இலங்கையில் நடைபெற்று வரும் T20 உலககிண்ணத்துக்கான போட்டிகளில் முதல் சுற்று ஆட்டங்கள் முடிந்து பலம் குறைந்த பங்களாதேஷ்,சிம்பாபே,ஆப்கானிஸ்தான்,அயர்லாந்து அணிகள் வெளியேற மீதமுள்ள 8 அணிகள் போதும் Super Eight போட்டிகள் ஆரம்பமாகி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது! முதல் இரண்டு நாள் முடிவில் 4 போட்டிகள் நிறைவடைந்துள்ளது அதைப்பற்றி சுருக்கமாக இங்கே..
SriLanka vs New Zealand.
இறுதிவரை மிக விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் ரொப் நிக்கோல், மார்டின் கப்டில், மெக்கலம் ஆகியோரின் சிறந்த துடுப்பாட்ட உதவியுடன் நியுசிலாந்து நியமித்த வெற்றி இலக்கான 174 ஐ டில்சான், மஹேலவின் உதவியுடன் சமன் செய்தது இலங்கை அணி. இறுதிப்பந்தில் ஒரு ஓட்டம் தேவை என்றிருக்க டிம் சௌதியின் சிறப்பான பந்துவீச்சில் ஓட்டம் பெற முடியாமல் ரன் அவுட்டாக வீக்கட் வீழ்த்தப்பட்டது. பின் சுப்பர் ஓவரில் இலங்கை நியமித்த வெற்றி இலக்கான 14 ஓட்டங்களை லசித் மலிங்கவின் பந்து வீச்சிற்கு எதிராக பெற முடியாமல் தோற்றது நியுசிலாந்து. இப்போட்டியில் இலங்கை சார்பாக அறிமுகப்படுத்தப்பட்ட அகில தனஞ்சய என்ற 18 வயது சுழல் பந்துவீச்சாளர் 2 விக்கட்டுகளை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.. அஜெந்த மெண்டிசுக்கு ஏமாற்றம் 4 ஓவர்களில் 48 ஓட்டம் அவரின் மெஜிக் என்நேரமும் வேலை செய்யாது என்பதுதான் பெரிய குறை!
West Indies vs England
கரீபியன் தீவுகளின் கறுப்பு சிங்கம் கிறிஸ் கெயிலின் வானவேடிக்கையோடு ஆரம்பமானது இப்போட்டி.. கெயில் கொஞ்ச நேரம் நிலைத்து நின்றால் எதிரணி பந்துவீச்சாளர்களின் நிலை பரிதாபம்தான். அதுதான் கடந்த முறை உலக சாம்பியன் இங்கிலாந்துக்கும் நடந்தது. கெயில் ஆட்டமிழந்ததும் அவரோடு சேர்ந்து ஆடிய ஜோன்சன் சால்ஸ் முதலில் மெதுவாக ஆடினாலும் இறுதியில் வேகமாக ஆடி 84 ஓட்டங்களை பெற்றதன் மூலம் இங்கிலாந்தின் வெற்றி இலக்கு 180 என்றானது
இங்கிலாந்தின் துடுப்பாட்டத்தின் போது ரவி ராம்போலின் முதல் ஓவரில் கீஸ்வெற்றரும் லுக்ரைட்டும் ஓட்டம் பெறாம்ல ஆட்டமிழந்தது அவர்களின் ஓட்டவேகத்தை கட்டுப்படுத்தி மிக மெதுவாக துடுப்பெடுத்தாட செய்தது.. ஒரு கட்டத்தில் மிக மோசமாக தோற்றுவிடுவார்களோ என்றிருந்த நிலையில் ஒயின் மோகனின் அதிரடியான 5 சிகஸர்களின் உதவியுடன் வெற்றிக்கு அண்மையில் வந்து 15 ஓட்டங்களினால் தோற்றுப்போனார்கள்! ஒயின் மோகன் இன்னும் கொஞ்சம் முன்னதாக வந்திருந்தால் போட்டியின் முடிவு மாறியிருக்கலாம். மேற்கிந்திய தீவுகள் சார்பாக மிகப்பெரிதாக எதிர்பார்க்கப்பட்ட போலாட், சுனில் நரைன் போன்றோர் பெரிதாக சோபிக்கவில்லை.. இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர்களை மட்டுமே நம்பியிருக்கவேண்டிய நிலை.. கிரேம் ஸ்வான் டெஸ்ட் போட்டிகளுக்கும் மட்டும்தான் ஒத்து வருவார் போல் தெரிகிறது!
Pakistan vs South Africa
மிக முக்கியமான போட்டிகளில் முக்கியமான தருணங்களில் ஏதாவதொரு துரதிஷ்டம் தென்னாபிரிக்கா அணியை கவுத்துவிடும் என்பது யாவரும் அறிந்ததே! அது இம்முறை Super Eight யின் முதல் போட்டியிலேயே உமர் குல்லின் வடிவில் வருமென்று அவர்கள் நினைத்திருக்க மாட்டார்கள்! பலம் பொருந்திய பாகிஸ்தானின் சுழல் பந்துவீச்சில் தடுமாறி டுமினி டீ வில்லியர்ஸ் உதவியுடன் 134 என்ற வெற்றி இலக்கை நியமிக்க நிதானமற்ற துடுப்பாட்டத்தினால் 7 விக்கட்டுக்களை இழந்து 76 ஓட்டங்களை பெற்று தோல்வியின் விளிம்பில் நின்ற பாகிஸ்தான் உமர் குல்லின் அதிரடியான 32 ஓட்ட சிக்ஸர் பவுண்டரி வித்தை மூலம் வெற்றியை பெற்றுக்கொண்டது.
பாகிஸ்தான் சார்பாக பாராட்டப்படவேண்டிய இன்னுமொருவர் உமர் அக்மல் அவரின் நிதானம் கலந்த வேகமான துடுப்பாட்டமே இந்த வெற்றிக்கு முதல் காரணி! பாகிஸ்தானை பல முறை இப்படியான இக்கட்டிலிருந்து காப்பாற்றிய பெருமை அக்மலுக்கு உண்டு! தென்னாபிரிக்கா சார்பாக மிகச்சிறப்பாக பந்துவீசிய ஜோஹான் போத்தாவிற்கு 2 ஓவர்கள் மீதமிருக்க அவரை பந்துவீச அழைக்காமல் விட்டது ஏன் என்று புரியவில்லை.. மாற்றமாக முஹம்மத் ஹபீஸ் சிறப்பான தலைமைத்துவத்தை வெளிப்படுத்தியிருந்தார்.அக்மலும்,குல்லும் வேகப்பந்துவீச்சுக்கெதிராகவே அதிக ஓட்டங்களை பெற்றது. பொறுத்திருந்து பார்ப்போம் தென்னாபிரிக்காவுக்கு தொடர்ந்து அதிர்ஷ்டம் வருமா என!
India vs Australia
உலகின் அதிரடி துடுப்பாட்ட வீரர்களை வரிசைப்படுத்தினால் அதில் விரேந்தர் சேவாக்கின் பெயர் யாராலும் மறக்க முடியாதது! அதுவும் அவுஸ்திரேலியா அணிக்கெதிரான போட்டியில் சேவாக்கை நிறுத்திவிட்டு மேலதிகமாக ஒரு பந்துவீச்சாளரை சேர்க்கும் முடிவு எவ்வளவு முட்டாள்தனமானது என்பதை போட்டி முடிவில் உணர்ந்திருப்பார் தோணி! அதுவும் கம்பீர் தவிர மற்ற அனைவரும் பந்துவீசும் ஆற்றலுடையவர்கள் எதுக்கு மேலதிக பந்துவீச்சாளர்?
அவுஸ்திரேலியாவின் பலமான பந்துவீச்சுக்கெதிராக தொடர்ந்து விக்கட்டுக்களை இழந்ததால் 141 என்ற வெற்றி இலக்கே அவுஸ்திரேலியாவிற்கு வழங்கப்பட்டது.. இந்திய பந்துவீச்சாளர்கள் கொஞ்சமாவது போட்டியை கொடுப்பார்கள் என்று பார்த்தால் போட்டி பொசுக்கென்று முடிந்துவிட்டது.. வொட்சனும் வோர்னரும் மைதானமெங்கும் சிக்ஸர் மழை பொழிந்தார்கள்.! அட்டா என்னா அடி.. அதிலும் வொட்சன் 7 சிக்ஸர்கள்.. பந்து வீச்சிலும் 3 வீக்கட் தொடர்ர்சியாக மூன்றாவது முறையாக போட்டியின் சிறப்பாட்டக்காரர் விருது! இவரை ஆரம்பத்திலேயே பவிலியனுக்கு திருப்பி அனுப்பவில்லையென்றால் எதிரணியின் பாடு திண்டாட்டம்தான்.. பார்ப்போம் பாகிஸ்தானும்,தென்னாபிரிக்காவும் எப்படி சமாளிக்க போகிறார்கள் என்று! இந்திய அணி மிகுதி போட்டிகளில் சிறப்பாக விளையாடி அரையிறுதிக்கு போகும் என எதிர்பார்க்கிறேன்...
Gallery from espncricinfo.
4 comments:
ஆரம்பத்தில் நம்ம அணி இப்படித் தான்... டென்ஷன் ஆக்குவதே இவங்க வேலை... ஹிஹி...
////உலகின் அதிரடி துடுப்பாட்ட வீரர்களை வரிசைப்படுத்தினால் அதில் விரேந்தர் சேவாக்கின் பெயர் யாராலும் மறக்க முடியாதது! அதுவும் அவுஸ்திரேலியா அணிக்கெதிரான போட்டியில் சேவாக்கை நிறுத்திவிட்டு மேலதிகமாக ஒரு பந்துவீச்சாளரை சேர்க்கும் முடிவு எவ்வளவு முட்டாள்தனமானது என்பதை போட்டி முடிவில் உணர்ந்திருப்பார் தோணி! அதுவும் கம்பீர் தவிர மற்ற அனைவரும் பந்துவீசும் ஆற்றலுடையவர்கள் எதுக்கு மேலதிக பந்துவீச்சாளர்? ////
நிச்சயம் தோனி உணர்திருப்பார்
சேவாக் நீக்கம் பற்றி நானும் ஒரு தனிப்பதிவு பதிவு எழுதியுள்ளேன்
உமர் அக்மல் பாகிஸ்தானின் நம்பிக்கை என்றால் அது மிகையாகாது
Post a Comment