கிரிக்கெட் என்பது எனது 12 வயது முதல் இன்றுவரை என் உணர்வுகளோடு கலந்துவிட்ட தொடர்ந்து வருகிற, மறக்கமுடியாத, விடமுடியாத ஓர் உறவைப்போன்றது.. நான் ஒரு கிரிக்கெட் ரசிகன் என்பதைவிட கிரிக்கெட் பைத்தியம் என்றே சொல்லிக்கொள்ளலாம்.. ஆனாலும் இந்த வலைத்தளத்தில் கிரிக்கெட் சம்பந்தமாக அதிகம் எழுதியது கிடையாது.(ஒரு சில பதிவுகள் மட்டுமே எழுதியிருக்கிறேன்) ஒவ்வொரு போட்டித்தொடர் முடிவடையும் போதும் அவற்றைப்பற்றி எழுதவேண்டுமென்று தோன்றினாலும்.. அவற்றின் தரவுகளை சேகரித்து எழுதுவதில் உள்ள கடினத்தினாலும் சோம்பரத்தினாலும் அப்படியே விடுபடுவதுண்டு..
குறித்த ஒரு அணியின் வெறி பிடித்த ரசிகன் அல்ல நான். எல்லைகளை கடந்த உலக கிரிக்கெட்டின் ரசிகன் நான். உலகில் எங்கெல்லாம் கிரிக்கெட் போட்டிகள் நடைபெறுகிறதோ அவற்றைப்பற்றிய செய்திகளை தேடிக்கொண்டேயிருப்பேன். பார்ப்பதற்கு வசதியும் நேரமும் இருந்தால் பார்க்க தவறுவதுமில்லை.. இதில் T20, ஒரு நாள் போட்டிகள், டெஸ்ட் போட்டிகள் என வகைபிரிக்காமல் அனைத்து போட்டிகளும் எனக்கு விருப்பமானவை.. இன்றைய T20 மோகத்தினால் பலருக்கு டெஸ்ட மற்றும் ஒருநாள் போட்டிகளின் மீதுள்ள ஆர்வம் குறைந்துள்ளது.. எனக்கு அப்பிடியில்லை, இன்னும் சுவாரசியம் குறையாத விறுவிறுப்பு குறையாத டெஸ்ட் போட்டிகள் நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கின்றன. உதாரணத்துக்கு ஆஷஸ் போட்டித்தொடர்.
இலங்கையில் இருந்த காலப்பகுதியில்.. கேபிள் தொலைக்காட்சி வசதியோ இணைய வசதியோ இல்லாததால், இலங்கை தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பபடுகின்ற இலங்கை சம்பந்தப்பட்ட போட்டிகளை மாத்திரமே பார்க்ககூடிய வாய்ப்பு கிட்டியது.. ஏனைய போட்டிகளின் ஸ்கோர் விபரங்களை செய்தியறிக்கை மூலமாகவே தெரிந்துகொள்வேன்.. எல்லா போட்டிகளையும் கண்டு களிக்க முடியவில்லையென அப்போது பெரிய மனக்குறையாக இருந்தது..
இப்போது வெளிநாட்டில் இருப்பதால்.. வேகமான இணைய வசதியும் இருப்பதால் உலகில் எங்கு போட்டிகள் நடந்தாலும் அவற்றை நேரடியாக பார்க்ககூடிய வசதியும்.. அவற்றை தவறவிட்டால் highlights பார்க்ககூடிய வசதியும் இருப்பதால் எனது கிரிக்கெட் பசிக்கு நல்ல விருந்து. இணையத்துக்குள் நுழைந்ததும் நான் முதலில் செல்லும் தளம் cricinfo தளம்தான்.. முதலில் இங்கு சென்று ஸ்கோர் விபரங்களை பார்த்துவிட்டே மற்ற தளங்களுக்குள் நுழைவேன்..
இப்போது கிரிக்கெட் மீது அதிகமானோர் வைக்கும் குற்றச்சாட்டு.. போட்டிகள் முன்னமே முடிவுசெய்யப்படுகிறது (spot fixing) மற்றும் சூதாட்டம்.. இந்த குற்றச்சாட்டுகளை மறுக்கமுடியவில்லையென்றாலும், இந்த spot fixing என்பது எல்லா போட்டிகளும் ஆதிக்கம் செலுத்துவதில்லை செலுத்தவும் முடியாது.. எப்பவாவது எங்காவது மிகச்சில போட்டிகளில் மாத்திரம்.! சூதாட்டமும் அப்பிடித்தான்.. அண்மையில் இப்பிரச்சினையில் சிக்கிய பாகிஸ்தான் வீரர்களின் கதி என்னவானது என்பது எல்லோரும் அறிந்ததே.! அவ்வாறான குற்றங்களுக்கு அவ்வாறான தண்டனைகள் முக்கியம்தான்..
அடுத்து இன்றைய ஐபிஎல் போட்டிகள் உண்மையான கிரிக்கெட் மீதான ஆர்வத்தை குறைத்து.. வெறும் பணத்துக்காக மோதிக்கொள்ளும் பணக்காரர்களின் சூதாட்டமாக மாறியுள்ளது எனும் குற்றச்சாட்டும் உண்டு.. இதில் எனக்கும் உடன்பாடு உண்டு.. ஐபிஎல் போட்டிகளை ஆரம்பத்தில் ரசித்ததைப்போன்று இப்போது ரசிக்க முடியவில்லை. உலகில் உள்ள திறமையான வீரர்களையெல்லாம் விலைகொடுத்து வாங்கி போட்டிகளில் முதலீடு செய்து ஒரு வியாபாரம் போலவே நடைபெறுகிறது.. இந்தியாவின் அதிகமான வீரர்களுக்கு இதன்மூலம் நல்ல வருமானம் கிடைக்கிறது.இதில் குறிப்பிட்ட சில வீரர்களுக்கு வழங்கப்படும் தொகையை பார்த்தால் தலையே சுற்றிவரும்.. ஆனால் வெளிநாட்டு வீரர்களில் மிகத்திறமையான வீரர்களுக்கு மாத்திரமே வாய்ப்பு வழங்கப்படுகிறது. மொத்தத்தில் இது பணத்தால் விளையாடப்படும் பணக்காரர்களின் விளையாட்டு.. சுருக்கமாக சொன்னால் கிளப்பில் சீட்டுக்கட்டுகளை வைத்து விளையாடும்ம் சூதாட்டம் போல் இங்கே மைதானத்தில் வீரர்களை வைத்து விளையாடும் சூதாட்டம் இது..
இவ்வாறு எனக்குப்பிடித்த கிரிக்கெட்டை பற்றி தொடராக எழுதலாம் என நினைக்கிறேன்.. இதில் இவ்வளவு காலமும் மனதோடிருந்த பல விடயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசை. அணிகளைப்பற்றி, போட்டித்தொடர்களைப்பற்றி,பிடித்த-பிடிக்காத வீரர்களைப்பற்றி இன்னும் பல விடயங்கள் பற்றி பேசலாம்..என்னைப்போலவே கிரிக்கெட்டை விரும்புகிற நேசிக்கிறவர்களோடு உரையாடுவதில் அலாதிப்பிரியம் எனக்கு... அவ்வாறானவர்களை சந்திக்க கிடைத்தால் கிரிக்கெட்டை ஒரு அலசு அலசி விடுவதுண்டு.. ஆனாலும் எல்லோரும் அந்த ரசனை இருப்பதில்லை, நிறைய பேர் பொழுதை கழிப்பதற்காகவே கிர்க்கெட் போட்டிகள் பார்க்கின்றனர்.
இன்று அறிமுகம் மட்டும்தான்..அடுத்த வரும் பதிவுகளில் கிரிக்கெட் பற்றி இன்னும் பேசலாம் அடுத்த பதிவு இலங்கை அணி தொடர்பானது..
No comments:
Post a Comment