March 05, 2012

இரவு-இருள்-உறக்கம்-அலாரம்..


இரவையும் இருளையும் ரசிப்பவன் நான். ஒளி விளக்குகளால் இருளை விரட்டி இரவை கொலை செய்பவர்களை தூக்கில் ஏற்ற வேண்டும் என நினைப்பவன்.. இரவுகள் என்பது பகல் முழுதும் அலையாய் அலைந்து இயந்திரமாய் சுழன்று களைத்துப்போகும் உடம்புக்கும், மனசுக்குமான ஓர் ஓய்வு அல்லது இடைவேளை.. இருளோடு கூடிய இயற்கையான இரவுகளையே பிடிக்கும்.. இருளை விரட்டிவிட்டு ஒளிவிளக்குகளால் அலங்கரிக்கப்படும் இரவுகளில் மனதை சிலிர்க்க செய்யாத மழை போல ஏதோவொரு செயற்கைத்தனம் இருப்பதாகவே உணரமுடிகிறது..

ஒளிவிளக்குகள் இல்லாத இரவுகள் என்பது இன்றைய நவீன உலகில் சாத்தியபடாத ஒன்று. காலம் நவீனத்தின் பக்கம் நகர நகர சில தேவைகளை,சில பொருள்களை, சில விடயங்களை நமக்கு அத்தியவசியமாக்கி விடுகிறது இந்த சூழல்.. உதாரணத்துக்கு கைத்தொலைபேசிகள், இவை இல்லாமல் பயணம் செய்தால் ஏதோவொன்றை விட்டுவந்த உணர்வு நம்முடனேயே தொடர்வதை உணர்ந்திருக்கலாம். இதே நாம் பத்து வருடங்களுக்கு முன்பு எந்தவித தொலைபேசிகளும் இல்லாமல் பல மைல், பல பயணம் சென்று வந்திருக்கிறோம். இது போலவேதான் இந்த ஒளி விளக்குகளும், நம் முன்னோர்கள் எந்தவிதமான மின்னொளி விளக்குகள இல்லாமல் வாழ்ந்தார்கள்.. இன்றைய காலத்துக்கு அது கடினமான நிலை.

உறக்கம் என்பது உடம்புக்கான மட்டுமல்ல மனசுக்கானதுதான ஓய்வாக இருக்கவேண்டும் என்பது எனது ஆசை. இதமான காற்று, சுவையான உணவு,சுகமான உறக்கம்.. இவை எல்லோருக்கும் வாய்ப்பதில்லை, அப்படி வாய்க்கப்பெற்றவர்கள் கொடுத்து வைத்தவர்கள் என்பேன். சுவையான உணவும், சுகமான உறக்கமும் செலவ செழிப்போடும் சுகபோக வாழ்க்கையோடும் சம்பந்தபட்டதல்ல.. கோழி பிரியானியில் கிடைக்காத சுவை கருவாட்டுக்குழம்பு சோற்றில் கிடைக்கலாம். பஞ்சு மெத்தையில் கிடைக்காத சுகம் கட்டாந்தரையில் விரிக்கப்பட்ட பாயில் கிடைக்கலாம்.

உடலும் உள்ளமும் களைத்து சோர்ந்தபின் விழிகள் தானாகவே மூடிக்கொள்ளும் உறக்கத்தில்தான உயர்ந்தபட்ச சுகம் கிடைக்கும்.. உறக்கம் என்பது கட்டாயப்படுத்தியோ மருந்து மாத்திரைகளாலோ வரவழைப்பதில்லை.. அவ்வாறான உறக்கத்தில் என்ன சுவாரஷ்யம் இருந்துவிடப்போகிறது. என்னைப்பொருத்தவரை இந்த வெளிநாட்டு வாழ்க்கையில் உடல் களைப்பின் பின் உறக்கம் மிக அபூர்வம்.. காரணம் செய்யும் வேலை உட்கார்ந்து கொண்டே செய்யவேண்டி இருப்பது, கொஞ்சமேனும் அலைந்து திரியாமல் எட்டு மணிநேரமும் கணினிமுன் உட்கார்ந்த வேலை, எனக்குப்பிடிப்பதில்லை!. பிடிக்கவில்லையென்றாலும் செய்தாகவேண்டிய கட்டாயம். அதனால் மனசு சோர்வடைவதைவிட உடல் சோர்வடைவது மிகக்குறைவு.  உறக்கம் வராமல் படுக்கையில் புரழும் தருணங்கள் மிகக்கொடுமையானவை..

 தூங்கச்செல்லுமுன் முகம் கை கால் கழுவிக்கொண்டு தூங்கச்செல்வது என் வழமை. "அப்பதான் கனவுல வர்றவங்களுக்கு அழகாத்தெரியும் அப்பிடின்னு இல்ல" அது சின்ன வயசிலிருந்து பழகிப்போச்சு! வேர்வையோடு உடுத்த உடையுடன் வந்து கட்டிலில் விழுந்து அப்பிடியே உறங்குபவர்களைக்கண்டால் கொஞ்சம் எரிச்சல்தான் வரும்.

முன்பெல்லாம் கிராமங்களில் சேவல் கூவுவதை கேட்டுத்தான் மக்கள் எழுந்திருப்பார்களாம்.. ஆனால் இப்ப காலம் மாறிப்போச்சு சேவலுக்கே அலாரம் வெச்சுத்தான் எழுப்பனும். இப்பவெல்லாம் அலாரம்தான்! இந்த அலாரம் சில நேரம் எரிச்சலைத்தந்தாலும், அலாரம் அடித்து எழுந்திருப்பதில் சுவாரஷ்யமும் இல்லாமல் இல்லை.. எனக்கு காலையில் வேலை இருக்கும் நேரங்களில் 5.30 வேலைக்கு 4.30 க்கு எழுந்திருக்கோனும்.. அந்த நேரங்களில் தட்டி எழுப்புவது இந்த அலாரம்தான். 4.30 க்கு எழுந்திருக்கவேனும் ஆனால் 3.30 க்கே கண்விழித்து நேரத்தைப்பார்த்தால், அட இன்னும் ஒரு மணிநேரம் இருக்கே! போர்வையை இன்னும் கொஞ்சம் இழுத்து போத்தி கண்களை மூடி.. அந்த ஒரு மணிநேர தூக்கத்தின் சுகத்தை உணர்ந்திருக்கிறீர்களா? ஆனாலும் அந்த ஒரு மணிநேரம் மிக அவசரமாக வந்திடும், பின் அலாரம் அடிக்கும் போது இவ்வளவு அவசரமாக சென்றுவிட்டதா! என வியந்ததும் உண்டு.. அலாரத்தை முறைத்துப்பார்த்ததும் உண்டு. அலாரம் அடித்ததும் இன்னும் ஐந்து,பத்து நிமிடம் உறங்கலாம் என ரிப்பீட் அலாரம் வைக்காமல் உறங்கி ஐந்து நிமிடம் ஒரு மணிநேரம் ஆனவர்களும் உண்டு.

நான் தூங்க போறேன் அப்புறம் பார்க்கலாம்..14 comments:

மனசாட்சி said...

//எந்தவிதமான மின்னொளி விளக்குகள இல்லாமல் வாழ்ந்தார்கள்.. இன்றைய காலத்துக்கு அது கடினமான நிலை.//

சர்தான்..

Kumaran said...

என்ன அழகான ரசிப்புத்தன்மை..நல்ல டேஸ்ட்..
இரவையும் இருளையும் ரசிப்பவர்கள் அதிகமா என தெரியவில்லை..ஆனால், இரவு நேரத்தில் தூரத்தில் இருந்தாட்ப்படியே மரச்செடிகளை ரசித்துக்கொண்டு அதோடு பேசும் பழக்கம் உள்ளவன் நான்.இயற்கையோடு கலந்த இரவும் இருளும் மென்மையானது சுகமானது.மிக்க நன்றிகள் நண்பரே.

Falling Down (1993) - ஹாலிவுட் "இந்தியன்" தாத்தா (திரைப்பார்வை)

ஹேமா said...

இரவு கருமை,இருள் ஆனாலும் மனதை ஒருங்கிசைத்து எங்களை நாங்களே சோதித்துக் கதைத்துக்கொள்ளும் ஒரு நேரம்.அதைவிட அந்தத் தனிமை,அமைதி பகலில் இல்லாத ஆரவாரமில்லாத ஒருவித சுகம்.அருமையாய் ரசனையோடு எழுதியிருக்கிறீர்கள் ரியாஸ்

ஆமினா said...

இயந்திரதனமான வாழ்க்கையில் நாமும் அவ்வாறாகவே மாற வேண்டிய சூழ்நிலை

காட்டான் said...

வணக்கம் ரியாஸ்!
உங்களுடைய உணர்வுகள் என்னுடையதை போலவே பொருந்தி போவதை பார்க்க சந்தோசம்.. இரவை ரசிப்பதற்காகவே மின் விளக்குகள் இல்லாத இடுகாட்டுக்கு அருகாமையில் வண்டியை நிறுத்தி அதை எடுக்க இரவு வேளையில் செல்வேன் பாரீசில்.!!!(பாக்கிங்கும் அங்கு எடுப்பது சுலபம் ;-))

ஹாலிவுட்ரசிகன் said...

நானும் அனேகமாக இரவு 12 - 1 மணிக்கு பின் ஊரில் வெளிச்சம் அடங்கிய பின் முற்றத்தில் அமர்ந்து நட்சத்திரக் கூட்டங்களைப் பார்க்கும் பழக்கம் உடையவன் தான். என் பாட்டி சொல்லிக் கொடுத்தப் பழக்கம். புதிது புதிதாக நட்சத்திரக்கூட்டங்களுக்கு வடிவம் கொடுப்பது ஒரு இனிய சுகம்.
அழகாக சொல்லியிருக்கிறீர்கள். நன்றி ரியாஸ்.

சேகர் said...

தற்போது அந்த நிலைமையில் தான் உள்ளோம்...

ஹுஸைனம்மா said...

முழுமையான இருட்டு பயம் தரும். அதுவே நிலவொளி அல்லது வேறு சிறிது வெளிச்சத்துடனான இரவு என்றால், ரசிக்கலாம்.

//வேர்வையோடு உடுத்த உடையுடன்//
குளித்துவிட்டு உறங்கப் போனால் இருக்கும் சுகமே அலாதி. ஆனால், இந்த வாய்ப்பு கிடைக்காதவர்கள் (தண்ணீர் வசதி இல்லை, அல்லது பேச்சிலர் குடியிருப்பில் பாத்ரூம் ஃப்ரீயில்லை)ரொம்பவே பாவம்.

//சேவலுக்கே அலாரம் வெச்சுத்தான் எழுப்பனும்.//
அலாரம் மொபைல்லதானே வச்சுக்கணும்?

சிட்டுக்குருவி said...

உண்மையில் நான் இந்த ஆக்கத்தினை வாசிப்பதற்கு முன்னால் என் வீட்டு முற்றத்து நிலாவொளியில் இருந்து விட்டு தான் இந்த ஆக்கத்தினை படித்தேன்...நான் முற்றத்தில் இருக்கும் போது என்ன்க்கு தோன்றிய விடயங்களை விட மிக அருமையான இரசனையை வெளிப்படுத்தியிருந்தீர்கள்...

துரைடேனியல் said...

சுவையான உணவும், சுகமான நித்திரையும் வாய்த்தவர்கள் கொடுத்து வைத்தவர்கள்தான். இரவு, உறக்கம், அலாரம் என்று அத்தனையும் அருமை சகோ. மனம் வருடும் உணர்வுகள்.

துரைடேனியல் said...

தமஓ 7.

பாலா said...

உங்கள் கட்டுரை, இரவின் குளுமையை ஏற்படுத்துகிறது.

Jaleela Kamal said...

ரொம்ப ஸ்வாரசியம். .

அந்த ஒரு மணிநேர தூக்கத்தின் சுகத்தை உணர்ந்திருக்கிறீர்களா?

ம்ம் சூப்ப்ரா இருக்குமே.

( பெனடால் அதிகமாக எடுப்பதாக ஹுஸைனாம்மா பதிவில் சொல்லி இருந்த்தீங்க)

அதிக பெனடால் எடுப்பதால் கிட்னி பிராப்ளம் வ்ருதாம்

அது போட்டு பழகினவர்களுக்கு ஒரு பிரம்மை அதை போட்டாதான் சரியாகும் என்றூ.

ஆகையால் கொஞ்சம் கொஞ்சமாக நிறுத்தி விடுஙக்ள்


ரொம்ப அவசிய தேவைக்கு மட்டும் போடுங்கள்

Sasi Kala said...

சேவலுக்கே அலாரம் வெச்சுத்தான் எழுப்பனும்....
சேவலே எப்படியிருக்குனு கேக்கும் காலம் வந்தாச்சிங்க..

Related Posts Plugin for WordPress, Blogger...