உதட்டுச்சாயமிட்டு
ஒப்பனைகள் கலையாமல்
அலங்கார பதுமையாய்
அமர்ந்திருக்கிறேன்
வரவேற்பாளினியாய்..
உள்ளுக்குள்
பூகம்பம் வெடித்தாலும்
முகத்தில்
பூக்கள் பூக்க வேண்டும்
வந்து போகும்
வாடிக்கையாளர் நலனுக்காய்..
போலியான
புன் சிரிப்புக்கும்
பொங்கியும்
வெளிக்காட்டாத
உணர்வுகளுக்கும்தான்
எனக்குச்சம்பளம்...
உயிரோடு
எரித்து விடுகிறார்கள் சிலர்
என்னை
காமப்பார்வைகளால்.
ரசனையாளர்களாம்
அவர்கள்
அழகை ரசிக்கிறார்களாம்..
உயிரும்
உணர்வுகளும்தான்
வித்தியாசம்
எனக்கும் பொம்மைக்கும்
காலைப்பொழுகளில்
கழட்டி வைக்கும் மனசை
பூட்டிக்கொள்கிறேன்
மாலைப்பொழுகளில்.
அதுவரையிருந்தது
கட்டளைகளால்
அலங்கரிக்கப்பட்ட மனசு...
போலி முகம் கலைந்து
நிஜ முகத்தோடு
நடக்கிறேன்
வீட்டில் எனக்காய்
காத்திருக்கும்
குழந்தை முகம் கான..

9 comments:
வணக்கம் நண்பரே,
அழகான ஒரு கவிதை
அழகுப்பு பதுமைக்கு உள்ளே
அமிழ்ந்துகிடக்கும் எண்ணங்களை
அடுக்கி வைத்துவிட்டீர்கள்.
போகப்பொருளாய் பெண்களை இந்த
சமுதாயம் பயன்படுத்தும் வரையிலும்...
மனைவியை விட இந்தப் பெண்ணை ருசித்தால்
எவ்வளவு நன்றாக இருக்கும் என்ற காமப்போர்வை
போர்த்திய ஆண்களும் இருக்கும் வரையிலும்
இப்படியான பதுமைகள்
காட்சிப் பொருளாகத்தான் இருக்க வேண்டும்...
ஸலாம் சகோ.ரியாஸ்,
'நச்' என்று நிகழ்வுகளை சொல்லி இருக்கிறீர்கள்.
//காலைப்பொழுகளில்
கழட்டி வைக்கும் மனசை
பூட்டிக்கொள்கிறேன்
மாலைப்பொழுகளில்.//
---இதுபோல கழட்டி பூட்டி காம்ப்ரமைஸ் பண்ணி, பணம் சம்பாரிக்க வேண்டிய அவசியம் தன்மானம் கொண்டவர்களுக்கு இல்லை. அப்படியான வேலைகளை அதன் கட்டாயங்களுடன் அப்படியே ஏற்றுக்கொண்டாக வேண்டுமெனில், தவிர்த்து விடுகிறார்கள் அவர்கள்.
வணகம் நண்பா,
ஒப்பனைகளூடே கழியும் ஓர் வரவேற்பாளியின் உணர்வுகளை கவிதை சொல்லி நிற்கிறது.
உண்மையில் கடமையின் பின்னே தம் சோகங்களை மறைத்துத் தான் பல பெண்கள் தம் அன்றாட வாழ்வினை நகர்த்துகிறார்கள் என்பது நிஜமே.
நல்லதொரு படைப்பு .. வாழ்த்துக்கள் .. உணர்வுள்ள கவிதைக்கு நன்றிகள்
உண்மை சொல்கிறது கவிதை !
உணர்வுள்ள கவிதை...வாழ்த்துக்கள் ரியாஸ்...
வரவேற்பாளினியின் மனவேதனையைச் சொல்லும் கவிதை அழகு.
வணக்கம் ரியாஸ்!
இந்த கவிதையின் பின்னர் இனி நான் வரவேற்பாளியினை பார்க்கும் பார்வையில் மாற்றம் இருக்கும்.
அருமையான கவிதை வாழ்த்துக்கள்.!!
உண்மை பேசுகிறது கவிதையில்
Post a Comment