இலங்கை வானொலியும் நானும்..!

.சிறிய வயதிலிருந்தே வானொலியில் ஒலிபரப்பாகும் பாடல்கள் கேட்டாலும் பொழுதை போக்குவதற்கு பல பல விளையாட்டுக்களும் நண்பர்களும் இருந்ததனால் வானொலியின் மேல் ஒரு ஈர்ப்பு இருக்கவில்லை. சாதாரனதர பரிட்சையின் பின்னர் ஒரு மூன்று நான்கு மாதங்கள் வீட்டில் இருக்கவேண்டி ஏற்பட்டதால் அப்பொழுதே வானொலி நிகழ்ச்சிகள்/பாடல்கள் மேல் ஓர் ஈர்ப்பு ஏற்பட்டது. எனக்குளிருந்த தேடல் ஆர்வம், வாசிப்பு ஆர்வம், இலக்கிய ஆர்வம் போன்றவை இவற்றுக்கு உந்துதலாக இருந்தது..


ஏனோ எல்லோரும் கேட்கிறார்கள் அதற்காக நாமும் கேட்கிறோம் என்றில்லாமல் பாடல்களை ரசனையோடு அதன் வரிகளை இசையை பாடும் பாடகரை அவதானித்து கேட்கும் பழக்கமுள்ளவன் நான் இன்றுவரை. வானொலி சேவைகளை பொருத்தவரை எல்லாவற்றையும் விரும்பி கேட்பேன். ஆரம்ப காலத்தில் இலங்கை வானொலி வர்த்தக சேவை/தென்றல் நிகழ்ச்சிகள் என்னை வெகுவாக ஈர்த்தன. காலையில் பொங்கும் பூம்புனல் மாலையில் இன்றைய நேயர்/இருவர் அரங்கம் இரவில் இரவின் மடியில். அதில் இன்றைய நேயர் நிகழ்ச்சி இலங்கையின் அதிகமான நேயர்களின் விருப்ப நிகழ்ச்சியாக இருந்தது. அரை மணித்தியாலம் ஒலிபரப்பாகும் இந்நிகழ்ச்சியில் ஒரு நாளைக்கு ஒருவரின் விருப்ப தெரிவுகள் நான்கு அல்லது ஐந்து பாடல்களும் அதனை அவர் விரும்புவதற்குரிய காரணங்களும் ஒலிபரப்பாகும். இதற்காகவேண்டி பல பிரதிகளை அனுப்பிவிட்டு வானொலி அருகே காத்திருக்கும் நேயர்கள் பல ஆயிரம். அவை மாதங்கள் தாண்டியோ ஏன் வருடங்கள் தாண்டியும் ஒலிபரப்பாவதுண்டு அப்படி ஒலிபரப்பாகும் போது தன்னுடைய பெயரில் ஒலிபரப்பாகிறதே என்ற மகிழ்ச்சி வார்த்தைகளால் சொல்லமுடியாதவை.இதில் எனது பிரதியும் ஒரு முறை ஒலிபரப்பானது. பின் இந்த நிகழ்ச்சி இருவர் அரங்கமாக ஒரு மணித்தியாலமாக மாற்றப்பட்டது. இப்போது இந்நிகழ்ச்சி இருப்பதாக தெரியவில்லை.

இலங்கை வானொலியைப்பொருத்த எல்லா அறிவிப்பாளர்களுமே என்னைக்கவர்ந்தவர்கள்தான். பெண் அறிவிப்பாளர்களில் என்னை மிகவும் கவர்ந்த ஜெயலக்ஷ்மி சந்திரசேகர் தொகுத்து வழங்கிய பாட்டுக்கென்ன பதில் நிகழ்ச்சியும் நான் தொடர்ந்து கேட்டுவந்த நிகழ்ச்சி. ஏனைய வானொலிகளைப்பொருத்தவரை சக்தியில் ரவுஃப் தொகுத்து வழங்கும் இதயராகம் என் தூக்கத்திற்கு தாலாட்டு. இதை கேட்காமல் தூக்கம் வராத நாட்களும் உண்டு. சூரியனில் ஒலிபரப்பாகும் நேற்றைய காற்று இதில் முக்கியமாக யு எல் எம் மப்ரூக் தொகுத்து வழங்கும் புதன் வியாழன் இரவு நிகழ்ச்சிகள் என்னைக்கவர்ந்த அறிவிப்பாளர்களில் இந்த மப்ரூக்கும் ஒருவர். தற்போது அவர் எந்த வானொலியிலும் இல்லையென்றே தெரிகிறது, அவரின் இலக்கிய கவிதைத்திறமை மற்றும் கம்பீர குரல் அழகிய தமிழ் என்னை ஈர்த்தவை. புதன் கிழமை இரவுகளில் மூன்று மணித்தியாலத்திற்கு மூன்று நேயர்கள் தெரிவு செய்யப்பட்டு அவர்களின் பத்து பாடல்தெரிவுகள் அவற்றுக்கான கவிதை/விளக்கங்களுடன் ஒலிபரப்பாகும். இந்நிகழ்ச்சியில் எனது பாடல் தெரிவுகளும் கவிதைகளும் ஐந்து தடவைகளுக்கு மேல் ஒலிபரப்பாகியுள்ளன. இதில் ஒரு தடவை மப்ரூக்கினால் எனது பாடல்தெரிவுகள்/விளக்கங்களை மிக நன்றாக இருப்பதாக அடிக்கடி அவர் மூலம் பாராட்டுப்பெறறது இன்றும் மனதோடு இனிக்கிறது..


கொழும்பில் வேலை செய்த காலப்பகுதியில் சூரியனின் தடைக்குப்பின் வெற்றி எப் எம் உதயமானது. பிறகு அதன் பக்கம் ஈர்ப்பு ஏற்பட்டது. காரணம் லோசன், இவரும் என்னைக்கவர்ந்த அறிவிப்பாளர்களில் ஒருவர். அவரின் அறிவிப்புத்திறனும், வேகமும், சகல துறைகளிலுமுள்ள தேடலும் என்னை வியக்க வைத்தன. அவர் தொகுத்து வழங்கும் காலைநேர நிகழ்ச்சியான விடியல் பல்சுவை விருந்து. மற்றும் அவரால் வழங்கப்படும் விளையாட்டு நிகழ்ச்சிகளும் அருமை. நான் ஒரு கிரிக்கெட் வெறியன் என்பதால் உலகில் எங்கு கிரிக்கெட் போட்டிகள் நடந்தாலும் அவற்றை பார்க்கவோ அவை பற்றிய விபரங்களை தெரிந்துகொள்ளவோ ஆவலாக இருப்பேன். அவ்வாறான பொழுதுகளில் இந்நிகழ்ச்சிகளே பசி தீர்த்தன. ஆனால் எங்கள் ஊர்ப்பகுதிக்கு (அனுராதபுரம்) இன்னும் வெற்றி எப் எம் வந்ததாய் தெரியவில்லை.

படிக்கும் காலத்திலிருந்து ஏதாவது இலத்திரனியல் ஊடகத்துறையில் வேலை செய்யவேண்டுமென்ற ஆர்வமிருந்தாலும். அது நிறைவேறாத கனவாகப்போய்விட்டது. அதற்காக வேண்டி சக்தி டீவி, இலங்கை வானொலி, ரூபவாகினி ஆகியவற்றுக்கு விண்ணப்பித்து நேர்முகத்தேர்வுக்கு வரும்படி அழைப்பு வந்தாலும் எனது துரதிஷ்டம் அவற்றில் ஒன்றுக்கும் செல்லமுடியவில்லை. தற்பொழுது ஒன்றரை வருடகாலமாக வெளிநாட்டில் வேலை செய்வதால் எந்த வானொலி சேவையையும் கேட்க முடிவதில்லை. சிலவற்றை இனையத்தில் கேட்க முடிந்தாலும். நேரப்பிரச்சினை காரணமாக அவற்றிலும் ஈடுபாடில்லை.. மீண்டும் கொஞ்சம் பேசுவோம் வேறொன்றைப்பற்றி.

4 comments:

ARV Loshan said...

பாரட்டுக்களுக்கு நன்றி சகோ.. இப்போதும் உங்கள் பகுதியில் தெளிவில்லையா?
93.9 FM?

Riyas said...

@ loshan..
//இப்போதும் உங்கள் பகுதியில் தெளிவில்லையா?//

இப்போது வெளிநாட்டில் இருப்பதால் தெரியவில்லை விசாரித்து சொல்கிறேன் 6 மாதத்திற்கு முன் தெளிவில்லாமல் இருந்தது,,

வருகைக்கு நன்றி

Jana said...

ஆரம்ப காலம்முதல் 90களின் பிற்பகுதிவரை வானொலிகள் நேயர்கள் மத்தியில் பெரும் செல்வாக்கு செலுத்தியது என்பது எவரும் மறுக்கமுடியாத உண்மை. உங்கள் வயதை அண்டிய கால கட்ட நினைவுகள், உங்கள் விருப்பங்களை சொல்லி உள்ளீர்கள்.
சுவாரகசியமான பதிவு வாழ்த்துக்கள்.

நிரூபன் said...

வானொலி மீதான ஆர்வம், படைப்புக்களை வானொலிகளில் பகிர்தலுடனும் உள்ள உங்களின் சுவையான அனுபவங்களைத் தொகுத்து எழுதியிருக்கிறீங்க.

இதே போன்ற அனுபவம் எனக்கும் இருந்திருக்கிறது சகோ,

உங்களின் பதிவினைப் படிக்கையில் வானொலிகளோடு இருந்த எனது ஞாபகங்களும் நினைவு மீட்டலாய் வந்து போகிறது,

Pushpa 2 Tamil Song Lyrics

Peelingsu tamil lyrics puspa 2