நான் ஒரு கொலை பண்ணிட்டேன்...!


மனிதனாக பிறந்ததே மேல் என்கிறார்கள்.. உண்மைதான் அந்த ஒரு விடயம் மட்டும்தான் எனக்குள்ள சாதனை. 'நான் மனிதன்' என்ற கர்வம், இருந்தும் பயன்படுத்த மறக்கும் மறுக்கும் ஆறாம் அறிவு. வேகமாக வீசும் நாகரீக காற்றில் அடித்துச்செல்லப்படும் தூசு நான். விரும்பியோ விரும்பாமலோ காற்று செல்லும் திசையில் நகரத்தானே வேண்டும்..

சந்தோஷம்,துக்கம்,கோபம்,காதல்,காமம்,சோம்பல் எல்லாவிதமான குணங்களும் என்னிலும் உண்டு.. என்னைப்பார்த்து யாராவது நீ நல்லவன் என்றால் என்னால் அதை ஏற்றுக்கொள்ள முடியாமல் போகலாம்.. யாராவது நீ நல்லவனில்லை என்றால் இருக்கலாம் என்பேன். நல்லவன் என்பதற்கு எதுதான் அளவீடு இதுவரை எனக்கு புரியவில்லை.

நானும் கொலை செய்திருக்கிறேன்.. பயப்படாதீர்கள் மனிதனை அல்ல, ஏன் மனிதனை கொன்றால் மட்டும்தான் கொலையா ஏனைய உயிர்களைக்கொன்றால் அதற்கென்ன பெயர். ஆனால் இப்பொழுதெல்லாம் நிலைமை தலைகீழ் மிருகங்களுக்கு அன்பு காட்டுகிறார்கள் மனிதனை கொல்கிறார்கள். என்ன உலகமடா.. சின்ன வயதில் நடந்த கொலை சம்பவமொண்றை சொல்கிறேன். எங்கள் வீட்டுத்தோட்டத்தில் காய்கறி நடப்பட்டிருந்தது முக்கியமாக பயற்றங்காய்.இதன் மரம் சிறியதாக இருப்பதனால் அதன் காய்கள் கீழே தொங்கும் பூமி மட்டத்துக்கு. அவ்வாறனவற்றை இந்த ஆமைகள் வந்து தின்றுவிடும் எதையும் மிச்சம் வைக்காது தொடர்ந்து இவ்வாறு நடப்பதால் காய்கறி பயிர்செய்கையில் பெரும் நஷ்டம். பூச்சி புழுக்களுக்கு மருந்தடிக்கலாம், ஆடு மாடுகளுக்கு வேலி கட்டலாம் ஆமைக்கு என்ன செயவது..?
எங்கள் ஊர்ப்பகுதியில் முன்பிருந்த ஓர் பழக்கம் சிறு பிள்ளைகளை ஒரு விடயத்திற்காக திட்டும்போது இன்னுமொரு பிள்ளையோடு ஒப்பிட்டு (அவனின் திறமையோடு அவனின் செய்கையோடு) திட்டுவது.. இது உண்மையில் களையப்படவேண்டிய விஷயம்.. குறித்த பிள்ளையின் மனதை பாதிக்கக்கூடியது. எல்லோருக்கும் ஒரே மாதிரியான திறமை இருப்பதில்லை ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ஆற்றல். இவ்வாறான செய்கைகளால் நிறையவே பாதிக்கப்பட்டவன் நான் அவ்வாறான வலிகள் இன்னும் என் மனதோடு ஓர் ஓரமாக

எனக்கு சிறிய வயதில் படிப்பில் ஆர்வமேயில்லை. பாடசாலை செல்வதென்றாலே தூக்குமேடைக்கு போவது போல் இழுத்துக்கொண்டுதான் செல்வார்கள் ஆனால் படிப்பைத்தவிர மற்ற எல்லாவற்றிலும் ஆர்வம் முக்கியமாக விளையாட்டுகளில். இப்போதைய சிறிசுகளின் விளையாட்டிக்கும் அப்போதைய எங்களின் கிராமப்புற விளையாட்டுக்கும் நிறையவே வித்தியாசம்.

இப்போது பொழுதுபோக்கு எவ்வாறு கணினிக்குள் முடக்கப்பட்டிருக்கிறதோ.. அதேபோல்தான் சிறுவர்களின் விளையாட்டுக்களும் கண்னி கேம், டீவி கேம் என முடக்கப்பட்டிருக்கிறது. இவ்வாறு வரும் என அறிந்துதான் பாரதி அன்றே "ஓடி விளையாடு பாப்பா" என பாடினானோ.. ஆனால் நான் எல்லாவற்றிலும் கொஞ்சம் வித்தியாசமானவன். மனலினால் வீடுகள்.கட்டடங்கள்,பாலங்கள், ஊர்கள், அமைக்க ஆசை அதுபோலவே அமைத்தும் விடுவேன். இன்னும் இலங்கையில் சுரங்கப்பாதைகள் இல்லை ஆனால் நான் ஐந்து வயதிலேயே மனலைத்தோன்றி சுரங்கப்பாதைகள் அமைத்து காட்டியிருக்கிறேன்.. ஊரில் இதைப்பார்ப்பவர்கள் என்னை ஒரு பொறியியலாளர் என்றே கூறுவதுண்டு. பின்னாட்களில் அத்துறையில் படிக்க ஆசையிருந்தும் தகுதியிருந்தும் தற்செயலாக வர்த்தகதுறைக்கு மாறியது வேறு கதை. சிறிய வயதில் படிப்பில் ஆர்வமில்லையென்றாலும் போகப்போக நானாகவே என்னை வளர்த்துக்கொண்டேன் எட்டாம் ஒன்பதாம் வகுப்பு பரிட்சைகளில் முதலாமிடம் எனக்குத்தான் என்றால் பாருங்களேன்.. அந்த வகையில் சிறிய வயதில் படிப்பில் ஆர்வமில்லாமல் வேறு திசைகளில் கவனம் செலுத்தும் ஒரு சிறுவனின் வாழ்க்கையை நம் கண் முன் கச்சிதமக கொண்டு வந்த அமீர்கானின் தாரே சமீன் பர் என்ற ஹிந்தி திரைப்படம் என் மனதோடு ரொம்பவே ஒட்டிக்கொண்டது. படத்தில் வரும் அந்தச்சிறுவனை நானாகவே உணர்ந்தேன், ரசித்தேன், அழுதேன் அதன் விளைவாகவே இந்தப்பதிவும்..

காமம் போலவே என் கதையும் எங்கோ தொடங்கி எங்கோ செல்கிறது முடிவில்லாமல். ஆம் ஆமை பயற்றங்காயை தின்பதில் விட்டேன்.. மீண்டும் தொடர்கிறேன்.. இவ்வாறு போய்கொண்டிருக்கும் போது ஒரு நாள் உம்மா என்னைப்பார்த்து.. "பாருடா பக்கத்து வீட்டு அவன் எவ்வளவு உஷாரா உறுசுறுப்பா இருக்கான் உனக்கென்னண்டா தோட்டத்துக்கு வர்ற ஒரு ஆமையைக்கூட துரத்த உஷாரில்லையே.." என்று சொன்னதும். தூங்கிக்கிட்டிருந்த கோபம்,ரோஷம் எல்லாம் துள்ளி எழுந்தது.. எல்லாம் அந்த ஆமையால் வந்தது என்றென்னிக்கொண்டு உடனே தோட்டத்துக்கு சென்றேன். அந்த நேரம் பார்த்து பெரிய ஆமையொன்று காய்களை தின்றுகொண்டிருந்தது. என்னைப்பார்த்ததும் கால்களையும் தலையையும் உள்ளிழுத்துக்கொண்டது. என்னை கோர்த்துவிட்டு நீ இன்றைக்கும் திங்கிறதுக்கு வந்துட்டியா என்று மனசுக்குள் சொல்லிவிட்டு. உம்மாவிடம் திட்டுவாங்கிய ரோஷமும் ஆமையைக்கண்ட கோபமும் ஒன்று சேர்ந்து வர இதை ஏதாவது செய்ய வேண்டும் என்ற நோக்கில் பக்கத்திலிருந்த பெரிய கல்லைத்தூக்கி அதன் ஓட்டில்மேல் போட்டுவிட்டேன்.. ஓடுடைந்து இரத்தம் ஓடிக்கொண்டிருந்தது.அப்படியே இரத்தம் வழிய வழிய நகர்ந்து சென்றுவிட்டது.

அடுத்தநாள் தோட்டத்துக்கு சென்று பார்த்தபோது வேலி அருகே அந்த ஆமை இறந்துகிடந்தது.. அநியாயமாக ஒரு உயிரை கொன்றுவிட்டோமே என்று அப்போது மனசை உறுத்தியது. நம்முடைய கெட்ட கோபம் உயிரை பறிக்கும் அளவுக்கு சென்றுவிட்டதே என்று நானே என்னைத்திட்டிக்கொண்டேன். பின்னாட்களில் ஆமை பல ஆண்டுகள் உயிர்வாழக்கூடியவை என்ற செய்தியை படித்தவுடன் மிகவும் வருந்தினேன்... இவ்வாறாக என் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை பதிவாக எழுதலாம் என நினைக்கிறேன். நீங்க என்ன சொல்றிங்க.. மிக நீண்ட நாளைக்குப்பிறகு பதிவிடுகிறேன் வரும் நண்பர்கள் ஓட்டு போட்டுட்டு எப்பிடியிருக்குன்னு சொல்லிட்டுப்போங்க..நன்றி.ரியாஸ்

3 comments:

ஹேமா said...

ரியாஸ்...மன ஆதங்கம்,வேதனைகளைக் கொட்டி வைக்கிறீர்கள்.இதுவும் நல்லது.ஆனால் வாழ்வின் படிப்பினைகள் இன்னும் நல்வழிக்கே கொண்டு போகும்.எங்கள் நாட்டில் பொருளாதாரம்,போர் இரண்டும் எங்கள் படிப்பைத் திசைதிருப்பி நாட்டை விட்டே துரத்தியிருக்கிறது.நினைத்தால் நெஞ்சு வெடிக்கும்.வருங்காலக் குழந்தைகளுக்காவது நல்ல கல்வி கிடைக்கப் பிரார்த்திப்போம் !

Unknown said...

ஆமை பாவம்..
அதை விட ரியாஸ் பாவம்..

Mohamed Faaique said...

///ரு விடயத்திற்காக திட்டும்போது இன்னுமொரு பிள்ளையோடு ஒப்பிட்டு (அவனின் திறமையோடு அவனின் செய்கையோடு) திட்டுவது..///

உண்மையான விடயம்..
ஓட்டு ஒபோட சொன்னீங்க...ஓட்டுப் பட்டையையே காணல....

Vaa Kannamma Tamil Song Lyrics in English

  Maadhar mukampoal olivida vallaiyel Kaadhalai vaazhi madhi Malaranna kannaal mukamoththi yaayin Palarkaanath thoandral madhi  Vaa pada pad...