சில வேளைகளில் என்ன மாதிரியான சமூகத்தில் வாழ்கிறோம் என்ற வெறுப்பும் கோபமும் ஏற்படுகிறது! மனிதர்களில் ஒவ்வொருவருக்கும் அடிப்படையிலேயே சில குணவியல்புகள் இருக்கும். சிலர் முடிவில்லாமல் வள வள என பேசிக்கொண்டேயிருப்பார்கள். சிலர் அளவோடு தேவையானதை மட்டுமே பேசுவார்கள்.நானெல்லாம் இந்த வகையறாதான்! என் ரசனையோடு பொருந்திப்போகிறவர்களிடம் மணிக்கனக்கில் வேண்டுமானாலும் என்னால் பேச முடியும். அவ்வாறானவர்களின் நட்பையும் சந்திப்பையும் மிக ஆவலாய் எதிர்பார்ப்பேன். ஆனாலும் சிலரின் ரசனையும் நம் ரசனையும் ஒத்தே வராது. அவர்களுடன் தேவையானதை தவிர்த்து வேறு என்ன பேசிவிட முடியும்.
அவ்வாறானவர்களுடன் தொடர்ச்சியாக உரையாற்ற வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டால் நிறைய சங்கடங்களும் செயற்கைத்தனமாக நடந்து கொள்ளவேண்டிய நிலையுமே ஏற்படும். தேவையானதை மட்டுமே பேசிவிட்டு மிச்சநேரம் மௌனமாக இருப்போம் என நினைத்தால் அதற்கும் விடமாட்டார்கள் அவர்களுடன் எப்போதும் பேசிக்கொண்டே இருக்க வேண்டுமாம்! நாம் பேசாமல் இருந்தால் உம்முன்னு இருக்கிறான், ஊமையனாட்டம் இருக்கிறான் என்ற அவப்பெயர் வேறு. ஏனோ அதிகம் பேசாதவர்கள் உலக மகாத்தவறு செய்கிறவர்கள் போலும், இந்த சமூகத்தில் வாழ்வதற்கே தகுதியற்றவர்கள் போலும் பார்ப்பதும் அவர்களைப்பற்றி ஏனையவர்களிடத்தில் குத்தி பேசுவதும். அவர்களின் குணங்களையும் உணர்ச்சிகளையும் கொச்சைப்படுத்துவதையுமே செய்து வருவார்கள். பிறர் செய்யாவிட்டாலும் நம் குடும்பத்தினரே அவ்வாறு செய்யலாம்.
வரையரையில்லாமல் அதிகம் பேசுபவர்கள் நினைப்பெல்லாம் அவர்கள்தான் உலகத்தின் அறிவாளிகள் என! ஆனால் அவர்கள் மணிக்கணக்கில் பேசுவதெல்லாம் தேவையற்ற குப்பைகள்தான். அதில் எந்த பிரயோஜமான விடயங்களோ பயனுள்ள கருத்துக்களோ இருப்பது ரொம்ப அரிது. அதிகமாக பிறரைப்பற்றி புறமே பேசுவார்கள்! அவர்களின் பேச்சில் எந்தவிதமான தொடக்கமோ முடிவோ இருக்காது. ஏதோ வாய் இருக்கிறது பேசுகிறோம் என்பது போலவே இருக்கும். அவ்வாறிருக்க, அவர்களுடன் சேர்ந்து ஜல்லியடிக்காமல் மௌனமாக ஒதுங்கியிருந்து ஓரளவுக்காவது பயனுள்ள விடயங்களை சிந்திப்பவர்களை மட்டும் ஏளனம் செய்வார்கள். அவர்களை பொறுத்தவரை வாயிலிருந்து வெளிவரும் வார்த்தைகளில்தான் அறிவு தங்கியிருக்கிறது. ஆனால் அதிகம் பேசாதவர்களுக்கு மனசு முழுக்க ஏதாவதொன்றை சிந்திப்பவர்களாகவும் அவர்கள் மௌனங்களும் அறிவின் தேடலாகவே இருக்கலாம்!
இதில் இன்னொரு கொடுமையும் இருக்கிறது அவர்களின் உருப்படாத அனுபவங்களையும்,ரசனைகளையும் நமக்குள் பலவந்தமாக திணிக்க முற்படுவார்கள். அவர்களின் பேச்சைக்கேட்க விரும்பாமல் நமது கவனத்தை வேறு திசையில் திருப்பினாலும் அவர்களே பேசி,அவர்களே ரசித்து, அவர்களே சிரிப்பார்கள் அதற்கு நாமும் புன்னகைப்பதைப்போல் நடிக்க வேண்டும். அப்போதுதான் இந்த சமூகம் நம்மளையும் மனிஷனாக பார்க்குமாம்.இன்னும் சிலர் அறைகுறையாக ஒரு விடயத்தை தெரிந்து கொண்டு முழுதும் தெரிந்தது போல் பீலா விடுவார்கள். அவர்களை பார்க்கும் போதெல்லாம் ஒருவித எரிச்சல் வருவதை தவிர்க்க முடியவில்லை.
ஒருவரின் அடிப்படை கொள்கைகளை அவ்வளவு எளிதாக மாற்றிவிட முடியாது முயற்சியின் மூலமும் சில நிகழ்வுகளின் பின்னரும் சிலரின் சில குணங்களை மாற்றலாம் மாறலாம் என்றாலும் முற்று முழுதாக ஒருவரின் கொள்கையை அழித்துவிட்டு புதிய கொள்கையொன்றை பொருத்திவிட முடியாது. அவரின் அடி மனதில் அந்த கொள்கையின் எச்சங்கள் இருக்கவே செய்யும். அதிகம் பேசாதவர் இப்போதெல்லாம் அதிகம் பேசுகிறார் என்பதிலும், அதிகம் பேசுபவர் இப்போதெல்லாம் அதிகம் பேசவே மாட்டார் என்பதிலும் ஏதோவொரு புறக்காரணி தாக்கம் செலுத்தியிருக்கிறது என்பது மட்டும் நிச்சயம். அவரின் இப்போதைய நடத்தையை செய்ற்கையாக செயற்படுத்துகிறார் மட்டுமன்றி அவரின் கொள்கை அழிந்துவிடவில்லை. அவரிடமே ஒழிந்துகொண்டிருக்கிறது.
"ஒரு மலை நகர்ந்து இன்னொரு இடத்திற்கு சென்றுவிட்டது என்றால் நம்புங்கள் ஆனால் ஒருவரின் அடிப்படை கொள்கை மாறிவிட்டது என்று சொன்னால் நம்பாதீர்கள்" என்பது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வாக்கு. இது எவ்வளவு பெரிய உண்மை! இங்கே ஒரு மலை நகர்வது எவ்வளவு முடியாத காரியமோ அதை விட முடியாத காரியம் ஒருவரின் அடிப்படை கொள்கை மாறுவதென்பது. அதுவே, இதன் அர்த்தம்! அப்படியிருக்க நம்ம சமூகம் மட்டும் ஏன் இப்படி இன்னொருவரின் சுதந்திரத்தில் கொள்கையில் தலையிட்டு அவரை கொச்சைப்படுத்துவதில் குறியாய் இருக்கிறது என்பது வருந்தக்கூடியதே. இனியும் அதிகம் பேசாதவர்களை கொச்சைப்படுத்தாதீர்கள். மௌனமும் ஒருவகை தியானமே அவர்களின் தியானத்தை கலைத்து உங்களுடன் சேர்ந்து புறம் பேச வைக்காதீர்கள்.
12 comments:
உண்மை.
நானும் உங்களை மாதிரித்தான்... அளவோடு மட்டுமே பேசுவேன்... ஒத்த ரசனையுடையவர்களுடன் மணிக்கணக்கில் பேசுவேன்...
பேசுவதற்கு முன் யோசிக்க வேண்டிய தாரக மந்திரம் :
உண்மையா...? பேசலாமா...? தேவையா...?
நன்றி...
அருமை
உண்மையான கருத்துக்கள்! பகிர்வுக்கு நன்றி!
இது உண்மை. நான் ஏற்றுக்கொள்கிறேன்
ithu verum varthai alla. unmai
எனக்கும் இவ்வாறான அனுபவங்கள் ஏற்பட்டதுண்டு, முதலில் பாவமே என சகித்துக் கேட்டுக் கொள்வேன், இப்போது நேராகவே சொல்லிவிடுவேன், எவ்வகையான திணிப்புக்களும் சகிக்க கூடியவை அல்ல !
அருமையான கட்டுரை தந்தமைக்கு வாழ்த்துகள்
வணக்கம்...
அருமையான இந்தப் பகிர்வு வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...
மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/06/blog-post_21.html) சென்று பார்க்கவும்... நன்றி...
இன்று வலைச்சரத்தில் பகிர்ந்துள்ளேன்.நல்ல பகிர்வு.
நானும்
Post a Comment