இலங்கை முஸ்லிம் சமூகம் எதிர் நோக்கியுள்ள சவால்களுக்கான காரணங்கள் - எம்.எச்எம் ஹஸன்


எம்.எச்எம் ஹஸன் அவர்கள் ஹெம்மாதகமயைச் சேர்ந்தவர். பேராதனைப் பல்கலைக் கழக பட்டதாரியான இவர் சிங்கள மொழி மூலம் தனது முதுகலைமாணிப் பட்டத்தை நிறைவு செய்தார். ஆசிரியர் தொழிலில் 15 வருடங்கள்  சேவையாற்றிய இவர் மொழிபெயர்ப்புப் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு சுமார் 200 புத்தகம் அளவில் மொழிபெயர்த்திருக்கிறார்.

இன்று முஸ்லிம் சமூகம் எதிர் நோக்கியுள்ள சவால்களுக்கான காரணங்களை விளக்க முடியுமா? என்ற கேள்விக்கு மீள்பார்வை சஞ்சிகைக்காக அவர் வழங்கிய பதில்.
இன முறுகல்கள் திடீரென ஏற்பட்ட ஒன்றல்ல. சிங்கள மறுமலர்ச்சி இயக்கத்தை தோற்றுவித்த அநாகரிக தர்மபால, 1950 களில் எழுதிய புத்தகத்தில், முஸ்லிம்களைப் பற்றி பல விடயங்களை எழுதியிருந்தார். அவரது எழுத்துக்கள் சிங்கள மக்களின் உணர்வுகளை தூண்டுபவனவாக அமைந்திருக் கின்றன.
1915 கலவரம் பிரித்தானியர் திட்டமிட்டுச் செய்த ஒரு நிகழ்வாகத்தான் காணப்படுகிறது. இவற்றைத் தவிர இன்னும் பல சிறிய நிகழ்வுகள் இடம்பெற்றிருக்கின்றன. இவை தனிப்பட்ட விடயங்களாகவே இருக்கின்றன. ஆனால், சமகாலத்தில் ஏற்படுகின்ற அதேபோன்ற நிகழ்வுகள் சமூக ஊடகங்கள் ஊடாக மிக வேகமாக இளைஞர்களைச் சென்றடைகின்றது. எனவே, அவர்கள் எதிர் நடவடிக்கையில் ஈடுபடக் கூடிய ஆபத்தும் உருவாகியிருக்கின்றது.
எங்களைப் பற்றி தெளிவின்மையும் சந்தேகமும் இதற்கு முக்கிய காரணமாகும். இந்த சந்தேகங்கள் ஏற்பட்டமைக்கு முஸ்லிம் சமூகமும் காரணமாக இருந்திருக்கின்றது. ஒரு சிறுபான்மை சமூகத்தின் கலாசாரம், பண்பாடு குறித்து பெரும்பான்மை இனத்திற்கு தெளிவுபடுத்துகின்ற கடமை அரசுக்கும் இருக்கிறது.
முஸ்லிம்கள் ஒரு மூடிய சமூக மாகத்தான் இருந்து வந்திருக்கிறார்கள். போர்த்துக்கேயர், பிரித்தானியர் ஆட்சி காலங்களில் தமது மார்க்கத்திலிருந்து தம்மை தூரமாக்கி விடுவார்கள் என்ற காரணத்தினால் சிங்களப் பாடசாலைக்கு செல்லாது, ஆங்கிலத்தைக் கற்காது, ஏனைய சமூகங்களோடு கலந்து வாழாதிருந்திருக்கிறார்கள். இதனால் இஸ்லாத்தைப் பற்றிய செய்திகள் அவர்களுக்குக் கிடைக்கவில்லை.
எனவே, முஸ்லிம் சமூகத்தில் வெளிப்படையாக எதனைக் காண்கிறார்களோ அதனையே அவர்கள் இஸ்லாமாகப் பார்க்கிறார்கள். அவ்வாறான விடயங்களில் ஒன்றுதான், அண்மைக் காலமாக பள்ளிவாசல்களின் எண்ணிக்கை அதிகரிப்பதாகும். வெள்ளிக்கிழமைகளிலும் ஏனைய நாட்களிலும் முஸ்லிம் அடையாளத்துடன் நடமாடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
முன்னரை விட ஹிஜாப் பர்தாவுடன் நடமாடும் முஸ்லிம் பெண்களின் தொகை அதிகரித்துள்ளது. எல்லோரும் கறுப்பு நிறத்தில் அணிவதை அவர்கள் அச்சுறுத்தலாகப் பார்க்கிறார்கள். கறுப்பு அவர்கள் வெறுக்கின்ற ஒரு நிறமாகும். முகத்தையும் மறைக்கும் கலாசாரம் உருவாகத் தொடங்கியதன் பின்னர் அவர்களது சந்தேகம் இன்னும் அதிகரித்துள்ளது.
அறபு நாடுகள் நிதியுதவிகளை வழங்கி அவர்களது நிகழ்ச்சித் திட்டத்தில் இயங்குகின்ற ஒரு குழுவை இந்நாட்டில் உருவாக்குகிறார்களா எனவும் சந்தேகிக்கின்றனர்.
மற்றொரு விடயம் ஹலால் தொடர்பானது. நீங்கள் ஆயிரம் வருடங்களாக இந்த நாட்டிலே இருக்கிறீர்கள். இவ்வளவு காலமும் ஹலால் உணவுகளைத்தானே சாப்பிட்டீர்கள். இப்போதும் நீங்கள் ஹலால் உணவுகளை சாப்பிட்டுவிட்டு இருந்திருக்கலாம். புதிதாக எதற்கு சிங்கள உற்பத்தியாளர்களிடம் ஹலால் முத்திரையைத் திணிக்கிறீர்கள் எனக் கேட்கிறார்கள். ஹலால் எனும் கருத்தை பிழையாகப் புரிந்து கொண்ட சில கடும் போக்காளர்கள், ஹலால் என்பதை இஸ்லாம் என்றும் அதனை முஸ்லிம்கள் பெரும்பான்மையினரது வீடுகளுக்குள்ளும் கிராமங்களுக்குள்ளும் திட்டமிட்டு நுழைக்கிறார்கள் என பிரச்சாரம் செய்கிறார்கள்.
அவர்கள் சந்தேகப்படும் இந்தக் காரணிகளை தொகுத்துப் பார்க்கும்போது அதன் பின்னணி நீண்டகால வளர்ச்சியைக் கொண்டிருப்பதை நாம் பார்க்கலாம். ஒரு சிறிய குழு இவற்றை பூதாகரமாக்கி, அவர்களது சமூகத்திற்குக் காட்டும்போது அதன்பால் அவர்கள் கவரப்படுவதை தடுக்க முடியாமல் இருக்கும்.
* இரண்டு சமூகங்களுக்கு மத்தியில் சகவாழ்வை ஏற்படுத்துவது மற்றும் அதற்கான தடைகள் குறித்துச் சொல்ல முடியுமா?
சகவாழ்வு எனும்போது தேசிய மட்டத்திற்கு நாம் வருவதில்லை, தேசிய மட்டத்தில் பங்களிப்புச் செய்யும் தலைவர்கள் எம்மிடத்தில் இல்லை போன்ற குற்றச்சாட்டுகளை அவர்கள் முன்வைக்கின்றனர். மொஹிதீன் பேக் சிங்கள இலக்கியத்திற்கு சேவை செய்திருக்கிறார். டீ.பீ ஜாயா அரச சபையில் இந்த நாட்டுக்காக பேசினார். ஏ.சீ.எஸ் ஹமீத் நாட்டுக்காக பாடுபட்டார். இப்போதிருப்பவர்கள் இவர்களைப் போன்று நாட்டுக்காக உழைக்காமல் எமது சமூகத்தோடு மட்டும் சுருங்கியவர்களாக குறை காண்கிறார்கள். இது போன்ற நடவடிக்கைகளும் சகவாழ்வுக்குத் தடையாக அமைகின்றன.
எனவே, மார்க்க வரையறைகளுக்குள்ளால் தேசிய நீரோட்டத்தோடு கலக்கின்ற ஒரு செயற் திட்டத்தை நாம் ஆரம்பிக்க வேண்டும். இனவாதத்தின் மூலக் கூறு சந்தேகம்தான். எனவே, அதனைப் போக்க வேண்டும்.
இன்னும் 40 வருடங்களிலே இலங்கை முஸ்லிம் நாடாக மாறும் எனப் புரளிகளைக் கிளப்பி விடுகிறார்கள். சனத்தொகை வளர்ச்சியினால் ஒரு சிறுபான்மை இனம் பெரும்பான்மையாக மாறியதாக வரலாற்றில் நிகழ்ந்ததில்லை.
1870 ஆம் ஆண்டிலிருந்து இந்த நாட்டிலே சனத்தொகை கணிப்பீடு நடைபெறுகிறது. அப்போது சுமார் 6 வீதமாக இருந்த முஸ்லிம்களின் எண்ணிக்கை 140 வருடங்களுக்குப் பிறகு 9.5 வீதமாக அதிகரித்துள்ளது. சிங்கள சமூகம் 60 வீதத்திலிருந்து 70 வீதமாக அதிகரித்துள்ளது.
தமிழ் சமூகத்தின் இடப் பெயர்வினால் அவர்களது சனத்தொகை யில் ஏற்பட்ட வீழ்ச்சியை இரண்டு சமூகங்களும் பிரித்தெடுத்திருப்பதாகவே காண முடிகின்றது. 140 வருட காலத்தில் 3 வீதம் வளர்ச்சி யடைந்த சமூகம் 40 வருடத்தில் எப்படி பெரும்பான்மையாக மாறுவார்கள்? இது ஒரு பொய் என்பது அவர்கள் அறியாத ஒன்றல்ல.
உண்மையில், நாங்கள் இந்த தேசத்தை விரும்புபவர்கள். அதன் மீது பற்றுள்ளவர்கள். முஸ்லிம்கள் தேசத் துரோகிகள் அல்ல என்பதை தெரியப்படுத்த வேண்டும். அவர்களது விவகாரங்களில் நாம் பங்கெடுக்க வேண்டும்.
சிங்கள மொழி தெரியாமல் இருப்பது சகவாழ்விற்கு மற்றொரு தடையாக அமைகிறது. பெரும்பான்மை சமூகத்தின் உணர்வுகளை, மனநிலையை புரிந்து கொள்வற்கு மொழி அறிவின்மை ஒரு தடையாகவே இருக்கிறது.
சிங்களப் பத்திரிகைகளை நாம் வாசிக்க வேண்டும். தொலைக் காட்சியில் நடக்கின்ற விவாதங்களைப் பார்க்க வேண்டும். தேசிய நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள வேண்டும், கருத்துச் சொல்ல வேண்டும். அப்போதுதான் இரண்டு சமூகங்களுக்கும் இடையில் உறவுகள் வளரும்.
நன்றி meelparvai.net

No comments:

Pushpa 2 Tamil Song Lyrics

Peelingsu tamil lyrics puspa 2