பாகிஸ்தானின் மிக மோசமான தொடர் தோல்வி!

ஐக்கிய அரபு இராச்சியத்தில் (UAE) நடைபெற்று முடிந்த பாகிஸ்தான் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான 5 ஒருநாள் போட்டிகளைக்கொண்ட தொடரில் பாகிஸ்தான் அணி 4-1 என்று படு தோல்வி அடைந்திருக்கிறது.தோல்விகள் என்பது சகஜமானதுதான். ஆனால், தோற்ககூடாத விதத்தில் தோற்பதுதான் மிக மோசமானது. அப்படியான ஒரு நிலையில்தான் பாகிஸ்தான் அணி உள்ளது.  

அனேகமான சந்தர்பங்களில் அவர்கள் தோற்கடிக்கப்படுவதில்லை அவர்களாகவே தோல்வியை உருவாக்கிக்கொள்கிறார்கள். முதல் போட்டியிலும் நான்காவது போட்டியிலும் நடந்தது இதுதான். வெற்றியின் விளிம்பிற்கு சென்று தோல்வியை சுவைத்தார்கள். எதிரணிக்கே ஆச்சர்யப்படவைக்கும் அவர்களுக்கு எப்படி  வெற்றி கிடைத்தது என்று! 
முன்னெப்போதும் இல்லாத வகையில் பாகிஸ்தானின் துடுப்பாட்டம் மிக மோசமாக இருக்கிறது. பந்துவீச்சு ஓரளவுக்கு பரவாயில்லை. UAE யில் விளையாடுவதென்பது அவர்களின் சொந்த நாட்டில் விளையாடுவது போன்றது அவ்வளவு பெரிய ரசிகர்கள் கூட்டம். அப்படியான ரசிகர்களை எரிச்சலடையாவைத்து ஏமாற்றியிருக்கிறது ஒட்டுமொத்த பாகிஸ்தான் அணி. எத்தனை ஆக்ரோஷ்மான சிறப்பான துடுப்பாட்ட வீரர்களை உருவாக்கிய அணியா இப்படி சொதப்பலான துடுப்பாட்டத்தை வெளிக்காட்டுகிறது.

ஒவ்வொரு அணியிலும் திறமையான வீரர்களின் ஓய்விற்குப்பின் புதிய வீரர்கள் வந்து அவ்விடங்களை நிரப்பி விடுகிறார்கள். இந்திய அணியை பொருத்தவரை சச்சின், கங்குலி,ட்ராவிட், சேவாக்கின் இடங்களை புதியவர்களான கோஹ்லி,ரோஹித்,தவான்,ரெய்னா,யுவராஜ் போன்றோர் நிரப்பி அணியை வெல்ல வைக்கிறார்கள். ஆனால் பாகிஸ்தான் அணியில் சயிட் அன்வர், இன்ஷமாம், மொஹம்மட் யூசுப், யூனிஸ் கான் போன்றவர்கள் விட்டுச்சென்ற இடங்களை நிரப்புவதற்கு சரியான வீரர்கள் இன்னும் அமையாமல் இருக்கிறார்கள். அவ்வப்போது ஒரு சில வீரர்கள் அபாரமாக சிறப்பாக ஆடி திறமையை வெளிப்படுத்தினாலும் தொடர்ச்சியாக பிரகாசிக்க தவறுகின்றனர். சிறப்பான ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களே அவர்களின் நீண்டகால தேவையாக இருக்கிறது.  

நசீர் ஜெம்சத், உமர் அக்மல், அசாத் சபீக் போன்றவர்கள் ஆரம்பத்தில் நம்பிக்கை தந்தாலும் தற்போது தொடர்ச்சியாக சறுக்குகிறார்கள். ஆனாலும் உமர் அக்மல் மேல் நம்பிக்கை இருக்கிறது அவரால் இதைவிட சிறப்பாக விளையாட முடியும் ஆனால் அவர் 3வது அல்லது 4வது வீரராக களமிறக்கப்பட வேண்டும். அதிகமான போட்டிகளில் அவர் வருவது அதிக விக்கட்டுக்களை இழந்து அணி இறுக்கமான நிலமைகளில் இருக்கும் போதுதான். அவ்வாறான நிலமைகளில் அவசர ஓட்டக்குவிப்பிற்கு சென்று ஆட்டமிழந்து செல்கிறார். ஜெம்சத் நல்ல டெக்னிக்கலான துடுப்பாட்ட வீரர்தான் என்றாலும் அவரின் துடுப்பாட்டத்தில் ஆக்ரோசமும் நம்பிக்கையும் இல்லை. 

உமர் அமீன்,அசாத் சபீக் போன்றவர்களுக்கு அணியில் இடம்கொடுக்க தேவையில்லை. ஹபீஸ், அப்ரிடி இருவரின் பந்துவீச்சு சிறப்பாக இருந்தாலும் துடுப்பாட்டம் மிக மோசமானது. இவர்களை ஒருநாள் அணியில் வைத்திருப்பதா துரத்துவதா என்பது 50/50 வாய்ப்புள்ளது அடுத்தது தலைவர்  மிஸ்பாவுல் ஹக். இவரின் நிலமைதான் பரிதாபம். அண்மைக்காலமாக தனியொருவராக போராடி வருகிறார்.. ஆனாலும் வெற்றிக்கு இது போதுமானதாக இல்லை. மிஸ்பாவின் தலைமைத்துவமும் துடுப்பாட்டமும் விமர்சனத்துக்குறியது. அவர் மேற்கொள்ளும் தடுத்தாடும் முறையானது இலகுவாக பெற்றுக்கொள்ளக்கூடிய வெற்றிகளை கடினமாக்குவதுடன் கடினமான வெற்றிகளை பெற முடியாமலே செய்து விடுகிறது. அவரின் தலைமைத்துவத்தின் கீழ் எப்போதும் ஆக்ரோசமாக விளையாடும் பாகிஸ்தான் அணி அந்த தன்மைகளை இழந்து எல்லோரும் அவர் போலவே ஒரு வித நிச்சயமற்ற தன்மையுடன் துடுப்பெடுத்தாடுவதை கான முடிகிறது. இவற்றுக்கெல்லாம் நடுவில் சொஹைப் மக்சூத் புதிய வீரர் இத்தொடர் மூலம் அறிமுகமாகியுள்ளார். அவரின் துடுப்பாட்டம் கொஞ்சம் நம்பிக்கையளிப்பதும் சிறப்பானதாகவும் இருக்கிறது. முதல் இரண்டு போட்டிகளில் இரண்டு அரைச்சதங்கள். 

தெண்ணாபிரிக்க அணிக்கும் தலைவர் வில்லியர்சுக்கும் வாழ்த்துச்சொல்லும் அதேவேளை அவரின் சிறப்பான தலைமைத்துவமும் அதற்கேற்ற பொறுப்பான துடுப்பாட்டம் மற்றும் களத்தடுப்பு பிறகு ஏனைய மூத்த இளைய வீரர்களின் ஒருங்கினைந்தே பங்களிப்பே இவ்வெற்றியை அவர்களுக்கு பெற்றுக்கொடுத்தது.


1 comment:

aavee said...

ஓரிரு மேட்சுகள் பார்த்தேன்.. பாகிஸ்தான் அணி வலுவிழந்திருப்பது உண்மைதான்..

Vaa Kannamma Tamil Song Lyrics in English

  Maadhar mukampoal olivida vallaiyel Kaadhalai vaazhi madhi Malaranna kannaal mukamoththi yaayin Palarkaanath thoandral madhi  Vaa pada pad...