Aanandham Tamil Movie Review

 ஆனந்தம்


2001 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியைக் கண்ட திரைப்படம் ஆனந்தம். இந்தப் படத்தில், அண்ணன் - தம்பி பாசத்தை மையப்படுத்தி உறவுகளுக்குள் நிகழும் உணர்வுப் போராட்டங்களை உயிரோட்டமான காட்சிகளின் வழி படத்தின் ஒவ்வொரு நகர்வையும் அடி அடியாக செதுக்கியிருந்தார் அறிமுகம இயக்குநரான லிங்குசாமி.
அண்ணன் தம்பி நால்வரைக் கொண்ட ஒரு குடும்பம், அவர்களுக்கு மளிகைக்கடை தொழில், பாசமான அம்மா, அப்பாவியான அப்பா என்கிற பின்னணியில் லிங்குசாமி கொடுத்த கவிதையான திரைப்படம் ஆனந்தம். மேலோட்டமாக அணுகினால் இதனை குடும்பத் திரைப்படம் என்று சொல்லலாம். ‘பெரியவனே’ என்று ஶ்ரீவித்யா அழைக்கிற ஒற்றை சொல்லில் ஒரு குடும்ப திரைப்படமாக ரசிகர்களை மொத்தமாக குத்தகைக்கு எடுக்கும் வாஞ்சையோடு இருக்கும் அதே படம், “வியாபாரம்னா நாணயம்” என்று மம்முட்டி பேசும் போது அது தொழில் சார்ந்த படமாகவும் மிக டீட்டெயிலிங்கோடு அடையாளப்படும், ஒற்றை நாணயத்தின் வழி காதல் வளர்க்கிற போது அது காதல் திரைப்படமாகவும் உருமாறும், “ஒதுங்கிப் போனா பயந்து போறோம்னு நெனச்சியா” என்று மூட்டைத் தூக்கும் கொக்கியால் கையைக் கீறிக்கொண்டு “வைடா கைய..” என்று சீறுகிற போது ஒரு ஆக்‌ஷன் திரைப்படத்திற்கு உண்டான திரைமொழியோடும் நிறம் காட்டும். இப்படியாக ஒரு திரைப்படத்திற்கு சுவாரஸ்யம் சேர்க்கும் செண்டிமெண்ட், காதல் , நகைச்சுவை, சண்டைக் காட்சிகள் என அத்தனையும் அதன் அதன் அளவில் கச்சிதமாக இருக்கும்படியான ஒரு மந்திரத் திரைக்கதையை எழுதியிருந்தார் லிங்குசாமி.

பெண் பிள்ளை இல்லாத வீட்டில் அம்மாவின் வேலைகளை பகிர்ந்து செய்யும் மகன்கள், குடும்பத்தை தன் தோளில் சுமக்கும் மூத்த மகன், மூத்த மகனை முன்னிறுத்தி அவரின் நிழல் போல பயணிக்கும் இரண்டாவது மகன், அவர்கள் இருவரைவிட வயதில் மிக இளையவர்களான கடைசி தம்பிகளின் மீது அவர்கள் இருவரும் காட்டும் அப்பா ஸ்தானத்திலான அன்பு, மகனுக்கு திருமணம் தள்ளிப் போவதை எண்ணி கவலைப்படும் அம்மா , உளறுவாயாக இருக்கும் அப்பா என இப்படியான கதாபாத்திரங்களை மையப்படுத்தி ஒரு கதை என்றாலே நாடக பாணி தூக்கலாத்தான் பார்த்து பழகியிருக்கிறோம். ஆனால், லிங்குசாமியின் திரைக்கதையில் யாதார்த்தம் கூடுதலாக விரவிக் கிடந்தது. காட்சி ஒன்றில், ஷ்யாம் கணேஷ் கோவிலில் நின்று கொண்டிருப்பார், அப்போது அவர் அப்பாஸின் சட்டையை அணிந்திருப்பார். அவரை அப்பாஸ் என எண்ணிக்கொண்டு ஆவலாக ஓடிவரும் சினேகா ஏமார்ந்து நிற்கும் காட்சி, லிங்குசாமியின் நுட்மான திரைக்கதைக்கு ஒரு சோறு பதமாகச் சொல்லலாம். அண்ணன் தம்பிகள் இப்படி சட்டைகளை மாற்றிப் போடுவது எல்லார் வீட்டிலும் நடக்கும், அவர்களின் முகத்தில் ஒரே சாயல் இல்லாவிட்டாலும்கூட உடல்மொழிகளில் அந்த சாயல் எப்படியோ உணரக் கிடைக்கும். இங்கே அதை அற்புதமாக கொண்டு வந்திருப்பார் லிங்குசாமி.

ஆனந்தம் படத்தின் கதை சொல்லல் பாணியில் ஒரு சாயலுக்கு விக்ரமன் படங்களைப் போல ஒரு தோற்றம் தெரியும்,ஆ.பி.சௌத்ரியின் தயாரிப்பு, எஸ்.ஏ.ராஜ்குமாரின் இசை ஆகியவையும்கூட இப்படி ஒரு மயக்கத்தை நம்மிடம் நிகழ்த்தியிருக்கலாம். கூர்ந்து கவனித்தால், விக்ரமனின் கதை சொல்லலில் இருக்கும் எமோஷனலான காட்சிக் கோர்வை ,லிங்குசமியிடமும் இருக்கும், அதே வேளையில் நாடகத்தன்மை விக்ரமனிடம் கூடுதலாக இருக்கும், லிங்குசாமி யதார்த்தத்தை மீறாத ஒரு அளவிலேயே எமோஷனல் காட்சிகளைக் கொடுத்திருப்பதையும் கவனிக்கலாம். உதாரணத்திற்கு, அப்பாஸ், யுனிவர்சிட்டி டாப்பராக வருவதை ஒட்டி , வீட்டில் எல்லோரும் வாழ்த்துகிற காட்சியில் ,பெரிதாக வசனம் பேச போகிறார்கள் என நாம் பயப்படும் போது ,வசனமே இல்லாமல் மம்முட்டி அப்பாஸை அணைத்துக் கொள்வதோடு அந்தக் காட்சி முடியும்.

இன்னொரு பக்கம், லிங்குசாமிக்குள், மணிரத்தினத்தின் தீவிர ரசிகன் ஒளிந்திருப்பதையும் கவனிக்கலாம். விஜயகுமாரின் கதாபாத்திர உருவாக்கத்தில் நாயகன் வேலுநாயக்கர் தெரிவார். போலவே, அப்பாஸ், சினேகாவை பைக்கில் அழைத்து வருகிற போது, “என்னங்க ஒரு சின்ன தேங்ஸ்கூட கிடையாதா?” என்று கேட்பார், பதிலுக்கு “சின்ன தேங்ஸ்" என்பார் சினேகா. இன்னும் சில காட்சிகளிலும்  மணிரத்தினத்தின் தாக்கம் தெரியும். இன்னொரு பக்கம் இந்தக் கதை நடக்கும் களமான கும்பகோணத்தின் மண்வாசத்தையும் அப்படியே அள்ளி வந்திருந்தார். அந்த வகையில், பாரதிராஜாவின் படங்களைப் போல ஒரு மண் சார்ந்த படைப்பாக அணுகவும் ஆனந்தம் படத்திற்கு ஒரு முகம் இருப்பதை கவனிக்க முடியும். இப்படியாக , அன்றைய திரை ஆளுமைகள் பலரின் சாதக அம்சங்களைக் கைக்கொண்டு ஒரு திரைமொழியை உருவாக்கி அசத்திய படைப்பாகவும் ஆனந்தத்தை அணுகலாம்.


மம்முட்டி ஏற்ற திருப்பதி கதாபாத்திரத்திற்கு அவரையன்றி இன்னொருவர் இத்தனை உயிரோட்டத்தை கொடுத்திருக்க இயலாது என்றே சொல்லலாம். லிங்குசாமி அவர்கள் மம்முட்டிக்காக காத்திருந்து அவர்தான் நடித்தாக வேண்டும் என பிடிவாதமாக இருந்ததற்கான நியாயத்தை இம்மி பிசகாமல் செய்திருந்தார் மம்முட்டி. மம்முட்டி தமிழில் நடித்த அநேகப் படங்களும் கவனிப்பை பெற்ற படைப்புகள். அவற்றை எல்லாவற்றையும்விட ஒரு படி மேல் இந்த திருப்பதி கதாபாத்திரம் எனலாம். ஏனெனில், இந்தத் திருப்பதி அசலானவன், சினிமாத்தனம் இல்லாத யதார்த்த மனிதன். ரம்பாவால் குடும்பத்தில் முதல் பிரச்சனை வெடிக்கிற போது ,‘எல்லாரும் போங்க' என்பது போல வார்த்தைகள் இன்றி கையை அவர் ஆட்டுகிற விதத்திலேயே திருப்பதி அந்த வீட்டை எத்தனை நேசிக்கிறான் என்பதை காட்டிவிடுவார். முரளியைக் குறித்த சந்தேகம் எழுகிற போது, “ஆளாளுக்கு பணத்தில் கை வைக்காதீங்க" என்று சொல்லிவிட்டு, பிறகு ஶ்ரீவித்யா அதனைக் குறித்து கேட்கும் போது ,”என்னடா பெரியவனே, இப்படி பண்ணிட்ட" என்றதும் குற்ற உணர்ச்சி தாளாமல் குறுகி அமர்ந்திருக்கும் போது அருகில் நிற்கும் தேவயானியைப் பார்த்து, “நீயும் எதாவது கேட்டுடாத" என்பது போல ஒரு பார்வையைத் தந்து எழுந்து செல்லும் போது இப்படி ஒரு நடிப்பை எப்படி வெளிக்கொணர முடிந்தது என பிரமிக்க வைத்திருந்தார். பாஸ்புக் விஷயத்தை வைத்து பிரச்சனை நடக்கும் போது, டெல்லி கணேஷிடம் தன்னுடைய ஆற்றாமையைக்காட்டி, “ஏம்பா பேசாம நிக்குறீங்க.. உங்க பங்குக்கும் எதாவது இருந்தா கேட்டு தொலைங்க.. மொத்தமா போட்டு உடைச்சிடுறேன்" என்று சொல்லிவிட்டு , “தாங்க மாட்டீங்கடா” என்று எல்லோரையும் பார்த்து சொல்லும் போது அவரின் முகத்தில் இருக்கும் நடுக்கம் என அவர் வரும் காட்சிகள் அனைத்திலுமே திருப்பதி தாண்டிய மம்முட்டியாக அவரை காணவே இயலாத அளவிற்கு வாழ்ந்து காட்டியிருந்தார். சிறந்த நடிகருக்கான தேசிய விருதுகள் வாங்கிய படங்களைவிட, இந்தத் திருப்பதி கதாபாத்திரமே அவரின் கெரியர் பெஸ்ட் என்ற சொன்னாலும் தகும்.
முரளியின் கதாபாத்திரமும் நிறைய சுவாரஸ்யங்களோடு செதுக்கப்பட்டிருந்தது. வீட்டில் மற்ற மூவரும் நீட்டாக உடையணிந்து வலம் வரும் போது, இவர் மட்டும் லுங்கியோடு ஒரு வேலைக்காரனைப் போல வளைய வருவது ஒரு நுட்மான கதாபாத்திர உருவாக்கம். நிஜத்தில் அண்ணன் தம்பிகளில் இப்படித்தான் மலைக்கும் மடுவிற்குமான வித்தியாசங்களோடு இருப்பார்கள். “நான் இப்படித்தான், எங்க அண்ணன்தான் எல்லாமும்” என்கிற குண வார்ப்பில் உருவான இந்தக் கதாபாத்திரத்தில் மிக இயல்பாக பொருந்திப் போயிருந்தார் முரளி. அண்ணன் சொன்ன சுடு சொல் தாங்காமல் , மருகிப் போய் வீட்டின் பின்புறம் அமர்ந்திருக்கும் காட்சியில் அந்தக் கதாபாத்திரத்திற்கே உருவானவர் என்பது போல ஒரு நடிப்பைக் கொடுத்திருப்பார் முரளி. ஆனாலும், பல காட்சிகளில் சற்று மிகை நடிப்பு முரளியிடம் தொடர்ச்சியாக வெளிப்படுவதையும் கவனிக்கலாம். முரளியிடம் வெளிப்பட்ட அந்த வகை நடிப்பானது விக்ரமன் பாணி படங்களுக்கானது. கே.எஸ்.ரவிக்குமார்கூட அப்படியான நடிப்பை வைத்து செண்டிமெண்ட் காட்சிகள் அமைப்பவர்தான். கே.எஸ்.ரவிக்குமாரின் ‘சமுத்திரம்' படத்தில் முரளிக்கு அந்த இரண்டாவது தம்பி கதாபாத்திரம் வாய்ப்பு அமைந்ததற்குக் கூட இந்தப் படத்தில் அவர் வழங்கிய நடிப்பு ஒரு காரணமாக இருந்திருக்கக் கூடும்.

அம்மாவாக வரும் ஶ்ரீவித்யாவிற்கு இது போன்ற நிறைய அம்மா கதாபாத்திரத்தில் நடித்திருப்பவர் என்றாலும் இதில் வந்த ரெங்கநாயகி அம்மா, நாம் அன்றாடங்களில் பார்க்க முடிந்த ஒரு அம்மா.

கொல்லைப்புறம் அமர்ந்து பாத்திரம் விளக்கியபடி , தன் மகனுக்கு திருமணம் தள்ளிப் போவதை புலம்பிகொண்டிருப்பதில் தொடங்கி, வெளியில் சொல்ல முடியாத குடும்ப விஷயங்களை வெளியூரில் இருந்து வரும் மகனிடம் துணி துவைத்தபடியே சொல்லுவது, இரண்டு மருமகள்களையும் பேலன்ஸ் செய்து பேசுவது, மகன்களுக்குள் சங்கடம் வந்துவிடாமல் உடனடியாக சமாதானம் பேசி வைப்பது , உளறுவாய் கணவரிடம், “ஏங்க எதாவது ஒளறி வச்சிடாதீங்க" என்று எச்சரிக்கை செய்து வைப்பது என ஒரு மிடில் கிளாஸ் அம்மாவின் யதார்த்த பிரதியாக வாழ்ந்திருந்தார். டப்பிங் டைமில் ஶ்ரீவித்யாவின் கால்ஷீட் பிரச்சனை போல, மம்முட்டியிடம் உருக்கமாக பேசும் காட்சி ஒன்றில் , ஶ்ரீவித்யாவிற்கு டப்பிங் ஆர்ட்டிஸ்ட் ஹேமமாலினியின் இரவல் குரல் வந்து போவதையும் கவனிக்கக் கிடைத்தது.

மருமகள்களாக வரும் தேவயானி, ரம்பா இருவரின் கதாபாத்திரங்களில் அன்பான அண்ணியாக வலம் வரும் தேவயானி பாந்தமான நடிப்பில் ஒரு பக்கம் ரசிக்க வைத்தாலும், தன் கணவன் மட்டும் வேலைக்காரன் போல இருக்கிறாரே என்கிற இயல்பான ஆதங்கத்தை வெளிப்படுத்தும் ரம்பாவின் கதாபாத்திரம் கூடுதல் அழகோடு செதுக்கப்பட்டிருந்தது. இயல்பில் பெண்கள் இப்படியானவர்களே, தேவயானி கதாபாத்திரம் டிப்பிக்கல் சினிமா காதாபாத்திரம், ரம்பா ஏற்ற கதாபாத்திரம் இயல்பில் நாம் பார்க்கும் அக்கா, தங்கை, அண்ணிகளின் பிரதிபலிப்பு என்பதால் ரம்பாவின் கதாபாத்திரம் மிகவும் யதார்த்தமான ஒன்றாக இருந்தது.
 
அப்பாவித்தனம் மிகுந்த பாசமான அப்பாவாக வரும் டெல்லி கணேஷ், “என்னை உளறு வாய் உளறுவாயின்னு சொல்லிட்டு நீங்க எல்லாருமா சேர்ந்து உளறிட்டீங்களேடா” என்கிற காட்சியில் ஆனந்தத்தில் நான் பத்தோடு பதினொன்று அல்ல , அழுத்தமான வேடம்தான் எனக்கும் என்பது ஒரு நடிப்பினை வழங்கி அசத்தி இருப்பார், படத்தின் இறுதி காட்சிகளுக்கு ஒரு பதற்றத்தை கொடுக்க உதவிய தவசி கதாபாத்திரத்தில் நிறைவான நடிப்பினைத் தந்திருந்த விஜயகுமார், கண்ணனாக வரும் அப்பாஸ், அவரின் காதலியாக வரும் அழகிய சினேகா, கடைக்குட்டி தம்பியாக வரும் ஷ்யாம் கணேஷ், வேலைக்காரராக வரும் பாவா லக்‌ஷ்மணன், அரிசி வியாபாரியாக வரும் இளவரசு என ஒவ்வொருவரின் பங்களிப்பும் படத்திற்கு சிறப்பு சேர்ந்திருந்தது.

கும்பகோணத்தின் பசுமையை, கோயில்களை,தெப்பக் குளங்களை,  ஆற்றுப் பாலங்களை, கூட்டம் நிறைந்த சந்தைப் பகுதிகளை எல்லாம் இயல்பு மாறாமல் அள்ளி வந்திருந்த ஆர்தர் வில்சனின் ஒளிப்பதிவு படத்திற்கு பெரிய பலமாக அமைந்திருந்தது. மரத்தூண்கள் கொண்ட திருப்பதி பிரதர்ஸின் வீட்டின் முகப்பினைக் காட்ட, வாசலில் நிற்கும் மரக்கிளையின் வழியே கேமரா நகர்ந்து வருகிற காட்சி, எண்ணெய் கொள்முதல் செய்கிற இடத்தில் கீழே பாயில் மம்முட்டி அமர்கிற காட்சியில் அந்த வியாபாரத் தளத்தின் இயக்கம் அனைத்தையும் ஃப்ரேமிற்குள் கொண்டுவர வைத்திருந்த கோணம் என நிறைய டீட்டெயிலிங்கை கேமரா வழி செய்திருந்தார்.

எஸ்.ஏ.ராஜ்குமாரின் தென்றல் மாதிரியான இசையும் ஆனந்தத்தின் ஜீவனுக்கு அழகிய சுதி சேர்ந்திருந்தது. எஸ்.ஏ.ராஜ்குமாரின் வழக்கமான மெட்டுக்களின் பாணியில் இல்லாத  ‘என்ன இதுவோ’ மற்றும் ‘பல்லாங்குழியின் வட்டம் பார்த்தேன்' ஆகிய இரு மெலடிகளில் ரொம்பவே கவனிக்கவும் வைத்திருந்தார். யுகபாரதியின் முத்திரை வரிகளில் பட்டி தொட்டியெங்கும் கவனிப்பைப் பெற்ற ‘பல்லாங்குழியின் வட்டம் பார்த்தேன்' பாடலை படத்தின் வேகத்திற்கு தடையாக இருப்பதாக எண்ணி நீக்க நினைத்து, யுகபாரதியின் வரிகளின் மேல் இருந்த நம்பிக்கையில் இருமனதாக படத்தில் இணைத்ததாக அப்போது ஒரு செய்தி உலவியது. நல்லவேளை, படத்தில் அந்தப் பாடல் காட்சி இடம்பெற்றது நம்முடைய நல்லூழ். காட்சிப்படுத்தலும் அத்தனை அழகியலோடு இருக்கும். மற்றொரு மெலடியான ‘என்ன இதுவோ’பாடலை இன்று கேட்கும் போது, ஹரிஹரனின் குரலைக் கேட்ட மாத்திரத்தில் இருபது வருடங்களுக்கு முன்பான கனவு சுமந்து திரிந்த காலம் அப்படியே மனத்திரையில் விரிகிறது. 90களின் பிற்பகுதியில் தொடங்கி ஒரு பத்தாண்டுகள் இந்தக் குரல் தமிழ் சினிமாவில் செய்த மேஜிக் மறக்கவே முடியாத ஒன்று.


லிங்குசாமியின் இந்த கதையின் இயல்பான நகர்விற்கு ,பக்கபலமாக நின்றிருப்பதில் பிருந்தா சாரதியின் வசனங்களுக்கு முக்கிய பங்கு உண்டு. கும்பகோணத்தை பூர்வீகமாகக் கொண்டவர் என்பதால் லிங்குசாமியின் கதை மாந்தர்களை அவரால் நெருக்கமாக உள்வாங்க முடிந்ததில் ,”பெரியவனே, சின்னவனே”, “நான் ஒரு கிறுக்கச்சி”, ”கடை கன்னி", “பேசியிருக்கலாம் கொண்டிருக்கலாம்", “கைக்காட்டி விட்டீங்கன்னா போதும்" என்று தஞ்சை மண்ணின் புழங்கு சொற்களை எடுத்தாண்டது தொடங்கி, அரிசியில் கல், மண் கலப்படம் செய்யும் இளவரசு கதாபாத்திரம் மம்முட்டியிடம் வந்து ,”என் பொழப்புல மண்ணள்ளி போட்டுட்டல்ல" என்கிற போது, “இந்த கல்லு மண்ணு போடுறது எல்லாம் உன்னோட புத்தி" என்று இயல்பாக புகுத்தும் டைமிங்,“ஆசப்பட்ட பொண்ணோட அம்மாவாச்சேன்னு பாக்குறேன்" என்று மம்முட்டி சொல்வதை, பிரிதொரு இடத்தில், ”ஆசப்பட்ட பொண்ணோட அப்பாவாச்சேன்னு பாக்குறேன்" என அப்பாஸ் சொல்கிற போது அதற்குள் நாம் யோசிக்க கிடைக்கும் கவிதைத் தருணம் என நிறைய ரசிக்க வைத்திருந்தார்.

வசனத்தில் இப்படியான தொடர்ச்சியில் பிருந்தா சாரதி கலக்கியது போல, திரைக்கதையில் லிங்குசாமி காட்டிய ஒரு அழகிய தொடர்ச்சியையும் குறிப்பிட வேண்டும். அப்பாஸும், ஷ்யாம் கணேஷும் வீட்டிற்கு தாமதமாக வருகிற போது, அவர்களை இன்முகத்தோடு வரவேற்று சாப்பாடு போடுவார் தேவயானி. அவர்கள் இருவரும் பசியாறிய பிறகே, கண்டிக்கத் தொடங்குவார் தேவயானி. இன்னொரு காட்சியில் மம்முட்டி சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது, ஷ்யாம் கணேஷ் பாஸ்புக்கை எடுத்துக்கொண்டு போய் ,”இது என்ன?” என கேட்பார். மம்முட்டி சாப்பிடாமல் எழும் சூழல் ஆகிவிடும். வீட்டின் மூத்த மருமகள் தாயாகும் தருணத்தையும், கடைசி வாரிசு எதையும் யோசிக்காமல் வயது வேகத்தில் நடந்து கொள்ளும் அவசரக்குடுக்கைத்தனத்தையும் இந்தக் காட்சிகளில் சிறப்பாக கையாண்டிருப்பார்.

இத்தனை சிறப்பான திரைக்கதையில் லிங்குசாமி தடுமாறிய அல்லது தெரிந்தே பெரிய பிழையாக தெரியாது என விட்ட இடங்களும் சில உண்டு. மம்முட்டிக்கு தெரியாமல் , முரளி உளுந்து கொள்முதல் செய்து வைப்பார். அதில் நட்டம்  ஏற்பட்டு விடும். இதனால் எழும் பணப்பிரச்சனை மம்முட்டிக்கு தெரிய வருவது திரைக்கதையில் இயல்பாக அமர்ந்திருக்கும். ஆனால், மற்ற பிரச்சனைகளான , சுவாமி மலையில் முரளி கடை திறக்கிற விஷயம், அடுத்த காட்சியிலேயே மம்முட்டிக்கு தெரிய வருவதும், ரம்பாவின் கையில் பாஸ்புக் கிடைக்கிற அதே காட்சியில் மம்முட்டி அதைத் தேடுவதும், அதை ஒட்டி பிரச்சனை பெரிதாகும் போது, சொல்லி வைத்தது போல மிகச்சரியாக குழந்தையின் வாயில் நுரை தள்ளுவதும் சினிமாவில் மட்டுமே நடக்கும் சாத்தியங்கள்.

ஆனந்தம் படம் வெளியாகி இருபது வருடங்களைக் கடந்துவிட்டது. இதே காலகட்டத்தில் அண்ணன் தம்பிகளை மையமாக வைத்து வெளியாகி வசூல் சாதனை படைத்த படங்கள் இன்னும் சில உண்டு. ஆனாலும் அவையெல்லாம் இன்று மீம் கிரியேட்டர்களுக்கு கண்டெண்ட் குடோடான மாறிப் போயிருக்கும் வேளையில், ஆனந்தம் இன்றைய காலத்திற்கும் பொருந்துகிற தன்மையிலேயே இருக்கிறது. படம் தொடங்குகிற ஐந்தாவது நிமிடத்திலேயே திருப்பதி பிரதர்ஸில் ஒருவராக கும்பகோணம், குடவாசல் தெருக்களில் பயணிக்க தொடங்கி விடுகிறோம். லிங்குசாமி அவர்கள், தனது குடும்பத்தின் உண்மைக் கதையை அடிப்படையாகக் கொண்டு எழுதிய உயிரோட்டமான திரைக்கதையையே அதற்குக் காரணமாகச் சொல்லலாம். ஆனந்தத்தில் வரும் மனிதர்கள் உண்மைக்கு நெருக்கமானவர்கள் என்பதால், வருகிற தலைமுறையும்கூட அந்தக் கதையோடு தங்களை கனெக்ட் செய்து கொள்ள முடிகிற ஓர் இயல்பை ஆனந்தம் என்றும் தக்க வைத்திருக்கும் என்றே சொல்லலாம்.
Posted நாடோடி இலக்கியன்


No comments:

Kodai Kaala Kaatre Lyrics Translation

 Kodai Kaala Kaatre Song Lyrics in Tamil Kodai Kaala Kaatre song lyrics english translation Kodai Kaala Kaatre Lyrics meaning  Movie: Pannee...