக்கிறதா?” என்று அந்த இரண்டாம் மீனவர் வெடுக்கென்று கேட்டார்.

“இல்லை. நான் உண்மையைத்தான் கூறுகிறேன். தயவு செய்து எங்களுக்கு உதவுங்கள்,” என்று ரிதேஷ் கெஞ்சினார்.

“முடியாது. நாங்கள் பிரச்சனையில் மாட்டிக் கொள்ள விரும்பவில்லை,” என்று அந்த முதல் மீனவர் பதிலளித்தார்.

அம்மீனவர்கள் உண்மையிலேயே பீதியடைந்திருந்தனர் என்பதையும், அவர்களிடம் மேலும் பேசுவது நேர விரயம் மட்டுமே என்பதையும் உணர்ந்து கொண்ட ரிதேஷ், “பரவாயில்லை,” என்று அவர்களிடம் கூறிவிட்டு, “சோனு, நாம் போகலாம்,” என்று அழைத்தார்.

அக்குழுவினர் ரிதேஷைப் பின்தொடர்ந்து ஆற்றை நோக்கிச் சென்றனர். ஆனால், கிருஷ்ணா கடைசியாக ஒரு முறை முயற்சித்தார். அவர் அந்த மீனவர்களிடம், “தயவு செய்து எங்கள்மீது இரக்கம் காட்டுங்கள். எங்களுக்கு உதவுங்கள். நாங்கள் இன்னும் 1200 கிலோமீட்டர் தூரம் போக வேண்டியுள்ளது,” என்று கூறினார்.

“இல்லை, எங்களால் முடியாது,” என்று அந்த முதல் மீனவர் உறுதியாகக் கூறினார். “காலையில் முதல் விஷயமாக எங்களை இப்படித் தொந்தரவு செய்யாதீர்கள்.”

ஆனால் அந்த இரண்டாம் மீனவருக்கு அத்தொழிலாளர்கள்மீது அனுதாபம் பிறந்தது. அவர் கிருஷ்ணாவைப் பார்த்து, “உங்களுடைய நண்பர்களைத் தடுத்து நிறுத்துங்கள். தண்ணீர் இருபதடி ஆழம் உள்ளது. அவர்கள் மூழ்கி இறந்தால், அவர்களுடைய உடல்களைக்கூட உங்களால் கண்டுபிடிக்க முடியாது,” என்று கூறினார்.

“ரிதேஷ், ஆற்று நீர் இருபதிலிருந்து முப்பதடி ஆழம் இருப்பதாக இந்த மீனவர் கூறுகிறார்,” என்று கத்திக் கொண்டே கிருஷ்ணா ஆற்றை நோக்கி ஓடினார்.

ஆனால் ரிதேஷும் ராம் பாபுவும் சோனுவும் நிற்காமல் ஆற்றில் நடந்து கொண்டிருந்தனர். தண்ணீர் அவர்களுடைய மூட்டளவு வந்திருந்தது. கிருஷ்ணா மீண்டும் கத்தினார். “ராம் பாபு, கங்கையில் முதலைகள் இருப்பதாக அவர்கள் கூறுகின்றனர்.”

முதலை என்ற வார்த்தை அவர்கள் மூவரையும் பயமுறுத்தியபோதிலும், அவர்கள் தொடர்ந்து ஆற்றைக் கடந்து கொண்டிருந்தனர். விரைவில், தண்ணீர் அவர்களுடைய இடுப்பளவு உயர்ந்திருந்தது. அவர்களுடைய வேகம் வெகுவாகக் குறைந்தது. அவர்கள் ஒவ்வோர் அடியையும் மிகுந்த எச்சரிக்கையோடு எடுத்து வைத்தனர். இதற்கிடையே, மற்றத் தொழிலாளர்களும் (முப்பது பேர் அடங்கிய குழுவைச் சேர்ந்தவர்கள் அல்லாதோர்) கிருஷ்ணாவுடன் ஆற்றங்கரையில் கூடியிருந்தனர். எல்லோரையும்விட மிகவும் குள்ளமாக இருந்த ரிதேஷ் இப்போது கழுத்தளவு நீரில் இருந்தார். கரையின்மீது நின்று கொண்டிருந்த தொழிலாளர்களும் அந்த இரண்டு மீனவர்களும் அக்காட்சியைத் திகிலோடும் நம்ப முடியாமலும் பார்த்தனர். ஒருசில கணங்களில் அம்மூவரும் நிச்சயமாக இறந்துவிடுவர். ஒரு சைக்கிளைச் சுமந்து கொண்டு கங்கையைக் கடப்பது என்பது இயலாத காரியம்.

கரையின்மீது இருந்தவர்கள் மூச்சுவிட மறந்து காத்திருந்தனர். ஆற்றுக்குள் இருந்த மூவரும் ஆழமான பகுதிக்குள் அடியெடுத்து வைத்தால், இப்போது கிட்டத்தட்ட நீருக்கு மேலே தெரிந்த அவர்களுடைய தலைகள் விரைவில் நீருக்கு அடியில் போய்விடும். மறுகணம் எல்லாம் முடிந்துவிடும். கிருஷ்ணாவால் அதை நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை. “ரிதேஷ், நில். சோனு, நில். தயவு செய்து மேலும் நடக்காதீர்கள்,” என்று அவர் அலறினார்.

மற்றவர்களும் இப்போது கத்தத் தொடங்கினர், ஆனால் அம்மூவரும் சளைக்காமல் தொடர்ந்தனர். திடீரென்று, அந்த இரண்டாம் மீனவர் உறுமினார். “முட்டாள்களே, நில்லுங்கள். பைத்தியக்காரர்களே, நான் என் படகில் உங்களைக் கூட்டிச் செல்கிறேன்.”

அந்த முதல் மீனவரால் இதை நம்ப முடியவில்லை, ஆனால் அவர் எதுவும் கூறாமல் இருந்துவிட்டார். தன்னுடைய நண்பன் அக்கணத்தில் குறுக்கிட்டிருக்காவிட்டால், அம்மூவரும் நிச்சயமாக மரணத்திற்குள் அடியெடுத்து வைத்திருப்பார்கள் என்பதை அவரும் அறிந்திருந்தார்.

Credit அருஞ்சொல்’https://www.arunchol.com

Rayilin oligal Song lyrics in English and Tamil

Railin Oligal Lyrics in Blue Star  Male : Rayil-in oligal Unaiyae theduthae Adhirum paaraiyaai Idhayam aaduthae Unthan kai veesidum Poi jaad...